தங்கத்தில் ஸகாத்திற்கான நிஸாப் என்ன?

‘ஒரு பொருள் எந்த அளவு நம்மிடம் இருந்தால் ஸகாத் கடமை’ என்பதைக் குறிக்க ‘நிஸாப்’ என்ற அரபி வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும்.
ஸகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும்.
{ خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً } [التوبة: 103]
(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை எடுப்பீராக!
(அல்குர்ஆன் 9:103)
இந்த இறைவசனத்தின் அடிப்படையில் செல்வமாகக் கருதப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஸகாத் கடமையாகும். எந்தெந்த பொருட்களுக்கு ஸகாத் கடமையில்லை என ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் வந்துள்ளதோ அவை விதிவிலக்கானவையாகும்.
தானியங்கள், பேரீத்தம் பழம், ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய கால்நடைகள், வெள்ளி, புதையலாகக் கிடைக்கும் செல்வம் போன்றவற்றில் எவ்வளவு இருந்தால் ஸகாத் கடமையாகும் என்பது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் வந்துள்ளது.
ஒரு பொருளில் எந்த அளவை அடைந்தால் ஸகாத் கடமையாகுமோ அந்த அளவைக் குறிக்க நிஸாப் என்று சொல்லப்படும்.
எந்தெந்த செல்வங்களுக்கு ஸகாத் கடமையாவதற்கான நிஸாப் நபிமொழிகளில் நேரடியாகக் கூறப்படவில்லையோ அவற்றுக்கு மக்கள் தங்கத்தினுடைய நிஸாப் அடிப்படையிலேயே தமது ஸகாத் கடைமையை நிறைவேற்றி வருகின்றனர்.
தங்கத்தினுடைய நிஸாப் தொடர்பாக வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். எனவே வெள்ளியின் நிஸாப் அடிப்படையில்தான் ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.
தங்கத்தின் நிஸாப் தொடர்பாக வரக்கூடிய செய்திகள் பலவீனமானவையாக இருந்தாலும் ஆதாரப்பூர்வமான ஒரு செய்தி உள்ளது. அது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
தங்கத்தின் நிஸாப் தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான செய்தி
தங்கத்தின் நிஸாப் தொடர்பாக வரும் ஹதீஸ்கள் பெரும்பாலும் பலவீனமானவையாக இருந்தாலும் பின்வரும் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதாகும்.
الأموال للقاسم بن سلام – كتاب الصدقة وأحكامها وسننها
باب فروض زكاة الذهب والورق – حديث : ‏ 853‏ 24404
قال : حدثنا يزيد ، عن حبيب بن أبي حبيب ، عن عمرو بن هرم ، عن محمد بن عبد الرحمن الأنصاري ، أن في كتاب رسول الله صلى الله عليه وسلم ، وفي كتاب عمر في الصدقة أن “ الذهب لا يؤخذ منه شيء حتى يبلغ عشرين دينارا ، فإذا بلغ عشرين دينارا ففيه نصف دينار ، والورق لا يؤخذ منه شيء حتى يبلغ مائتي درهم ، فإذا بلغ مائتي درهم ففيها خمسة دراهم
நபி (ஸல்) அவர்களுடைய கடிதத்திலும், உமர் (ரலி) அவர்களுடைய கடிதத்திலும் (ஸகாத்) தர்மம் தொடர்பாக (பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.) “இருபது தீனாரை அடையும் வரை தங்கத்திலிருந்து எதுவும் (ஸகாத்தாக) எடுக்கப்படாது. இருபது தீனாரை அடைந்து விட்டால் அதில் அரை தீனார் (ஸகாத்) ஆகும். இரு நூறு திர்ஹத்தை அடையும் வரை வெள்ளியிலிருந்து எதுவும் (ஸகாத்தாக) எடுக்கப்படாது. இரு நூறு திர்ஹத்தை அடைந்து விட்டால் அதில் ஐந்து திர்ஹம் (ஸகாத்) ஆகும்.
அறிவிப்பவர்: முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் அல்அன்சாரி
நூல்: அல்அம்வால் லில்காஸிம் (853)
‘இருபது தீனார் எனும் அளவை அடையும் வரை தங்கத்தில் ஸகாத் இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடிதத்தில் இருந்ததாக இச்செய்தி கூறுகிறது.
இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக உள்ளனர். எனவே தங்கத்தின் நிஸாபிற்கு இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ளலாம்.
நபியின் கடிதம் ஆதாரமாகுமா?
நபிகளாரின் கடிதத்திலிருந்து கூறும் நபர் முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் எனும் தாபியி ஆவார்.
பொதுவாக ஒரு தாபியி, ‘நபிகள் நாயகம் கூறினார்கள்’ என்றோ ‘நபிகள் நாயகம் இவ்வாறு செய்தார்கள்’ என்றோ கூறும்போது அது தொடர்பு அறுந்த செய்தியாகக் கருதப்படுகிறது.
நபிகள் நாயகத்தின் காலத்தை அடையாத ஒருவர் (தாபியி) நபி கூறுவதாகச் சொன்னால் அங்கே அந்த நபருக்கும், நபிகள் நாயகத்திற்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார். விடுபட்டவர்கள் யாரென்று குறிப்பிடப்படாத போது அவரின் நம்பகத்தன்மை உள்ளிட்ட அம்சங்கள் அறியப்படாத காரணத்தால் அச்செய்தி ஏற்றுக் கொள்ளத் தகாத செய்தியாகி விடுகிறது.
இது பொதுவாக ஒரு தாபியி, நபிகள் நாயகம் கூறியதாக அறிவிக்கும் செய்தியின் நிலையாகும். இதில் மாற்றுக்கருத்தில்லை.
நபியவர்களின் கடிதம் தொடர்பான இச்செய்தியினை ஒரு தாபியி தான் அறிவிக்கின்றார் என்றாலும் இது வித்தியாசமானது.
இங்கே அந்தத் தாபியி, நபிகள் நாயகம் கூறியதாகவோ, நபிகள் நாயகம் இவ்வாறு செயல்பட்டார்கள் என்றோ அறிவிக்கவில்லை. மாறாக நபியின் கடிதத்தில் இவ்வாறு இருந்தது என்று கூறுகிறார்.
அப்படிக் கூறும் இந்தத் தாபியி நம்பகமானவர். அவர் மட்டுமல்ல! இதன் அறிவிப்பில் இடம் பெறும் அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்கள் ஆவர்.
அப்படியிருக்கும்போது இங்கே நாம் கவனிக்க வேண்டியது உண்மையில் அது நபிகள் நாயகம் எழுதிய கடிதம் தானா? அது யாருக்கு எழுதப்பட்டது? அது எப்படி அவருக்குக் கிடைத்தது என்பது தான்.
இது தொடர்பாகப் பின்வரும் செய்தி கூடுதல் தகவல்களைத் தெரிவிக்கின்றது.
அதாவது ஸகாத் தொடர்பாக நபியவர்கள் அம்ர் பின் ஹஸ்ம் எனும் நபித்தோழருக்கு எழுதிய கடிதம் என்றும், அக்கடிதம் அம்ர் பின் ஹஸ்மின் குடும்பத்தாரிடமிருந்து கிடைக்கப்பெற்றது என்றும் முந்தைய செய்தியின் அதே அறிவிப்பாளர் வரிசையுடன் பின்வரும் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.
كتاب الأموال
1389- قَالَ أَبُو عُبَيْدٍ : أنا يَزِيدُ بْنُ هَارُونَ، أنا حَبِيبُ بْنُ أَبِي حَبِيبٍ، أنا عَمْرُو بْنُ هَرَمٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَنْصَارِيُّ، قَالَ : لَمَّا اسْتُخْلِفَ عَمْرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، أَرْسَلَ إِلَى الْمَدِينَةِ، يَلْتَمِسُ كِتَابَ رَسُولِ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – إِلَى عَمْرِو بْنِ حَزْمٍ فِي الصَّدَقَاتِ، وَكِتَابَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَوَجَدَ عِنْدَ آلِ عَمْرِو بْنِ حَزْمٍ كِتَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّدَقَاتِ، وَوَجَدَ عِنْدَ آلِ عُمَرَ كِتَابَ عُمَرَ فِي الصَّدَقَاتِ مِثْلَ كِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : فَنُسِخَا لَهُ، فَحَدَّثَنِي عَمْرُو بْنُ هَرِمٍ أَنْهَ طَلَبَ إِلَى مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنْ يَنْسَخَهُ مَا فِي ذَلِكَ الْكِتَابَيْنِ، فَنَسَخَ لَهُ مَا فِي هَذَا الْكِتَابِ مِنْ صَدَقَةِ الْإِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ وَالذَّهَبِ وَالْوَرِقِ وَالتَّمْرِ وَالْحَبِّ وَالزَّبِيبِ : 
உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற போது (ஸகாத்) தர்மங்கள் தொடர்பாக அம்ரு இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு (எழுதப்பட்ட) நபியவர்களுடைய கடிதத்தையும், உமர் (ரலி) அவர்களுடைய கடிதத்தையும் தேடி மதீனாவுக்கு ஒருவரை அனுப்பி வைத்தார்கள். அம்ரு இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரிடத்தில் (ஸகாத்) தர்மங்கள் தொடர்பாக அம்ருப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு (எழுதப்பட்ட) நபியவர்களுடைய கடிதத்தை அவர் பெற்றுக் கொண்டார். உமர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரிடத்திலே (ஸகாத்) தர்மங்கள் தொடர்பான உமர் (ரலி) அவர்களுடைய கடிதம் பெற்றுக் கொண்டார். (உமருடைய கடிதம்) நபி (ஸல்) அவர்களுடைய கடிதத்தைப் போன்றே இருந்தது. அவை இரண்டும் அவருக்காகப் பிரிதியெடுக்கப்பட்டது என்று முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் கூறுகிறார்.
ஹபீப் இப்னு அபீ ஹபீப் கூறுகிறார் : அம்ரு இப்னு ஹரிம் அவர்கள், முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் அவர்களிடம் அந்த இரண்டு கடிதங்களிலும் உள்ள விபரங்களைத் தனக்கு பிரதியெடுத்துத் தருமாறு வேண்டினார்.
ஒட்டகம், மாடு, ஆடு, தங்கம், வெள்ளி, பேரீத்தம் பழம், தானியம், உலர்ந்த திராட்சை முதலியவற்றுக்கான ஸகாத் தொடர்பான விபரங்கள் அக்கடித்தில் இருந்தது. (அதை) அவருக்கு அவர் பிரதியெடுத்துக் கொடுத்தார்…
(நீண்ட செய்தியின் ஒரு பகுதி)
அறிவிப்பவர் : முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் அல்அன்சாரி
நூல் : அல்அம்வால் லில்காஸிம் (1389)
இந்த செய்தியை நன்றாகக் கவனியுங்கள்.
உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் நபியவர்கள் தொடர்பான செய்திகளைத் திரட்டும் போது அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு, நபியவர்கள் எழுதிய கடிதம் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) வீட்டில் கிடைக்கிறது.
அக்கடிதத்தை முஹம்மத் பின் அப்துர் ரஹ்மானும், அவரிடமிருந்து அம்ர் பின் ஹரிமும் பிரதியெடுத்துள்ளனர்.
அக்கடிதத்திலிருந்தே முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் கூறுகிறார்.
இது தான் நாம் கவனிக்கத்தக்க அம்சமாகும்.
ஒரு நபித்தோழருக்கு நபிகள் நாயகம் எழுதிய கடிதத்திலிருந்து நம்பகமான ஒரு தாபியி அறிவித்தால் இப்போது இக்கடிதத்தின் நிலை என்ன?
நபிகள் நாயகம் கூறியதாக, செய்ததாக அந்த தாபியி நேரடியாகக் கூறினால் அறிவிப்பாளர் தொடரில் யாரோ விடுபட்டுள்ளார் எனும் பிரச்சனை அந்தச் செய்தியில் ஏற்பட்டு விடும். ஆனால் இது அப்படியல்ல.
நபித்தோழர் ஒருவருக்கு நபிகளார் எழுதிய கடிதத்தை அந்நபித்தோழரின் குடும்பத்தாரிடமிருந்து ஒரு தாபியி பெற்றுக் கொண்டு அதிலிருந்து அறிவிக்கின்றார்.
உதாரணமாக, காந்திக்கு நேரு கடிதம் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அக்கடிதத்தை காந்தியின் குடும்பத்தாரிடமிருந்து ஒருவர் வாங்கிப் பார்த்து, அதிலிருந்து ஒரு செய்தியைக் கூறுகிறார் என்றால் அவ்வாறு கூறும் நபர் நேருவைப் பார்த்திராவிட்டாலும் அவர் கடிதத்திலிருந்து கூறும் செய்திக்கு ஒரு நம்பகத்தன்மை ஏற்படுகிறதல்லவா?
அது போலவே நபிகள் நாயகம் ஒரு நபித்தோழருக்கு எழுதிய கடிதத்தை அவரின் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுக் கொண்டு ஒரு நம்பகமான தாபியி அறிவிக்கும் போது அச்செய்தியின் நிலை நம்பகமானதாக அமைகிறது.
உமர் (ரலி) அங்கீகாரம்
அம்ர் இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களின் குடும்பத்தாரிடம் இருந்தது நபியின் கடிதமா? என்பது எவ்வாறு உறுதி செய்யப்பட்டது? என்ற கேள்விக்கு உமர் (ரலி) அவர்கள் அது நபியின் கடிதம் என்பதை ஏற்று அதில் உள்ளபடி சட்டமாக்கியுள்ளார்கள்.
مصنف عبد الرزاق (9/ 384)
17698 – عبد الرزاق عن الثوري عن يحيى بن سعيد عن سعيد بن المسيب أن عمر جعل في الإبهام خمس عشرة وفي السبابة عشرا وفي الوسطى عشرا وفي البنصر تسعا وفي الخنصر ستا حتى وجدنا كتابا عند آل حزم عن رسول الله صلى الله عليه و سلم أن الأصابع كلها سواء فأخذ به
“(காயங்களுக்குரிய ஈட்டுத் தொகையாக) பெருவிரலுக்கு பதினைந்து (ஒட்டகம்) என்றும், சுட்டுவிரலுக்கு பத்து என்றும், நடுவிரலுக்கு பத்து என்றும், மோதிர விரலுக்கு ஒன்பது என்றும், சுண்டுவிரலுக்கு ஆறு என்றும் உமர் (ரலி) நிர்ணயித்தார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அம்ரு இப்னு ஹஸ்ம் (ரலி) (அவர்களுக்கு எழுதப்பட்ட) ஒரு கடிதத்தை அவர்களின் குடும்பத்தாரிடத்தில் நாங்கள் பெற்றுக் கொண்டோம். அதில் “(ஈட்டுத் தொகை வழங்கும் விசயத்தில்) விரல்கள் அனைத்தும் சமமானவையாகும்” என்று இருந்தது. உடனே (உமர் அவர்கள்) அதை (சட்டமாக) எடுத்துக் கொண்டார்.
அறிவிப்பவர்: ஸயீது இப்னுல் முஸய்யப்,
நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (17698)
அம்ரு பின் ஹஸ்ம் அவர்களுக்கு நபியவர்கள் எழுதிய கடிதத்தை உமர் (ரலி) அங்கீகரித்துள்ளார்கள் என்பதற்கு மேற் சொன்ன செய்தி ஆதாரமாக இருக்கிறது.
இச் செய்தியை அறிவிக்கும் ஸயீத் இப்னுல் முஸய்யப் அவர்கள் அதிகமான நபித்தோழர்களைச் சந்தித்த மிகப் பெரும் தாபியீன்களில் ஒருவராவார். இவர் மதீனாவில் வாழ்ந்தார். உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பிறந்தார். உமர் (ரலி) அவர்களிடமிருந்து செய்திகளை நேரடியாகக் கேட்டுள்ளார்.
இமாம் யஹ்யா இப்னு முயீன், இமாம் மாலிக் போன்றவர்கள் ஸயீத் இப்னுல் முஸய்யப் அவர்கள் உமர் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியேற்கவில்லை எனக் கூறியுள்ளனர். ஆனால் அவர்களது கூற்று தவறானதாகும். ஸயீது இப்னுல் முஸய்யப் அவர்கள், உமர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியேற்றுள்ளார் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
مصنف ابن أبي شيبة (13/ 58)
34610- حَدَّثَنَا غُنْدَرٌ ، عَنْ شُعْبَةَ ، عَنْ إِيَاسِ بْنِ مُعَاوِيَةَ ، قَالَ : جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، فَقَالَ لِي : مِمَّنْ أَنْتَ ؟ قُلْتُ : مِنْ مُزَيْنَةَ ، قَالَ : إِنِّي لأَذْكُرُ يَوْمَ نَعْيِ عُمَرَ بْنِ الْخَطَّابِ النُّعْمَانَ عَلَى الْمِنْبَرِ.
تاريخ ابن أبي خيثمة (4/ 115)
1991- حَدَّثَنا أحمد بن حنبل ، قال : حدثنا مُحَمَّد بن جعفر ، قال : حدثنا شُعْبَة ، عن إِيَاس بن مُعَاوِيَة ، قال : قال لي سعيد بن الْمُسَيَّب : ممن أنت ؟ قلت من مزينة إني لأذكر يوم نعى عمرُ بن الخطاب النعمانَ بن المُقَرِّن المزني على المنبر.
முஸைனா கோத்திரத்தைச் சார்ந்த இயாஸ் இப்னு முஆவியா கூறுகிறார் : நான் ஸயீத் இப்னு முஸய்யப் அவர்களுக்கு அருகில் இருந்தேன். அப்போது அவர்கள் என்னிடம் “நீர் எதைச் சார்ந்தவர்?” என்று கேட்டார். அதற்கு “முஸைனா” கோத்திரம் என்று நான் பதிலளித்தேன். அப்போது ஸயீத் அவர்கள் “உமர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று, முஸைனா கோத்திரத்தைச் சார்ந்த “நுஃமான் இப்னுல் முகர்ரின்” அவர்களின் மரணச் செய்தியை அறிவித்த நாளை நான் நினைத்துப் பார்க்கிறேன்” என்று கூறினார்கள்.
நூற்கள் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (34610), தாரீக் இப்னு அபீ ஹைஸமா (1991)
மேற்கண்ட செய்தியிலிருந்து ஸயீத் இப்னல் முஸய்யப் அவர்கள் உமர் (ரலி) அவர்களை நேரில் பார்த்துள்ளார்கள், அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
இமாம் புகாரி, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், அலி இப்னுல் மதீனி, இப்னு வல்லாஹ் குர்துபி போன்ற இமாம்கள் ஸயீத் இப்னுல் முஸய்யப் அவர்கள் உமர் அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளார் என்று கூறியுள்ளனர்.
الجرح والتعديل (4/ 61)
حدثنا عبد الرحمن نا محمد بن حمويه بن الحسن قال سمعت ابا طالب (408 ك) قال قلت لاحمد بن حنبل: سعيد بن المسيب ؟ فقال ومن كان مثل سعيد بن المسيب ؟ ثقة من اهل الخير، قلت سعيد عن عمر حجة قال: هو عندنا حجة، قد رأى عمر وسمع منه، إذا لم يقبل سعيد عن عمر فمن يقبل ؟.
ஸயீத் பின் முஸய்யப் (நம்பகமானவரா) என்று அஹ்மத் பின் ஹம்பல் அவர்களிடம் கேட்டேன். அதற்கு, “(நம்பகத்தன்மையில்) ஸயீத் பின் முஸய்யப் போன்று எவர் இருக்கிறார்? அவர் நம்பகமானவர். நல்லோரில் ஒருவர்” என்று அஹ்மத் பின் ஹம்பல் பதிலளித்தார். “உமர்(ரலி) வழியாக ஸயீத் (அறிவிக்கும் அறிவிப்புகள்) ஆதாரத்திற்கு ஏற்றதா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “ஆம் நம்மிடத்தில் (அந்த அறிவிப்புகள்) ஆதாரத்திற்கு ஏற்றதே! அவர் உமர்(ரலி)யை சந்தித்துள்ளார். அவரிடமிருந்து செவியேற்றும் உள்ளார். உமர்(ரலி) வழியாக ஸயீத் அறிவிக்கும் அறிவிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையெனில் யார் தான் ஏற்றுக் கொள்ளப்படுவார்?” என்று கூறினார்.
நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 4, பக்கம் 61
التمهيد لما في الموطأ من المعاني والأسانيد (23/ 94)
وكان علي بن المديني يصحح سماعه من عمر
உமரிடமிருந்து ஸயீத் பின் முஸய்யப் செவியுற்றார் என்பதை அலீ பின் மதீனீ சரிகாண்கிறார்.
நூல்: அத்தம்ஹீத், பாகம் 23, பக்கம் 94
التمهيد لما في الموطأ من المعاني والأسانيد (23/ 93)
قال ابن وضاح ولد سعيد بن المسيب لسنتين مضتا من خلافة عمر وسمع منه كلامه الذي قال حين نظر إلى الكعبة اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام
التاريخ الكبير (1/ 294)
ابراهيم بن طريف الحنفي هو من ولد قتادة بن مسلمة روى عنه شعبة، قال ابن عيينة حدثنا ابراهيم سمع حميد بن يعقوب (1) سمع سعيد بن المسيب قال سمعت من عمر كلمة لم يسمعها احد غيرى حين رأى البيت قال اللهم انت السلام ومنك السلام، قال ابن عيينة قال ابراهيم بن طريف اليمامى حميد حى بالمدينة، قال سفيان فقدمت المدينة فقالوا هو مريض لا يخرج.
ஸயீத் பின் முஸய்யப், உமர்(ரலி)யின் ஆட்சிக்காகலத்தில் முதல் இரண்டு ஆண்டுகள் கழிந்து பிறந்தார். மேலும், உமர் (ரலி) அவர்கள் கஅபாவைக் கண்டபோது “யா அல்லாஹ்! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது” என்று கூறிய அவரது வார்த்தைகளை அவரிடமிருந்து ஸயீத் இப்னுல் முஸய்யப் செவியுற்றுள்ளார் என்று இப்னு வழ்ழாஹ் கூறியுள்ளார்.
நூல்: அத்தம்ஹீத், பாகம் 23, பக்கம் 93
இதே செய்தியை இமாம் புகாரி அவர்கள் தனது தாரீகுல் கபீர் (பாகம் 1, பக்கம் 294)எனும் நூலில் குறிப்பிட்டு ஸயீத் பின் முஸய்யப் உமர்(ரலி)யிடமிருந்து செவியுற்றுள்ளார் என்பதை அங்கீகரித்துள்ளார்.
எனவே, ஸயீத் பின் முஸய்யப் உமர்(ரலி)யிடமிருந்து செவியுற்றுள்ளார் என்பது உறுதியாகிறது.
“நபி (ஸல்) அவர்களிடமிருந்து அம்ரு இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தை அவர்களின் குடும்பத்தாரிடத்தில் நாங்கள் பெற்றுக் கொண்டோம்” என்று ஸயீத் இப்னுல் முஸய்யப் அவர்கள் கூறியதாகவே முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. எனவே குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தில் ஸயீத் இப்னுல் முஸய்யப் நேரடியாக இருந்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.
எனவே அம்ரு இப்னு ஹஸ்ம் அவர்களின் குடும்பதினரை உமர் (ரலி) அவர்கள் நம்பகமானவர்களாகக் கருதியுள்ளார்கள் என்பதும், அவர்களிடமிருந்த அந்தக் கடிதத்தை நபியவர்களின் கடிதம்தான் என உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது.
உமர் (ரலி) காயங்களுக்கான ஈட்டுத் தொகை தொடர்பாக தனக்கு எந்த ஹதீசும் கிடைக்காததால் அவர் தவறான ஒரு நிலைபாட்டில் இருந்துள்ளார். அதன் பின் அம்ரு பின் ஹஸ்ம்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எழுதிய கடிதம் அவரது குடும்பத்தாரிடம் இருப்பதை அறிந்த உமர்(ரலி) அதிலிருந்து சரியான சட்டத்தை எடுத்துக் கொள்கிறார். தனது முந்தைய கருத்தை மாற்றிக் கொள்கிறார்.
மேலும், உமர் (ரலி) அவர்கள் ஈட்டுத் தொகை தொடர்பான சட்டத்தை மட்டும் அந்தக் கடிதத்திலிருந்து எடுத்துக் கொள்ளவில்லை. ஸகாத் தொடர்பாகவும் அந்தக் கடிதத்திலிருந்து எடுத்துக் கொண்டார்.
தங்கத்தின் நிஸாபிற்கான ஆதாரப்பூர்வமான செய்தியாக அல்அம்வால் எனும் புத்தகத்திலிருந்து நாம் எடுத்துக் காட்டியதில்,
أن في كتاب رسول الله صلى الله عليه وسلم ، وفي كتاب عمر في الصدقة أن “ الذهب لا يؤخذ منه شيء
நபி (ஸல்) அவர்களுடைய கடிதத்திலும், உமர் (ரலி) அவர்களுடைய கடிதத்திலும் (ஸகாத்) தர்மம் தொடர்பாக (பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.) என்றும்,
وَوَجَدَ عِنْدَ آلِ عُمَرَ كِتَابَ عُمَرَ فِي الصَّدَقَاتِ مِثْلَ كِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،
உமர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரிடமிருந்து (ஸகாத்) தர்மங்கள் தொடர்பான உமர் (ரலி) அவர்களுடைய கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டது. (உமருடைய கடிதம்) நபி (ஸல்) அவர்களுடைய கடிதத்தைப் போன்றே இருந்தது.
என்றும் வந்துள்ளது.
ஸகாத் தொடர்பான சட்டங்கள் அம்ரு பின் ஹஸ்முக்கு நபி(ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் என்ன இருந்ததோ அதே போலத்தான் உமர்(ரலி)யின் கடிதத்திலும் இருந்தது என்று சொல்லப்படுவதிலிருந்தே உமர்(ரலி) அம்ரு பின் ஹஸ்முடைய கடிதத்திலிருந்து ஸகாத் தொடர்பாகவும் எடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
எனவே, அம்ரு பின் ஹஸ்ம்(ரலி) அவர்களின் குடும்பத்தாரிடம் பெறப்பட்ட கடிதத்தையும் அதில் உள்ள தகவல்களையும் உமர் (ரலி) உறுதிப்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது.
அது நபியின் கடிதம் தான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்திய காரணத்தால் தான் விரல்களுக்கான ஈட்டுத் தொகை வாங்கும் விஷயத்தில் அக்கடிதத்தில் என்ன உள்ளதோ அதையே உமர் (ரலி) சட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ளார்.
அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) குடும்பத்தாரிடம் சட்டதிட்டங்கள் பற்றி தகவல் அடங்கிய நபியின் கடிதம் உள்ளது என்பதை உமர் (ரலி)யின் இந்தச் செய்தி உறுதிப்படுத்தி விடுகிறது. மேலும் அது நபியின் கடிதம் தான் என்பதற்கு உமர் எனும் மூத்த நபித்தோழரின் அங்கீகாரமும் கிடைத்து விடுகிறது.
அதே கடிதம் தான் உமர் பின் அப்துல் அஜீஸின் ஆட்சிக்காலத்தில், அம்ர் பின் ஹஸ்மின் குடும்பத்தாரிடம் பெற்றுக் கொள்ளப்படுகிறது. முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் எனும் தாபியி அக்கடிதத்திலிருந்தே அறிவிக்கின்றார் எனும்போது இந்தச் செய்தி ஆதாரமாக எடுத்துக் கொள்ளத்தக்க செய்தியாகி விடுகிறது.
ஒரு தாபியி, நபிகள் நாயகம் பற்றி அறிவிக்கிறார் எனும் மேலாட்டமான பார்வையில் பார்த்தால் இது ‘முர்ஸல்’ எனும் தொடர்பு அறுந்த செய்தியாகத் தெரிகின்றது. ஆனால், அம்ர் பின் ஹஸ்ம் எனும் சஹாபிக்கு நபியவர்கள் எழுதிய கடிதம் நேரடியாக அவரது குடும்பத்தாரிடம் பெற்றுக் கொள்ளப்படுவதாலும் அது நபியின் கடிதம் தான் எனும் அங்கீகாரத்தை உமர் (ரலி) எனும் நபித்தோழர் வழங்கி விட்டதாலும் கருத்தின் அடிப்படையில் இதில் எவ்விதத் தொடர்பு முறிவும் இல்லை.
ஒருவரது எழுத்திலிருந்து அறிவிக்கும் போது உண்மையில் அது அவர் எழுதியது தானா? என்பதை உறுதி செய்து கொண்டாலே போதுமானது.
எனவே இந்தச் செய்தியின் அடிப்படையில் தங்கத்தின் நிஸாப் 20 தீனார்களாகும். அதாவது ஒருவரிடம் 20 தீனார் அளவுக்குத் தங்கம் இருக்கும்போது தான் ஸகாத் கடமையாகும்.
ஐயமும் தெளிவும்
ஹபீப் இப்னு அபீ ஹபீப் பலவீனமானவரா?
நபியவர்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள ஜகாத் தொடர்பான விவரங்கள் பின்வரும் அறிவிப்பாளர்கள் தொடரில் வந்துள்ளது.
1. முஹம்மது இப்னு அப்துர் ரஹ்மான் அல்அன்சாரி
2. அம்ருப்னு ஹரம்
3. ஹபீப் இப்னு அபீ ஹபீப்
4. யஸீத் இப்னு ஹாரூன்.
5. அபூ உபைத் அல்காஸிம் இப்னு ஸல்லாம் (நூலாசிரியர்)
இதில் இடம் பெற்றுள்ள ஹபீப் இப்னு அபீ ஹபீப் என்பவர் பற்றி சில குறைகள் சொல்லப்பட்டுள்ளதால் அது குறித்த விளக்கத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஹபீப் இப்னு அபீ ஹபீப் அல்அன்மாத்திய்யு – இவர் நம்பகமான அறிவிப்பாளர்களில் ஒருவராவார். இவரைப் பல இமாம்கள் நம்பகமானவர் என உறுதிப் படுத்தியுள்ளனர்.
وَقَال أبو أحمد بن عدي : أرجو أنه لا بأس به (تهذيب الكمال : 5/ 364) قال البخاري في “(التاريخ الكبير : 2/ 315) “ وقال حبان: حدثنا حبيب بن ابى حبيب الجرمى ثقة وذكره ابنُ حِبَّان في كتاب “الثقات” (6/ 178) قال ابن شاهين : وحبيب بن أبي حبيب الأنماطي صالح ) تاريخ أسماء الثقات ص: 65(وقال ابن خلفون في كتاب «الثقاتயு: هو عندي في «الطبقة الرابعةயு من المحدثين أخرج له مسلم في المتابعة. (إكمال تهذيب الكمال :3/ 360)
أبو عبد الله أحمد بن حنبل يقول: ما اعلم بحبيب بن ابى حبيب بأسا. (الجرح والتعديل :3/ 99 (
قال أبو داود : قلت لأحمد حبيب بن أبي حبيب قال هذا أرجو أن يكون صالح الحديث كان عبد الرحمن يحدث عنه (سؤالات أبي داود ص: 341)
“இவரிடம் தவறேதும் இல்லை என்று நான் ஆதரவு வைக்கிறேன்” என அபூ அஹ்மத் இப்னு அதீ கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால்.)
“ஹபீப் இப்னு அபீ ஹபீப் உறுதியானவர்” என ஹிப்பான் கூறியதாக இமாம் புகாரி தமது தாரீகுல் கபீர் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் தமது “அஸ்ஸிகாத்” என்ற நூலில் நம்பகமானவர்கள் பட்டியலில் இவரைக் கொண்டு வந்துள்ளார்.
“ஹபீப் இப்னு அபீ ஹபீப் நல்லவராவார்” என இப்னு ஷாஹீன் கூறியுள்ளார். (நூல்: தாரீக் அஸ்மாயிஸ் ஸிகாத்)
இப்னு கல்ஃபூன் அவர்கள் “நம்பகமானவர்கள்” நூலில் இவரைக் குறிப்பிட்டுள்ளார். (நூல்: இக்மால் தஹ்தீபில் கமால்)
“ஹபீப் இப்னு அபீ ஹபீப் அவர்களிடம் தவறேதும் நான் அறியவில்லை” என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் கூறியுள்ளார். (நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல்)
இமாம் அபூதாவூத் கூறுகிறார்: ‘இமாம் அஹ்மத் அவர்களிடம் “ஹபீப் இப்னு அபீ ஹபீப்” பற்றி நான் கேட்டேன். அதற்கு அஹ்மத் அவர்கள் “அவர் ஹதீஸ்களில் நல்லவர் என நான் ஆதரவு வைக்கிறேன். அப்துர் ரஹ்மான் (இப்னு மஹ்தீ) என்பார் அவரிடமிருந்து அறிவிப்பவராக இருந்தார்” என்று பதிலளித்தார்கள். (நூல்: சுஆலாத்து அபீ தாவூத்)
மேற்கண்ட இமாம்களின் கூற்று அனைத்தும் “ஹபீப் இப்னு அபீ ஹபீப்” நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்பதற்குச் சான்றாக உள்ளது.
“ஹபீப் இப்னு அபீ ஹபீப்” அவர்களை பலவீனப்படுத்தும் சிலர், அதற்குச் சில இமாம்களின் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால் அந்த விமர்சனங்கள் அனைத்தும் தவறாக விளங்கப்பட்டவையாக உள்ளன. அது தொடர்பான விளக்கத்தைக் காண்போம்.
وقال ابن أبى خيثمة نهانا ابن معين أن نسمع حديثه. (تهذيب التهذيب : 2/ 158
“இவரது ஹதீஸ்களை செவியேற்பதை விட்டும் இப்னு மயீன் எங்களைத் தடுத்தார்” என இப்னு அபீ ஹைஸமா கூறுகிறார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)
“ஹபீப் இப்னு அபீ ஹபீப்” அவர்களைக் குறை கூறுவதற்காக இப்னு மயீன் அவர்களுடைய இந்த விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் இது தவறான விமர்சனமாகும். இப்னு மயீன் அவர்கள் கூறியது முழுமையாக தஹ்தீபுத் தஹ்தீபில் குறிப்பிடப்படவில்லை. இப்னு ஹஜர் இதில் தவறிழைத்துள்ளார். இப்னு மயீன் கூறிய முழுமையான வாசகங்கள் பிற நூற்களில் இடம் பெற்றுள்ளது.
وَقَال أبو بكر بن أَبي خيثمة : كان معنا كتاب حبيب بن أَبي حبيب ، عن داود بن شبيب ، فنهانا يحيى بن مَعِين أن نسمعه من داود ابن شبيب. (تهذيب الكمال : 5/ 364)
حدثنا عبد الرحمن انا ابن ابى خيثمة فيما كتب إلى قال كان معنا كتاب حبيب ابن ابى حبيب عن داود بن شبيب فنهانا يحيى بن معين ان نسمعه منه -يعنى من داود. (الجرح والتعديل :3/ 99(
அபூபக்ர் இப்னு அபீ ஹைஸமா கூறுகிறார் : தாவூத் இப்னு ஷபீப் என்பாரிடமிருந்து “ஹபீப் இப்னு அபீ ஹபீப்” அவர்கள் அறிவிக்கும் புத்தகம் எங்களிடம் இருந்தது. அப்போது தாவூத் இப்னு ஷபீப் என்பாரிடமிருந்து அதை நாங்கள் செவியேற்பதற்கு இப்னு மயீன் எங்களைத் தடுத்தார்.
(நூல்: தஹ்தீபுல் கமால்)
இதே கருத்து “அல்ஜரஹ் வத்தஃதீல்” என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது.
தாவூத் இப்னு ஷபீப் என்பாரிடமிருந்து செவியேற்பதைத்தான் இப்னு மயீன் தடுத்துள்ளாரே தவிர ஹபீப் இப்னு அபீ ஹபீப் என்பாரிடமிருந்து அல்ல. எனவே இப்னு ஹஜர் அவர்கள் தமது தஹ்தீபில் தவறாகக் குறிப்பிட்டுள்ளதை வைத்து “ஹபீப் இப்னு அபீ ஹபீப்” அவர்களைக் குறை கூற முடியாது.
அடுத்து இமாம் அஹ்மத் அவர்களின் கூற்று “ஹபீப் இப்னு அபீ ஹபீப்” அவர்களைக் குறை காண்பதற்கு முன்வைக்கப்படுகிறது.
وَقَال عَبد الله بن أحمد بن حنبل : سَأَلتُ أبي عنه ، فقال : هو كذا وكذا ، وكان ابن مهدي يحدث عنه (تهذيب الكمال : 5/ 364)
இமாம் அஹ்மத் அவர்களின் மகன் அப்துல்லாஹ் கூறுகிறார்: “ஹபீப் இப்னு அபீ ஹபீப்” தொடர்பாக எனது தந்தையிடம் நான் கேட்டேன். அதற்கு “அவர் இவ்வாறு, இவ்வாறு உள்ளவர். இப்னு மஹ்தீ என்பார் அவரிடமிருந்து அறிவிப்பவராக இருந்தார்” என்று பதிலளித்தார்கள்.
(நூல் : தஹ்தீபுல் கமால்)
“அவர் இவ்வாறு, இவ்வாறு இருந்தார்” என்று இமாம் அஹ்மத் அவர்கள் மூடலாகக் கூறிய வார்த்தையை “ஹபீப் இப்னு அபீ ஹபீப்” என்பார் மீதான விமர்சனமாக முன்வைக்கின்றனர். ஆனால் இது தவறான விமர்சனமாகும்.
இமாம் அவர்கள் மூடலாகக் கூறியதை வைத்து ஒருவரைக் குறைகாண முடியாது. அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் இவ்வாறு இவ்வாறு உள்ளவர் என்ற வாசகத்தை நல்லவருக்கும் பயன்படுத்தியுள்ளார்.
அது மட்டுமல்ல! இமாம் அஹ்மத் அவர்கள் தெளிவு படுத்திக் கூறிய வாசகங்களும் வந்துள்ளன. அவை “ஹபீப்” அவர்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.
أبو عبد الله أحمد بن حنبل يقول: ما اعلم بحبيب بن ابى حبيب بأسا. (الجرح والتعديل :3/ 99 (قال أبو داود : قلت لأحمد حبيب بن أبي حبيب قال هذا أرجو أن يكون صالح الحديث كان عبد الرحمن يحدث عنه (سؤالات أبي داود ص: 341)
“ஹபீப் இப்னு அபீ ஹபீப் அவர்களிடம் எந்த ஒரு தவறையும் நான் அறியவில்லை” என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் கூறியுள்ளார். (நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல்)
இமாம் அபூதாவூத் கூறுகிறார்: ‘இமாம் அஹ்மத் அவர்களிடம் “ஹபீப் இப்னு அபீ ஹபீப்” பற்றி நான் கேட்டேன். அதற்கு அஹ்மத் அவர்கள் “அவர் ஹதீஸ்களில் நல்லவர் என நான் ஆதரவு வைக்கிறேன். அப்துர் ரஹ்மான் (இப்னு மஹ்தீ) என்பார் அவரிடமிருந்து அறிவிப்பவராக இருந்தார்” என்று பதிலளித்தார்கள். (நூல்: சுஆலாத்து அபீ தாவூத்)
எனவே இமாம் அஹ்மத் அவர்கள் கூறியதாக முன்வைக்கப்படும் விமர்சனமும் சரியானதல்ல என்பது தெளிவாகிறது.
அடுத்ததாக யஹ்யா அல்கத்தான் அவர்கள் கூறிய ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
قال صالح بن أحمد بن حنبل ، عن علي ابن المديني : سألت يحيى بن سَعِيد ، عن حبيب بن أَبي حبيب صاحب عَمْرو بن هرم ، قلت : كتبت عنه شيئا ؟ قال : نعم أتيته بكتابه فقرأه علي ، فرميت به ، ثم قال : كان رجلا من التجار ، ولم يكن في الحديث بذاك. (تهذيب الكمال : 5/ 364)
அலீ இப்னுல் மதீனீ கூறுகிறார் : யஹ்யா அல்கத்தான் அவர்களிடம் “ஹபீப் இப்னு அபீ ஹபீப்” அவர்கள் தொடர்பாக “அவரிடமிருந்து எதையேனும் எழுதியுள்ளீர்களா?” எனக் கேட்டேன். அதற்கவர் “ஆம்! அவருடைய புத்தகத்துடன் அவரிடம் நான் சென்றேன். அதை அவர் எனக்குப் படித்துக் காட்டினார். அதை நான் எறிந்து விட்டேன். அவர் ஒரு வியாபாரிகளில் ஒருவராக இருந்தார். ஹதீஸில் அந்த அளவிற்கு இல்லை” என்று கூறினார். (நூல்: தஹ்தீபுல் கமால்)
ஏராளமானோர் நம்பகமானவர் என்று சொல்லிருக்க யஹ்பா அல்கத்தான் அவர்களின் விமர்சனம் ஏற்புடையது அல்ல.
“யஹ்யா அல்கத்தான்” அவர்கள் அறிவிப்பாளர்களை எடை போடுவதில் கடும் போக்குடையவர்.
ميزان الاعتدال (2/ 171)
مع أن يحيى متعنت جدا في الرجال
யஹ்யா அல் கத்தான் அறிவிப்பாளர்கள் விஷயத்தில் மிகவும் கடும்போக்குடையவர் என்று இமாம் தஹபி கூறியுள்ளார்.
மீஸானுல் இஃதிதால் பாகம் 2 பக்கம் 171
تهذيب التهذيب محقق (6/ 252)
وقال علي بن المديني إذا اجتمع يحيى بن سعيد وعبد الرحمن بن مهدي على ترك رجل لم أحدث عنه فإذا اختلفا أخذت بقول عبدالرحمن لانه أقصدهما وكان في يحيى تشدد
யஹ்யா பின் சயீதும், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தியும் ஒரு அறிவிப்பாளரை (பலவீலனமானவர் என்று) விட்டுவிடுவதின் மீது ஒரே கருத்தை தெரிவித்திருந்தால் அந்த அறிவிப்பாளரிடமிருந்து நான் அறிவிக்க மாட்டேன். அதே சமயம், ஒரு அறிவிப்பாளர் தொடர்பாக அவ்விருவரும் மாறுபட்ட கருத்தைக் கூறியிருந்தால் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தியின் கருத்தை நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனின் அவர் தான் இருவரில் நடுநிலையான கருத்தைத் தெரிவிப்பவர். யஹ்யா அல்கத்தான் கடும்போக்குடையவர் என்று இமாம் அலி இப்னுல் மதீனி கூறியுள்ளார்.
தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 6 பக்கம் 252
எனவே அதிகமானவர்கள் ஹபீப் இப்னு அபீ ஹபீப் அவர்களை நம்பகமானவர் என உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில் கடும்போக்குத் தன்மையுடைய யஹ்யா அல்கத்தான் அவர்களின் விமர்சனம் ஏற்பதற்குத் தகுதியானதல்ல.
அடுத்ததாக ஹபீப் பின் அபீ ஹபீப் மீது பின்வரும் விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
إكمال تهذيب الكمال (3/ 362)
وقال الساجي: ضعيف. وقال: حدث عنه ابن مهدي.
இவர் பலவீனமானவர் என்று இமாம் ஸாஜி கூறியுள்ளார்.
இக்மால் தஹ்தீபுல் கமால், பாகம் 3, பக்கம் 362
மேலே குறிப்பட்டதை போல பல இமாம்கள் இவரது நம்பகத்தன்மைக்குச் சான்றளித்திருக்கும் போது காரணமில்லாமல் பலவீனமானவர் என்று குறிப்பிடுவது ஏற்கத்தகுந்ததல்ல.
ஹதீஸ் கலையில் நிறையை விட தெளிவுபடுத்தப்பட்ட குறையே முற்படுத்தப்படும். அதே சமயம் பலர் நம்பகத்தன்மைக்கு சாட்சி கூறியிருக்கும்போது இதுபோன்ற காரணம் தெளிவுப்படுத்தப்படாத குறை ஏற்றுக் கொள்ளப்படாது, அது நிராகரிக்கப்படும்.
மேலும் ஸாஜீ அவர்கள் இதுபோல காரணமும் ஆதாரமுமில்லாமல் ஒருவரை பலவீனமானவர் என்று கூறும் வழக்கமுள்ளவர் என்று இமாம் இப்னு ஹஜர் தனது ஃபத்ஹுல் பாரீ நூலின் முன்னுரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளார்.
ضعفه الساجي بلا مستند
تكلم فيه الساجي بلا حجة
ஆதாரமின்றி இமாம் சாஜீ விமர்சித்துள்ளார். பலவீனமாக்கியுள்ளார்.
ஃபத்ஹுல் பாரீ முன்னுரை, பக்கம் 461, 462, 463, 464.
எனவே, இந்த விமர்சனமும் ஹபீப் பின் அபீ ஹபீப் விஷயத்தில் குறையை ஏற்படுத்தாது.
இப்னு மயீன், இமாம் அஹ்மத், யஹ்யா அல்கத்தான் மற்றும் ஸாஜீ ஆகியோரின் கூற்றுக்கள் “ஹபீப்” அவர்களைத் பலவீனப்படுத்துவதற்குத் தகுதியான விமர்சனங்களாக இல்லை என்பதைக் கண்டோம். இவர்களின் கூற்றுக்களின் அடிப்படையில்தான் பிற்கால அறிஞர்களான இமாம் இப்னு ஹஜர் அவர்கள் “உண்மையாளர். தவறிழைப்பவர்” என்றும், இமாம் தஹபீ அவர்கள் “பலவீனமானவர்” என்றும் “ஹபீப் இப்னு அபீ ஹபீப்” அவர்களை விமர்சித்துள்ளனர். மேலும் உகைலி அவர்களும் இவர்களின் விமர்சனத்தை வைத்தே தமது லுஅஃபாவுல் கபீர் எனும் நூலில் “ஹபீப்” அவர்களைக் கொண்டு வந்துள்ளார்.
தவறான விமர்சனங்களின் அடிப்படையில் கூறப்பட்ட முடிவுகளும் தவறானையே. எனவே இப்னு ஹஜர், தஹபீ, உகைலி ஆகியோரின் முடிவுகளும் ஏற்கத் தகுந்தவையல்ல.
“ஹபீப் இப்னு அபீ ஹபீப்” என்பார் நம்பகமான, உறுதியான அறிவிப்பாளர் என்பதே சரியானதாகும். அவரைப் பலவீனப் படுத்தும் வகையில் ஏற்கத் தகுந்த எந்த விமர்சனமும் இல்லை.
நபியவர்களின் கடிதத்தை உறுதிப்படுத்திய நம்பகமானவர்கள்
அம்ரு இப்னு ஹஸ்ம் அவர்களுடைய குடுபத்தாரிடமிருந்து நபியவர்களின் கடிதத்தை உமர் (ரலி) அவர்கள் ஏற்றுச் செயல்படுத்தியுள்ளார்கள் என்பதைக் கண்டோம்.
மேலும் ஸயீது இப்னுல் முஸய்யப் என்ற மிகப் பெரும் தாபியி அவர்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
سنن النسائي (8/ 56(
4846 – أخبرنا الحسين بن منصور قال حدثنا عبد الله بن نمير قال حدثنا يحيى بن سعيد عن سعيد بن المسيب أنه لما وجد الكتاب الذي عند آل عمرو بن حزم الذي ذكروا : أن رسول الله صلى الله عليه و سلم كتب لهم وجدوا فيه وفيما هنالك من الأصابع عشرا عشرا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களுக்கு எழுதினார்கள் என அம்ரு இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களின் குடும்பத்தினர் கூறிய கடிதம் அவர்களிடத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட போது, அதில் “ஒவ்வொரு விரலுக்கும் (உரிய இழப்பீட்டுத் தொகையாகிறது) தலா பத்து (ஒட்டகங்கள்)” என்று இருப்பதை அவர்கள் கண்டார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் இப்னுல் முஸய்யப்,
நூல்: நஸாயீ (4846)
அதுபோன்று கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் மிகச் சிறந்த தாபியீ ஆவார். மிகச் சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவரும், இஸ்லாத்திற்காக அரும்பாடுபட்ட நல்லோர்களில் ஒருவரும் ஆவார். அவர் தமது ஆட்சிக்காலத்தில் அம்ரு இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து பெறப்பட்ட நபியவர்களின் கடிதத்தை உறுதிப்படுத்தி அதைச் செயல்படுத்தியும் உள்ளார்.
மேலும் உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் தொடர்பான செய்தியை அறிவிக்கும் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் அல்அன்சாரி அவர்களும் அக்கடிதத்தை நேரடியாகப் படித்து, அதைத் தானும் பிரதியெடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கும் பிரதியெடுத்துக் கொடுத்தார் என்பதற்குரிய ஆதாரங்களை நாம் முன்னர் கண்டோம்.
மேலும் ஹதீஸ்கலை துறையில் மிகச் சிறந்தவரும், மிகச் சிறந்த தாபியீன்களில் ஒருவருமாகிய இமாம் இப்னு ஸிஹாப் அஸ்ஸுஹ்ரி அவர்களும் அம்ரு இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களின் பேரனும், நம்பகமான உறுதியான அறிவிப்பாளர்களில் ஒருவருமாகிய அபுபக்ர் இப்னு முஹம்மத் இப்னு அம்ரு இப்னு ஹஸ்ம் அவர்களது குடும்பத்தாரிடம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நபியவர்கள் கடிதத்தைப் படித்துள்ளார்கள்.
حدثنا محمد بن يحيى ، حدثنا أبو اليمان ، أخبرنا شعيب ، عن الزهري ، قال : قرأت صحيفة عند آل أبي بكر بن محمد بن عمرو بن حزم ذكر أن رسول الله صلى الله عليه وسلم كتبها لعمرو بن حزم ، حين أمره على نجران )مراسيل أبي داود :1/ 113(
ஷுஹ்ரி கூறுகிறார்: அபூபக்ர் இப்னு முஹம்மத் இப்னு அம்ர் இப்னு ஹஸ்ம் அவர்களின் குடும்பத்தாரிடம் இருந்த ஏட்டை நான் படித்தேன். அக்கடிதமானது நபி (ஸல்) அவர்கள் அம்ரு இப்னு ஹஸ்ம்(ரலி) அவர்களை நஜ்ரானுக்கு ஆட்சியாளராக நியமித்த போது அவருக்கு எழுதியது என்று (அபூ பக்ராகிய) அவர் கூறினார்.
நூல் : அபூதாவூதுக்குரிய மராஸீல்
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அம்ரு இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதம் நம்பகமானவர்களிடம் பாதுகாக்கப்பட்டு, நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகமில்லை.
இங்கே முக்கியமான மற்றொரு விசயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நபியவர்கள் கடிதத்தில் இருந்த விபரங்கள் “சுலைமான் இப்னு அர்க்கம்” போன்ற பலவீனமான அறிவிப்பாளர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலவீனமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படுபவை அனைத்தும் ஆதாரத்திற்குத் தகுதியற்றவை ஆகும். அவற்றை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை.
தங்கத்திற்குரிய நிஸாபின் தற்கால மதிப்பு
الأموال للقاسم بن سلام – كتاب الصدقة وأحكامها وسننها
باب فروض زكاة الذهب والورق – حديث : ‏ 853‏ 24404
قال : حدثنا يزيد ، عن حبيب بن أبي حبيب ، عن عمرو بن هرم ، عن محمد بن عبد الرحمن الأنصاري ، أن في كتاب رسول الله صلى الله عليه وسلم ، وفي كتاب عمر في الصدقة أن “ الذهب لا يؤخذ منه شيء حتى يبلغ عشرين دينارا ، فإذا بلغ عشرين دينارا ففيه نصف دينار ، والورق لا يؤخذ منه شيء حتى يبلغ مائتي درهم ، فإذا بلغ مائتي درهم ففيها خمسة دراهم
நபி (ஸல்) அவர்களுடைய கடிதத்திலும், உமர் (ரலி) அவர்களுடைய கடிதத்திலும் (ஸகாத்) தர்மம் தொடர்பாக (பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.) “இருபது தீனாரை அடையும் வரை தங்கத்திலிருந்து எதுவும் (ஸகாத்தாக) எடுக்கப்படாது. இருபது தீனாரை அடைந்து விட்டால் அதில் அரை தீனார் (ஸகாத்) ஆகும். இரு நூறு திர்ஹத்தை அடையும் வரை வெள்ளியிலிருந்து எதுவும் (ஸகாத்தாக) எடுக்கப்படாது. இரு நூறு திர்ஹத்தை அடைந்து விட்டால் அதில் ஐந்து திர்ஹம் (ஸகாத்) ஆகும்.
அறிவிப்பவர் : முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் அல்அன்சாரி
நூல் : அல்அம்வால் லில்காஸிம் (853)
ஒரு தீனார் என்பது 4.25 கிராம் ஆகும். எனவே இருபது தீனார் என்பது 4.25 ஜ் 20 = 85 கிராம் தங்கம் ஆகும். எனவே ஒருவரிடம் 85 கிராம் தங்கம் இருந்தால் அவர் நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் என்ற அடிப்படையில் ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும்.
வெள்ளிக்குரிய நிஸாபின் தற்கால மதிப்பு
ஐந்து ஊக்கியாக்களைவிடக் குறைவாக உள்ள வெள்ளியில் ஸகாத் இல்லை.
நூல் : புகாரி (1459)
ஒரு ஊக்கியா என்பது 40 திர்ஹம் ஆகும். எனவே ஐந்து ஊக்கியா என்பது 200 (இரு நூறு) திர்ஹம் ஆகும்.
ஒரு திர்ஹம் என்பது 2.975 கிராம் ஆகும்.
எனவே 200 திர்ஹம் என்பது 200 ஜ் 2.975 = 595 கிராம் ஆகும்.
வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும். அதில் நூற்றுத் தொண்ணூறு திர்ஹம் மட்டுமேயிருந்தால் உரிமையாளர் நாடினாலே தவிர ஸகாத் இல்லை.
நூல் : புகாரி (1454)
நேரடியாக நிஸாப் கூறப்படாத செல்வங்களுக்கு எதன் அடிப்படையில் ஸகாத்தை நிறைவேற்றுவது?
விவாசயப் பயிர்கள், கால்நடைகள், வெள்ளி, புதையல், தங்கம் போன்றவை எவ்வளவு இருந்தால் அவற்றுக்கு எவ்வளவு ஸகாத் வழங்க வேண்டும் என ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் நேரடியாக வந்துள்ளது.
பணம், மனைகள், வைரம் இன்னும் இதுபோன்ற செல்வங்களுக்கு நேரடியாக நபிமொழிகளில் ஏதும் கூறப்படவில்லை. என்றாலும் விதிவிலக்கானவற்றைத் தவிர அனைத்து செல்வங்களுக்கும் ஸகாத் வழங்க வேண்டும் என்ற கட்டளை குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இடம் பெற்றுள்ளன.
எந்தெந்த செல்வங்களுக்கு ஸகாத் வழங்குவதற்கான நிஸாப் நேரடியாகக் கூறப்படவில்லையோ அவற்றுக்கு தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்வதே பொருத்தமானதாகும்.
ஏனெனில் உலக நாடுகளின் கரன்சிகள் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அச்சிடப்படுகின்றன.
அது மட்டுமில்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலகட்டத்தில் தங்கத்திற்கு எதிராக இருந்த வெள்ளியின் மதிப்பு தற்காலத்தில் மிகவும் சரிந்து போய் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலகட்டத்தில் 10 திர்ஹத்திற்கு (வெள்ளிக்காசு) ஓர் ஆடு வாங்கிவிடலாம். அதுபோன்று ஒரு தீனாருக்கு (தங்கக்காசு) ஓர் ஆட்டை வாங்கிவிடலாம்.
ஆனால் இன்றைய காலத்தில் 10 திர்ஹம் என்பதற்கான பணமதிப்பு ஏறத்தாழ 2184 ரூபாய்தான் வருகிறது. இதை வைத்து ஓர் ஆட்டை வாங்க இயலாது.
ஆனால் ஒரு தீனாருக்கான இன்றைய பண மதிப்பு ஏறத்தாழ 18742 ரூபாய் ஆகும். இத்தொகைக்கு ஓர் ஆட்டைத் தாரளமாக வாங்கிவிடலாம்.
நபியவர்களின் காலத்திலிருந்து இன்று வரை தங்கத்தின் மதிப்புதான் குறையாமல் இருக்கின்றது.
குர்ஆனை தொடக்கூடாது என்பதன் விளக்கம் என்ன?
ஸகாத் தொடர்பான மேற்கண்ட ஆதாரத்தை நாம் நபி (ஸல்) அவர்கள், அம்ரு இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து எடுப்பதால் இக்கடிதத்தில் இருப்பதாகக் கூறப்படும் இன்னொரு செய்தி குறித்த விளக்கத்தையும் நாம் காண்பது அவசியம்.
நபி (ஸல்) அவர்கள், அம்ரு இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பின்வரும் செய்தி இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
الموطأ – رواية يحيى الليثي (1/ 199)
469 – حدثني يحيى عن مالك عن عبد الله بن أبي بكر بن حزم :أن في الكتاب الذي كتبه رسول الله صلى الله عليه و سلم لعمرو بن حزم أن لا يمس القرآن إلا طاهر
அம்ரு இப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் “தூய்மையானவரைத் தவிர குர்ஆனைத் தொடமாட்டர்கள்” என்று இருந்தது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அபூ பக்ர் இப்னு ஹஸ்ம்
நூல்: முஅத்தா மாலிக் (469)
மேற்கண்ட செய்தியின் அடிப்படையில் குர்ஆனைத் தொடுவதற்கு உளூ அவசியமாகும். உளூவின்றி குர்ஆனைத் தொடுவது கூடாது எனச் சிலர் வாதிக்கின்றனர்.
உளூவுடன் மட்டும்தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்றால் முஸ்லிம் அல்லாதவர்கள் ஒருபோதும் குர்ஆனைத் பார்த்துப் படிப்பது கூடாது, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குர்ஆனை வழங்குவது கூடாது என்று கருத்துதான் மேலோங்கும்.
இது திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களுக்கு எதிரான கருத்தாகும். மனிதகுலம் முழுமைக்கும் உரிய வேதமாகத்தான் அல்லாஹ் திருக்குர்ஆன் அருளியுள்ளான். இறைமறுப்பாளர்கள், இணைவைப்பாளர்கள் அனைவரும் இந்தக் குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? என திருக்குர்ஆன் அழைப்பு விடுக்கிறது.
(நபியே!) மனிதர்களுக்காக இவ்வேதத்தை உண்மையுடன் உமக்கு அருளியுள்ளோம்.
(அல்குர்ஆன் 39:41)
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது.
(அல்குர்ஆன் 2:185)
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நிவாரணமும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், அருளும் உங்களிடம் வந்துவிட்டது.
(அல்குர்ஆன் 10:57)
“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியம் உங்களிடம் வந்து விட்டது. நேர்வழியில் செல்பவர் தனக்காகவே நேர்வழியில் செல்கிறார். வழிகேட்டில் செல்பவர் தனக்கு எதிராகவே வழிகேட்டில் செல்கிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்ல” என்று (நபியே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 10 : 108)
இது அகிலத்தாருக்கு அறிவுரையே அன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் 68:52)
உங்களில் நேர்வழியில் செல்ல நாடுகின்ற அகிலத்தாருக்கு இது அறிவுரையாகும்.
(அல்குர்ஆன் 27 : 28)
இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இது வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் 4:82)
இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லது (அவர்களது) உள்ளங்களில் அதற்குரிய பூட்டுக்கள் இருக்கின்றதா?
(அல்குர்ஆன் 47:24)
இங்கு நாம் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்களும், இன்னும் ஏராளமான வசனங்களும் குர்ஆன் அனைவருக்குமானது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி எடுத்துரைக்கிறது. அனைவருக்குமான குர்ஆனை மனிதர்களில் ஒரு சாரார் படிப்பதற்கும் கூட, ஆய்வு செய்வதற்கும் கூட தொடக்கூடாது என்பது முற்றிலும் திருமறை வசனங்களுக்கு எதிரான கருத்தாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.
என்று கடிதம் எழுதி பின்வரும் குர்ஆன் வசனத்தையும் அதில் குறிப்பிட்டார்கள்.
“வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் சிலர் சிலரை கடவுளர்களாக ஆக்கக் கூடாது” என்ற எங்களுக்கும் உங்களுக்குமிடையிலான பொதுவான கோட்பாட்டுக்கு வாருங்கள்” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்!“ என்று கூறிவிடுங்கள்! (திருக்குர்ஆன் 3:64)
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 7, 2941
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத மன்னருக்கு “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற வசனத்தையும், 3:64 வசனத்தையும் எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் முஸ்லிமல்லாதவருக்கு அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.
உளுவுடன் மட்டும்தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்ற கருத்து குர்ஆனுக்கும், நபிமொழிக்கும் எதிரான கருத்தாகும்.
அந்தக் கருத்தை இந்தச் செய்தி கூறுகிறது எனில் இச்செய்தி மறுக்கப்பட வேண்டிய செய்தியாகி விடும்.
அதேவேளை “தூய்மையானவரைத் தவிர குர்ஆனைத் தொடமாட்டர்கள்” என்பதின் கருத்தை குர்ஆனுக்கு முரணில்லாத வகையில் வேறொரு விளக்கத்தை இப்னு ஹஜர் அவர்கள் அளிக்கின்றார்கள்.
ان معنى لا يمس القرآن لا يجد طعمه ونفعه الا من آمن به وأيقن بأنه من عند الله فهو المطهر من الكفر ولا يحمله بحقه الا المطهر من الجهل والشك – (فتح الباري :13/ 509)
“(லா யமஸ்ஸுல் குர்ஆன) ‘குர்ஆனைத் தொடமாட்டார்’ என்பதின் பொருளாகிறது. குர்ஆனை நம்பிக்கை கொண்டு, அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்ற உறுதியாக நம்பிக்கை கொண்டவரைத் தவிர (வேறெவரும்) அதனது சுவையையும், பயனையும் அடையமாட்டார் என்பதாகும். அவர்தான் இறைமறுப்பிலிருந்து தூய்மையடைந்தவர். அறியாமை மற்றும் சந்தேகத்திலிருந்து தூய்மையடைந்தவரைத் தவிர (வெறெவரும்) அதற்குரிய முறைப்படி அதைச் சுமந்து கொள்ள மாட்டார்” என்பதாகும்.
(நூல்: ஃபத்ஹுல் பாரி 13/509)
எனவே அந்தச் செய்திக்கு நேரடிப் பொருள் கொள்வதாக இருந்தால் அதன் கருத்து குர்ஆனுக்கு முரணாக உள்ளது எனும் அடிப்படையில் மறுக்கப்பட வேண்டிய கருத்தாக அமைந்துவிடும். ஆனால் இப்னு ஹஜர் அவர்களின் மேற்கண்ட விளக்கத்தை அந்தச் செய்தியின் கருத்தாக எடுத்துக் கொண்டால் முரண் ஏதும் ஏற்படாது.