கடந்த அக்டோபர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய இயற்றப்பட்ட அவசர சட்டம் 28.11.22 அன்றுடன் காலாவதியாகி விட்ட நிலையில் ஆளுநர் அச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் ஒப்புதல் வழங்கவில்லை.
அனைத்து வகை சூதாட்டமும் கேடு தான் என்றாலும் ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகளவு விளைவுகள் ஏற்படுவதைக் கவனத்தில் கொண்டு அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் என பலரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி தங்களது பொருளையும் வாழ்க்கையையும் தொலைத்தனர்.
சில நேரங்களில் உயிரிழப்புகள் வரை அதன் ஆபத்து சென்றிருக்கின்றது.
அண்மையில் கூட தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் வடமாநிலத்தை சார்ந்த பெண்ணொருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பொருளாதாரத்தை இழந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி நாளுக்குநாள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தின் விளைவுகள் அதிகரித்து வந்ததாலேயே அதைத் தடுக்க அவசர சட்டம் இயற்றினார்கள்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒருமித்து ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தடைச் சட்டம் இயற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆளுநர் இச்சூதாட்டத்தை தடை செய்ய ஒப்புதல் வழங்கவில்லை என்பது உண்மையில் கவலைக்குரியதாகும்.
ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழக மக்களுக்கு எதிராகவே அரசியல் செய்து வருகிறார். அரசு விழாக்களில் கூட சனாதன தர்மத்தை போற்றிப் புகழ்பாடுவது, பாஜக அரசின் ஊதுகுழலாக செயல்படுவது என்பதே அவரது வழக்கமாகிப் போனது.
இந்த நிலையில் தமிழக மக்கள் அனைவரும் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். அதன் மூலம் இளைஞர்களின் சீரழிவைத் தடுக்க வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில் இச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்பதல் வழங்காமல் காலம் தாழ்த்தியிருப்பது அவரது அதிகார மனோபாவத்தையே பிரதிபலிக்கின்றது.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு முனைப்பு காட்டும் போது அதற்கு ஆளுநர் ஏன் முட்டுக்கட்டை போடுகிறார். ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுவதில் ஆளுநருக்கு என்ன பிரச்சனை?
மக்கள் நலனிலும் அக்கறை இல்லை. மக்களால் தேர்வு செய்த அரசின் முடிவிற்கும் மரியாதை இல்லை என்றால் அத்தகைய ஆளுநர் தேவை தானா? என்ற கேள்வி எழுகிறது.
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு சட்டத்திற்கு கையெழுத்திட மறுப்பது மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்
ஆன்லைன் ரம்மிக்கு எதிரான இயற்றப்பட்ட சட்டம் ஆளுநரின் அலட்சியத்தால் காலவாதியாகி விட்டதால் இனி மீண்டும் புதிதாக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து அதை ஆளுநருக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஆன்லைன் சூதாட்ட பொருள் இழப்புகள், தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரிக்க ஆளுநரின் அலட்சியமும் காரணமாகி விட்டது.
அதைத்தான் ஆளுநர் விரும்புகிறாரா?
இங்கோ இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறதோ அவை யாவும் மதுவினாலும் ஏற்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும். அதன் மூலம் ஏற்படும் இழப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிற அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு சற்றும் குறைவில்லாத மதுவைத் தடை செய்யவும் முன்வரவேண்டும்.