பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தாதது ஏன்?

பொருட்களின் விலையேற்றத் திற்கு பல காரணங்கள் இருக்கிறது.
உற்பத்தி குறையும் போது பொருட்களுக்கு தேவை அதிகமாகும். அப்போது அப்பொருள்களின் விலை விற்போரால் உயர்த்தப்படும்.
பொருட்களை பதுக்கி வைத்துக் கொண்டு செயற்கையான தட்டுப்பாட்டை மக்களிடையே ஏற்படுத்துவார்கள். பிறகு பதுக்கிய பொருள்களை சந்தைக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பார்கள். இப்போதும் பொருட்களின் விலை அதிகரித்து விடும்.
அதே போல ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகத்தாலும் பொருட்களின் விலை உயரும்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை பொறுத்தவரை ஆட்சியாளர்களின் இரக்கமற்ற வரிவிதிப்பே காரணமாகும்.
2014ல் கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 110 டாலர். அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 71 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இப்போது கச்சா எண்ணெய் விலை சுமார் 68 டாலராகும். ஆனால் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பு அதிகமாக உள்ளது தான் சாமானிய மக்களின் சிரமத்திற்கு காரணம் என தெளிவாக தெரிகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தும் போது பெட்ரோலின் விலையை உயர்த்தும் ஒன்றிய அரசு அதே எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்கும் போது பெட்ரோலின் விலையை குறைப்பதில்லை.
அந்த அளவிற்கு இரக்க குணம்(?) அரசிடம் மிகைத்துள்ளது.
சாமானிய மக்களை கசக்கி பிழிந்தாவது வருவாயை அதிகப்படுத்திக் கொள்வதில் அரசுகள் எப்போதும் உறுதியாகவே உள்ளன.
தனியார் நிறுவனங்களுக்கு 36 சதவிகிதமாக இருந்த வரிவிகிதத்தை 25 சதவிகிதமாக கடந்தாண்டு ஒன்றிய அரசு குறைக்கின்றது. அதன் மூலம் அரசிற்கு ஏற்படும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பை என்ன செய்வது?
வரிவிதிப்பு எனும் பெயரில் சாமா னியனின் தலையில் சுமத்துவதை விட அரசிற்கு வேறு என்ன வழி தெரியும்.
பெருமுதலாளிகளுக்கு தாராள சலுகையும் சாமானிய மக்களிடம் அரசு தரும் மானியத்தை தேச வளர்ச்சிக்காக விட்டுத்தர கோரிக்கை வைப்பதுமான ஆட்சியின் அவலமே இத்தகு விலையேற்றம்.
ஓரிரு நாள்கள் இடைவெளியில் சிறிது சிறிதாக பெட்ரோல், டீசலின் விலையை தொடர்ந்து ஒன்றிய அரசு அதிகரித்து தான் வருகிறது.
இதற்காக போராட வேண்டு மென்றால் வருடம் முழுக்க தொடர்ச் சியாக போராட வேண்டியது வரும்.
சில நேரங்களில் இயல்பான காரணங்களாலும் பொருள்களின் விலை உயரும். விலைவாசி உயர்வு எனும் கருத்திற்கு போராட வேண்டும் என்றால் இது போன்ற தருணங்களிலும் போராட வேண்டிய சூழல் வரும். ஆனால் இயல்பான காரணங்களால் ஏற்படும் விலையேற்றத்திற்கு யாரையும் குற்றம் சுமத்த இயலாது.
அது தவிர தற்போதைய பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு எதிராக பல்வேறு கட்சிகள் போராட்டங்களை நடத்தியுள்ளன.
ஒரு கோரிக்கைக்காக பல தரப்பு கட்சிகளும், இயக்கங்களும் போராடும் சூழலில் அதற்கென்று தனியாக நாம் போராட வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட சில தருணங்களை தவிர பெரும்பாலும் அவ்வாறு போராடுவது ஒரு சடங்கிற்கு செய்வதாக ஆகிவிடும் நிலை உள்ளது.
எனவே தான் விலைவாசி உயர்வு எனும் அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டங்களில் ஈடுபடுவதில்லை.