பட்டாசு தடை செய்யப்பட்டால் தொழிலாளர்களின் நிலை என்னவாகும்?

ஆபத்தை உண்டாக்கும் பட்டாசைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலுமிருந்து பல ஆண்டுகளாக தொடர்ச்சியான கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. அவ்வாறு கோரிக்கைகள் எழும் போது பட்டாசுத் தொழிலை நம்பி பல்லாயிரம் தொழிலாளர்கள் இருப்பதால் அது அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பதிலளிப்பார்கள்.
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில்தான் பட்டாசுகள் அதிகமாகத் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பட்டாசுத் தொழிலை நம்பி பல்லாயிரம் குடும்பங்கள் இருப்பது உண்மைதான். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் பட்டாசு ஆலைகளை நம்பி தொழில் செய்யும் சில ஆயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை மட்டும் கருத்தில் எடுத்துக் கொள்பவர்கள் கோடிக்கணக்கான மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்வதில்லை.
உதாரணமாக தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் தடை செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டபோது லாட்டரி தொழிலை நம்பி வாழும் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் லாட்டரி சீட்டுக்களால் நாசமாகும் பல லட்சம் குடும்பங்களின் வாழ்க்கையை விட சில ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பெரிதல்ல! என்று தமிழக அரசு லாட்டரி சீட்டை தடை செய்தது.
லாட்டரியைத் தடை செய்தால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வாழ்வை இழந்து போவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் லாட்டரிச் சீட்டு விற்பனை செய்த தொழிலாளர்கள் தங்களை வேறு தொழிலுக்கு மாற்றிக்கொண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் லாட்டரி சீட்டு விற்பனையில் கிடைத்த வாழ்வாதாரத்தை விட அதன் பிறகு அவர்கள் மாற்றிக்கொண்ட தொழில்களின் வாழ்வாதாரம் சிறப்பாகவே இருக்கின்றது.
அதுபோலவே மக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தை விளைவிக்கும் பட்டாசைத் தடை செய்தால் அந்தத் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு தங்களை மாற்றிக் கொள்வார்கள். அல்லது அதற்கான மாற்றுத் தொழில் ஏற்பாடுகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் எந்த தொழிலாளர்களும் வேலை இழக்க மாட்டார்கள், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது.
அதுமட்டுமின்றி பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகும் தகவல்களும் இருக்கின்றது. குடும்ப வறுமையால் பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் இந்தத் தொழிலாலர்களின் வாழ்க்கை முறையும் மிகவும் மோசமாக இருந்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது.
மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கும் ஆபத்து நிறைந்த பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் பட்டாசு இல்லாத தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி விபத்து, உயிர்ப்பலி போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்களின் எண்ணமாகும்.