சென்னையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பீப் உணவிற்கு ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் ?

உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை, சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசின் சார்பாக சென்னை தீவுத் திடலில் உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இருட்டுக் கடை அல்வா முதல் குற்றாலம் பார்டர் பரோட்டா வரை அங்கு இல்லாத உணவுகளே இல்லை என்கிற வகையில் 200-க்கும் அதிகமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி என ஏராளமான பிரியாணி வகைகள் இந்த உணவுத் திருவிழாவில் இடம் பெற்றிருந்தன. இதில் பீப் பிரியாணிக்கான அரங்கம் மட்டும் இல்லாமல் இருந்தது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் பதில் அளிக்கையில், நானும் பீப் பிரியாணி சாப்பிடுபவன்தான். ஆனால் பீஃப் பிரியாணி ஸ்டால் அமைக்க யாரும் முன்வராததே காரணம் எனக் கூறினார்.
பிறகு மூன்று பீப் பிரியாணி கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பராம்பரிய உணவு, ஆரோக்கிய உணவு என்றால் அதில் பீப் இறைச்சி முக்கிய பங்கு வகிக்கும் என்பதை ஏன் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை மறந்தது என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே தமிழகத்தின் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி அளிக்கவில்லை என்று பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. பிரச்சனை ஏற்பட்ட பிறகு ஆம்பீர் பிரியாணி திருவிழாவிற்கு மூடு விழா நடத்தினார்கள். அரசு அதிகாரிகள் பாசிச சக்திகளின் பிரச்சாரத்திற்கு அடி பணிகிறார்களோ என்ற சந்தேகம் எழ இது காரணமாக அமைந்து விடுகிறது.
கேள்வி வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று இல்லாமல் இனி வரும் காலங்களில் சமூக நீதியை நிலைநாட்டும் இதுபோன்ற விசயங்களில் ஆளும் திமுக அரசு விழிப்புடன் தாமாக முன்வந்து செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.