யூனுஸ் – இறைத் தூதர்களில் ஒருவர்

வசனங்களின் எண்ணிக்கை: 109

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அலிஃப், லாம், ரா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
2. ‘மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!’ என்றும், ‘இறைநம்பிக்கை கொண்டோருக்கு, அவர்கள் செய்தவற்றுக்கான நற்கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு என நற்செய்தி கூறுவீராக!’ என்றும், அவர்களுள் ஒரு மனிதருக்கு நாம் வஹீ அறிவிப்பது இம்மக்களுக்கு ஆச்சரியமளிக்கிறதா? “இவர் பகிரங்கமான சூனியக்காரரே!” என்று இறைமறுப்பாளர்கள் கூறினர்.
3. உங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவன் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தான். பிறகு அர்ஷின்மீது அமர்ந்தான். அவன் காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதிக்குப் பிறகே தவிர (அவனிடம்) பரிந்துரைப்பவர் யாருமில்லை. அவன் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்! எனவே அவனையே வணங்குங்கள்! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
4. அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. அவனே படைப்பைத் தொடங்குகிறான். பின்னர், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோருக்கு நீதியுடன் கூலி வழங்குவதற்காக மறுபடியும் படைக்கிறான். இறைமறுப்பாளர்கள், (அவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்குக் கொதிநீர் பானமும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
5. வருடங்களின் எண்ணிக்கையையும், கணக்கிடுவதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை ஒளிரக்கூடியதாகவும், சந்திரனை ஒளியாகவும் ஆக்கி, சந்திரனுக்குப் பல நிலைகளை நிர்ணயித்தான். இவற்றை நியாயமான காரணத்துடன் அல்லாஹ் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்காக அவன் சான்றுகளை விவரிக்கிறான்.
6. இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ் படைத்துள்ளவற்றிலும் இறையச்சமுள்ள சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.
7, 8. நம்மைச் சந்திப்பதை நம்பாமல் இவ்வுலக வாழ்வைப் பொருந்திக் கொண்டு அதில் மனநிறைவடைவோருக்கும், நமது சான்றுகளைப் புறக்கணிப்போருக்கும் அவர்கள் சம்பாதித்தவற்றின் காரணமாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.
9. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோருக்கு, அவர்களுடைய இறைநம்பிக்கையின் காரணமாக அவர்களின் இறைவன் நேர்வழி காட்டுவான். இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்.
10. அங்கு அவர்களின் பிரார்த்தனை, ‘அல்லாஹ்வே! நீ தூயவன்’ என்பதாகும். அங்கு அவர்களின் வாழ்த்து ‘ஸலாம்’ என்பதாகும். அவர்களுடைய பிரார்த்தனையின் இறுதியானது, ‘அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்பதாகும்.
11. (இவ்வுலகின்) நல்லவற்றுக்கு மனிதர்கள் அவசரப்படுவது போல், அவர்களுக்குத் தீங்கிழைக்க அல்லாஹ் அவசரம் காட்டினால் அவர்களின் தவணைக் காலம் அவர்களுக்கு முடிக்கப்பட்டிருக்கும். எனினும் நம்மைச் சந்திப்பதை நம்பாதோரை, அவர்களின் வரம்புமீறலிலேயே தடுமாறும்படி விட்டு விடுகிறோம்.246
12. மனிதனுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் தனது படுக்கையிலோ, அமர்ந்தவாறோ, நின்றவாறோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனை விட்டும் அவனது துன்பத்தை நாம் நீக்கி விட்டால், தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மிடம் பிரார்த்திக்காதவனைப் போல் கடந்து செல்கிறான். வரம்பு மீறுவோருக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தது இவ்வாறே அழகாக்கப்பட்டுள்ளது.
13. உங்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை அவர்கள் அநியாயம் செய்தபோது அழித்திருக்கிறோம். அவர்களின் தூதர்கள், அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. குற்றவாளிகளான கூட்டத்திற்கு இவ்வாறே கூலி கொடுப்போம்.
14. நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று நாம் பார்ப்பதற்காக அவர்களுக்குப் பின்னர் உங்களைப் பூமியில் தலைமுறையினராக ஆக்கினோம்.247
15. அவர்களுக்கு நமது வசனங்கள் தெளிவான சான்றுகளாக எடுத்துரைக்கப்பட்டால் “இதுவல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றி விடுவீராக!” என நம்மைச் சந்திப்பதை நம்பாதோர் கூறுகின்றனர். “என் சுயவிருப்பப்படி இதை மாற்ற எனக்கு அதிகாரமில்லை. எனக்கு இறைச்செய்தியாக அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன்” என்று (நபியே!) கூறுவீராக!
16. “அல்லாஹ் நாடியிருந்தால் உங்களுக்கு இதை எடுத்துக் கூறியிருக்க மாட்டேன். அவனும் உங்களுக்கு இதை அறிவித்திருக்க மாட்டான். இதற்கு முன் நீண்ட காலம் உங்களுடனே வாழ்ந்திருக்கிறேன். சிந்திக்க மாட்டீர்களா?” என்று (நபியே!) கேட்பீராக!
17. அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கூறுபவனைவிட அநியாயக்காரன் யார்? குற்றவாளிகள் வெற்றியடைய மாட்டார்கள்.
18. அல்லாஹ்வை விட்டுவிட்டு, தமக்குத் தீமையோ, நன்மையோ செய்யாதவற்றை அவர்கள் வணங்குகின்றனர். ‘இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவற்றை அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!
19. மக்கள் ஒரே சமுதாயமாகவே இருந்தனர். பிறகு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். உமது இறைவனின் வாக்கு முந்தியிருக்கா விட்டால் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அவர்களிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்.
20. “இவருடைய இறைவனிடமிருந்து இவருக்கு ஏதேனும் ஒரு சான்று இறக்கப்பட வேண்டாமா?” எனக் கேட்கின்றனர். “மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. நீங்கள் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்க்கிறேன்” என்று (நபியே) கூறுவீராக!
21. மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின்பு நாம் அவர்களுக்கு ஓர் அருட்கொடையைச் சுவைக்கச் செய்தால், நமது சான்றுகளில் சூழ்ச்சி செய்வது அவர்களுக்கு (வழமையாக) இருக்கிறது. “அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் விரைவானவன்” என்று கூறுவீராக! நீங்கள் செய்யும் சூழ்ச்சியை நமது தூதர்க(ளான வானவர்க)ள் பதிவு செய்கின்றனர்.
22. அவனே தரையிலும், கடலிலும் உங்களைப் பயணிக்கச் செய்கிறான். நீங்கள் கப்பல்களில் இருக்கிறீர்கள். அவை நல்ல காற்றின் மூலம் அவர்களைக் கொண்டு சென்று, அவர்கள் அதில் மகிழ்ந்திருக்கும்போது அங்குப் புயல் காற்று வீசுகின்றது. எல்லாப் புறங்களிலிருந்தும் அவர்களை நோக்கி அலைகள் வருகின்றன. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டோம் என்று அவர்கள் எண்ணும்போது, வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி, “(இறைவா!) இதிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றி விட்டால் நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம்” என அவனிடம் பிரார்த்திக்கின்றனர்.
23. அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டால் அவர்கள் பூமியில் நியாயமின்றி வரம்பு மீறுகின்றனர். மனிதர்களே! உங்களது வரம்பு மீறல் உங்களுக்கே கேடாகும். இவ்வுலக வாழ்வின் அற்ப இன்பத்தைத் தான் (அனுபவிக்கிறீர்கள்.) பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பி வரவேண்டியுள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு அறிவிப்போம்.
24. இவ்வுலக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு, வானிலிருந்து நாம் இறக்கி வைக்கும் தண்ணீரைப் போன்றது. அதனுடன் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உண்ணுகின்ற பூமியின் தாவரங்கள் கலக்கின்றன. இறுதியில் தன் அலங்காரத்தைப் பெற்று பூமி செழிப்பானதும், தாம் அதன்மீது (அறுவடை செய்ய) சக்தி பெற்றவர்கள் என அதன் உரிமையாளர்கள் எண்ணியபோது, இரவிலோ பகலிலோ நமது கட்டளை அதை வந்தடைந்தது. எனவே, நேற்றைய தினம் இல்லாததைப் போன்று அறுவடை செய்யப்பட்டதாக அதை ஆக்கி விட்டோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு நமது சான்றுகளை இவ்வாறே விவரிக்கிறோம்.
25. அமைதி இல்லத்தை நோக்கி அல்லாஹ் அழைக்கிறான். தான் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்.
26. நன்மை செய்வோருக்கு நற்கூலியும், இன்னும் அதிகமும் உண்டு. அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து விடாது. அவர்கள் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.248
27. தீமைகளைச் செய்வோருக்கு, ஒரு தீமைக்கான கூலி அதுபோன்றதே கிடைக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும். அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவர் யாருமில்லை. அவர்களின் முகங்கள் இருண்ட இரவின் ஒரு பாகத்தால் மூடப்பட்டதுபோல் இருக்கும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
28, 29. அவர்கள் அனைவரையும் நாம் ஒன்றுசேர்க்கும் நாளை (நினைவூட்டுவீராக!) பிறகு (அந்நாளில்) “நீங்களும் உங்கள் இணைக் கடவுள்களும் உங்களுக்குரிய இடத்திலேயே நில்லுங்கள்!” என்று இணைவைத்தோரிடம் கூறுவோம். அப்போது அவர்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்துவோம். “நீங்கள் எங்களை வணங்கவே இல்லை. உங்களுக்கும் எங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன். உங்கள் வணக்கத்தை நாங்கள் அறியாதவர்களாக இருந்தோம்” என்று அவர்களின் இணைக் கடவுள்கள் கூறுவர்.
30. ஒவ்வொருவரும் தாம் முற்படுத்தியதை அங்குக் கண்கூடாகக் காண்பார்கள். அவர்களின் உண்மை அதிபதியான அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் பொய்யாக உருவாக்கிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும்.
31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?” என்று கேட்பீராக! அவர்கள், ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். “(அவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கேட்பீராக!
32. அவன்தான் அல்லாஹ்! உங்களுடைய உண்மையான இறைவன். சத்தியத்திற்குப் பிறகு வழிகேட்டைத் தவிர வேறென்ன இருக்கிறது? எங்கே திசை திருப்பப்படுகிறீர்கள்?
33. இவ்வாறே, ‘அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்’ என்ற உமது இறைவனின் வாக்கு, பாவிகள்மீது உறுதியாகி விட்டது.
34. “படைப்பைத் தொடங்கி, (அது அழிந்த) பின்னர் அதை மறுபடியும் படைப்பவர் உங்கள் இணைக் கடவுள்களில் யாரேனும் உள்ளனரா?” என்று கேட்பீராக! “அல்லாஹ்வே படைப்பைத் தொடங்கிப் பின்னர் அதை மறுபடியும் படைக்கிறான். நீங்கள் எங்கே திசை திருப்பப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!
35. “சத்தியத்திற்கு வழிகாட்டுபவர் உங்கள் இணைக் கடவுள்களில் யாரேனும் உள்ளனரா?” என்று கேட்பீராக! “அல்லாஹ்வே சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான். சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றத் தகுதியானவனா? அல்லது வழிகாட்டப்பட்டாலே தவிர தானாகவே வழியை அறியாதவன் பின்பற்றத் தகுதியானவனா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் எப்படித் தீர்ப்பளிக்கிறீர்கள்?” என்றும் கேட்பீராக!
36. அவர்களில் பெரும்பாலோர் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். உண்மையை அறிவதற்கு ஊகம் சிறிதும் பயன் தராது. அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
37. இந்தக் குர்ஆன் அல்லாஹ்வை அல்லாதவர்களால் கற்பனை செய்யப்பட்டதல்ல! மாறாக, இது தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்துவதாகவும், வேதத்தை விவரிப்பதாகவும் உள்ளது. அகிலங்களின் இறைவனிடமிருந்து வந்துள்ள இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
38. அவர் இதைச் சுயமாகக் கூறி விட்டார் என்று அவர்கள் கூறுகிறார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் முடிந்த எவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று (நபியே!) கூறுவீராக!
39. இ(வ்வேதத்)தைப் பற்றிய அறிவை அவர்கள் முழுமையாக அறியாததாலும், இதன் விளைவு அவர்களிடம் வராததாலும் அவர்கள் பொய்யெனக் கூறுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன்பிருந்தோரும் பொய்யெனக் கூறினர். அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிப்பீராக!
40. அவர்களில் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்வோரும் உள்ளனர்; இதை நம்பிக்கை கொள்ளாதோரும் உள்ளனர். உமது இறைவன், குழப்பவாதிகளை நன்கறிந்தவன்.
41. (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் “என் செயல் எனக்குரியது! உங்களுடைய செயல் உங்களுக்குரியது. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள். நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன்” என்று கூறுவீராக!
42. உம்மிடம் செவியேற்போரும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்களாக இருந்தாலும் அச்செவிடர்களை உம்மால் செவியேற்கச் செய்ய முடியுமா?
43. உம்மைப் பார்ப்போரும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (சிந்தித்துப்) பார்க்காதவர்களாக இருந்தாலும் அக்குருடர்களுக்கு உம்மால் நேர்வழி காட்ட முடியுமா?
44. மனிதர்களுக்கு அல்லாஹ் சிறிதும் அநியாயம் செய்ய மாட்டான். எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின்றனர்.
45. அவர்களை அவன் ஒன்றுதிரட்டும் நாளில், பகலின் சிறிது நேரமே தவிர அவர்கள் (உலகில்) வசிக்காததைப் போன்று இருப்பார்கள். தமக்கிடையே ஒருவரையொருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய்யெனக் கூறியோர் நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.
46. அவர்களுக்கு நாம் வாக்களித்ததில் சிலவற்றை உமக்குக் காண்பித்தாலோ, அல்லது உம்மை நாம் கைப்பற்றி விட்டாலோ, அவர்கள் நம்மிடமே திரும்பிவர வேண்டியுள்ளது. மேலும், அவர்கள் செய்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாவான்.
47. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் உண்டு. அவர்களின் தூதர் வரும்போது அவர்களுக்கிடையே நீதியான முறையில் தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
48. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்குறுதி எப்போது (நிகழும்)?” என அவர்கள் கேட்கின்றனர்.
49. “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு நானே எந்த நன்மையோ, தீமையோ செய்வதற்கு நான் சக்தி பெற மாட்டேன். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தவணை உள்ளது. அவர்களின் தவணைக்காலம் வரும்போது சற்று நேரம்கூடப் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்” என்று (நபியே) கூறுவீராக!
50. “அவனது தண்டனை இரவிலோ, பகலிலோ உங்களிடம் வந்து விட்டால் (என்ன செய்வீர்கள்) என்பதை எனக்குத் தெரிவியுங்கள். இந்தக் குற்றவாளிகள் அவனிடம் எதை அவசரமாகத் தேடுகின்றனர்?” என்று கேட்பீராக!
51. பின்னர் அது நிகழ்ந்ததும், “இப்போதுதான் அதை நம்புகிறீர்களா? இதைத்தான் நீங்கள் அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்.)
52. பிறகு, “நிலையான வேதனையை அனுபவியுங்கள்! நீங்கள் சம்பாதித்ததற்காகவே தவிர (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்படுகிறீர்களா?” என்று அநியாயக்காரர்களிடம் கூறப்படும்.
53. “(மறுமை நாளான) அது உண்மையா?” என்ற விபரத்தை (நபியே!) உம்மிடம் கேட்கின்றனர். “ஆம்! எனது இறைவன்மீது சத்தியமாக அது உண்மைதான். நீங்கள் தப்பிப்போர் அல்ல!” என்று கூறுவீராக!
54. அநியாயம் செய்த ஒவ்வொருவருக்கும் பூமியிலுள்ள அனைத்தும் சொந்தமாக இருந்தாலும் அதை அவர்கள் ஈடாகக் கொடுத்து விடுவார்கள். அவர்கள் வேதனையைக் காணும்போது கவலையை மறைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கிடையே நீதியான முறையில் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
55. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
56. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான். மேலும் அவனிடமே திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
57. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நிவாரணமும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், அருளும் உங்களிடம் வந்துவிட்டது.
58. “அல்லாஹ்வின் அருள் மற்றும் கருணை ஆகிய இவற்றைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேர்த்து வைத்திருப்பதைவிட மிகச் சிறந்தது” என்று கூறுவீராக!
59. “அல்லாஹ் உங்களுக்கு இறக்கியுள்ள உணவுகளில் தடுக்கப் பட்டதாகவும், அனுமதிக்கப்பட்டதாகவும் நீங்களாகவே ஏற்படுத்திக் கொண்டீர்கள் என்பதைச் சிந்தித்தீர்களா?” என்று கேட்பீராக! “அல்லாஹ் உங்களுக்கு அனுமதி கொடுத்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின்மீது புனைந்து கூறுகிறீர்களா?” என்றும் கேட்பீராக!
60. அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுவோருக்கு, மறுமை நாளைப் பற்றிய எண்ணம்தான் என்ன? மனிதர்கள்மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
61. நீர் எந்த நிலையில் இருந்தாலும், குர்ஆனிலிருந்து நீர் எதை ஓதினாலும், நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் நீங்கள் அதில் ஈடுபடும்போது நாம் உங்களைக் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் அணு அளவாயினும் அது உமது இறைவனை விட்டும் மறையாது. அதைவிடச் சிறிதோ, பெரிதோ தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இல்லை.
62. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
63. அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சமுடையோராகவும் இருப்பார்கள்.
64. அவர்களுக்கே இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் நற்செய்தி உள்ளது. அல்லாஹ்வின் வார்த்தைகளில் எவ்வித மாற்றமுமில்லை. இதுவே மகத்தான வெற்றியாகும்.
65. (நபியே!) இவர்களுடைய பேச்சு உமக்குக் கவலையளிக்க வேண்டாம். கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
66. அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அல்லாஹ்வையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திப்போர் எதைப் பின்பற்றுகின்றனர்? அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் பொய்யுரைப்போர் தவிர வேறில்லை.
67. அவனே, இரவை அதில் நீங்கள் நிம்மதி பெறுவதற்காகவும், பகலைப் பார்ப்பதற்குரியதாகவும் ஆக்கினான். செவியுறும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
68. “அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்” என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவன் தூயவன். அவன் தேவைகளற்றவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின்மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?
69. “அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுவோர் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறுவீராக!
70. இவ்வுலகில் (அவர்களுக்கு) இன்பம் உண்டு. பின்னர் அவர்கள் நம்மிடமே திரும்பிவர வேண்டியுள்ளது. அவர்கள் இறைமறுப்பாளர்களாக இருந்ததால் அவர்களைக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
71. நூஹுடைய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! “என் சமுதாயத்தினரே! நான் (நபியாக) இருப்பதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு நான் அறிவுரை கூறுவதும் உங்களுக்குப் பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே, உங்கள் கடவுள்களுடன் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள்! அதன்பின் உங்கள் காரியம் உங்களிடம் மறைமுகமாகவும் இருக்க வேண்டாம். அதன் பின்னர் எனக்கு முடிவு கட்டுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!” என்று அவர் தனது சமுதாயத்திடம் கூறியதை நினைவூட்டுவீராக!
72. “நீங்கள் புறக்கணித்தால், நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே தவிர (வேறு யாரிடமும்) இல்லை. நான் முஸ்லிம்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நூஹ் கூறினார்.)
73. அவர்கள், அவரைப் பொய்யரெனக் கூறினர். எனவே அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் காப்பாற்றி, அவர்களைத் தலைமுறையினராக ஆக்கினோம். நமது சான்றுகளைப் பொய்யெனக் கூறியோரை மூழ்கடித்தோம். எச்சரிக்கப்பட்டோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிப்பீராக!
74. அவருக்குப் பின் தூதர்களை அவர்களுக்குரிய சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்கள் தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்தனர். ஆயினும் ஏற்கனவே அவர்கள் அதைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்ததால் இறைநம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை. இவ்வாறே, வரம்புமீறுவோரின் உள்ளங்களில் நாம் முத்திரையிடுகிறோம்.
75. அவர்களுக்குப் பிறகு மூஸாவையும், ஹாரூனையும் நமது சான்றுகளுடன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது பிரமுகர்களிடம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் கர்வம் கொண்டனர். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக இருந்தனர்.
76. அவர்களுக்கு நம்மிடமிருந்து உண்மை வந்தபோது “இது பகிரங்கமான சூனியமே!” என்று அவர்கள் கூறினர்.
77. “உங்களிடம் உண்மை வந்தபோது அதைப் பற்றி, ‘இது சூனியம்’ என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
78. “எங்களுடைய முன்னோரை எதில் நாங்கள் கண்டோமோ அதனைவிட்டும் எங்களைத் திசை திருப்பவும், உங்கள் இருவருக்கும் இப்பூமியில் செல்வாக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நீர் எங்களிடம் வந்திருக்கிறீரா? உங்களிருவரையும் நாங்கள் நம்பவே மாட்டோம்” என அவர்கள் கூறினர்.
79. “நன்கு அறிந்த சூனியக்காரர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
80. சூனியக்காரர்கள் வந்தபோது அவர்களிடம், “நீங்கள் போட வேண்டியதைப் போடுங்கள்!” என மூஸா கூறினார்.
81. அவர்கள் போட்டபோது “நீங்கள் கொண்டு வந்தவை சூனியமே! அதை அல்லாஹ் அழிப்பான். குழப்பம் செய்வோரின் செயலை அல்லாஹ் சீராக்க மாட்டான்” என மூஸா கூறினார்.
82. குற்றவாளிகள் வெறுத்தாலும் அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை உறுதிப்படுத்துகிறான்.
83. தங்களை ஃபிர்அவ்ன் துன்புறுத்துவான் என அவன்மீதும், அவனது பிரமுகர்கள்மீதும் கொண்ட அச்சத்தால் மூஸாவின் சமுதாயத்தில் ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள் அவரை நம்பிக்கை கொள்ளவில்லை. ஏனெனில் ஃபிர்அவ்ன் அப்பூமியில் ஆணவக்காரனாகவும், வரம்பு மீறுவோரில் ஒருவனாகவும் இருந்தான்.
84. “என் சமுதாயத்தினரே! நீங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டு, நீங்கள் முஸ்லிம்களாகவும் இருந்தால் அவன்மீதே நம்பிக்கை வையுங்கள்!” என்று மூஸா கூறினார்.
85, 86. “நாங்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் இறைவனே! அநியாயக்காரக் கூட்டத்தின் மூலம் சோதிக்கப்படுவோராக எங்களை ஆக்கி விடாதே! இறைமறுப்பாளர்களின் கூட்டத்தாரிடமிருந்து உன் அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக” என்று அவர்கள் பிரார்த்தித்தனர்.
87. “நீங்கள் இருவரும் உங்கள் சமுதாயத்திற்காக எகிப்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்! உங்கள் வீடுகளை முன்னோக்குவதாக ஆக்கிக் கொள்ளுங்கள்! தொழுகையை நிலைநிறுத்துங்கள்! இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!” என மூஸாவுக்கும், அவரது சகோதரருக்கும் அறிவித்தோம்.
88. “எங்கள் இறைவனே! ஃபிர்அவ்னுக்கும், அவனது பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், செல்வங்களையும் இவ்வுலக வாழ்வில் வழங்கியுள்ளாய். எங்கள் இறைவனே! இதனால் அவர்கள் உன் பாதையை விட்டும் (தடுத்து) வழிகெடுக்கிறார்கள். எங்கள் இறைவனே! அவர்களின் செல்வங்களை அழிப்பாயாக! அவர்களின் உள்ளங்களை இறுகச் செய்வாயாக! துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணும்வரை இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என மூஸா கூறினார்.
89. “உங்கள் இருவரின் பிரார்த்தனையும் ஒப்புக் கொள்ளப்பட்டது. நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்! அறியாதவர்களின் பாதையைப் பின்பற்றி விடாதீர்கள்!” என அவன் பதிலளித்தான்.
90. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அவர்களை ஃபிர்அவ்னும், அவனது படைகளும் வரம்புமீறிப் பகைமையுடன் பின்தொடர்ந்தனர். இறுதியில் அவன் மூழ்கத் தொடங்கியபோது “இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் யார்மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை என நானும் நம்பிக்கை கொண்டேன். நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று கூறினான்.249
91. “இப்பொழுதா (நீ நம்புகிறாய்?) இதற்கு முன்பு நீ மாறு செய்தாய்! மேலும் குழப்பவாதிகளுள் ஒருவனாக இருந்தாய்!”
92. “உனக்குப் பின்னுள்ளவர்களுக்குச் சான்றாக நீ ஆவதற்காக இன்றைய தினம் உன்னை, உன் உடலுடன் கரையில் போடுவோம். மனிதர்களில் பெரும்பாலோர் நமது சான்றுகளில் அலட்சியமாக உள்ளனர்” (என்று இறைவன் கூறினான்)
93. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நல்லதோர் இடத்தில் குடியேறச் செய்து, தூய்மையானவற்றை அவர்களுக்கு உணவாக அளித்தோம். தமக்கு அறிவு வரும் வரை அவர்கள் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அதுபற்றி உமது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.
94. (நபியே!) உமக்கு நாம் இறக்கி வைத்ததில் நீர் சந்தேகத்தில் இருந்தால், உமக்கு முன்னரே வேதத்தைப் படித்துக் கொண்டிருப்பவர்களிடம் கேட்பீராக! இந்த உண்மை உமது இறைவனிடமிருந்து உம்மிடம் வந்துள்ளது. எனவே, நீர் சந்தேகம் கொள்வோருள் ஒருவராக ஆகி விடாதீர்!
95. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கூறுவோரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம். அவ்வாறாயின் நஷ்டமடைந்தவர்களில் ஒருவராகி விடுவீர்.
96, 97. உமது இறைவனின் வாக்கு யார்மீது உறுதியாகி விட்டதோ, அவர்களிடம் சான்றுகள் அனைத்தும் வந்தாலும், துன்புறுத்தும் வேதனையை அவர்கள் பார்க்கின்ற வரை இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
98. (வேதனை வரும் முன்) இறைநம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பயனளித்த (யூனுஸின் சமுதாயத்தைப் போல்) எந்த ஊராவது இருந்திருக்கக் கூடாதா? எனினும், யூனுஸின் சமுதாயத்தினர் இறைநம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் அகற்றினோம். குறிப்பிட்ட காலம்வரை அவர்களைச் சுகம் அனுபவிக்கச் செய்தோம்.
99. உம் இறைவன் நாடியிருந்தால் பூமியில் இருக்கும் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறைநம்பிக்கை கொண்டிருப்பார்கள். எனவே, மனிதர்கள் இறைநம்பிக்கையாளர்கள் ஆவதற்காக அவர்களை நீர் கட்டாயப்படுத்துவீரா?
100. அல்லாஹ்வின் நாட்டமின்றி யாரும் இறைநம்பிக்கை கொள்ள முடியாது. (வேதத்தை) விளங்கிக் கொள்ளாதோருக்கு அவன் தண்டனை வழங்குவான்.
101. “வானங்களிலும் பூமியிலும் என்ன இருக்கிறது என்பதைச் சிந்தியுங்கள்!” என்று கூறுவீராக! சான்றுகளும் எச்சரிக்கைகளும் இறைநம்பிக்கை கொள்ளாத கூட்டத்திற்குப் பயனளிக்காது.
102. தமக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்ட (வேதனை) நாட்களைப் போன்றே தவிர (வேறெதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? “எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களுள் ஒருவனாக இருக்கிறேன்” என்று கூறுவீராக!
103. பின்னர் நமது தூதர்களையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவோம். இவ்வாறே, இறைநம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்.
104. “மனிதர்களே! எனது மார்க்கத்தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். மாறாக, உங்களைக் கைப்பற்றுபவனாகிய அல்லாஹ்வையே வணங்குவேன். நான் இறைநம்பிக்கையாளர்களுள் ஒருவனாக ஆகி விடுமாறு ஏவப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக!
105. சத்திய நெறியில் நின்று, இம்மார்க்கத்தில் உமது முகத்தை நிலைபெறச் செய்வீராக! நீர் இணைவைப்போருள் ஒருவராக ஆகிவிடாதீர்!
106. அல்லாஹ்வை விட்டுவிட்டு, உமக்கு நன்மையோ, தீமையோ செய்ய இயலாதவற்றை நீர் பிரார்த்திக்காதீர்! அவ்வாறு நீர் செய்தால் அப்போது அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர்!
107. அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தை ஏற்படுத்தினால் அதை நீக்குபவன் அவனைத் தவிர யாருமில்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அவன் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
108. “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியம் உங்களிடம் வந்து விட்டது. நேர்வழியில் செல்பவர் தனக்காகவே நேர்வழியில் செல்கிறார். வழிகேட்டில் செல்பவர் தனக்கு எதிராகவே வழிகேட்டில் செல்கிறார். நான் உங்களுக்குப் பொறுப்பாளன் அல்ல!” என்று (நபியே!) கூறுவீராக!
109. (நபியே!) உமக்கு அறிவிக்கப்படுபவற்றையே பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு வழங்கும்வரை பொறுமையை மேற்கொள்வீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவன்.