வீட்டில் பெருநாள் தொழுகையை எப்படி தொழுவது?

வீட்டில் பெருநாள் தொழுகையை
எப்படி தொழுவது?

பெருநாள் தொழுகையை ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு திடல்களில் நிறைவேற்றுவது நபிவழியாகும்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் இம்மாதம் இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழலில் மக்கள் ஒன்று கூடி திடலில் தொழமுடியாத சூழல் உள்ளதால் பெருநாள் தொழுகையை நமது வீட்டில் உள்ளவர்களுடன் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

பொதுவாக பெருநாள் தொழுகையை திடலில் தான் தொழ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும் வெளியில் ஒன்று கூட முடியாத நிர்ப்பந்த சூழல்களில் வீடுகளில் தொழுவதில் தவறில்லை.

வணக்க வழிபாடுகள் உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் மனிதனுடைய சக்திக்கு உட்பட்டே செயல்படுமாறு மார்க்கம் வழிகாட்டியுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்:

இம்மார்க்கத்தில் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை.

(அல்குர்ஆன் 22 : 78)

அல்லாஹ் உங்களுக்கு எளிதையே நாடுகிறான். அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை.

(அல்குர்ஆன் 2 : 185)

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான்.

(அல்குர்ஆன் 2 : 286)

இந்த அடிப்படையிலேயே ஊரடங்கு காலத்தில் (ஆண்கள்) ஐவேளை தொழுகைகளை வீடுகளில் தொழுது வருகிறோம். அது மட்டுமின்றி ஜூமுஆ தொழுகையையும் அவ்வாறே வீடுகளில் தொழுகிறோம்.

இது குறித்து முன்னரே நாம் அறிவித்து இருந்தோம்.

https://onlinetntj.com/articles/ooradangu-needithal-perunal-tholugai-evvaru

வீட்டில் பெருநாள் தொழுகையை எப்படி தொழுவது? என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளதால் அது தொடர்பான சட்டங்களை அறிந்து கொள்வோம்.

பெருநாள் தொழுகை தொடர்பான சட்டங்கள்

ஒவ்வொரு மத்ஹபுக்குமான பெருநாள் சட்டங்கள் என்று இன்று சிலர் வெளியிட்டுள்ளனர்.

ஷாபியாக இருந்தால் இப்படி தொழ வேண்டும், ஹனபியாக இருந்தால் இப்படி தொழ வேண்டும் என்று வெவ்வேறு சட்டங்களை கூறிவருகின்றனர்.

நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்கள் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவானதுதான்.

ஷாஃபிக்கு ஒரு சட்டம், ஹனஃபிக்கு ஒரு சட்டம் என்று இறைத்தூதர் வழிகாட்டவில்லை.

இந்த மத்ஹபு பிரிவினைகள் எல்லாம் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு பின்னர் தோன்றியவையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஃபித்ராவை நிறைவேற்றுதல்

மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதால் நம் பொறுப்பில் உள்ள அனைவர் சார்பிலும் முன்கூட்டியே பித்ராவை நிறைவேற்றிட வேண்டும்.

இது பெருநாள் தொழுகைக்கு முன்பே கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
(பார்க்க முஸ்லிம் 1802, புகாரி 3275)

எப்போது தொழுவது?

சூரியன் உதித்ததும் பெருநாள் தொழுகைக்கான நேரம் ஆரம்பமாகிவிடுகிறது. பெருநாள் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதுதான் மிகச் சிறந்ததாகும். (பார்க்க புகாரி 956 )

எனவே நீண்ட தாமதம் இல்லாமல் அதிகாலையிலேயே தொழுகையை நிறைவேற்றிட வேண்டும்.

வீட்டில் தொழுகிறோம் என்பதால் இதில் சற்று அலட்சியம் ஏற்பட்டு விடலாம். எனவே வீட்டில் ஜமாஅத்தாக சுப்ஹ் தொழுகையை முடித்து விட்டு அனைவரும் உடனே குளித்து, தூய்மையாகி, இருப்பவற்றில் சிறந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு சூரியன் உதித்தவுடன் பெருநாள் தொழுகைக்கு தயாராகி விடலாம்.

தொழுகைக்கு முன்பாக சில பேரீத்தம் பழங்களை சாப்பிடலாம்.

சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
(பார்க்க புகாரி (953)

வீட்டில் எங்கே தொழுவது?

திடலில் தொழுவது வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அதற்கு தற்போது வாய்ப்பு இல்லை என்பதாலேயே வீட்டில் தொழுகிறோம்.

இருந்தாலும் வீட்டிலேயே மொட்டை மாடி, பால் கனி போன்ற திறந்த பகுதியாக இருந்தால் அந்த இடத்தை பெருநாள் தொழுகைக்கு தேர்வு செய்து கொள்ளலாம்.

அதற்கு இயலாத போது வீட்டில் ஏதேனும் ஒரு பகுதியை தொழுவதற்கு தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
தக்பீரும் பிரார்த்தனையும்

தொழுகையை துவக்கும் முன் தொழுமிடத்தில் அமர்ந்து அனைவரும் அமைதியாக அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் விதமாகத் தக்பீர் கூற வேண்டும்.

மாதவிலக்கு ஏற்பட்ட பெண்களும் தொழுகையைத் தவிர இது போன்ற காரியங்களில் பங்கெடுக்க வேண்டும். (பார்க்க புகாரி 971)

மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் தொழுமிடத்திலிருந்து சற்று ஒதுங்கி இருந்து கொள்ள வேண்டும். (பார்க்க புகாரி 324)

தக்பீர் கூறும் போது உரத்த சப்தமின்றி கூறிக் கொள்ள வேண்டும். (பார்க்க அல்குர்ஆன் 7 : 205)
பாங்கு இகாமத் முன் பின் சுன்னத் இல்லை
பெருநாள் தொழுகைக்கு பாங்கு, இகாமத் இல்லை.

அதுபோன்று அதற்கு முன்போ பின்போ சுன்னத் தொழுகை ஏதுமில்லை.
(பார்க்க முஸ்லிம் (1610))

இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழுதல்

பெருநாள் தொழுகையை இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும். (பார்க்க புகாரி 351, 971)

ஒரே பகுதியில் இருப்பவர்கள் இயன்றவரை இணைந்து ஜமாஅத்தாக வீட்டின் மொட்டை மாடியிலோ, முற்றத்திலோ, வளாகத்திலோ தொழுது கொள்ளலாம். முடியாத பட்சத்தில் வீட்டிற்குள்ளேயே நிறைவேற்றிக் கொள்ளலாம்.

தொழுகை வரிசை முறை

ஜமாஅத்தாகத் தொழும் போது இமாமுக்குப் பின்னால் ஆண்களும், அவர்களை அடுத்து சிறுவர்களும், பிறகு பெண்களும் நிற்க வேண்டும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் தொழுதாலும் இம்முறைப்படியே நிற்க வேண்டும்.
(பார்க்க புகாரி 380, முஸ்லிம் 1168)

இரண்டு ஆண்கள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுதால் இமாமும் அவருடன் இருப்பவரும் அடுத்தடுத்து சமமாக நிற்க வேண்டும். இமாமுக்கு வலது புறத்தில் பின்பற்றித் தொழுபவர் இருக்க வேண்டும்.
(பார்க்க புகாரி 728, முஸ்லிம் 1274)

இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணுமாக இருந்தால் ஆண், இமாமின் வலது புறத்திலும், பெண் இமாமிற்கு பின்னாலும் நிற்க வேண்டும்.
(பார்க்க முஸ்லிம் 1171)

ஒரு ஆண் ஒரு பெண் மட்டும் இருந்தால் ஆணுக்குப் பின்னால் பெண் நிற்க வேண்டும். (பார்க்க முஸ்லிம் 1171, 1168, புகாரி 380)

இமாமிற்குப் பின்னால் வரிசையாக நிற்கும் போது வரிசையை நேராகவும், நெருக்கமாகவும் ஆக்கிக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
(பார்க்க புகாரி 723, 717, நஸாயீ 806)

ஜமாஅத்தாக தொழ இயலாதவர்கள்

பெருநாள் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்ற இயலாமல் தனியாக இருப்பவர்கள் “உங்களுக்கு நேர்வழிகாட்டியதற்காக அல்லாஹ்வை பெருமைப்படுத்தி நீங்கள் நன்றி செலுத்துங்கள்!” (அல்குர்ஆன் 2 : 185) என்ற வசனத்தின் பிரகாரம் அதிகமதிகம் தக்பீர் கூறி இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

எனினும் அருகில் யாரும் தொழுகிறார்களா? என்பதை அறிந்து அவர்களுடன் இணைந்து தொழ முயற்சிப்பது சிறந்தது.

தொழுகை முறை

தக்பீர் தஹ்ரீமா எனப்படும் முதல் தக்பீர் கூறிய பின், ‘அல்லாஹும்ம பாஇத் பைனீ’ போன்ற வழக்கமாகத் தொழுகையில் ஓதும் துஆவை ஓதிவிட்டு, பின்னர் ஏழு தக்பீர்கள் கூற வேண்டும். அதன் பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி, துணை சூரா ஓத வேண்டும்.
அதுபோல, ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்து நின்றவுடன் சூரத்துல் ஃபாத்திஹாவுக்கு முன்பு ‘அல்லாஹு அக்பர்’ என்று ஐந்து முறை கூறியுள்ளார்கள். இந்தக் கூடுதல் தக்பீர்களை, பின்பற்றித் தொழுபவர்கள் உரத்த சப்தமின்றி கூற வேண்டும். இந்தக் கூடுதல் தக்பீர்கள் தவிர பிற செயல்கள் அனைத்தும் மற்ற தொழுகைகளைப் போன்று செய்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். குர்ஆனை ஓதுவதற்கு முன்பு இவற்றைக் கூறுவார்கள்.

பார்க்க அபூதாவுத் (971), தாரகுத்னீ (பாகம்: 2, பக்: 48), பைஹகீ (5968)

ஓத வேண்டிய சூராக்கள்

பெருநாள் தொழுகையின் முதல் ரக்அத்தில் சூரத்துல் அஃலா (87வது) அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் காஷியா (88வது) அத்தியாயத்தையும் ஓதுவது சுன்னத்தாகும் அல்லது சூரத்துல் காஃப் (50வது) அத்தியாயத்தையும் சூரத்துல் கமர் (54வது) அத்தியாயத்தையும் ஓதுவது சுன்னத்தாகும். (பார்க்க முஸ்லிம் 1592)

தெரியாதவர்கள் தமக்குத் தெரிந்த எந்த சூராவையும் துணை சூராவாக ஓதிக் கொள்ளலாம். (பார்க்க புகாரி 757)

தொழுகைக்குப் பிறகு மிம்பரின்றி உரை

பெருநாளில் தொழுகைக்குப் பிறகு மிம்பர் இல்லாமல் இமாம் தரையில் நின்று உரை நிகழ்த்த வேண்டும். ஒரு உரைமட்டும்தான் நிகழ்த்த வேண்டும். அந்த உரையின் போது இமாம் இடையில் அமர்ந்து எழக் கூடாது.
(பார்க்க புகாரி 956, 957, முஸ்லிம் 1612)

உரையில் இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்க வேண்டும். (பார்க்க முஸ்லிம் 1607)

உரையின்றி தொழலாம் என்று சிலர் கூறுகிறார்கள். நபியவர்கள் நமக்கு சொல்லியவற்றை முடிந்தவரை கடைபிடிக்க வலியுறுத்துவதே சரியானதாகும்.

ஒருவர் தமக்கு தெரிந்த குர்ஆன், மற்றும் ஹதீஸ்களை குடும்ப உறுப்பினர்களுக்கு சிறிது நேரம் அறிவுறுத்துவது ஒன்றும் சிரமமான காரியமல்ல.

பிரார்த்தனை

உரை முடிந்ததும் உடனே எழுந்து விடாமல் சிறிது நேரம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தல் முக்கியமானது. பெருநாளின் வணக்க வழிபாடுகளில் துஆவும் ஒன்று.

எனவே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மனமுருகி துஆவில் ஈடுபடுவோம்.

குறிப்பாக கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து அனைவரயும் பாதுகாக்க இறைவனிடம் பாதுகாப்புக் கோருவோம்.

தர்மம் செய்வோம்

கொடிய நரகத்திலிருந்து இறைவன் நம்மைப் பாதுகாப்பதற்காக பெருநாளன்று நமது செல்வங்களிலிருந்து நற்காரியங்களுக்கும், ஏழைகளுக்கும் வாரிவழங்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் பெருநாள் உரையில் வழிகாட்டியுள்ளார்கள். (பார்க்க புகாரி 863)

எனவே இந்த ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்காக அதிகமதிகம் வாரிவழங்கி பெருநாளை சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்குவோம்.

மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்

பெருநாள் அன்று மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் பொழுது போக்குகளை மார்க்கம் அனுமதித்துள்ளது. (பார்க்க புகாரி 950)

அல்லாஹ்வின் அருள் நிறைந்த நன்னாளில் நமது பெற்றோர்கள், குழந்தைகள், மனைவி மக்கள், மற்றும் உற்றார் உறவினர் அனைவருடனும் மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டோடுவோம்.

பிறமத சகோதரர்களுக்கும் விருந்தளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம்.

கொரோனோவிற்கான தற்காப்பு நடிவடிக்கைகளிலும் கவனம் செலுத்துத்வோம்.