யா, ஸீன் – அரபு மொழியின் இரு எழுத்துகள்

அத்தியாயம் : 36

வசனங்களின் எண்ணிக்கை: 83

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. யா, ஸீன்.
2. ஞானம் நிறைந்த இக்குர்ஆன்மீது சத்தியமாக!
3. (நபியே!) நீர் தூதர்களில் உள்ளவர்.
4. நேரான வழியில் இருக்கிறீர்.
5. நிகரிலா அன்பாளனாகிய மிகைத்தவனால் (இது) அருளப்பட்டது.
6. அவர்களின் முன்னோர் எச்சரிக்கப்படாத ஒரு சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காகவே (அருளப்பட்டது.) அவர்களோ கவனமற்றோராக உள்ளனர்.
7. அவர்களில் பெரும்பாலோர்மீது (நமது) வாக்கு உறுதியாகி விட்டது. எனவே அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
8. அவர்களின் கழுத்துகளில் விலங்குகளை ஏற்படுத்தியுள்ளோம். அவை தாடைகள்வரை உள்ளன. அதனால் அவர்களின் தலைகள் (குனிய முடியாதவாறு) உயர்த்தப்பட்டுள்ளன.
9. அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், பின்னால் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தி, அவர்களை மூடி விட்டோம். எனவே அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
10. நீர் அவர்களை எச்சரிப்பதோ, அல்லது அவர்களை எச்சரிக்காமல் இருப்பதோ அவர்களுக்குச் சமமே! அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
11. (நபியே!) நீர் எச்சரிப்பதெல்லாம் இந்த அறிவுரையைப் பின்பற்றி, மறைவான நிலையில் அளவற்ற அருளாளனை அஞ்சுவோரைத் தான். எனவே அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான கூலியும் உண்டு என நற்செய்தி கூறுவீராக!
12. மரணித்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம். அவர்கள் முற்படுத்திய வற்றையும், விட்டுச் சென்றவற்றையும் நாம் பதிவு செய்கிறோம். ஒவ்வொன்றையும் தெளிவான ஏட்டில் பதிவு செய்துள்ளோம்.429
13. ஓர் ஊர்வாசிகளிடம் தூதர்கள் வந்த(போது நிகழ்ந்த)தை இவர்களுக்கு எடுத்துகாட்டாகக் கூறுவீராக!
14. நாம் அவர்களிடம் இருவரைத் தூதர்களாக அனுப்பியபோது அவ்விருவரையும் பொய்யரெனக் கூறினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு பலப்படுத்தினோம். அவர்கள், “நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களாவோம்” எனக் கூறினர்.
15. “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறில்லை. அளவிலா அருளாளன் எந்த ஒன்றையும் அருளவில்லை. நீங்கள் பொய்யுரைப்போர் தவிர வேறில்லை” என்று (அவ்வூரார்) கூறினர்.
16, 17. “நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தான் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான். தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர எங்கள்மீது வேறெதுவும் இல்லை” என அவர்கள் கூறினர்.
18. “உங்களைக் கெட்ட சகுனமாகவே கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைக் கல்லால் அடித்துக் கொல்வோம். எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என (அவ்வூரார்) கூறினர்.
19. “நீங்கள் கெட்ட சகுனமாகக் கருதுவது உங்களுடன்தான் இருக்கிறது. உங்களுக்கு அறிவுரை சொல்லப்பட்டாலுமா (இவ்வாறு கருதுவீர்கள்)? அவ்வாறல்ல! நீங்கள் வரம்பு மீறிய கூட்டத்தார்” என்று (அத்தூதர்கள்) கூறினர்.
20. அந்நகரின் எல்லைப்புறத்திலிருந்து ஒரு மனிதர் விரைந்து வந்து, “என் சமுதாயத்தினரே! இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்!” என்று கூறினார்.
21. “உங்களிடம் எந்தக் கூலியும் கேட்காதவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்! அவர்களே நேர்வழி பெற்றவர்கள்”
22. “என்னைப் படைத்தவனை வணங்காமலிருக்க எனக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் அவனிடமே மீண்டும் கொண்டு செல்லப்படுவீர்கள்”
23. “அவனையன்றி வேறு கடவுள்களை நான் எடுத்துக் கொள்வேனா? அளவிலா அருளாளன் எனக்கு ஏதேனும் தீங்கினை நாடினால், அவர்களின் பரிந்துரை எனக்குச் சிறிதும் பலனளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்ற மாட்டார்கள்”
24. “அவ்வாறாயின் நான் பகிரங்கமான வழிகேட்டில் ஆகிவிடுவேன்”
25. “உங்கள் இறைவனையே நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே எனக்குச் செவிசாயுங்கள்!” (என்றும் கூறினார்.)
26, 27. (அவர் கொல்லப்பட்டதும்) “சொர்க்கத்தில் நுழைவீராக!” என்று கூறப்பட்டது. “எனது இறைவன் என்னை மன்னித்து, கண்ணியத்திற்குரியோரில் என்னை ஆக்கியதை என் சமுதாயம் அறிய வேண்டுமே!” என அவர் கூறினார்.
28. அவருக்குப் பிறகு அவரது சமுதாயத்தின்மீது வானிலிருந்து எந்தப் படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை. நாம் (அப்படி) இறக்கி வைக்கக் கூடி(ய அவசியமுடை)யோராகவும் இல்லை.
29. ஒரேஒரு பெரும் சப்தத்தைத் தவிர வேறெதுவும் ஏற்படவில்லை. உடனே அவர்கள் சாம்பலாகி விட்டனர்.
30. அடியார்களுக்கு ஏற்பட்ட கைச்சேதமே! அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரைக் கேலி செய்வோராகவே அவர்கள் இருந்தனர்.
31. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்கள், தம்மிடம் திரும்பி வரப்போவதில்லை என்பதை இவர்கள் சிந்திக்கவில்லையா?
32. அவர்கள் அனைவரும் ஒன்றுதிரட்டப்பட்டு நம்மிடம் கொண்டு வரப்படுவோர் தவிர வேறில்லை.
33. இறந்த பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதை நாம் உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்தினோம். அவர்கள் அதிலிருந்து உண்ணுகின்றனர்.
34. அதில் நாம் பேரீச்சை, திராட்சைத் தோட்டங்களை ஏற்படுத்தி, நீரூற்றுகளையும் பாய்ந்தோடச் செய்தோம்.
35. அதன் பழங்களை அவர்கள் உண்பதற்காகவே (இவ்வாறு செய்தோம்.) அவர்களின் கைகள் அதை உருவாக்கவில்லை. எனவே அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
36. பூமி விளையச் செய்வதிலும், அவர்களிலும், அவர்கள் அறியாதவற்றிலும் ஒவ்வொரு இணைகளையும் படைத்தவன் தூயவன்.
37. இரவும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதிலிருந்து பகலை நாம் பிரித்தெடுக்கிறோம். அப்போது அவர்கள் இருளில் ஆகி விடுகிறார்கள்.
38. சூரியன், தனக்குரிய வரையறைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. இது மிகைத்தவனான நன்கறிந்தவன் நிர்ணயித்ததாகும்.
39. சந்திரனுக்குப் பல நிலைகளை நிர்ணயித்துள்ளோம். இறுதியில் அது காய்ந்த பேரீச்சங்காம்பு போன்ற நிலைக்குத் திரும்புகிறது.
40. சூரியன், சந்திரனைப் பிடிக்க முடியாது. இரவு, பகலை முந்த முடியாது. ஒவ்வொன்றும் ஒரு சுற்றுப் பாதையில் நீந்துகின்றன.
41. அவர்களின் வழித்தோன்றல்களை, நிறைந்த கப்பலில் நாம் சுமந்து சென்றதும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.
42. அதுபோன்று அவர்கள் ஏறிச் செல்லும் வாகனங்களையும் அவர்களுக்காகப் படைத்துள்ளோம்.
43. நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம். அவர்களை மீட்பவர் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள்.
44. எனினும் நமது அருளாலும், குறிப்பிட்ட காலம் வரை சுகமனுபவிப்பதற்காகவும் (அவர்களை விட்டு வைத்துள்ளோம்.)
45. “நீங்கள் அருள் செய்யப்படுவற்காக, உங்களுக்கு முன்னுள்ளதையும், பின்னுள்ளதையும் அஞ்சிக் கொள்ளுங்கள்!”என்று அவர்களிடம் கூறப்பட்டால் (அலட்சியம் செய்கின்றனர்.)
46. அவர்களின் இறைவனின் சான்றுகளில் எந்த ஒரு சான்று அவர்களிடம் வந்தாலும் அதைப் புறக்கணிப்போராகவே இருந்தனர்.
47. “அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (ஏழைகளுக்குச்) செலவிடுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடினால் யாருக்கு உணவளித்திருப்பானோ அவர்களுக்கு நாங்கள் உணவளிப்பதா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்” என்று இறைமறுப்பாளர்கள், இறைநம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர்.
48. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்குறுதி எப்போது (நிகழும்)?” என அவர்கள் கேட்கின்றனர்.
49. அவர்கள் ஒரேஒரு பெரும் சப்தத்தையே எதிர்பார்க்கின்றனர். அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் போதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
50. அப்போது அவர்கள் மரண சாசனம் செய்வதற்கும் சக்தி பெற மாட்டார்கள். தமது குடும்பத்தாரிடம் அவர்கள் திரும்பிச் செல்லவும் முடியாது.
51. ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் மண்ணறைகளிலிருந்து தமது இறைவனிடம் விரைந்து செல்வார்கள்.
52. “எங்களின் கேடே! எங்கள் தூங்குமிடத்திலிருந்து எங்களை (உயிர்ப்பித்து) எழுப்பியவன் யார்?” என்று கேட்பார்கள். “அளவிலா அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் கூறிய உண்மையும் இதுதான்” (என்று பதிலளிக்கப்படும்.)
53. ஒரேயொரு பெரும் சப்தத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. உடனே அவர்கள் அனைவரும் நம்மிடம் கொண்டு வரப்படுவார்கள்.
54. இன்று யாருக்கும் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே கூலி வழங்கப்படுவீர்கள்.
55. அன்று சொர்க்கவாசிகள் (தமது) காரியத்தில் மகிழ்ந்திருப்பார்கள்.
56. அவர்களும், அவர்களின் மனைவியரும் நிழல்களில் இருப்பார்கள்; கட்டில்களில் சாய்ந்திருப்பார்கள்.
57. அவர்களுக்கு அங்குப் பழங்கள் உள்ளன. மேலும், அவர்கள் விரும்பியவையெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும்.
58. நிகரிலா அன்பாளனாகிய இறைவனிடமிருந்து ‘ஸலாம்’ என்ற கூற்றும் உண்டு.
59. “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லவர்களிடமிருந்து) பிரிந்து நில்லுங்கள்!” (என்று கூறப்படும்)
60, 61. ஆதமுடைய மக்களே! “நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. என்னையே வணங்குங்கள்! இதுவே நேர்வழியாகும்” என்று நான் உங்களிடம் உடன்படிக்கை எடுக்கவில்லையா?
62. உங்களில் மிகப்பெரும் கூட்டத்தினரை அவன் வழிகெடுத்து விட்டான். நீங்கள் சிந்திப்போராக இருக்க வேண்டாமா?
63. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த நரகம் இதுதான்.
64. நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் நுழையுங்கள்! (என்று கூறுவோம்.)
65. அவர்களின் வாய்களுக்கு இன்று நாம் முத்திரையிட்டு விடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; அவர்களின் கால்கள் சாட்சி சொல்லும்.430
66. நாம் நாடியிருந்தால் அவர்களின் பார்வைகளைப் பறித்திருப்போம். அப்போது வழியை நோக்கி விரைந்து செல்வார்கள். ஆனால் அவர்கள் எவ்வாறு பார்ப்பார்கள்?
67. நாம் நாடியிருந்தால் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களை உருமாற்றியிருப்போம். அதனால் அவர்கள் செல்வதற்குச் சக்திபெற மாட்டார்கள்; திரும்பி வரவும் முடியாது.
68. யாருக்கு நாம் நீண்ட ஆயுளை வழங்கினோமோ அவரைப் படைப்பில் தலைகீழாக மாற்றி விடுகிறோம். (இதை) அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?
69. நாம் இவருக்குக் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்கு அவசியமானதும் அல்ல! இது நற்போதனையும், தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.431
70. (இது) உயிருடன் இருப்பவர்களை எச்சரிப்பதற்கும், இறைமறுப்பாளர்களுக்கு எதிராக (நமது) வாக்கு உறுதியாவதற்காகவுமே (அருளப்பட்டது.)
71. ‘நம் கைகள் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம்; அதற்கு அவர்கள் உரிமையாளர்களாக இருக்கின்றனர்’ என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா?
72. அவற்றை அவர்களுக்குக் கட்டுப்படச் செய்தோம். அவற்றில் அவர்கள் ஏறிச் செல்பவையும் உள்ளன. மேலும் அவற்றிலிருந்து அவர்கள் உண்கின்றனர்.
73. அவற்றில் அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் உள்ளன. அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
74. அவர்கள் உதவி செய்யப்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வையன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
75. இவர்களுக்கு உதவிட அக்கடவுள்கள் சக்தி பெற மாட்டார்கள். இவர்களோ அக்கடவுள்களுக்(கு உதவுவதற்)காக முன்னிலைப்படுத்தப்படும் படையாக உள்ளனர்.
76. (நபியே!) அவர்களுடைய பேச்சு உமக்குக் கவலையளிக்க வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் நாம் அறிகிறோம்.
77. நாம் விந்துத் துளியிலிருந்து மனிதனைப் படைத்தோம் என்பதை அவன் சிந்திக்கவில்லையா? ஆனால் இப்போது அவன் பகிரங்மாகத் தர்க்கம் செய்கிறான்.
78. (மனிதன்,) தான் படைக்கப்பட்டதை மறந்து விட்டு, நமக்கு எடுத்துக்காட்டுக் கூறுகிறான். “எலும்புகள் மக்கிப் போன நிலையில் அவற்றை உயிர்ப்பிப்பவன் யார்?” எனக் கேட்கிறான்.
79. “தொடக்கத்தில் அவற்றைப் படைத்தவனே அவற்றை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் நன்கறிந்தவன்” என்று பதிலளிப்பீராக!
80. அவனே உங்களுக்காகப் பசுமையான மரத்திலிருந்து நெருப்பை உருவாக்கினான். பின்னர் அதிலிருந்து நெருப்பை மூட்டுகிறீர்கள்.
81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றலுடையவன் அல்லவா? ஆம்! அவன் மாபெரும் படைப்பாளன்; நன்கறிந்தவன்.
82. அவன் ஒரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதற்கு ‘ஆகு’ என்றே ஆணையிடுவான். உடனே அது ஆகிவிடும்.
83. ஒவ்வொரு பொருளின் அதிகாரமும் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் தூயவன். நீங்கள் அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.