உ.பியின் சாதனையாக யோகி குறிப்பிடுவதை கவனித்தீர்களா?

உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது ஆட்சியின் சாதனையாக குறிப்பிட்ட விஷயங்களை நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்து கொண்டார்கள்.
கடந்த ரமலான் பண்டிகையின் போது முஸ்லிம்களை குறிப்பிட்ட இடங்களில் தொழுவதை தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று பெரிய சாதனை செய்து விட்டதைப் போல பேசுகிறார்.
மததுவேஷ அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்பவர்களிடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
பொதுவாக சாதனை என்றால் மாநில வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக இந்தந்த செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என்று கூற வேண்டும்.
இத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்று பட்டியலிட வேண்டும்.
யோகி முதல்வரானதிலிருந்து அப்படியான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் உபி மாநிலத்தில் முன்னெடுக்கப்படவில்லை.
மக்களின் அடிப்படை சுகாதார திட்டங்களைக் கூட செய்து கொடுக்கவில்லை.
கொரோனா பேரிடர் காலத்தில் ஆக்ஸிஜன் இன்றி மொத்த மாநிலமும் திணறியதும், இறந்த பிணங்களை எரியூட்டக்கூட போதுமான இடமின்றி கங்கை நதியில் பிணங்கள் மிதந்ததையும் யாரும் எளிதில் மறக்க முடியாது.
இந்த நிலையில் தான் முஸ்லிம்களின் தொழுகையை அதுவும் யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி தொழுது வந்ததை நிறுத்தியதை ஆகப்பெரும் சாதனையாக குறிப்பிடுகிறார்.
இவர்களுக்கு மததுவேஷ அடிப்படையிலான ஆட்சி முறையை தவிர மக்கள் நலன் வளர்ச்சி அடிப்படையில் ஆட்சி புரிய தெரியாது என்பதையே யோகியின் இப்பேச்சு சுட்டிக்காட்டுகிறது.
அது மட்டுமின்றி உ.பியில் ராமநவமி வெகு விமா¢சையாக கொண்டாடப்பட்டது. எங்கும் எவ்வித வன்முறையும் நடக்கவில்லை என்று தன்தோளை தானே தட்டிக் கொடுத்துள்ளார்.
முதலில் இவரே மிகப்பெரிய கலவரக்காரர் என்பதை மறந்து விடக்கூடாது.
இவர் முதல்வராகும் முன் ஹிந்து யுவ வாஹினி எனும் குழுவின் மூலம் மக்களிடையே வெறுப்புகளைத் தூண்டிவிட்டு அரசியல் செய்து வந்தார்.
2007 ம் ஆண்டு கோரக்பூர் கலவரத்திற்கு இவரே மூலக்காரணம் என்பதை வரலாறு மறந்துவிடவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்கள் மீது வன்முறையை பிரயோகித்து கலவரமாக்கியது யோகி அரசு. அந்த வன்முறையில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இப்படிக் கலவர வரலாறுகளை முழுவதையும் தன் வசம் வைத்து விட்டு கலவரமே நடக்க வில்லை என்பது மக்கள் காதில் பூ சுற்றும் வேலையாகும்.
அடுத்து சட்டவிரோத மாட்டிறைச்சிக் கடைகளை எல்லாம் மூடியுள்ளார்களாம். அதுவும் இவரது ஆட்சியின் சாதனைப் பட்டியலில் ஒன்றாம்.
இதைச் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.
மத்திய அரசு மூலம் டன் கணக்கில் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு மாநிலத்தில் இறைச்சிக்கடைகளை இழுத்து மூடி விட்டோம் என்று சொல்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படியான அரசியல்வாதிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மசூதிகளை இடித்ததையும் கலவரங்களை உண்டாக்கியதையும் தவிர யோகி அரசின் சாதனைகள் என்று சொல்வதற்கு வேறு ஏதுமில்லை.
இதைத்தான் யோகியின் பேச்சு உணர்த்துகின்றது.