ஜார்கண்டில் 2019 ஆம் ஆண்டு தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞர் கொல்லப்பட்ட பிறகு, கும்பல் படுகொலை என்பது ஒரு தீவிரமான விவாதப் பிரச்சினையாக மாறியது.
“ஜெய் ஸ்ரீ ராம்“ மற்றும் “ஜெய் ஹனுமான்” என்று கோஷமிடும்படி கட்டாயப்படுத்திய ஒரு கும்பலால் அவர் படுகொலை செய்யபட்டார்..
லதேஹர் மாவட்டத்தில் உள்ள பாலுமத் காடுகளில் இந்துத்துவ வெறியர்களால் இரண்டு முஸ்லிம் கால்நடை வியாபாரிகள் மரத்தில் கட்டிவைத்து அடித்து தூக்கிலிடப்பட்டனர்.
ராஞ்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள கிராமத்தில் வசித்தவர் உஸ்மான் அன்சாரி (55). இவர் பால் பண்ணை வைத்திருக்கிறார். இவரது வீட்டிற்கு வெளியே ஒரு பசு இறந்துவிட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, அவரது வீட்டில் 1,000 பேர் கொண்ட கும்பல் கற்கள் மற்றும் குச்சிகளால் தாக்கினார்கள். இந்தப் பயங்கரவாத கும்பல், உஸ்மான் வீட்டின் ஒரு பகுதியை தீ வைத்து எரித்தது.
ராம்கர் மாவட்டத்தில் உள்ள பஜ்ரதார் கிராமத்தைச் சேர்ந்த எம்.டி. அலிமுதீன் என்ற இறைச்சி வியாபாரி தனது வாகனத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி 30-40 பேர் கொண்ட கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்.
இது போன்ற சம்பவங்களுக்கு பிறகு உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தினால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசாங்கம், இதுபோன்ற வழக்குகளைக் கையாள மாவட்ட அளவிலான குழுக்களை அமைத்தது.
தற்போது ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரில், கொலைக்கு எதிரான புதிய சட்டத்தை அரசு முன்மொழிந்துள்ளது. “கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலை தடுப்பு மசோதா 2021” என்று அந்தச் சட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்குவது, கொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சம்பவத்திற்குரிய சாட்சிகளை அச்சுறுத்துவோருக்கு தண்டனை வழங்குவது போன்றவை குறித்த விதிகள் மேற்கண்ட சட்டத்தில் உள்ளன.
கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அனைத்து மருத்துவமனைகளும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் இழப்பீட்டுத் திட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும்.
கொலை குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மட்டுமல்ல அவருக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்க இச்சட்டம் அனுமதிக்கிறது.
இவர்களுக்கு ரூ. 25 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். அல்லது இவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் இச்சட்டம் அனுமதிக்கிறது.
மேலும் இவர்களுக்கு மூன்றாண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனையை வழங்கவும் இச்சட்டம் இடமளிக்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் சாட்சியை அச்சுறுத்தும் எந்தவொரு நபருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
காவல் துறை மட்டுமல்ல மாவட்ட ஆட்சியர்களும் தன்னால் முடிந்தவரை இத்தகைய குற்றங்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது