கணவன் இறந்து விட்டால் மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் (சுமார் 130 நாள்கள்) மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. அதன் பிறகு அவள் விரும்பினால் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு எவ்விதத் தடையும் இல்லை. இவ்வாறு மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம்தான் அரபியில் இத்தா எனப்படுகிறது.
உங்களில் எவரும் மனைவியரை விட்டுவிட்டு மரணித்தால், அப்பெண்கள் தமக்கு மறுமணம் செய்வதற்காக நான்கு மாதம் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். தமது தவணையை நிறைவு செய்துவிட்டால் அவர்கள் தமது விஷயத்தில் முறைப்படி (மறு திருமண ஏற்பாடுகளைச்) செய்து கொள்வதில் உங்கள்மீது குற்றமில்லை. அல்லாஹ், நீங்கள் செய்வதை நுட்பமாக அறிபவன்.
(அல்குர்ஆன் – 2 : 234)
மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தைத் திரையில் காண்பித்து இஸ்லாம் கூறும் இத்தா சட்டத்தை விமர்சித்தே அண்மையில் புர்கா எனும் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார்கள்.
இத்தாவின் போது பெண் எந்த ஆணையும் பார்க்கக் கூடாது. இருட்டறையில் முடங்கியிருக்க வேண்டும். எதற்காகவும் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது.
இவைதான் முஸ்லிம் பெண்கள் கடைப்பிடிக்கும் இத்தா என்று புர்கா திரைப்படம் காட்சிகளின் வழியாகவும் வசனங்கள் வழியாகவும் சித்தரிக்கின்றது.
நான்கு மாதம் யாரையும் பாக்காமல் இருப்பதால் என்ன ஆகப்போகிறது?
இப்பலாம் குழந்தைக்கு அப்பா யாருனு கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமா?
1400 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவும் வளரல. அறிவியலும் வளரல. அப்ப போட்ட கட்டுப்பாட ஏன் இப்பவரையும் புடிச்சிட்டு இருக்கீங்க?
இவையெல்லாம் புர்கா படத்தில் இடம்பெறும் வசனங்களாகும்.
இஸ்லாம் பற்றிய எந்த அடிப்படை அறிவுமின்றி முழுக்க முழுக்க அவதூறையும் வெறுப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகவே புர்கா படம் காட்சியளிக்கின்றது.
இஸ்லாத்தை விமர்சனம் செய்வதாக இருந்தால் உண்மையை உள்ளபடி எடுத்துச் சொல்லி விமர்சனம் செய்யலாம். கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்டோர் கூறிய விமர்சனங்களைச் சகித்துக் கொள்ள முடியாமல் சங்பரிவார அமைப்புகள் கையில் எடுத்த வன்முறையை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் எடுக்க மாட்டார்கள்.
விமர்சனங்களை அறிவுப்பூர்வமாக, கருத்தியல் ரீதியாக எதிர்கொண்டு பதிலளிக்க முஸ்லிம் சமூகம் தயாராகவே உள்ளது.
புர்கா படம் முன்வைக்கும் விமர்சனத்தில் உண்மைத்தன்மை சிறிதும் இல்லை. தீய நோக்கில் சித்தரிக்கப்பட்ட புனைவும் அவதூறுமே உள்ளது.
இத்தா என்றால் என்ன?
குறிப்பிட்ட காலம் மறுமணம் செய்யக்கூடாது, மறுமணத்தைத் தூண்டும் வகையில் அலங்கரிக்கக் கூடாது, மறுமணம் பற்றிய பேச்சில் ஈடுபடக் கூடாது.
இவையன்றி இருட்டறையில் முடங்கியிருக்க வேண்டும் என்றோ எந்த ஆணையும் பார்க்கக் கூடாது, பேசக்கூடாது, வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.
இத்தா இருக்கும் பெண்களிடம் மறுமணம் குறித்து ஜாடைமாடையாகத் தெரிவிக்கலாம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
(காத்திருப்புக் காலத்தில்) அப்பெண்களிடம் திருமண விருப்பத்தை ஜாடைமாடையாகத் தெரிவிப்பதோ அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்துக் கொள்வதோ உங்கள்மீது குற்றமில்லை.
(அல்குர்ஆன் – 2 : 235)
இத்தாவில் இருக்கும் பெண் வெளியில் சென்று தமது தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் வழிகாட்டியுள்ளார்கள்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (“இத்தா”வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக்கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அது குறித்துத் தெரிவித்தபோது நபி (ஸல்) அவர்கள், “ஆம்; நீ (சென்று) உமது போரீச்சமரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக்கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்” என்றார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
முஸ்லிம் : 2972.
இத்தா குறித்து இவ்வளவு தெளிவாக இஸ்லாம் வழிகாட்டியிருக்கும் போது இருட்டறையில் முடங்கியிருக்க வேண்டும் எந்த ஆணுடனும் பேசக் கூடாது வெளியில் செல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாத்தில் இல்லாததை இருப்பதாகச் சித்தரித்து சினிமா எடுப்பது காழ்ப்புணர்வு தவிர வேறென்ன?
பல்வேறு சமுதாயத்தில் கணவனை இழந்த பெண்கள் கடைப்பிடிக்குமாறு பல சடங்கு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. கணவன் இறந்து விட்டால் அவனது மனைவி உடன் கட்டை ஏற வேண்டும் என்று நடைமுறை இருந்தது.
கணவனின் உடலை எரித்துக் கொண்டிருக்கும் நெருப்பில் மனைவியும் எரிந்து சாம்பலாக வேண்டும். இது தான் உடன் கட்டை ஏறுதல். உண்மையில் அவளாக ஏறுவதில்லை. அவ்வாறு ஏறுமாறு அவள் சமூகத்தால் அவள் வற்புறுத்தப்பட்டாள்.
அக்காலத்தை விட நவீனக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் சிறப்பான ஒன்று தான் என்று காஞ்சி மகா சுவாமிகள் கூறியதாகத் தெய்வத்தில் குரல் புத்தகம் கூறுகிறது.
‘பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது’ என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் எப்போதாவது வருஷத்துக்கு ஒரு தரமாவது, ஏதாவது ஊரில் இப்படி ஒரு ஸ்திரீ உடன்கட்டை ஏறினாள்; சட்டம் இடம் தராத போதிலும், பந்துக்கள் தடுத்த போதிலும் கேட்காமல் இப்படிப் பண்ணினாள் என்று பேப்பரில் பார்க்கிறோம். பழைய காலத்து உடன்கட்டைகளைவிட இதுதான் ரொம்ப விசேஷம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. பூர்வத்தில் அந்த லட்சியத்துக்கு அநுகூலமான சூழ்நிலை இருந்து பலபேர் அப்படி செய்தார்கள். இதனால் பிறத்தியார் கட்டாயப் படுத்தாவிட்டாலும், இப்படிப் பலபேர் போவதைப் பார்த்து அவர்களுக்கு உத்தம லோகம் ஸித்திப்பதாக சொல்கிறார்களே என்று தாங்களாகவே அரைமனஸாக ஓரிரண்டு பெண்கள் அக்காலத்தில் ஸஹகமனம் பண்ணியிருக்கலாம். இன்றைக்கோ அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாததால் இத்தனை கலிப் பிரவாஹத்தில், சீர்திருத்த நாட்களில் யாராவது உடன்கட்டை ஏறினால் இதுதான் ரொம்ப [உண்மையானது] என்று நினைக்கிறேன்.
(தெய்வத்தின் குரல் புத்தகத்திலிருந்து)
உடன்கட்டை ஏற்றப்படும் கொடுமையைத் தடுக்க 1988 ல் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
ஆங்கிலேயன் காலத்தில் ராஜஸ்தான், மேற்குவங்கம் போன்ற பகுதிகளில் இக்கொடுமை பரவலாக நிலவியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆங்கிலேயன் 1829 களியிலேயே உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் தடை செய்து சட்டம் கொண்டுவந்தான்.
இன்றைக்கும் கணவன் இறந்து விட்டால்.மனைவி மொட்டையடித்துக் கொள்ள வேண்டும்.காலத்திற்கும் வெள்ளை சேலை அணிய வேண்டும். வீட்டு விசேஷங்கள் எதிலும் முன்னிற்கக் கூடாது. பிறர் வீட்டு நல்ல காரியங்களில் தலை காட்டக் கூடாது
சாகும்வரை மறுமணம் செய்யாமல் விதவையாகவே இருக்க வேண்டும் என்றெல்லாம் பல சடங்கு சம்பிரதாயங்கள் பிற மதங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுபோன்ற எதுவும் இஸ்லாத்தில் இல்லை.
கணவன் இறந்து 130 நாள்கள் கழிந்து அவள் மறுமணம் செய்யலாம் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. காலத்திற்கும் அவள் விதவையாக இருக்கத் தேவையில்லை.
இத்தா இருக்கும் காலத்தில் கூடத் தனது தேவைக்கு வெளியே செல்லலாம் என்கிறது.
கவர்ச்சியான அலங்காரம் கூடாது அவ்வளவு தான்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு அழகான, முறைப்படுத்திய நாகரீகத்தை மக்களுக்கு இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது. எவ்வித ஒழுங்கும் நெறியும் இல்லாமல் வாழ்ந்த மக்களை இஸ்லாம் நெறிப்படுத்தியுள்ளது.
இஸ்லாம் கூறும் இத்தா முறையில் இந்த அரைவேக்காடுகள் என்ன பிழையைக் கண்டார்கள்?
கணவன் இறந்த உடன் மனைவி மறுநாளே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லவருகிறார்களா? அதுதான் முற்போக்கு என்று இந்த அறிவிலிகள் கருதுகிறார்களா? புரியவில்லை.
இஸ்லாத்தைப் பற்றிய அறிவுதான் இந்த கேடு கெட்டவர்களுக்கு இல்லை என்றால் சமூக மக்களின் நடைமுறை குறித்த அறிவுமா இல்லாமல் போய்விட்டது.?
இவர்கள் எல்லாம் மக்களோடு மக்களாக வாழ்கிறார்களா? அல்லது ஆளே இல்லாத அமேசான் காடுகளில் வனவிலங்குகளுடன் கூடித்திரிகிறார்களா?
கணவனை இழந்த எந்தப் பெண்ணும் தனது துன்பத்தை மறந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் சில பல மாதங்கள் ஆகவே செய்யும்.
எவ்வளவு தான் மனதிடமுள்ள பெண்ணாக இருந்தாலும் கணவன் இறந்த சில நாள்களிலேயே மறுமணம் செய்து விடுவதில்லை.
முற்போக்கு என்று பேசித்திரிந்த பெண்கள் கூடக் கணவனை இழந்த போது உடனே திருமணம் செய்து கொள்ளவில்லை. ஓரிரு ஆண்டுகள் கழிந்தே திருமணம் செய்து கொண்டார்கள். தமிழகத்திலேயே அவ்வாறு பலரை உதாரணம் கூற முடியும்.
இன்னும் சிலர் கணவன் இறந்து பல வருடங்கள் ஆகியும் மறுமணம் புரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுதான் மக்களின் நடைமுறையாக இருக்கிறது.
இந்நிலையில் கணவன் இறந்து விட்டால் சாகும் வரை திருமணம் செய்யாமல் இருக்கத்தேவையில்லை. ஆண்டுக்கணக்காக மறுமணம் செய்யக் கூடாது என்பதல்ல. வெறும் 130 நாள்கள் அளவு மறுமணம் செய்யாமல் காத்திருந்தால் போதும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.
இஸ்லாம் கூறும் இந்த அழகிய வழிமுறை ஒருவனுக்கு கசக்கின்றது பிற்போக்குத்தனமாகத் தெரிகிறது என்றால் அவனை நல்ல மனநல மருத்துவமனையில் தான் பரிசோதிக்க வேண்டும்.
புர்கா திரைப்படத்தை இயக்கியவர், தயாரித்தவர், நடித்தவர்கள் ஆகியோருக்கு மனநலப் பரிசோதனை செய்ய வேண்டும். செலவு குறித்து அவர்கள் பயப்படத் தேவையில்லை. தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பேற்றுக் கொள்ளும்.
காமாலைக்கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பார்களே அதுபோல இஸ்லாத்தின் மீது இவர்கள் கொண்டிருக்கும் அளவுக்கதிகமான வெறுப்புணர்வு மற்றும் முற்போக்கு எனும் பெயரில் இவர்களைப் பீடித்துள்ள மனநோயே இஸ்லாத்தின் இத்தா நடைமுறை குறித்து பொய்யாக விமர்சிக்க இவர்களைத் தூண்டுகிறது.
இத்தா ஏன்?
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்துநாட்கள் எனும் கால அளவு காத்திருக்கும் படி இஸ்லாம் கூறுவதற்கு நியாயமான காரணத்தைக் கூற இயலும்.
முதல் கணவன் மூலம் அவள் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறியச் செய்வது தான் அது.
நேரடியாக இது தான் காரணம் என்று சொல்லப்படாவிட்டாலும் அவ்வாறு புரிந்து கொள்ள இடமுண்டு.
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாத காலம் காத்திருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இச்சட்டத்தைக் கூறும் இறைவன் தங்கள் கருவில் உள்ளதைப் பெண்கள் மறைக்கலாகாது என்கிறான். இதன் மூலம் கருவில் உள்ளதை வெளிப்படுத்துவது இத்தாவின் நோக்கங்களில் உள்ளது என்பதைப் புரியலாம்.
அதுபோல நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அந்தப் பெண் 4 மாதம் 10 நாள்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அவள் கருவைப் பெற்றெடுத்ததும் அவளுக்கான இத்தா முடிந்து விடுகிறது.
கணவன் இறந்ததிலிருந்து 5 நாள்களுக்குள் அவள் பிரசவித்து விட்டால் 5 நாள்கள் தான் அவளுக்கான இத்தாவின் காலம். கணவன் இறந்த மறுநாள் அவள் குழந்தை பெற்றெடுத்தால் அத்துடன் அவளுக்கான இத்தா முடிந்து விடுகிறது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் சட்டமாகும்.
இதிலிருந்து அவள் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதை அறியச்செய்வது இத்தாவின் நோக்கங்களில் ஒன்றாகக் கருதலாம்.
கணவனை இழந்த பெண் கருவுற்றிருந்த நிலையில் அது தெரியாமல் இன்னொருவன் அவளை மணந்து கொண்டால் முதல் கணவனின் குழந்தைக்கு இவன் தந்தையாகக் கருதப்படும் சூழல் வரும். இதன் மூலம் அவன் ஏமாற்றப்படுவான்.
உண்மையாக தந்தையாக இல்லாத ஒருவனை இவன் தான் உன் தந்தை என் கூறுவது அந்தக் குழந்தையின் உரிமையைப் பறிப்பதாகும். யாரும் ஏமாற்றப்படாமல் அனைவரின் உரிமையும் பாதுகாக்கப்பட இத்தா எனும் காத்திருப்பு காலம் உதவுகிறது.
நான்கு மாதக் கால அளவு மறுமணம் செய்யாமல் காத்திருந்தால் அவள் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பது திட்டவட்டமாகத் தெரிந்து விடும். இஸ்லாம் கூறும் இத்தா நடைமுறை இந்த விதத்தில் அறிவுக்குப் பொருத்தமாகவும் தேவையாகவும் உள்ளது.
இதற்கு ஏன் நான்கு மாதக் கால அளவு? அது தான் அவளுக்கு மாதவிடாய் வருவதின் மூலமே இது தெரிந்து விடுமே? என்று கேட்கலாம்.
மாதவிடாய் வருவதன் மூலம் அவள் தான் அறிந்து கொள்ள முடியுமே தவிர அனைவருக்கும் அது தெரியப்போவதில்லை. சம்பந்தப்பட்ட அந்தப் பெண் சொன்னால் தான் அது தெரியும். அவள் வேறு ஏதேனும் உள்நோக்கத்திற்காக மாதவிடாய் வராமலேயே தனக்கு மாதவிடாய் வந்து விட்டதாகக் கூற வாய்ப்பு உள்ளது.
அப்படி என்றால் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்யும் ஆணும் அவள் கூறாமலேயே அவள் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு கால அவகாசம் தேவைப்படுகிறது.
சுமார் 130 நாள்கள் என்பது அதற்குப் போதுமான கால அவகாசமாகும். யாரும் சொல்லாமல் அவள் வயிறே அவள் கருவுற்றிருக்காளா இல்லையா என்பதைத் தெரிவித்து விடும். இதை விட வேறு சிறந்த வழிமுறை இல்லை.
புர்கா திரைப்படம் இந்த நோக்கத்தையும் கேள்விக்குஉள்ளாக்குகின்றது.
இப்பாலாம் குழந்தைக்கு அப்பா யாருனு கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமா?
1400 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவும் வளரல. அறிவியலும் வளரல. அப்பப் போட்ட கட்டுப்பாட ஏன் இப்பாவரையும் புடிச்சிட்டு இருக்கீங்க? என்று புர்கா படத்தில் உரையாடல் இடம்பெறுகிறது.
டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டியது தானே என்பதைத் தான் இவ்வாறு கேட்கிறார்.
நவீனக் காலத்தில் மருத்துவமனை தரும் சான்றிதழ்கள் எல்லாம் நூறு சதவிகிதம் உண்மை என்று நம்பும் அளவுக்குக் குழந்தையாக உள்ளார். 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவு வளரவில்லை என்று கூறும் இவர்களின் அறிவு மந்த நிலையில் உள்ளது.
புர்கா படத்தை இயக்கியவர் தனது தந்தைக்குப் பிறக்கவில்லை என்று டிஎன்ஏ சான்றிதழ் போலியாகப் பெற முடியும். அடுத்தவன் குழந்தைக்குத் தனது டிஎன்ஏவில் சான்றிதழ் பெறலாம். அந்தளவு ஏமாற்றுவேலைகள் அதிகம் நடைபெறுகிறது.
போலி டாக்டர்கள் அதிகம் உலவும் நாட்டில் போலிச் சான்றிதழ்கள் இருக்காதா?
அண்மையில் கூடப் பல்வேறு பிரபல்லியங்களுக்குப் போலியாக டாக்டர் பட்டம் வழங்கி ஏமாற்றியதாகச் செய்திகள் வந்ததை அனைவரும் படித்திருப்போம்.
அவ்வளவு ஏன்? மாற்றுத்திறனாளி ஒருவர் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிக் கோப்பை வென்று வந்ததாகக் கூறி அனைவரையும் ஏமாற்றி பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியானார்.
முதல்வரையே ஏமாற்றி அவரை போய் சந்தித்து விட்டார். ஒரு மாநிலத்தின் முதல்வரை போய் சந்திப்பதாக இருந்தால் எத்தனை நடைமுறைகள் உள்ளன. அத்தனையையும் ஏமாற்றி உள்ளார். 11 பேர் கொண்ட தனது அணி என்று பொய்யான தகவலை உருவாக்கி அதை முதல்வரை சந்திக்கும் முன் அளித்துள்ளார்.
லஞ்சம் கொடுத்தால் எந்த சர்டிபிகேட்டையும் போலியாகப் பெறும் நாட்டில் டிஎன்ஏ சான்றிதழ் உதவும் என்று நம்புவதிலிருந்தே இப்படத்தை எடுத்தவர்களுக்கும் இதில் நடித்தவர்களுக்கும் அறிவு வளரவில்லை என்பதைக் காட்டுகிறது.
தாங்கள் அடிமுட்டாள்களாக இருந்து கொண்டு மற்றவர்களை எல்லாம் முட்டாள்கள் என்று நம்புவது தான் இவர்களின் முற்போக்குச் சிந்தனையாக உள்ளது.
ஆக மொத்தத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா தேவையில்லை. இத்தா தேவையில்லை. என்பது தான் இப்படத்தின் மூலம் இவர்கள் விடுக்கும் செய்தியாகும்.
இவர்கள் கூறும் சுதந்திரம் எத்தகையது? முற்போக்கு எனும் பெயரில் இவர்கள் எதை நோக்கி அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
ஆணும் ஆணும் திருமணம் செய்யலாம்.விரும்பிய நபருடன் உறவு கொள்ளலாம்.திருமணம் எனும் பந்தம் தேவையில்லை.கர்ப்பப்பை சுதந்திரம் வேண்டும். பெண்கள் அரைகுறை ஆடையுடன் திரியலாம். கள்ளக்காதல் தவறில்லை. அது அவர்களின் சுதந்திரம்
இவைகள் எல்லாம் தான் இவர்கள் சொல்லவரும் முற்போக்கு கருத்துகள். இவர்கள் ஏற்படுத்த விரும்பும் அறிவுப்புரட்சி. இதிலிருந்தே இவர்கள் எந்த அளவு கேடு கெட்டவர்கள் என்பதை அறியலாம்.
புர்கா, பர்ஹானா உள்ளிட்ட உண்மைக்குப் புறம்பாக, இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்கும் நபர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
கோழைத்தனமாகச் சினிமா எனும் முகமூடி அணிந்து கொண்டு விமர்சிப்பதை விட்டு விவாதக் களத்தில் நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்க முன்வாருங்கள்.
உங்களது சங்கித்தனத்தையும் அறிவீனத்தையும் அம்பலப்படுத்தி உண்மையைத் தெளிவுபடுத்த தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது