தலைவர்களின் பிறந்த நாள் தினத்தில் கைதிகளை விடுவிப்பதை தமிழக அரசு வழமையாக கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் அண்ணா பிறந்த நாளின் போது நீண்ட காலம் சிறைத்தண்டனை பெற்ற 700 கைதிகளை விடுவிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால் அது தொடர்பான அரசாணை வெளிவந்த போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பலரது முன்விடுதலை கேள்விக்குறியானது.
சாதி மத மோதல், பாலியல், குண்டு வெடிப்பு போன்ற வழக்குகளில் கைதானவர்கள் முன்விடுதலை செய்யப்படுகின்ற கைதிகளின் பட்டிலில் இடம் பெற மாட்டார்கள் என்று அரசு ஆணை வெளியிட்டது.
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அரசு குறிப்பிட்ட வழமையின் படி முன்விடுதலை செய்கின்ற போது அதில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து குறிப்பிட்ட மக்களின் முன்விடுதலையை மட்டும் தடுப்பது எவ்விதத்தில் சரியாகும்?
வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டும் சிறைவாசிகள் விடுதலை என்பதை பயன்படுத்திக் கொண்டு விடுதலை செய்யும் சூழல் ஏற்படுகின்ற போது பல்வேறு நிபந்தனைகளை விதித்து அரசே அதை தவிர்ப்பது சரியானதல்ல என்று மக்களிடம் அதிருப்தி நிலவியது.
அது பல்வேறு விதங்களில் வெளிப்பட்டதால் மக்களின் அதிருப்தியை போக்கும் விதமாக தற்போது புதிதாக ஒரு குழுவை அரசு நியமித்துள்ளது.
இருபது வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெறும் கைதிகளில் நோய், உடல்நலம், மனநலம் ஆகியவற்றை கண்காணித்து அவர்களை நீதிமன்ற நடைமுறைகளுக்கு முரணில்லாத வகையில் முன்விடுதலை செய்ய பரிந்துரைக்குமாறு ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒரு தமிழக அரசு குழுவை அமைத்துள்ளது.
இது பயனளிக்குமா என்பது அரசின் செயல்பாடுகளை கவனித்து தான் கூற முடியும்.
அதேவேளை மக்கள் அதிருப்தியை சமாளிக்க வெறும் கண்துடைப்பிற்காக இக்குழு அமைக்கப்பட்டதாக ஆகி விடக்கூடாது என்று மக்கள் கருதுகிறார்கள்.
ஏனெனில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது முஸ்லிம் சிறைவாசிகள் முன்விடுதலை பெற வேண்டும் என்றால் திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்குகளை சேகரித்தார்.
மக்களும் அந்த வாக்குறுதியை நம்பி சிந்தாமல் சிதறாமல் திமுகவிற்கு வாக்களித்தனர்.
அதை தொடர்ந்து ஸ்டாலின் அவர்கள் முதல்வரான பிறகு அண்ணா பிறந்த நாளையொட்டி700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார்.
அப்போதும் எந்த பாகுபாடும் இன்றி நீண்ட காலம் தண்டனை பெற்ற சிறைக்கைதிகள் விடுதலையாவார்கள் என்று மக்கள் நம்பினர்.
மத அடிப்படையிலான பாகுபாடுகளை கொண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்ட பிறகுதான் முதல்வரின் அறிவிப்பு வெற்று கண்துடைப்பு என்றானது.
இம்முறை ஆதிநாதன் தலைமையிலான குழுவும் அப்படி ஆகிவிடக்கூடாது.
ஆதிநாதன் கமிஷன் தனது பரிந்துரையை சமர்ப்பிக்க குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயிக்க வேண்டும்.
ஈராண்டு, மூன்றாண்டு என ஆண்டுக்கணக்கில் காலதாமதம் செய்தால் அதற்குள் அரசு முன்விடுதலை செய்ய பரிந்துரைக்கும் பட்டியலில் உள்ள பலரும் மரணித்து விட வாய்ப்பு உண்டு.
எனவே ஆண்டுக்கணக்கில் நீட்டிக்காமல் குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் அதிக பட்சம் ஆறு மாதங்களுக்குள் தமது அறிக்கையை ஆதிநாதன் கமிஷன் சமர்ப்பித்து அதன் மீது முடிவு அறிவிக்க வேண்டும்.
இன்னொரு விஷயம் மிக முக்கியமானது.
ஆதிநாதன் குழுவில் நியாய உணர்வுள்ள, அனைவரையும் சம நோக்குடன் பார்க்கும் நடுநிலையாளர்களை நியமிக்க வேண்டும்.
மத அடிப்படையில் பாகுபாடு பார்ப்பவர்களை அதில் இடம் பெறச் செய்து விடக்கூடாது.
குழுவின் பரிந்துரை நியாயமானதாக இருக்க வேண்டும். முன்பு போலவே இன்னின்ன வழக்குகளில் கைதானவர்களுக்கு முன்விடுதலை தரக்கூடாது என்று மீண்டும் பழைய பல்லவியை பாடும் அறிக்கையாக அது அமைந்து விடக்கூடாது.
நாங்கள் அனைவரும் விடுதலை ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். ஆனால் குழுவின் பரிந்துரை இப்படி ஆகிவிட்டதே என்று குழுவின் மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்ளும் செயலை தமிழக அரசு செய்து விடக்கூடாது.
அப்படி அமையுமேயானால் அது மக்களை வஞ்சிக்கும் செயலாகவே மக்களால் பார்க்கப்படும்.