அரசியல் தலைவர்களின் பிறந்த நாளை ஒட்டி நீண்ட காலம் சிறையில் இருப்போர் விடுதலையாகி வரும் நிலையில் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை மட்டும் நீண்ட காலம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
திமுகவின் ஆட்சி வந்தால் இதில் மாற்றம் வரும் என்று முஸ்லிம்கள் நம்பினர் அதற்கேற்ப திமுகவின் அறிக்கையும் பிரச்சாரமும் இருந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபிறகு
அண்ணாவின் பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை 15.11.2021 அன்று வெளியிடப்பட்டது.
அதை அடுத்து நீண்ட காலம் சிறையில் இருப்பவரை விடுதலை செய்வதற்கான பரிந்துரைகளைப் பெற ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆதிநாதன் அவர்களின் தலைமையில் ஆறு பேர் கொண்ட கமிஷன் ஒன்றும் நியமிக்க அரசால் நியமிக்கப்பட்டது.
இது நடந்தது கடந்த டிசம்பர் 2021 ஆகும்.
எப்படியேனும் நீண்ட காலம் சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் இந்தக் கமிஷன் மூலம் ஒரு தீர்வு ஏற்படும் என்று தமிழக முஸ்லிம்கள் நம்பினர் ஆனால் கமிஷன் நியமிக்கப்பட்டு ஓராண்டு கடந்தும் சொல்லும்படியான எந்த முன்னேற்றமும் முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் ஏற்படவில்லை.
முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள், “சட்டப்படி ஒரு ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டால் அவரை விடுதலை செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஒருவர் தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்ட பிறகு அவர் என்ன குற்றம் செய்தார் என்பதைப் பார்க்க வேண்டிய தேவையில்லை. தண்டனைக் காலம் முடியும் முன்னரேகூட ஒருவரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அரசியலமைப்பின் 161வது விதியின் கீழ் அதிகாரம் உள்ளது. ஒரு சிறைவாசியின் நடத்தைக்கான நற்சான்று இருப்பதே விடுதலை செய்வதற்கு போதுமானது என்கிறார்.
இதன்படி நீண்ட காலம் சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் தக்க முடிவு எடுப்பதற்கு தமிழக அரசிற்கு அதிகாரம் உண்டு என்பதை விளங்க முடிகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகள் பலரையும் விடுதலை செய்வதற்கு காட்டிய முனைப்பை முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் காட்டுவதில்லையோ என்கிற எண்ணப்பாடு தமிழகம் முஸ்லிம்களிடம் இருக்கிறது.
தவறு செய்தோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ஆனால் ஒரு விதியைக் கூறி நீண்ட காலம் சிறையில் இருப்பவரை மாறி மாறி இரு கட்சிகளும் விடுவித்து வரும் நிலையில் அதே விதி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் ஏன் பொருந்துவதில்லை ?
சிறைவாசிகள் மதத்தின் அடிப்படையில் ஏன் பாகுபாடு காட்டப்படுகிறார்கள் இதுதான் தமிழக முஸ்லிம்களின் கேள்வி.
இப்ராஹிம், யாசுதீன் எனும் முஸ்லிம் சிறைவாசி இருவர் தாங்கள் நீண்ட காலம் சிறையில் இருப்பதை காரணம் காட்டி தங்களை விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். ஆனால் இதற்குத் திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இவ்விருவரையும் விடுதலை செய்வது சாத்தியமில்லை. இவ்விருவரையும் விடுதலை செய்தால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்றும் நல்லிணக்கம் சீர்கெடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே அவர்கள் தங்களது எஞ்சிய காலங்களையும் சிறையிலேயே கழிக்க வேண்டும் எனும் கருத்தில் தங்களது வாதத்தை வைத்துள்ளனர். இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாததாக உள்ளது. நீண்ட காலம் சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்போம் என்று ஒரு புறத்தில் கூறிக்கொண்டு அவர்களது விடுதலைக்காகவே ஆதிநாதன் கமிஷன் ஒன்றையும் நியமித்து விட்டு உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கக் கூடாது என்று கூறுவது முரண்பாடாக உள்ளது. இவ்விருவர் விஷயத்தில் தமிழக அரசின் பதில் இப்படி இருக்குமேயானால் எஞ்சிய சிறைவாசிகளை மட்டும் தமிழக அரசு எவ்வித தடையுமின்றி விடுதலை செய்து விடும் என்று எப்படி முஸ்லிம் சமுதாயம் நம்புவார்கள்.?
சிறைவாசிகள் விஷயத்தில் தங்களுக்கு மட்டும் தனிச்சலுகை காட்ட வேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்பார்க்கவில்லை.
அது முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கையும் அல்ல.
நீண்ட காலம் சிறையில் இருப்பவரை விடுவிப்பதில் தமிழக அரசு எந்த நடைமுறையை இதுவரை வரையில் கடைபிடிக்கின்றதோ அதில் முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் இருக்க கூடாது என்பது தான் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு.
எனவே திமுக அரசு முஸ்லிம்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.