செல்லாத நோட்டுகள்! சொல்லாத சோதிடர்கள்!!

கடந்த 2016 அக்டோபர் 8ஆம் தேதி அன்று  மத்தியில் ஆளுகின்ற பாஜக மோ(ச)டி அரசு திடுதிப்பென்று  மாலை நேரத்தில் ஓர்  அதிரடி அறிவிப்பின் மூலம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று ஆக்கியது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத் தான் இந்த அறிவிப்பு என்று அதற்கு ஒரு நொண்டிக் காரணத்தையும் கூறியது.

மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா குழுமத்திடமிருந்து 55 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிடுவதாக அறிவித்த சில மணி நேரங்களில் அதை திசை திருப்பும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலும் விரைவில் உ.பி.யில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் மற்ற கட்சிகள் ஆயிரம், ஐநூறு நோட்டுகளை அள்ளி வீசி  ஓட்டுகளை விலைக்கு வாங்கி விடக் கூடாது. அதன் மூலம் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. தான் மட்டும் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வீசி ஓட்டுகளை விலைக்கு வாங்கி அரியணையில் ஏற வேண்டும் என்ற (கு)யுக்தியுடன் பாஜக அரசு இந்தக் கயமை வேலையில் களமிறங்கியுள்ளது.

அரசு இயந்திரம் தன்னுடைய கைவசத்தில்  இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்தி அச்சு இயந்திரத்தின் மூலம் கற்றை, கற்றையான இரண்டாயிரம் நோட்டுகளை அச்சடித்து கட்டு கட்டாகச் சுமந்து சென்று  வாக்காளர்கள் கையில் அடித்து, வாக்குகளை கட்டுக்கட்டாக அறுவடை செய்யலாம் என்று கனவு கண்டு காய் நகர்த்தியது.

ஆனால் அதன் கனவுக் கோட்டை தகர்ந்து போனதுடன் மட்டுமல்லாமல், ஆப்பசைத்த குரங்காக மாட்டிக் கொண்டு தவிக்கின்றது; தத்தளிக்கின்றது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சுவிஸ் வங்கியிலிருந்து கருப்பு பணத்தை மீட்டு உங்கள் வங்கிக் கணக்கில் போடுவேன் என்று சொன்ன மோடி மக்கள் சுருக்குப் பையில் வைத்திருந்த பணத்தைச் சுருட்டி எறியும் காகிதமாக்கியதுடன் அவர்களது கழுத்துகளுக்கு சுருக்குக் கயிறுகளையும் மாட்டிக் கொண்டிருக்கின்றார். இந்தக் குற்றச்சாட்டை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. பத்திரிக்கைகளில் பதிவான செய்திகள் அடிப்படையிலேயே சொல்கின்றோம்.

அனைத்து தரப்பு மக்களின் கைகளில் புழங்கிக் கொண்டிருந்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை காலாவாதியாக்கிய கையலாகாத மோடியின் மீது காரித் துப்பிக் கொண்டிருக்கின்றனர். குடற்கொதிப்பில் கொந்தளிக்கும் குமுறல் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். வயிற்றெரிச்சல்களை வசவு மொழிகளாக வடித்துத் தள்ளுகின்றனர்.  குருவி போல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த பணம் மோடியின் ஒரே ஒரு கூவலால் செல்லாக் காசாகி விட்டது.

உ.பி. கொரக்பூர் வங்கி முன்னால் ஒரு பெண் சலவைத் தொழிலாளி தான் சேர்த்து வைத்திருந்த சில்லரை நோட்டுகளை மாற்றி ஆயிரம் ரூபாய் தாள்களாகப் பெற்றுக் கொள்கின்றார். அந்தப் பணம் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு வெளியாகின்றது. அவ்வளவு தான் அதிர்ச்சியில் அங்கேயே இறந்து விடுகின்றார்.

இன்னொரு சம்பவத்தின் போது மஹுவா மாஃபி என்ற கிராமத்தில்  ஓர் எட்டு வயதுப் பெண் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக தகப்பனார் தனது வாகனத்தில் பெட்ரோல் பம்புக்கு ஆயிரம் ரூபாய் தாளுடன் செல்கின்றார். அங்குள்ள பணியாளர் ஆயிரம் ரூபாய் தாளை மறுத்ததால் எட்டு வயது பெண் குழந்தை மரணத்தைத் தழுவுகின்றது.

கோவை செட்டிபாளையம் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்த தம்பதி சிவக்குமார் – ரஞ்சிதம். இவர்களுடைய மூன்று வயதுக் குழந்தை தீபஸ்ரீ இறந்துவிட்டாள். குழந்தைக்கு சளி, காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். சிவக்குமார் கையிலிருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இன்று செல்லாதவை என மருத்துவமனையில் வாங்க மறுத்திருக்கிறார்கள். மனிதர் பணத்துக்காக அலைக்கழிந்திருக்கிறார். கையில் பணம் இல்லாத உயிருக்கு இந்நாட்டில் மதிப்பேது? பிள்ளை போய்ச் சேர்ந்துவிட்டது.

இரு நாட்களுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் சுரின் தன் பிள்ளையைப் பறிகொடுத்தார். உடல்நலம் குன்றிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊரான மெகபாலில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அவர்கள் அங்கே பார்க்க முடியாது என்று சொல்லி சம்பல்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள். சுதர்சனிடம் இருந்த பழைய நோட்டுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டரை வயது ஆண் குழந்தை இறந்துவிட்டது.

மும்பை, கோவந்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் – கிரண் தம்பதி. பிரசவ வலியெடுத்த கிரணுக்கு மருத்துவமனைக்குச் செல்லும் முன்னரே குறைப் பிரசவம் ஆகிவிட்டது. மனைவியையும் சிசுவையும் தூக்கிக்கொண்டு ஓடினார் ஜெகதீஷ். தனியார் மருத்துவமனையில் ரூ.6,000 முன்பணம் கேட்டிருக்கின்றனர். அவர்கள் முன்பணமாகக் கேட்ட முழுத் தொகையும் புதிய நோட்டுகளாக ஜெகதீஷிடம் இல்லை. மருத்துவமனையில் சேர்க்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள். பணத்தை ஏற்பாடு செய்வதற்குள் அந்தச் சிசு மூச்சை நிறுத்திவிட்டது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் ரகுநாத் வர்மா இன்று இல்லை. திருமணத்தை எதிர்பார்த்திருந்த மகள் செய்வதறியாது நிற்கிறார்.

பிஹாரைச் சேர்ந்த விவசாயி சோனார் இன்று இல்லை. மகள் சித்தப்பிரமை பிடித்தவரைப் போல மூலையில் முடங்கிக் கிடக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் 11 உயிர்கள்; தெலங்கானா, பிஹார், மஹாராஷ்டிரம், கேரளம், கர்நாடகத்தில் தலா 2 உயிர்கள், ஒடிசா, ஆந்திரம், டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், வங்கத்தில் 7 உயிர்கள்; அசாம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத்தில் தலா 3 உயிர்கள் என்று பிரதமர் மோடியின் நவம்பர் 8 அறிவிப்புக்குப் பிறகு, 10 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 40 உயிர்கள் போயிருக்கின்றன. தற்போதைய தகவல்கள் படி இதுவரை செல்லாத நோட்டுகளால் இறந்தவர்கள் எண்ணிக்கை 80ஐ நெருங்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரச்சாரகர் சூரிய நாராயண ராவ் என்பவர் இறந்த போது, “அவர் தன்னுடைய வாழ்வை தாய்நாட்டிற்காக அர்ப்பணித்து விட்டார். அவர் ஆத்மா சாந்தி அடையட்டுமாக!” என்று டுவீட்டரில் இரங்கல் பதிவிட்ட நரேந்திர மோடி ஆயிரம், ஐநூறு செல்லாது  என்ற  பைத்தியக்காரத்தனமும், பித்துக்குளித்தனமும் நிறைந்த அறிவிப்பால் 80 மனிதர்களின் புனித உயிர்கள் பலியாகி உள்ளன; பறி போயுள்ளன. அதற்கு எந்த ஓர் இரங்கலையும் இரக்கத்தையும் இவர் பதிவிடவில்லை.

இரக்கமற்ற நரேந்திரமோடியின் இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களில் 16 பேர்கள் இறந்து போன மரணச் செய்தி தொலைக்காட்சியில் விவாதப் பொருளான போது அந்த விவாதத்தில் பங்கெடுத்த  உயர்சாதி எஸ்.வி. சேகர், ‘128 கோடி மக்களில் 16 பேர்கள் தானே இறந்திருக்கின்றார்கள்’ என்று  கேட்கின்றார்.

இதற்குக் காரணம் என்ன? மோடியும் எஸ்.வி. சேகர் கேடியும் மனுதர்ம சிந்தனை கொண்டவர்கள். அதனால் இவர்களிடம் பிராமணர்களைத் தவிர மற்றவர்களின் உயிர்களுக்கு  எந்த மாண்பும், மரியாதையும் இல்லை. இதோ அவர்களுடைய மனு சாத்திரம் சொல்வதைக் கேளுங்கள்.

‘‘ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்.” அ.11. சு.131.

25(அ). “அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது.”

மோடி இந்த மனு சாத்திர தர்மத்தை நிறுவ வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டவர். அதனால் அவாள்  உயிர் தான் உயிர்! அடுத்தவா  உயிரெல்லாம் உயிரே அல்ல! தவளையை விடவும் தரங்கெட்டது. தவளையின் தகுதியை விட ஒரு தம்புடி கூட பார்ப்பனர் அல்லாதவரின் உயிர்கள் உயர்ந்ததல்ல!

அதனால் தான் அவாள் சாதியைச் சார்ந்த ஸ்வாதி கொல்லப்பட்டபோது கொந்தளித்தார்கள்; கொதித்தார்கள். அப்போது 128 கோடி மக்களில் ஒரு ஸ்வாதி தானே செத்துப் போயிருக்கின்றாள் என்று வாய் பொத்தி செத்துக் கிடக்கவில்லை. இந்த சேகர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து பதிவு போட்டார்கள். ஆனால் இப்போது இழந்து போன இந்த 80 உயிர்களை மிகத் துச்சமாக நினைக்கின்றார்கள். இவர்களை இப்படி நினைக்கத் தூண்டுவது அவர்களின் மனு சாத்திரம் தான்.

இதோ திருக்குர்ஆன் பிரகடனப் படுத்துகின்ற மனித உயிர் மாண்பை பாருங்கள்!

உயிருக்கு உயிர்கண்ணுக்குக் கண்மூக்குக்கு மூக்குகாதுக்குக் காதுபல்லுக்குப் பல்காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்

அல்குர்ஆன்  5:45

மனித உயிரென்ன?  மனிதனின்  உறுப்புக்கு மனிதனின் உறுப்பு தான் பரிகாரம் என்று மனிதனின் மாண்பையும்,  புனிதத்தையும்   இறை வேதம் திருக்குர்ஆன் நிலை நாட்டுகின்றது. ஆனால் மோடிக் கும்பல் நிலைநாட்ட நினைக்கின்ற இந்து ராஜ்ஜியத்தில்  மனித உயிர் மரியாதையையும், மதிப்பையும் பாருங்கள். தவளையினும் கேடாய் தரை மட்டமாகப் பார்க்கப்படுகின்றது.

அதனால் தான் மாட்டுக்காக மனித உயிரைக் கொன்று குவிக்கின்ற மாபாதகர்களாகவும், மகா காதகர்களாகவும் தான் இவர்கள் இருக்கின்றார்கள்! ஆயிரம், ஐநூறு ரூபாய்களை  வெறுந்தாளாக்கியதால் அன்றாடம் மாளுகின்றவர்களை ஆளுகின்ற இந்த மிருக வர்க்கம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும் இது தான் காரணம்.  கண்டு கொள்பவர்களாக இருந்தால் கறுப்புப் பணம் என்ற பெயரில்  இதுவரை மனித உயிர்களைப்  பலி வாங்கிக் கொண்டிருக்கக் கூடிய இந்தக் கறுப்புச் சட்டத்தை இந்நேரம்  திரும்பப் பெற்றிருப்பார்கள். ஆனால் இவர்கள் திரும்பப் பெறமாட்டார்கள்.

அதே சமயம் அல்லாஹ் இவர்களை திரும்பப் பெறுகின்ற நேரம் நெருங்கி விட்டது என்பதை விட இவர்களைத் தூக்கி அடிக்கக் கூடிய நேரம் நெருங்கி விட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் வடித்த கண்ணீர், அவர்கள் சபித்து தள்ளிய சாபங்கள் அத்தனையும் அவர்களை விட்டு வைக்கப் போவதில்லை.

ஐநூறு ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற  மோடி அறிவித்த பிறகு மக்கள் படுகின்ற அல்லல்களையும், அவஸ்தைகளையும்  ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் விமர்சித்திருக்கின்றன.  ஏகத்துவம் எதையும் உண்மையான ஓரிறைக் கொள்கை அடிப்படையில் தனது பார்வையைப் பதிய வைக்கும். அந்த அடிப்படையில் ஏகத்துவம் மாத இதழ்,  செல்லாமல் போன நோட்டுகள் விஷயத்தில் அத்தகைய பார்வையைத் தான் பதிய வைக்கின்றது.

அதிகாலையில் அரசு தொலைக்காட்சி முதல் தனியார் தொலைக்காட்சிகள் வரை உள்ள  அனைத்து தொலைக்காட்சிகளிலும் டிவி பெட்டிகளைத் திறந்த மாத்திரத்தில் அவற்றில் ஆக்கிரமித்து நிற்பவர்கள் சோதிடர்கள் தான்.

ராசி பலன் என்ற பெயரில் வான நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அன்றைய நாளின் பலன்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். மக்களை இம்மாபெரிய அளவில் அலைக்கழிக்க வைத்து அவர்களின் ஆருயிர்களைப் பறிக்கக் காரணமாக அமைந்த செல்லாத நோட்டுகளைப் பற்றி முன்கூட்டியே மக்களிடம் இந்தச் சோதிடர்கள் ஏன் சொல்லாமல் போனார்கள்?

நிச்சயமாக அவர்கள் ஒரு போதும் அதைச் சொல்ல முடியாது. அதற்கு காரணம் மறைவான ஞானம் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வாகிய அந்த ஒரு கடவுளுக்கு மட்டும் சொந்தமான தனி ஞானமாகும். அதில் அவனது படைப்பினங்கள் யாரும் எள்ளளவும் எள் முனையளவும் உரிமை கொண்டாட முடியாது. இதைத் தான் நாட்டில் நடந்த இந்தச் சம்பவம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான்நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம்எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்நுட்பமானவன்.

அல்குர்ஆன் 31:34

என்ற அல்லாஹ்வின் வசனம் இதையே உண்மைப் படுத்துகின்றது.

சோதிடம் என்பது ஒரு பகிரங்க ஏமாற்று வேலை என்பதில் முஸ்லிம்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கும் கிடைக்கும் பாடமும் படிப்பினையாகும்.

இதில் முஸ்லிம்களுக்கு மட்டும் இன்னொரு பாடமும் படிப்பினையும் இருக்கின்றது.

இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்கள் அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டித் தராத எந்த வணக்கத்தையும் செய்யக் கூடாது. காரணம் அது  பித்அத் எனும் புதிய செயலாகும்.  அவ்வாறு செய்பவர்களது வணக்க வழிபாடுகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படாது என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும்.

அறிவிப்பவர் :  ஆயிஷா (ரலி),  நூல்: புகாரி 2697

அத்தகைய எந்த வணக்கமும் அது  செல்லாத நோட்டுக்குச் சமமாகும். ஆயிரம், ஐநூறு நோட்டுகள் செல்லாததாகி விட்டதால் நாம் படுகின்ற அவஸ்தையையும் அல்லலையும் கண்கூடாகக் கண்டு விட்டோம்.  இவ்வுலகத்தில் பின்வரும் காலங்களில் இந்தப் பிரச்சனை ஏதாவது ஒரு வகையில் நிவர்த்தி ஆகிவிடும். ஆனால் மறுமையில் நாம் ஏமாந்து விட்டால் அது நிவர்த்தியாகுமா? என்று ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று முஸ்லிம்கள் பராஅத் இரவு, மிஃராஜ் இரவு வணக்கம், அன்றைய பகல்களில் நோன்பு, கூட்டுத் துஆ, ராத்திபுகள், மவ்லிதுகள், கத்தம் ஃபாத்திஹாக்கள், மீலாது விழாக்கள் என்று எண்ணிலடங்கா புதிய, புதிய வணக்க வழிபாடுகளைச் செய்கின்றனர்.

இவை தங்களுக்கு நாளை மறுமையில் நன்மை தரும் என்ற நம்பிக்கை அடிப்படையில் தான் செய்கின்றார்கள். ஆனால் இவை மறுமையில் செல்லாதது என்று அறிவிக்கப்படும். அப்போது ஈடு செய்ய முடியாத இழப்பும் நஷ்டமும் கைசேதமும் ஆகும். மோடியைப் போன்று முட்டாள்தனமாக  திடீரென்று செல்லாது என அல்லாஹ் அறிவிக்க மாட்டான். அவன் முன்னரே அறிவித்து விட்டு அல்லது எச்சரித்து விட்டுத் தான் செய்வான்.

இதோ அந்த எச்சரிக்கைகள்…

செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.

அல்குர்ஆன் 18:104

(ஏகஇறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும்போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத்தான் காண்பான். அப்போது அவனது கணக்கை (அல்லாஹ்) நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

அல்குர்ஆன் 24:39

எனவே முஸ்லிம்கள், இந்தச் செல்லாத நோட்டுகளைப் பாடமாகவும் படிப்பினையாகவும் கொண்டு, அல்லாஹ்வாலும் அவனுடைய தூதராலும் அங்கீகரிக்கப்படாத  பித்அத் எனும் புதிய வணக்கங்களைச் செய்யாமல் அவனும் அவனது தூதரும் அங்ககீகரித்த வணக்கங்களை மட்டும் செய்து  மறுமையில் தங்களை பெரும் நஷ்டத்திலிருந்து காத்துக் கொள்வார்களாக!

தவ்ஹீது ஜமாஅத் இந்தப் பெரும் நஷ்டத்திலிருந்து மக்களைக் காக்கின்ற தூய பணியில் தன்னை அர்ப்பணித்து அழைப்புப் பணி ஆற்றுகின்றது. அதனால் தான் மோடியின் முட்டாள்தனமான அறிவிப்பில் மற்றவர்கள் உலக ரீதியான பார்வையை மட்டும் பதிகின்ற வேளையில்  மறு உலக ரீதியிலான பார்வையை ஏகத்துவம் தனது இந்தத் தலையங்கத்தில் பதிய விடுகின்றது; மக்களிடம் பரவ விடுகின்றது.

ஏகத்துவம் இதழ் : டிசம்பர் 2016

முழு இதழையும் அறிய….