நன்மை செய்ய துணை புரிவோம் – பயான் குறிப்பு கட்டுரை

ஓரிறைக் கொள்கையில் இருக்கும் நாம், மார்க்கம் கூறும் வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை சரிவர நிறைவேற்ற வேண்டும். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டு உள்ளன. அதுபோலவே, நம்மைப் போன்று அடுத்தவர்களும் அவற்றைச் செய்வதற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது பற்றியும் அதிகளவு கூறப்பட்டுள்ளது.

நன்மையிலும்இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும்வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(திருக்குர்ஆன் 5:2)

இந்த வசனத்தின் மூலம் மார்க்கம் குறிப்பிட்டுள்ள நன்மையான, இறையச்சமான விசயங்களில் முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்ள வேண்டும்; உதவிக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் ஆணையிடுகிறான்.  எனவே, இது தொடர்பாக இருக்கும் சில முக்கிய கருத்துக்களை இப்போது அறிந்து கொள்வோம்.

நன்மைக்குத் தூண்டுவதும் நம்பிக்கையே!

நாம் ஈமான் கொண்டுள்ளோம் என்பதற்கு அடையாளம், கடமையான வணக்கங்களை நிறைவேற்றுவதும் நல்ல காரியங்களைச் செய்வதும் மட்டுமல்ல. நம்மைப் போன்று மற்றவர்களும் அந்த அமல்களைச் செய்வதற்கு நம்மால் முடிந்தளவு தூண்டுவதும் துணைபுரிவதும் அதிலே அடங்கும்.

தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீராஅவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.

(திருக்குர்ஆன் 107:1-3)

நம்பிக்கை கொண்டுஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும்அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும்கண்ணியமான உணவும் உண்டு.

(திருக்குர்ஆன் 8:73)

முன்சென்ற வசனங்களில், ஏழைக்கு உணவளிக்க தூண்டுவதும், துன்புறும் மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதும் முஃமின்களின் பண்புகளாக அல்லாஹ் கூறியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்மைக்குத் துணைபுரிவது கடமை

நபிகளாரின் காலத்தில், மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்துவிட்ட முஸ்லிம்கள், மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்யாமல் இருக்கும் முஸ்லிம்களிடம் நட்புறவு கொள்ளக் கூடாது; நெருக்கமாக இருக்கக் கூடாது என்று உத்தரவு இடப்பட்டது. ஆயினும், மார்க்க விசயமாக துணைபுரிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர்ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

(திருக்குர்ஆன் 8:72)

இஸ்லாத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் இருக்கும் போது, மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இச்சட்டம் விதிக்கப்பட்டது. அந்தக் கட்டத்திலும்கூட மார்க்க விசயங்களில் உதவி செய்வது கட்டாயமெனக் கூறியதில் நமக்கு பாடம் இருக்கிறது. மார்க்க விவகாரங்களில் பிறருக்கு துணைபுரிவதின் அவசியத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நன்மைக்கு வழிகாட்டுவதும் தர்மம்

பெற்றோர், பிள்ளைகள், வாழ்க்கைத் துணை, நண்பர்கள் என்று பலரும் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இவ்வாறு யார் இருந்தாலும் அவர்களிடம் நாம் நன்மையான காரியங்கள் பற்றி எடுத்துரைத்து அவற்றைச் செய்யுமாறு கூறினால், அதுவும் தர்மம் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்’’ என்று கூறினார்கள். அப்போது “(தர்மம் செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது)சொல்லுங்கள்?’’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்பிறருக்கும் தர்மம் செய்வார்’’ என்று சொன்னார்கள். அவருக்கு தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்)சொல்லுங்கள்?’’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்‘’ என்றார்கள். “(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது)சொல்லுங்கள்?’’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவர் நல்லதை’ அல்லது நற்செயலை’(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்’’ என்றார்கள். “(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது)சொல்லுங்கள்?’’ என்று கேட்டதற்குநபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல்: முஸ்லிம் 1834

தமது பொறுப்பின் கீழிருக்கும் நபர்களுக்கு மார்க்கத்தை விளக்கி வழிகாட்டுவது அனைவர் மீதும் கடமையாக இருக்கிறது. இது ஒருபக்கம் இருப்பினும், அவ்வாறு நன்மை ஏவி தீமையைத் தடுப்பதற்கும் அல்லாஹ் தர்மம் செய்த கூலியை வழங்குகிறான். இது ஏக இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் பெரும் பாக்கியம்.

நன்மைக்குத் துணைபுரிவதற்கும் நற்கூலி

எந்தவொரு நற்செயலாக இருப்பினும் அதைச் செய்வதற்காக வேண்டி பிறருக்குத் துணைபுரிந்தால், அதன்மூலம் செய்பவருக்கு கிடைப்பது போன்ற நற்கூலி அவருக்கு உதவியவருக்கும் கிடைக்கும்.

ஆலோசனை அளிப்பது, அறிவுரை வழங்குவது, வழிமுறை சொல்வது, பொருளுதவி செய்வது, பொருளாதாரம் கொடுப்பது என்று அதற்கு எவ்வகையில் உதவினாலும் இதுபோன்று நன்மை கிடைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டுஅதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறேயார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் (1848)

நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் யாசகம் கேட்பவர்’ அல்லது தேவையுடையவர்’ யாரேனும் வந்தால் (தம் தோழர்களை நோக்கி), “(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ் தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறைவேற்றுகின்றான்’’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி), நூல்: புஹாரி (6028), (7476)

ஒரு பெண்தனது வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவுசெய்தால், (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்பலன் அவளுக்கு கிடைக்கும்! (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்பலன் அவளது கணவனுக்கு உண்டு! கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோன்ற (நற்பலன்) கிடைக்கும்! ஒருவர் மற்றவரின் நற்பலனில் எதனையும் குறைத்துவிட மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி (2065)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் வாகனப் பிராணி மடிந்துவிட்டது. எனவேநான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப் பிராணி தாருங்கள்’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “என்னிடம் (வாகனப் பிராணி) இல்லை’’ என்று கூறினார்கள். அப்போது மற்றொரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு அறிவித்துக் கொடுக்கிறேன்’’ என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்‘’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி), நூல்: முஸ்லிம் (3846)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ லஹ்யான்’ குலத்தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பியபோது, “உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரிலும் ஒருவர் புறப்படட்டும்‘’ என்று கூறினார்கள். பிறகு, (படைப் பிரிவில் செல்லாமல் ஊரில்) தங்கியவரிடம் உங்களில் யார் படை வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தார் விஷயத்திலும் அவரது செல்வம் விஷயத்திலும் நலம் பேணி நடந்துகொள்கிறாரோ அவருக்கும் புறப்பட்டுச் சென்ற படைவீரருக்குக் கிடைக்கும் நற்பலனில் பாதியளவைப் போன்றது கிடைக்கும்‘’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம் (3851)

யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய வீட்டாரின் நலன் காக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி), நூல்: முஸ்லிம் (3848)

இவ்வாறு,     நற்காரியங்களைச் செய்வதற்குத் துணைபுரிவது என்பது சாதாரண ஒன்றல்ல. நாமெல்லாம் நன்மைகளைக் கொள்ளையடிக்க மார்க்கம் காட்டும் மகத்தான மாபெரும் வழிமுறை.

தொழுகையைப் பேணுவது, நோன்பு வைப்பது, குர்ஆன் படிப்பது, தர்மம் செய்வது, துஆக்களை அறிவது என்று ஏதாவது ஒன்றிலாவது ஒருவரிடம் மாற்றம் வருதற்கு ஏதோ ஒருவகையில் நாமும் காரணமாக இருந்தால், அதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் அதே அளவு நன்மை நமக்கும் கிடைக்கும்.

இதைப் புரிந்துக் கொள்பவர்கள், தான் மட்டும் சத்தியத்தில் சரியாக இருந்தால் போதும்; பிறர் எப்படி இருந்தால் நமக்கென்ன என்று அலட்சியமாக, சுயநலமாக இருக்க மாட்டார்கள். குடும்பத்திலும், சொந்தத்திலும், சமூகத்திலும் தமக்குள்ள வாய்ப்பை நழுவவிடாமல் அழைப்புப் பணி செய்வதில் ஆர்வம் செலுத்துவார்கள்; அக்கறை காட்டுவார்கள்.

 

ஏகத்துவம் இதழ் : டிசம்பர் 2016

முழு இதழையும் வாசிக்க….. https://onlinetntj.com/egathuvam/december-2016