யூஸுஃப் – இறைத் தூதர்களில் ஒருவர்

அத்தியாயம் : 12

வசனங்களின் எண்ணிக்கை: 111

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அலிஃப், லாம், ரா. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.260
2. நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் அமைந்த குர்ஆனாக இதை அருளியுள்ளோம்.
3. (நபியே!) உமக்கு இந்தக் குர்ஆனை நாம் அறிவிப்பதன் மூலம், மிக அழகிய வரலாற்றை உமக்கு எடுத்துரைக்கிறோம். நீர் இதற்கு முன்பு (இதுபற்றி) அறியாதவர்களில் இருந்தீர்.
4. யூஸுஃப், தமது தந்தையிடம் “என் தந்தையே! நான் பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் (கனவில்) கண்டேன். அவற்றை எனக்குப் பணிபவையாகக் கண்டேன்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
5. “என் அருமை மகனே! உன் கனவை உனது சகோதரர்களிடம் கூறி விடாதே! அப்போது அவர்கள் உனக்கு எதிராகப் பெரும் சதி செய்வார்கள். மனிதனுக்கு, ஷைத்தான் பகிரங்க எதிரியாவான்” என்று அவர் கூறினார்.
6. “உன் இறைவன் இவ்வாறே உன்னைத் தேர்ந்தெடுத்து, (கனவில் கண்ட) செய்திகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுத் தருவான். இதற்கு முன்பு உனது இரு மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர்மீது தன் அருட்கொடையை முழுமைப்படுத்தியது போன்றே உன்மீதும், யஃகூபின் குடும்பத்தார்மீதும் அதை முழுமைப்படுத்துவான். உனது இறைவன் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்” (என்றும் கூறினார்)261
7. கேட்பவர்களுக்கு, யூஸுஃபிடமும் அவரது சகோதரர்களிடமும் படிப்பினைகள் உள்ளன.
8. “நாம் ஒரு கூட்டமாக இருக்கும் நிலையிலும், நம்மைவிட யூஸுஃபும், அவரது சகோதரருமே நமது தந்தைக்கு மிகப் பிரியமானவர்களாக உள்ளனர். நமது தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கிறார்” என (யூசுஃபின் பிற சகோதரர்கள்) கூறியதை நினைவூட்டுவீராக!
9. “யூஸுஃபைக் கொன்று விடுங்கள்! அல்லது ஏதேனும் ஓரிடத்தில் அவரை வீசி விடுங்கள்! (அப்போதுதான்) உங்கள் தந்தையின் கவனம் உங்கள்மீது நிலைபெறும். இதன்பிறகு நீங்கள் நன்மக்களாகி விடுவீர்கள்!” (என்றும் பேசிக் கொண்டனர்.)
10. “யூஸுஃபைக் கொன்று விடாதீர்கள். நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால், அவரை ஒரு ஆழமான கிணற்றில் போட்டு விடுங்கள்! பயணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்வார்கள்” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
11, 12. “எங்கள் தந்தையே! நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் எங்களை நம்பாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நாங்கள் அவருக்கு நன்மையையே நாடுகிறோம். நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்புங்கள்! அவர் உண்டு மகிழ்ந்து, விளையாடுவார். நாங்கள் அவருக்குப் பாதுகாவலர்களாக இருப்போம்” என்று அவர்கள் கூறினர்.
13. “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது என்னைக் கவலையடையச் செய்கிறது. நீங்கள் அவரைக் கவனிக்காதபோது, அவரை ஓநாய் தின்றுவிடும் என்று பயப்படுகிறேன்” என அவர் கூறினார்.
14. “நாங்கள் கூட்டமாக இருந்தும் அவரை ஓநாய் தின்றுவிடும் என்றால், அப்போது நாங்கள் நஷ்டமடைந்தவர்களே!” என்று அவர்கள் கூறினர்.
15. அவரை ஆழமான கிணற்றில் போடுவதென அவர்கள் ஒருமித்து முடிவு செய்த நிலையில் அவர்கள் அவரை அழைத்துச் சென்றபோது (தமது திட்டத்தை நிறைவேற்றினர்.) “அவர்களின் இச்செயலை (வருங்காலத்தில்) அவர்களுக்கு நீர் அறிவிப்பீர். அப்போது அவர்கள் (உம்மை) அறிந்திருக்க மாட்டார்கள்” என்று யூஸுஃபுக்கு நாம் அறிவித்தோம்.
16. இரவின் ஆரம்ப நேரத்தில் அவர்கள் அழுது கொண்டே தமது தந்தையிடம் வந்தனர்.
17. “எங்கள் தந்தையே! நாங்கள் எங்கள் பொருட்களுக்கு அருகில் யூஸுஃபை விட்டுவிட்டு, ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டோம். அப்போது அவரை ஓநாய் தின்று விட்டது. நாங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தாலும் நீர் எங்களை நம்பப் போவதில்லை” என்று கூறினர்.
18. அவர்கள் பொய்யான இரத்தத்துடன் அவரது சட்டையைக் கொண்டு வந்தனர். “அவ்வாறில்லை! உங்களுடைய உள்ளங்கள் ஒரு செயலை உங்களுக்கு அலங்கரித்துக் காட்டிவிட்டன. (எனது நிலை) அழகிய பொறுமையே! நீங்கள் (பொய்யாக) வர்ணித்துக் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று அவர் கூறினார்.
19. ஒரு பயணக் கூட்டத்தினர் வந்தனர். அவர்கள் தங்களுக்குத் தண்ணீர் கொண்டு வரும் ஒருவரை அனுப்பினர். அவர் (கிணற்றில்) தனது வாளியை இறக்கினார். “நற்செய்தி! இதோ ஒரு சிறுவன்” என்று கூறினார். அவர்கள் ஒரு விற்பனைப் பொருளாக(க் கருதி) அவரை மறைத்து வைத்துக் கொண்டனர். அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவன்.
20. அற்ப விலையான குறிப்பிட்ட வெள்ளிக் காசுகளுக்கு அவரை விற்று விட்டனர். மேலும் அவர் விஷயத்தில் அவர்கள் பற்றில்லாதோராக இருந்தனர்.
21. எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர் தமது மனைவியிடம் “இவரைக் கண்ணியமாகத் தங்க வை! இவர் நமக்குப் பயனளிக்கலாம்; அல்லது இவரை நாம் மகனாக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறே யூஸுஃபுக்கு அப்பூமியில் தங்குமிடத்தை ஏற்படுத்தினோம். மேலும் அவருக்கு(க் கனவு)ச் செய்திகளின் விளக்கத்தை நாம் கற்றுக் கொடுப்பதற்காக (இவ்வாறு செய்தோம்.) அல்லாஹ் தனது காரியத்தில் மிகைப்பவன். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
22. அவர் தனது பருவ வயதை அடைந்தபோது அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் வழங்கினோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.
23. அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அவள், அவரை அடைய முயற்சித்தாள். கதவுகளைத் தாழிட்டு அவரை ‘வா!’ என அழைத்தாள். அதற்கவர் “அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். அவனே எனது இறைவன். அவன் எனது தங்குமிடத்தை அழகாக்கியுள்ளான். அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார்.
24. அவள் அவரை நாடினாள். அவர் தமது இறைவனின் சான்றைப் பார்த்திரா விட்டால் அவரும் அவளை நாடியிருப்பார். அவரை விட்டுத் தீமையையும், மானக்கேடானதையும் நாம் திருப்புவதற்காக இவ்வாறு செய்தோம். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அடியார்களில் உள்ளவர்.
25. அவரும், (அவரைத் துரத்திக் கொண்டு) அவளும் வாசலை நோக்கி ஓடினார்கள். அவள், அவரது சட்டையைப் பின்புறமாகக் கிழித்து விட்டாள். அவ்விருவரும் வாசலுக்கருகில் அவளது கணவனைக் கண்டனர். “உமது மனைவியிடம் தவறாக நடக்க நினைத்தவருக்கு, சிறைப்படுத்துவது அல்லது துன்புறுத்தும் வேதனையளிப்பது தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?” என்று அவள் கேட்டாள்.
26, 27. “அவளே என்னை அடைய முயன்றாள்” என்று அவர் கூறினார். அவளது குடும்பத்தாரில் ஒருவர் “அவரது சட்டை முன்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர்களில் உள்ளவர். அவரது சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய்யுரைக்கிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று சாட்சி கூறினார்.
28, 29. அவருடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்ததை அவ(ளுடைய கணவ)ர் பார்த்தபோது, “இது பெண்களான உங்கள் சூழ்ச்சிதான்! உங்கள் சூழ்ச்சி மிகக் கடுமையானது. யூஸுஃபே! இதை விட்டு விடுவீராக!” (என்று கூறிவிட்டு, மீண்டும் தன் மனைவியை நோக்கி) “நீ உன் பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்! நீயே குற்றம் செய்தவளாக இருக்கிறாய்!” என்று கூறினார்.
30. “அமைச்சரின் மனைவி, தன்வசமுள்ள ஓர் இளைஞரை அடைய முயற்சித்தாள். காதல் அவளைக் கவர்ந்து விட்டது. அவள் பகிரங்கமான தவறில் இருப்பதாகவே நாங்கள் எண்ணுகிறோம்” என்று அந்நகரிலுள்ள பெண்கள் பேசிக் கொண்டனர்.
31. அப்பெண்களின் வஞ்சகத்தைப் பற்றி அவள் செவியுற்றபோது அவர்களுக்கு அழைப்பு விடுத்தாள். அவர்களுக்காக (விருந்துக்கான) சபையை ஏற்பாடு செய்து, அவர்களில் ஒவ்வொருத்திக்கும் ஒரு கத்தியைக் கொடுத்தாள். “(யூஸுஃபே!) அப்பெண்களுக்கு முன்னிலையில் செல்வீராக!” என்று கூறினாள். அப்பெண்கள் அவரைக் கண்டதும் பிரமித்துப் போய் தமது கைகளை வெட்டிக் கொண்டனர். “அல்லாஹ் தூய்மையானவன். இவர் மனிதர் அல்ல! இவர் கண்ணியமிக்க வானவரேயன்றி வேறில்லை” என்று கூறினர்.
32. “இவர் விஷயத்தில்தான் நீங்கள் என்னை இழிவாகப் பேசினீர்கள்! நான்தான் அவரை அடைய முயன்றேன். ஆனால் அவர் தன்னைக் காத்துக் கொண்டார். நான் ஏவுவதை அவர் செய்யா விட்டால் சிறையில் அடைக்கப்பட்டு, சிறுமையடைந்தோரில் ஒருவராகி விடுவார்” என்று அவள் கூறினாள்.
33. “என் இறைவனே! இவர்கள் எதை நோக்கி என்னை அழைக்கிறார்களோ, அதைவிட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களது சூழ்ச்சியிலிருந்து என்னை நீ திருப்பா விட்டால் நான் இவர்களின் பக்கம் சாய்ந்து, அறிவீனர்களில் ஆகி விடுவேன்” என்று (யூஸுஃப்) கூறினார்.
34. அவரது இறைவன் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்து, அப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைத் திருப்பினான். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
35. (அவர் குற்றமற்றவர் என்பதற்கான) சான்றுகளை அவர்கள் கண்ட பிறகும், குறிப்பிட்ட காலம் வரையில் அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
36. இரண்டு இளைஞர்கள் அவருடன் சிறை சென்றனர். “நான் மது பிழிவதாகக் (கனவு) கண்டேன்” என அவ்விருவரில் ஒருவர் கூறினார். “என் தலைமீது நான் ரொட்டியைச் சுமந்திருக்கும் நிலையில் அதிலிருந்து பறவைகள் உண்பதாகக் (கனவு) கண்டேன். இதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக! நல்லோரில் ஒருவராகவே உம்மைக் கருதுகிறோம்” என மற்றொருவர் கூறினார்.
37. “உங்கள் இருவருக்கும் (கனவின் பலன்) நிறைவேறுவதற்கு முன்பாக அதன் விளக்கத்தை உங்களுக்கு நான் அறிவித்தாலே தவிர, உங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு உங்களிடம் வராது. இது என் இறைவன் எனக்குக் கற்றுத் தந்தவற்றில் உள்ளது. அல்லாஹ்வை நம்பாத கூட்டத்தாரின் மார்க்கத்தை நான் புறக்கணித்து விட்டேன். அவர்களே மறுமையை மறுப்பவர்கள்” என்று (யூசுஃப்) கூறினார்.
38. என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாம் இணையாக்குவது நமக்குத் தகுதியானதல்ல! இது, நம்மீதும், மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும் மக்களில் அதிகமானோர் நன்றி செலுத்த மாட்டார்கள்.
39. “இரு சிறைத் தோழர்களே! பல்வேறு கடவுள்கள் நல்லதா? அல்லது அடக்கியாளும் ஒருவனான அல்லாஹ்வா?”
40. “அவனையன்றி நீங்கள் வணங்குபவை, நீங்களும் உங்கள் முன்னோரும் சூட்டிக் கொண்ட (வெறும்) பெயர்களைத் தவிர வேறில்லை. இதற்கு எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் அருளவில்லை. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர வேறில்லை. அவனைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வணங்கக்கூடாது என அவன் ஆணையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை”
41. “இரு சிறைத் தோழர்களே! உங்கள் இருவரில் ஒருவர் தன் எஜமானுக்கு மது புகட்டுவார். மற்றொருவர் சிலுவையில் அறையப்பட்டு, அவரது தலையைப் பறவைகள் தின்னும். நீங்கள் எதைப் பற்றி விளக்கம் கேட்டீர்களோ அந்தக் காரியம் தீர்மானிக்கப்பட்டு விட்டது” (என்றும் கூறினார்.)
42. அவ்விருவரில் யார் விடுதலையடைவார் என எண்ணினாரோ அவரிடம் “உன் எஜமானிடம் என்னைப் பற்றிச் சொல்வாயாக!” என்று (யூஸுஃப்) கூறினார். ஆனால் தன் எஜமானிடம் சொல்வதை விட்டும் அவரை ஷைத்தான் மறக்கச் செய்தான். எனவே சில ஆண்டுகள் அவர் சிறையிலேயே தங்கியிருந்தார்.
43. “ஏழு மெலிந்த மாடுகள், ஏழு கொழுத்த மாடுகளைத் தின்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்துபோன வேறு கதிர்களையும் நான் (கனவில்) கண்டேன். சபையோரே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என் கனவுக்கு விளக்கம் சொல்லுங்கள்!” என்று மன்னர் கூறினார்.
44. “இவை குழப்பமான கனவுகள். இக்கனவுகளின் விளக்கத்தை நாங்கள் அறிந்தவர்கள் அல்ல!” என அவர்கள் கூறினர்.
45. அவ்விருவரில் விடுதலை பெற்றவர், வெகு காலத்திற்குப் பின்பு ஞாபகம் வந்து, “அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். என்னை (யூஸுஃபிடம்) அனுப்புங்கள்!” என்று கூறினார்.
46. “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு மெலிந்த மாடுகள், ஏழு கொழுத்த மாடுகளைத் தின்பது பற்றியும், பசுமையான ஏழு கதிர்கள் பற்றியும், காய்ந்துபோன வேறு கதிர்கள் பற்றியும் எங்களுக்கு விளக்கம் கூறுவீராக! மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் (விளக்கத்துடன்) நான் திரும்பிச் செல்ல வேண்டும்” (என்று அவர் கூறினார்.)
47, 48, 49. “தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் விவசாயம் செய்வீர்கள். நீங்கள் உண்பதற்கு வேண்டிய சிறிதளவைத் தவிர நீங்கள் அறுவடை செய்தவற்றை அதன் கதிர்களுடன் (சேமிப்புக் கிடங்கில்) விட்டு வையுங்கள்! அதற்குப் பிறகு கடினமான ஏழு (பஞ்ச ஆண்டுகள்) வரும். அவற்றுக்காக நீங்கள் முற்படுத்தியவற்றை அவை தின்றுவிடும். நீங்கள் சேமித்து வைத்தவற்றில் சிறிதளவைத் தவிர! அதன் பின்னர் ஓர் ஆண்டு வரும். அதில் மக்களுக்கு மழை பொழிவிக்கப்படும். அதில் அவர்கள் பழச்சாறு பிழிவார்கள்” என்று (யூஸுஃப்) கூறினார்.
50. “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று மன்னர் கூறினார். தூதுவர் யூஸுஃபிடம் வந்தபோது, “உமது எஜமானிடம் திரும்பிச் சென்று, ‘தமது கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் நிலை என்ன?’ என்று அவரிடம் கேட்பீராக! அப்பெண்களின் சதியை எனது இறைவனே நன்கறிந்தவன்” என்று கூறினார்.262
51, 52, “யூஸுஃபை நீங்கள் அடைய முயன்றபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று (மன்னர்) கேட்டார். “அல்லாஹ் தூய்மையானவன்! அவரிடம் எந்தக் கெட்ட செயலையும் நாங்கள் அறியவில்லை” என அப்பெண்கள் கூறினர். அதற்கு அமைச்சரின் மனைவி, “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் அவரை அடைய முயன்றேன். அவர் உண்மையாளர்களில் உள்ளவர். மறைவாக இருக்கும் அவருக்கு நான் மோசடி செய்யவில்லை என்பதை அவர் அறிய வேண்டும் என்பதே இ(வ்வாறு ஒப்புக் கொண்ட)தற்குக் காரணம். துரோகிகளின் சூழ்ச்சிக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்” என்று கூறினாள்.
53. எனது உள்ளத்தை நானே தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை. என் இறைவன் அருள் புரிந்தவற்றைத் தவிர, உள்ளம் தீமையை அதிகம் தூண்டுவதாகவே உள்ளது. என் இறைவன் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்” (என்றும் கூறினாள்.)
54. “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! அவரை எனக்கான தனி அலுவலராக்கிக் கொள்கிறேன்” என்று மன்னர் கூறினார். அவர் யூஸுஃபிடம் பேசியபோது “இன்றைய தினம் நம்மிடம் நீர் மதிப்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்” என்று கூறினார்.
55. “என்னை இந்நாட்டின் கருவூலங்களுக்குப் பொறுப்பாளராக்குங்கள். நான் பாதுகாப்பவன்; நன்கறிந்தவன்” என்று (யூஸுஃப்) கூறினார்.
56. இவ்வாறே அந்நாட்டில் யூஸுஃபுக்குத் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம். அவர் விரும்பியவாறு அங்கு வாழ்ந்தார். நாம் நாடியோருக்கு நமது அருள் கிடைக்கும்படி செய்கிறோம். நன்மை செய்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
57. இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சமுடையவர்களாகவும் இருப்போருக்கு மறுமையின் கூலியே சிறந்தது.
58. யூஸுஃபின் சகோதரர்கள் (எகிப்துக்கு) வந்தனர். அவர்கள் யூஸுஃபிடம் சென்றபோது அவர், அவர்களை அறிந்து கொண்டார். அவர்களோ அவரை அறியாதிருந்தனர்.
59, 60. அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர் ஏற்பாடு செய்து கொடுத்தபோது, “உங்கள் தந்தையிடம் இருக்கும் உங்கள் சகோதரனையும் என்னிடம் அழைத்து வாருங்கள்! நான் நிறைவாக அளந்து கொடுப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? நான் விருந்தோம்பலில் மிகச் சிறந்தவன். அவ்வாறு அவரை நீங்கள் என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து (தானியத்தை) உங்களுக்கு அளந்து தர மாட்டேன். நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது” என்று கூறினார்.
61. “அவரது தந்தையிடம் அவர் குறித்து வற்புறுத்துவோம். (இதை) நாங்கள் செய்யக்கூடியவர்களே!” என அவர்கள் கூறினர்.
62. “அவர்களுக்குரிய பொருட்களை அவர்களின் சுமைகளிலேயே வைத்து விடுங்கள்! அவர்கள் தமது குடும்பத்தினரிடம் சென்றடைந்ததும் அதைத் தெரிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் திரும்பி வரக் கூடும்” என்று (யூஸுஃப்) தமது ஊழியர்களிடம் கூறினார்.
63. அவர்கள் தமது தந்தையிடம் திரும்பிச் சென்றபோது, “எங்கள் தந்தையே! (எங்களுக்கான தானிய) அளவு எங்களுக்குத் தடுக்கப்பட்டு விட்டது. எனவே எங்கள் சகோதரரை எங்களுடன் அனுப்புங்கள். நாங்கள் (தானியத்தைப்) பெற்றுக் கொள்வோம். நாங்கள் அவருக்குப் பாதுகாவலர்களாக இருப்போம்’’ என்று கூறினர்.
64. “இதற்கு முன்பு இவரது சகோதரர் விஷயத்தில் உங்களை நான் நம்பியது போலன்றி, இவர் விஷயத்திலும் உங்களை நான் நம்புவேனா? (நம்ப மாட்டேன்.) அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவன் கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்” என்று கூறினார்.
65. அவர்கள் தமது உடைமைகளைத் திறந்தபோது, தமது பொருட்கள் தம்மிடமே திருப்பித் தரப்பட்டிருப்பதைக் கண்டார்கள். “எங்கள் தந்தையே! நாங்கள் வரம்பு மீறவில்லை. இதோ நமது பொருட்கள்! நம்மிடமே திருப்பித் தரப்பட்டுள்ளன. நம் குடும்பத்திற்காகத் தானியங்களைப் பெறுவதுடன், எங்கள் சகோதரரையும் பாதுகாத்துக் கொள்வோம். ஓர் ஒட்டகச் சுமை அளவுக்கு அதிகமாகவும் பெற்றுக் கொள்வோம். இ(ப்போது தரப்பட்டிருப்ப)து சொற்ப அளவுதான்” என்று கூறினர்.
66. “நீங்கள் (ஆபத்தால்) சூழப்பட்டாலே தவிர, அவரை என்னிடம் திரும்ப அழைத்து வருவீர்கள் என அல்லாஹ்வை முன்னிறுத்தி நீங்கள் என்னிடம் உறுதிமொழி கொடுக்கும் வரை அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று அவர் கூறினார். அவருக்குத் தமது உறுதிமொழியை அவர்கள் அளித்தபோது “நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்” என்று கூறினார்.
67. “என் புதல்வர்களே! நீங்கள் ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்! வெவ்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து ஏற்படும் எந்த ஒன்றையும் என்னால் தடுக்க முடியாது. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர வேறில்லை. அவன்மீதே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். நம்பிக்கை வைப்போர் அவன்மீதே நம்பிக்கை வைக்கட்டும்!” என்று கூறினார்.
68. தம் தந்தை ஆணைப்படியே அவர்கள் நுழைந்தபோதும், அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஏற்பட்ட எந்த ஒன்றையும் அது தடுக்கவில்லை. மாறாக, யஃகூப் தன் மனத்திலிருந்த ஒரு தேவையை நிறைவேற்றிக் கொண்டார். அவருக்கு நாம் கற்றுக் கொடுத்ததன் காரணமாக அவர் அறிவுள்ளவராக இருந்தார். எனினும் (இதனை) மனிதர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
69. யூஸுஃபிடம் அவர்கள் வந்தபோது, அவர் தமது சகோதரரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டு, “நானே உமது சகோதரன். அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி நீர் கவலைப்படாதீர்!” என்று கூறினார்.
70. அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர் ஏற்பாடு செய்து கொடுத்தபோது, ஒரு குவளையைத் தமது சகோதரரின் சுமைக்குள் வைத்து விட்டார். பின்னர் ஓர் அறிவிப்பாளர் “ஒட்டகக் கூட்டத்தினரே! நீங்களே திருடர்கள்” என்று அறிவித்தார்.
71. அவர்கள், இவர்களிடம் வந்து, “நீங்கள் தொலைத்தது என்ன?” என்று கேட்டனர்.
72. “மன்னரின் குவளையைத் தொலைத்து விட்டோம். அதை யார் கொண்டு வருகிறாரோ அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை (தானியம்) உண்டு. அதற்கு நான் பொறுப்பேற்கிறேன்” என்று கூறினர்.
73. “அல்லாஹ்வின்மீது சத்தியமாக! நாங்கள் இந்நாட்டில் குழப்பம் விளைவிக்க வரவில்லை; நாங்கள் திருடர்களாகவும் இருந்ததில்லை என்பதை அறிவீர்கள்” என்று இவர்கள் கூறினர்.
74. “நீங்கள் பொய்யர்களாக இருந்தால் அதற்கான தண்டனை என்ன?” என்று அவர்கள் கேட்டனர்.
75. “அதற்குரிய தண்டனையானது, எவரது சுமையில் அது காணப்படுகிறதோ அவர் (கைது செய்யப்படுவது) ஆகும். இதுவே அதற்கான தண்டனை. அநியாயக்காரர்களை இவ்வாறே தண்டிப்போம்” என்று பதிலளித்தனர்.
76. தம் சகோதரரின் சுமைக்கு முன்பு மற்றவர்களின் சுமைகளிலிருந்து (சோதனையைத்) துவக்கினார். பின்னர் தம் சகோதரரின் சுமையிலிருந்து அதை வெளியே எடுத்தார். இவ்வாறே நாம் யூஸுஃபுக்காக யுக்தியைக் கையாண்டோம். அல்லாஹ் நாடினால் தவிர, அம்மன்னரின் சட்டப்படி தம் சகோதரரை அவரால் பிடித்து வைக்க முடியாது. நாம் நாடியோருக்கு அந்தஸ்துகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு அறிந்தவனுக்கும் மேல் மிக அறிந்தவன் இருக்கிறான்.
77. “இவர் திருடியிருந்தால் இதற்கு முன்னர் இவரது சகோதரரும் திருடியே இருப்பார்” என்று அவர்கள் பேசிக் கொண்டனர். அ(வர்கள் கூறிய)தை யூஸுஃப் (விளங்கிக் கொண்டாலும்) அவர்களுக்கு வெளிப்படுத்தாமல் தனக்குள் மறைத்துக் கொண்டார். “நீங்கள் தரம் கெட்டவர்கள். நீங்கள் (பொய்யாக) வர்ணிப்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்” என்று கூறினார்.
78. “அமைச்சரே! மிக வயதான தந்தை இவருக்கு இருக்கிறார். எனவே இவருக்குப் பகரமாக எங்களில் ஒருவரை பிடித்துக் கொள்வீராக! நல்லோரில் உள்ளவராகவே உம்மைக் கருதுகிறோம்” என்று அவர்கள் கூறினர்.
79. “எங்கள் பொருளை யாரிடம் கண்டோமோ அவரைத் தவிர (மற்றவரைப்) பிடித்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். அவ்வாறு செய்தால் நாங்கள் அநியாயக்காரர்களே!” என்று (யூஸுஃப்) கூறினார்.
80. அவர்கள் அவரிடம் நம்பிக்கையிழந்தபோது, கலந்து பேசுவதற்காகத் தனியாகச் சென்றனர். “உங்கள் தந்தை அல்லாஹ்வை முன்னிறுத்தி உங்களிடம் உறுதிமொழி எடுத்ததையும், இதற்கு முன் யூஸுஃப் விஷயத்தில் நீங்கள் தவறிழைத்ததையும் நீங்கள் அறியவில்லையா? எனவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்குத் தீர்ப்பளிக்கும் வரை இந்நாட்டிலிருந்து நகர மாட்டேன். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்” என்று அவர்களில் பெரியவர் கூறினார்.
81, 82. “நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று, ‘எங்கள் தந்தையே! உமது மகன் திருடி விட்டான். நாங்கள் அறிந்துள்ளதைத் தவிர எதையும் நாங்கள் சொல்லவில்லை. மறைவான விஷயத்தை நாங்கள் கண்காணிப்போராக இல்லை. நாங்கள் இருந்த ஊரிலும், நாங்கள் வந்த ஒட்டகக் கூட்டத்தாரிடமும் விசாரித்துக் கொள்ளுங்கள்! நாங்கள் உண்மையாளர்கள்தான்!’ என்று சொல்லுங்கள்” (எனவும் கூறினார்.)
83. “இல்லை! உங்கள் உள்ளங்கள் ஒரு செயலை உங்களுக்கு அலங்கரித்துக் காட்டி விட்டன. (எனது நிலை) அழகிய பொறுமையே! அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கக் கூடும். அவனே நன்கறிந்தவன், நுண்ணறிவாளன்” என்று (யஃகூப்) கூறினார்.
84. அவர்களை விட்டும் விலகி, “யூஸுஃப் விஷயத்தில் எனக்கு ஏற்பட்ட கவலையே!” என்று கூறினார். கவலையால் அவரது கண்கள் வெளுத்து விட்டன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவர்.
85. “அல்லாஹ்வின்மீது சத்தியமாக! நீர் உடல் இளைத்துப் போகும்வரை அல்லது நீர் மரணிக்கும்வரை யூஸுஃபை நினைத்துக் கொண்டே இருப்பீர்” என அவர்கள் கூறினர்.
86. “என் துயரத்தையும், துக்கத்தையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடம்தான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்” என்று (யஃகூப்) கூறினார்.
87. “என் புதல்வர்களே! புறப்படுங்கள்! யூஸுஃபையும், அவரது சகோதரரையும் பற்றி விசாரியுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! இறைமறுப்பாளர்களான கூட்டத்தைத் தவிர எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்க மாட்டார்கள்” (என்றும் கூறினார்.)
88. அவர்கள் யூஸுஃபிடம் சென்றபோது “அமைச்சரே! எங்களையும், எங்கள் குடும்பத்தினரையும் வறுமை பற்றிக் கொண்டது. நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டு வந்துள்ளோம். எனவே, எங்களுக்கு நிறைவாக அளந்து தருவீராக! எங்களுக்கு தர்மமாகவும் வழங்குவீராக! தர்மம் செய்வோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்” என்று கூறினர்.
89. “நீங்கள் அறிவீனர்களாக இருந்தபோது யூஸுஃபையும், அவரது சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை அறிவீர்களா?” என்று கேட்டார்.
90. “நீர் தான் யூஸுஃபா?” என அவர்கள் கேட்டனர். “நான் தான் யூஸுஃப். இவர் என் சகோதரர். எங்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். யார் இறையச்சம் கொண்டு, பொறுமையை மேற்கொள்கிறாரோ, அந்த நல்லவர்களின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்” என்று கூறினார்.
91. “அல்லாஹ்வின்மீது சத்தியமாக! எங்களைவிட உம்மை அல்லாஹ் சிறப்பித்துள்ளான். நாங்களே தவறிழைத்து விட்டோம்” என அவர்கள் கூறினர்.
92, 93. “இன்றைய தினம் உங்கள் விஷயத்தில் பழிப்பும் இல்லை. உங்களை அல்லாஹ் மன்னிப்பான். அவன் கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன். எனது இந்தச் சட்டையைக் கொண்டு செல்லுங்கள். அதை எனது தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையைப் பெறுவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று அவர் கூறினார்.
94. ஒட்டகக் கூட்டம் (எகிப்திலிருந்து) கிளம்பியதும், “யூஸுஃபின் வாசத்தை நான் பெறுகிறேன். எனக்குப் புத்தி பேதலித்து விட்டதாக நீங்கள் எண்ணிவிடக் கூடாதே!” என்று அவர்களின் தந்தை கூறினார்.
95. “அல்லாஹ்வின்மீது சத்தியமாக! நீர் உம்முடைய பழைய தவறிலேயே இருக்கிறீர்” என அ(வருடன் இருந்த)வர்கள் கூறினர்.
96. நற்செய்தி சொல்பவர் வந்து, (யூஸுஃபின் சட்டையான) அதை அவரது முகத்தில் போட்டபோது, அவர் மீண்டும் பார்வையுடையவர் ஆனார். “நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் நான் கூறவில்லையா?” என்று கேட்டார்.
97. “எங்கள் தந்தையே! எங்களுடைய பாவங்களுக்காக எங்களுக்குப் பாவ மன்னிப்புக் கோருவீராக! நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
98. “என் இறைவனிடம் உங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன். அவனே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்” என்று அவர் கூறினார்.
99. அவர்கள் யூஸுஃபிடம் சென்றதும் அவர் தமது பெற்றோரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டார். “அல்லாஹ் நாடினால் பாதுகாப்பானவர்களாக எகிப்திற்குள் வாருங்கள்!” என்று கூறினார்.
100. அவர் தனது பெற்றோரை அரியணையில் ஏற்றினார். அவர்கள் (அனைவரும்) அவருக்கு முற்றிலும் பணிந்தனர். “என் தந்தையே! இதுவே இதற்கு முன்பு நான் கண்ட கனவின் விளக்கம். என் இறைவன் அதை உண்மையாக்கினான். சிறையிலிருந்து என்னை அவன் விடுதலையாக்கியபோது எனக்கு நல்லுதவி புரிந்தான். எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையே ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பிறகு கிராமத்திலிருந்து உங்களைக் கொண்டு வந்தான். தான் நாடியதை என் இறைவன் நுட்பமாகச் செய்பவன். அவன் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்” என்று அவர் கூறினார்.
101. “என் இறைவனே! எனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினாய். (கனவுச்) செய்திகளின் விளக்கத்தையும் எனக்குக் கற்றுத் தந்தாய்! வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே! இவ்வுலகிலும், மறுமையிலும் நீயே என் பாதுகாவலன். முஸ்லிமாகவே என்னைக் கைப்பற்றுவாயாக! நல்லவர்களுடன் என்னைச் சேர்ப்பாயாக!” (என்று பிரார்த்தித்தார்.)
102. (நபியே!) இது மறைவான செய்திகளில் உள்ளதாகும். அதை நாம் உமக்கு அறிவிக்கிறோம். அவர்கள் சதி செய்தவாறு தமது காரியத்தில் ஒன்றுபட்டபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
103. (நபியே!) நீர் பேராவல் கொண்டாலும் மனிதர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கை கொள்வோராக இல்லை.
104. இதற்காக அவர்களிடம் நீர் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. இது அகிலத்தாருக்கான அறிவுரையே அன்றி வேறில்லை.
105. வானங்கள், பூமியில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றை அவர்கள் அலட்சியப்படுத்தியவாறே அதைக் கடந்து செல்கின்றனர்.
106. அவர்களில் அதிகமானோர் இணைவைத்தோராகவே தவிர அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொள்வதில்லை.
107. அல்லாஹ்வின் சூழ்ந்து கொள்ளும் வேதனை அவர்களிடம் வருவதைப் பற்றியோ, அல்லது உலகம் அழியும் நேரம் அவர்கள் அறியாத விதத்தில் திடீரென அவர்களிடம் வருவதைப் பற்றியோ பயமின்றி இருக்கிறார்களா?
108. “இதுவே என் வழி! நான் அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறேன். நானும், என்னைப் பின்பற்றுவோரும் தெளிவான ஆதாரத்தின்மீது இருக்கிறோம். அல்லாஹ் தூயவன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவனல்ல!” என்று (நபியே!) கூறுவீராக!
109. உமக்கு முன்னர் (அந்தந்த) ஊர்வாசிகளிலுள்ள ஆடவர்களையன்றி (வேறெவரையும்) நாம் தூதராக அனுப்பவில்லை. அவர்களுக்கு வேத அறிவிப்பை வழங்கினோம். எனவே, இவர்கள் பூமியில் பயணித்து, தமக்கு முன்சென்றோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைப் பார்க்க வேண்டாமா? இறையச்சமுடையவர்களுக்கு மறுமை வீடே மிகச் சிறந்தது. சிந்திக்க மாட்டீர்களா?
110. (மக்கள் இனி நம்பமாட்டார்கள் என) இறைத் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாம் மறுக்கப்பட்டு விட்டோம் என எண்ணியபோது நம் உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரியும் கூட்டத்தாரை விட்டும் நமது தண்டனை திருப்பப்படாது.
111. (இறைத் தூதர்களான) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்குப் படிப்பினை உள்ளது. இது புனைந்து கூறப்பட்ட செய்தி அல்ல! மாறாக, தனக்கு முன்புள்ளவற்றை உண்மைப்படுத்தக் கூடியது. அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தக் கூடியது. மேலும் இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.