ஹிஜாப் விஷயத்தில் முஸ்லிம் மாணவிகளுக்கு பாரபட்சம் ஏன்?

கர்நாடகா மாநிலத்தில் சில கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகளுக்கு தலையை மறைக்கும் பர்தாவை அணிந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. அதையும் மீறி அணிந்து வந்தவர்களை கல்லூரிக்கு வெளியே நிறுத்தி, உள்ளே வரவிடாமல் தடுத்துள்ளார்கள்.
தடுக்கப்பட்ட மாணவிகள் பல நாட்களாக கல்லூரி வாசல் முன்பே இருந்து கொண்டு தங்களை அனுமதிக்குமாறு போராடி வருகிறார்கள்.
இது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துவக்கத்தில் ஒரு கல்லூரியில் ஆரம்பித்த இந்நிகழ்வு பின்பு படிப்படியாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் ஹிஜாப் அணியத்தடை என்பது நீண்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொருவருக்கும் அவரவர் மத சடங்குகளை பின்பற்றிக் கொள்ளும் உரிமையை வழங்கி உள்ளது. அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள மத உரிமையை எவரும் மறுக்க இயலாது.
முஸ்லிம் பெண்கள் தலையை மறைக்கும் துண்டை இஸ்லாமிய மார்க்கம் கூறுவதாலே அணிகிறார்கள். அரசியல் சாசனத்தை செயல்படுத்த வேண்டிய அரசு, கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு மட்டும் அனுமதி மறுப்பது எப்படி நியாயமாகும்?
இத்தனைக்கும் கல்லூரிகளில் பர்தா அணியக் கூடாது என்று எந்தத் தடையும் அரசால் பிறப்பிக்கப்படவுமில்லை. அப்படியிருக்க இந்த பர்தா விஷயத்தில் இவ்வளவு கண்டிப்பு காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
எல்லாவற்றையும் மத மோதலாக ஆக்க முயற்சிக்கும் இந்துத்துவ அமைப்புகள் இந்த பர்தா விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் அதற்கு போட்டியாக நாங்களும் காவித்துண்டு அணிந்து வருவோம் என்று காவித்துண்டை கழுத்தில் போட்டவர்களாக கல்லூரிக்கு வர துவங்கியுள்ளனர் சில மாணவர்கள். இவர்கள் யாவரும் தங்களது சுய சிந்தனைகளால் அவ்வாறு செய்யவில்லை. இந்துந்துவ அமைப்புகளால் தூண்டி விடப்பட்டே இவ்வாறு செய்கிறார்கள்.
பெண்கள் தங்கள் தலையை மறைக்க பர்தா அணிவதும் இவர்கள் காவித்துண்டு அணிவதும் ஒன்றா?
முஸ்லிம் பெண்கள் எப்போது வெளியே வந்தாலும் பர்தா அணிவார்கள். அது அவர்கள் கடைபிடிக்கும் மத வழக்கமாகும்.
ஆனால் இந்த இவர்கள் எப்போதும் கழுத்தில் காவித்துண்டு அணிந்து வருவார்களா? அவ்வாறு அணியுமாறு அவர்கள் மதம் கூறியுள்ளதா? என்று சிந்தித்து பார்த்தாலே இவர்கள் வீம்புக்காக காவித்துண்டை கையிலெடுக்கின்றார்கள் என்பதை புரியலாம்.
எதில் தான் போட்டி போடுவது என்ற வரையறை இல்லையா?
முஸ்லிம் ஆண்கள் கத்னா செய்து கல்லூரிக்கு வருவதால் நாங்களும் கத்னா செய்தே வருவோம் என்று அதிலும் போட்டி போடுவார்கள் போலும்.
முஸ்லிம் பெண்களிடம் பர்தா விஷயத்தில் போட்டி போடும் இவர்கள் முடிந்தால் கோயில் கருவறையில் நுழைவதில் உயர்சாதி என்று கருதப்படுவோருடன் போட்டி போடட்டும் அதற்கான உரிமையை பெற்றுத்தருமாறு தங்களை தூண்டிய சங்பரிவார அமைப்புகளிடம் உதவி கேட்டுப்பார்க்கட்டும்.
சங்பரிவார கும்பலை பொருத்தவரை மதமோதல்களை உருவாக்க பயன்படும் வெற்று கருவிகளாக மட்டுமே தங்களை பயன்படுத்துவதை அப்போதாவது புரிந்து கொள்ளட்டும்.
பள்ளி, கல்லூரியில் மத அடையாளங்களுக்கு என்ன வேலை என்று கேட்கிறார்கள்?
இந்து மாணவ – மாணவியர்கள் நெற்றியில் பொட்டு, திருநீறு, கழுத்தில் ருத்ராட்ச மாலை, கடவுளின் பெயரால் சாமிக்கு மாலை போடுவது, ஒரு சிலர் பூணூல் என்று இவ்வளவு அடையாளங்களுடன் கல்லூரிக்கு வருகையளிக்கின்றார்கள்.
சீக்கிய மாணவர்கள் டர்பன் எனும் தலைப்பாகை அணிந்து வருகிறார்கள்.
இதில் முஸ்லிம்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
இங்கே நாம் கேள்வி எழுப்ப விரும்புவது இவையெல்லாம் மத அடையாளங்களாக தெரியாமல் முஸ்லிம் மாணவிகள் தலையில் அணியும் பர்தா மட்டும் மத அடையாளமாக தெரிவது ஏன்?
உத்தரகாண்ட் சட்டசபையில் நிர்வாணமாக மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒரு சாதுவால் உரை நிகழ்த்த முடிகிறது.
உ.பியின் முதல்வர் காவி நிற உடையுடன், நெற்றியில் பட்டையுடன் சட்டசபையில் அமர முடிகிறது. அதே கோலத்துடன் அரசு விழாக்களில் பங்கெடுக்க முடிகிறது.
இதுவெல்லாம் முடியும் போது முஸ்லிம் பெண்கள் தலையை மறைத்து கல்லூரிக்கு வர முடியாதா?
அந்த பெண்கள் முகத்தை மூடும்படி கேட்டால் அதை தவறு எனலாம். ஏனெனில் முகத்தை மூடிக்கொண்டு வகுப்பறையில் அமரும் போது யார் என்றே தெரியாது. அது கல்லூரி நிர்வாகத்தினருக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்த மாணவிகள் முகத்தை மூடும் படி கேட்கவில்லையே? தலையை மறைக்கும் பர்தாவை அணியத்தானே அனுமதி கேட்கிறார்கள்?
கல்லூரி சீருடை அணிந்த நிலையில் தலையின் மேலே துண்டை போடுவதில் கல்லூரி நிர்வாகத்தினருக்கு என்ன பிரச்சனை?
இதைக்காரணம் காட்டி முஸ்லிம் பெண்களின் கல்வி உரிமையை பறிப்பதை தவிர இவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.
பள்ளி, கல்லூரி, சட்டசபை, அரசு அலுவலங்கள் என அனைத்து இடங்களிலும் பிற மத மக்கள் மத அடையாளங்களுடனேயே வருகிறார்கள். ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு மட்டும் இதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றால் இந்த அநீதியை, பாரபட்சத்தை ஒரு போதும் ஏற்க முடியாது.
மதவாதம் தான் இவர்களின் நோக்கம் என்றாகி விட்ட பிறகு இந்தப் பாரபட்சத்தை நாம் ஏற்று கடந்து செல்வோமேயானால் வெறுமனே இத்துடன் பிரச்சனை முடிவுக்கு வராது.
இன்றைக்கு பர்தா அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்பார்கள். நாளை பெண்கள் கல்லூரிக்கு வரக்கூடாது என்பார்கள். அத்துடனும் நிற்கப் போவதில்லை. அவர்களின் மதவாதம் என்பது உயர்சாதி என்று கருதப்படுவோருக்கான மதவாதம் தான். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடமில்லை.
எனவே பர்தாவை காரணம் காட்டி பெண்களை கல்லூரியிலிருந்து விரட்டியடிப்பவர்கள் மனுமர்மத்தை காரணம் காட்டி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் விரட்டியடிக்க தயங்க மாட்டார்கள்.
படிப்படியாக இந்திய அரசியல் சாசனத்தை தூக்கி எறிந்து விட்டு மனுதர்மத்தின் அடிப்படையிலான காட்டாட்சியை நோக்கியே மக்களை அழைத்துச் செல்கிறார்கள்.
அதுவே அவர்கள் முழங்கும் புதிய இந்தியா.
ஜனநாயகவாதிகள் ஒரு போதும் அதற்கு இடமளிக்க கூடாது.
அறவழிப் போராட்டங்களின் மூலம் நமது உரிமையை வென்றெடுக்க குரலெழுப்ப வேண்டும்.
நாம் எழுப்பும் உரிமைக்குரல் நமது உரிமையை பாதுகாப்பதுடன் அரசியல் அமைப்பு சட்டத்தை குழிதோண்டி புதைக்கும் சங்பரிவார கும்பலின் கொட்டத்தை அடக்குவதாக அமைய வேண்டும்.