உம்மை ஒருபோதும் நான் மறவேன்…
இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம்.
நாகூர் ஹனீபா பாடிய பாடல்களில் ஒன்றான “உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா” என்று துவங்கும் பாடலில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய விரோதக் கருத்துக்களைப் பார்ப்போம்.
இந்தப் பாடலை அவர் துவங்குவதற்கு முன்னால் “திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து” என்று துவங்கும் குணங்குடி மஸ்தான் பாடிய ஓர் நீண்ட பீடிகையைப் பாடுவார்.
அந்தப் பீடிகை சொல்லும் கருத்து என்னவென்றால், உலகத்தில் இருக்கின்ற கோடான கோடி மக்கள் நாகூர் மீரானுடைய அருளை எதிர்ப்பார்த்துக் காத்து நிற்கின்றனர் என்பதாகும்.
அருள் புரிவது அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயம்; அதில் எவருக்கும் எவ்விதப் பங்கும் இல்லை. அல்லாஹ்வை விடுத்து ஏனையோர் அருள் புரிவார்கள் என்று வாதிட்டால் அது தெளிவான இணைகற்பித்தலே என்ற தகவலை இதற்கு முந்தயை தொடர்களில் அறிந்திருக்கின்றோம்.
ஆகையால், இப்பாடலின் முதல் அடியிலிருந்து இப்பாடல் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிரானது என்பதைப் பார்ப்போம்.
உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா; ஷாஹே மீரா
எம்மான் நபி நாதர் வாஞ்சை மிகும் பேரா; நாகூர் மீரா
நாகூர் ஷாகுல் ஹமீதை, தான் ஒரு போதும் மறக்காமல் நினைத்துக் கொண்டிருப்பதாகவும், அவர் நபிகள் நாயகத்தின் பாசத்திற்குரிய பேரனாக இருக்கின்றார் என்றும் கூறுகின்றார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி), ஹுசைன் (ரலி) என்ற தன்னுடைய பேரர்கள் மீது அதிக அளவு பாசம் வைத்திருந்தார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்கின்றோம். இன்னும் ஸைனப் (ரலி) என்ற தன்னுடைய மகள் வழிப் பேத்தியான உமாமாவை, தொழும்போது தோளில் சுமந்திருக்கிறார்கள் என்று அறிந்திருக்கின்றோம்.
அவ்வாறிருக்க, ஷாகுல் ஹமீது என்ற பேரன் நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வழியில் வந்தார்? அவர் மீது நபிகளார் எப்போது பாசத்தோடு நடந்தார்கள்?
பாடலின் முதல் அடியிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி தன்னுடைய கப்ரு வணக்க விசுவாசத்தை கவிஞர் நிரூபித்திருக்கிறார்.
அவ்லியாக்கள் என்று இவர்களால் அழைக்கப்படும் அனைவருக்கும் நபிகள் நாயகத்தின் பரம்பரையில் வந்தவர் என்ற பட்டத்தை வழங்கி பக்தி ஊட்டுவது கப்ரு வழிபாடு செய்வோரின் வழிமுறையாகும். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அடுத்து இப்பாடலின் அடி,
“துன்பங்கள் எழும் போது உன் புகழ் பாடி;
நிம்மதி அடைவனே தினம் தினம் நாடி;
அன்புடன் ஆளுகின்ற அன்னலே மீரா;
அடியாரின் குறை தீர்க்கும் அன்னலே மீரா” என்பதாகும்.
அனைத்து மனிதர்களுக்கும் இன்பம், துன்பம் என்பது இறைவனின் ஏற்பாடான விதியின் அடிப்படையிலேயே நடக்கிறது.
ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்வில் இன்பம் ஏற்பட்டால் இறைவனைப் புகழ வேண்டும். துன்பம் ஏற்பட்டால் பொறுமையோடு நிராசை கொள்ளாமல் துன்பத்தை நீக்க இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். இதுதான் உண்மையான ஓர் இறைநம்பிக்கையாளன் செய்ய வேண்டிய கடமை.
ஆனால், இப்பாடலின் இவ்வரி சொல்லக்கூடிய செய்தி, துன்பம் ஏற்படும் போது ஷாகுல் ஹமீதை தினம் தினம் புகழ்ந்தால் நிம்மதி கிடைக்கும் என்பதாகும்.
அனைவரின் துன்பங்களையும் நீக்கக் கூடிய ஆற்றல் அல்லாஹ்வின் வசமே இருக்கின்றது.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது’’ என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 17:56
இறை வசனம் இவ்வாறு கூற தனது துன்பத்தை நாகூராரே நீக்குகிறார் என்று இப்பாடல் கூறுகிறது.
இன்னும், மக்கத்து காஃபிர்கள் கூட தங்களுக்குப் பெரும் துன்பங்கள் ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடம் முறையிடுவார்கள் என்றும், அந்தத் துன்பத்தை இறைவன் நீக்கியவுடன் நன்றி மறந்து இணை கற்பிப்பார்கள் என்றும் இறைவன் கூறுகின்றான்.
“கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்”
அல்குர்ஆன் 17:67
“மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்த வனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன”
அல்குர்ஆன் 10:12
ஆனால், இந்தப் பாடலின் வரிகளோ துன்பத்தின் போது கூட அல்லாஹ்விடம் கையேந்துவது பற்றிக் கூறாமல் நாகூர் மீரானிடம் தான் புகழ்பாடி பிரார்த்திக்க வேண்டும் என்று சொல்கிறது.
இந்த அடிப்படையில் மக்கத்து முஷ்ரிக்கீன்களுடைய கருத்தை விட மிகவும் மோசமான கருத்துக்களைத்தான் இந்தப் பாடல்வரிகள் எடுத்துரைத்து, இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்க்கின்றது என்பதை அறியலாம்
நாகூராரைப் புகழ்ந்ததினால் நிம்மதி அடைவதாகவும் அதே வரியில் தெரிவிக்கின்றார்.
மன நிம்மதி இறை நினைவாலே ஏற்படும்
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
அல்குர்ஆன் 13:28
இறை நினைவால் தான் மன அமைதி ஏற்படும் என்று இறை வசனம் தெரிவிக்க நாகூராரை நினைத்துப் புகழ் பாடுவதால் தனக்கு நிம்மதி கிடைக்கிறது என்று கூறி இறை அந்தஸ்தை நாகூர் மீரானுக்கு இந்தக் கவிஞர் வழங்குகிறார்.
அன்புடன் ஆளக்கூடியவராகவும் நாகூரார் இருக்கின்றார் என்றும் இம்முதல் அடியில் தெரிவிக்கின்றார்.
“சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!
அல்குர்ஆன் 17:111
அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.
அல்குர்ஆன் 25:2
அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.
அல்குர்ஆன் 35:13
எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 67:1
ஆளுகின்ற அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே; அவனுக்கு அதிகாரத்தில் எவ்வித பங்காளியும் இல்லை என்று இத்தனை வசனங்களும் கூற அதற்கு மாற்றமாக இறைவனுடைய அதிகாரத்தில் நாகூராருக்குப் பங்கு இருக்கிறது என்று வாதிட்டு தெளிவான இணைவைப்பை ஏந்தி நிற்கக்கூடியதாக இப்பாடல் இருக்கிறது.
இப்பாடலின் அடுத்த அடிகளில் இடம்பெறும் ஒரு வரியில் “கருணையின் வடிவாக விளங்கிடும் கோணே” என்று இடம்பெறுகிறது.
கருணையின் வடிவாக நாகூர் மீரான் இருக்கின்றார் என்று இவ்வரியும் அவர் கருணைக் கண் கொண்டு அருள் புரிய வேண்டும் என்று அதற்கடுத்தடுத்த வரிகளும் எடுத்துரைக்கிறது.
“உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுபவர் தவிர (மற்றவருக்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று கொடுக்கப்படும் என்றோ, உங்கள் இறைவனிடம் அவர்கள் உங்களை வென்று விடுவார்கள் என்றோ, நம்பாதீர்கள்!’’ (எனவும் கூறுகின்றனர்.) “நேர் வழி அல்லாஹ்வின் வழியே’’ என்று கூறுவீராக! “அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்’’ என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 3:73
ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:268
மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
அல்குர்ஆன் 2:243
அடியார்களுக்கு அருள் புரிகின்ற கருணை யாளனாக அல்லாஹ் ஒருவனே இருக்கின்றான் இந்த வசனங்கள் கூறுகின்றன.
இறை விசுவாசிகள் இறை அருளையே எதிர்பார்க்க வேண்டும் என்று பின்வரும் வசனம் கூறுகிறது.
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:218
இப்பாடல் முழுவதிலுமுள்ள கருத்துக்கள் திருமறைக்குர்ஆனுக்கு எதிராகவும், இறைவனுக்கு எதிராகப் போர்கொடி தூக்கக் கூடியதாகவும் விளங்குகிறதே தவிர இஸ்லாத்தின் அடிப்படைக்கு ஒத்த ஒரு கருத்துக் கூட இடம்பெறவில்லை.
இவ்வாறிருக்க இதை எந்த அடிப்படையில் இஸ்லாமியப் பாடல்கள் என்று நம்பி வருகின்றனர் என்று புரியவில்லை.
ஆக்கம் : ஏகத்துவம் இதழ் – நவம்பர் 2016
முழு இதழ்களையும் வாசிக்க…. https://onlinetntj.com/egathuvam/november-2016