25 ஆண்டுகளுக்கு மேலாக வந்த தற்போது நிறுத்தப்பட்டு புதிய இதழ் துவங்க காரணம் என்ன? – 3 – 29

உணர்வு இதழை பொறுத்தவரை பல வருடங்களாக, கணிசமான சந்தாதாரர்களை கொண்டு வெளிவரும் பத்திரிக்கையாகும். சந்தாதாரர்கள் அனைவருக்கும் பத்திரிக்கைகளை கொரியர் மூலமாக அனுப்புவதை விட அஞ்சல் வழி அனுப்புவதே செலவு குறைவான வழிமுறையாகும். கொரியரில் அனுப்புவதாக இருந்தால் அதிகளவில் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். அஞ்சல் வழியின் மூலம் பத்திரிக்கைகளை அனுப்பும் போது பத்திரிக்கைக்கு என்று அரசு தரும் சில சலுகைகளை பெற முடியும். ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
எந்தவொரு பத்திரிக்கையையும் இந்திய பத்திரிக்கை பதிவாளர் சட்டத்தில்(RNI- Registrar of Newspapers of India) பதிவு செய்வது அவசியமாகும். அப்போது தான் அரசு அனுமதியுடன் முறையாக பத்திரிக்கை நடத்த இயலும்.
அவ்வாறு பதிவு செய்த பிறகு பத்திரிக்கைக்கு ஆர்.என்.ஐ தரும் சான்றிதழ் மூலமாகவே அஞ்சல்வழி சலுகையை பெற முடியும். பல வருடங்களாக நாம் அப்படித்தான் அனுப்பி வந்தோம். ஆனால் குறிப்பிட்ட காலத்துடன் ஆர்.என்.ஐ சான்றிதழின் காலாவதி காலம் முடிந்து விட்டதால் உணர்வு இதழுக்கு அஞ்சல் வழி சலுகையை பெற முடியாமல் போய் விட்டது. ஆர்.என்.ஐ சான்றிதழை புதுப்பிப்பதிலும் தற்போதைய சூழலின் படி பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நிறைந்திருந்தது.
ஆதலால் தான் உயர்நிலைக் குழுவில் புதிய இதழ் துவங்கும் முடிவு எடுக்கப்பட்டு மாநில செயற்குழுவில் ஒப்புதலும் பெறப் பட்டு அல்லாஹ்வின் அருளால் இன்று நடுநிலை சமுதாயம் எனும் பத்திரிக்கை வெளிவந்து உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றது.
அதே வேளை உணர்வு இதழ் முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை. பேப்பர் வடிவத்தில் அச்சடிக்கப் பட்டு வருவது மட்டுமே நிறுத்தப் பட்டுள்ளது. உணர்வு இதழ் மின்னிதழாக தொடர்ந்து வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.
பெயர்கள் மாறினாலும் பயணம் ஒன்றே. இலட்சியம் ஒன்றே.
உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.