ஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது?

ஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது?

பெருநாள் தொழுகையை ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு திடல்களில் நிறைவேற்றுவது நபிவழியாகும்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் இந்நிலை பெருநாள் வரை நீடிக்க வாய்ப்புள்ள சூழலில் அவ்வாறு நீடித்தால் என்ன செய்வது?

திடலில் ஒன்று கூடித் தொழமுடியாத சூழல் ஏற்பட்டால் பெருநாள் தொழுகையை நமது வீட்டில் உள்ளவர்களுடன் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

பொதுவாக பெருநாள் தொழுகையை திடலில் தான் தொழ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும் வெளியில் ஒன்று கூட முடியாத நிர்ப்பந்த சூழல்களில் வீடுகளில் தொழுவதில் தவறில்லை.

வணக்க வழிபாடுகள் உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் மனிதனுடைய சக்திக்கு உட்பட்டே செயல்படுமாறு மார்க்கம் வழிகாட்டியுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்:

இம்மார்க்கத்தில் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை.

(அல்குர்ஆன் 22 : 78)

அல்லாஹ் உங்களுக்கு எளிதையே நாடுகிறான். அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை.

(அல்குர்ஆன் 2 : 185)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்;

நூல் : புகாரி (39)

இந்த அடிப்படையிலேயே ஊரடங்கு காலத்தில் (ஆண்கள்) ஐவேளை தொழுகைகளை வீடுகளில் தொழுது வருகிறோம். அது மட்டுமின்றி ஜூமுஆ தொழுகையையும் அவ்வாறே வீடுகளில் தொழுகிறோம்.

எனவே கொரோனா நோயின் காரணத்தால் ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படாத போது நமது வீடுகளிலேயே மொட்டை மாடி, திறந்த வெளி போன்ற இடங்கள் இருந்தால் அங்கு பெருநாள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டின் உள்பகுதியிலே குடும்பத்துடன் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி கொள்ளலாம்.

உரையாற்றும் நபர் இறையச்சம், தர்மம் குறித்த தமக்கு தெரிந்த சில செய்திகளை கூறி சில நிமிடங்கள் உரையாற்றினாலே போதுமானது. நீண்ட நேரம் உரையாற்ற வேண்டும் என்பதில்லை.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்ய போதுமானவன்

பெருநாள் தொழுகையின் சட்டங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.

https://onlinetntj.com/articles/perunal-tholugai