வட்டி என்பது மனிதனை மனிதன் சுரண்டும் ஒரு சமூக கொடுமையாகும். அதனால் பல குடும்பம் பாதிக்கப்படுகிறது. பல நாடுகள் வட்டியினால் அழிந்துள்ளன. அருகில் உள்ள இலங்கை சமீபத்திய பாடம் அந்த நாடு அயல் நாட்டில் அதிகம் வட்டி வாங்கியதும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். வட்டிக்கு வாங்கி தான் ஒரு பொருளை விற்க வேண்டும் என்ற அவசியம் ஏன்? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். உலகில் எத்தனையோ செல்வம் படைத்தவர்கள் உள்ளார்கள். அவர்களில் வட்டியின் வாடையை கூட அறியாமல் உள்ளவர்கள் ஏராளம் உள்ளனர்.
எத்தனையோ முஸ்லிம்கள் வட்டி வாங்குவது கிடையாது. அவர்கள் வாழ்வு என்ன கேள்விக்குறியாகவா இருந்துள்ளது? நல் வழியில் சம்பாதித்து பல பள்ளிவாசல்களை கட்டிக் கொடுப்பதும் பலருக்கு உதவி செய்வதும், தானம் தர்மம் என்று செய்யும் எவ்வளவோ பேர் உள்ளார்கள். அவர்கள் வாழ்வு என்ன கீழ் நிலையிலா போய் விட்டது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம்மிடம் உள்ளதைக் கொண்டு ஒரு தொழிலை தொடங்கலாம். இலாபம் அதிகரிக்கும் போது அந்த முதலீட்டை அதிகப்படுத்தினால் யாரிடமும் வட்டி வாங்க வேண்டிய நிலை வராது. வட்டிக்கு தான் வாங்க கூடாது அதே நேரத்தில் திரும்பி கொடுக்கும் அளவுக்கு கடனாக வாங்குவதை இஸ்லாம் தடுக்க வில்லை.