வழிபாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை தொடர்பாக உங்கள் பார்வை என்ன?

அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வறிக்கையில் வரவேற்கத்தக்கவையும் உள்ளன. தேவையற்றவையும் உள்ளன. முதலில் வரவேற்கத்தக்க அம்சங்களைப் பார்த்து விடுவோம்.
வகுப்பு துவங்குவதற்கு முன்னரே தலைமை ஆசிரியர் முதற்கொண்டு அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து விடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது நல்ல விஷயம்தான். ஆசிரியர்கள் நேரம் தவறாமல் வருகை தந்து விட்டால் அதுவே மாணவர்களுக்கு நல்ல பாடமாக அமைந்து விடும்.
தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான உதவிகளை அப்பகுதியிலுள்ள செல்வந்தர்களை கண்டு பெற்றுக் கொள்ள முயற்சி செய்யலாம் என்று கூறியுள்ளது பள்ளியை மேம்படுத்த வேண்டும் எனும் சிந்தனையை ஆசிரியர்களுக்கு கொடுக்க உதவும்.
மாணவர்களின் மனதை பாதிக்கும் வகையில் தண்டனை அளிக்கக் கூடாது என்பதும் வரவேற்கத்தக்கதே.
தமது பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது இவனை நன்றாக அடித்து திருத்துங்கள் என்று ஆசிரியர்களிடம் பெற்றோர்களிடம் சொன்ன காலம் மாறிவிட்டது. லேசாக அடித்து விட்டால் கூட போலீஸ், வழக்கு என்று பிரச்சனை ஆகிவிடுகிறது. எனவே நவீன காலத்தில் மாணவர்களை அதட்டவே ஆசிரியர்கள் அச்சப்படும் நிலைதான் உள்ளது.
இருப்பினும் மாணவர்களின் மனதை பாதிக்கும் வகையில் தண்டனை அளிக்கப்படுவதையும் மறுக்க முடியாது. எனவே அப்படியான நிகழ்வுகளை தடுக்க இந்த வழிகாட்டல் தேவையே.
மாணவர்கள் மோதிரம், செயின் போன்றவை அணிந்து வரக்கூடாது என்று தடுத்திருப்பதும் ஒருவகையில் நல்லதே.
மோதிரம், செயின் போன்றவை பள்ளிகளுக்கு தேவையில்லை என்பதுடன் வளரிளம் பருவ மாணவர்கள் அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளமாட்டார்கள். மதிப்புமிக்க பொருளை தொலைத்து விட்டு தேவையற்ற பிரச்சனை ஏற்படுவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.
இதுவன்றி ஆசிரியர்கள் பாட நேரங்களில் செல்போன் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்தியது, ஆண்டு விழா நிகழ்ச்சியில் திரைப்பட பாடல்களை ஒளிபரப்பக் கூடாது என்று கூறியது போன்றவை பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எனினும் இது போன்ற பல நல்ல விஷயங்களை குறிப்பிட்டு அவ்வப்போது பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்புகிறது. ஆனால் அவை பள்ளிகளில் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் டி.சி கேட்டால் அலையவிடக்கூடாது என்று முன்பு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் பல பெற்றோர்கள் டிசி வாங்க இன்றளவும் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பள்ளி வாகனம் விபத்தாகி உயிரிழப்பு ஏற்பட்டால் உடனே பல்வேறு கட்டளைகளை தாங்கிய சுற்ற றிக்கை பறக்கின்றது. அத்துடன் அந்த விஷயம் முடிந்து போகிறது.
இம்முறை அது போலன்றி பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட அறிவுரைகள் செயல் வடிவம் பெறுகிறதா என்பதை தகுந்த பொறுப்பாளர்களை கொண்டு பள்ளிக்கல்வித்துறை கவனிக்க வேண்டும்.
சமீபத்தில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் நாள்தோறும் சொற்ப நேரம் இறைவழிபாடு நடத்தி மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் யாவரும் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்கத்தான் அனுப்பி வைக்கிறார்களே தவிர ஆன்மீகம் கற்க அனுப்புவதில்லை. எனவே வழிபாடு கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் பள்ளிக்கல்வித்துறைக்கு தேவையில்லை.
அதுமட்டுமின்றி ஒரு பள்ளியில் பல மதப்பிரிவுகளை சார்ந்த மாணவ- மாணவியர்கள் பயில்வர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வழிபாட்டு முறை உண்டு. ஒரு மதத்தை சார்ந்தவர்களே ஒரே முறையில் வழிபாடு செய்வதில்லை. இந்நிலையில் மாணவர்களுக்கு வழிபாடு கற்பிக்க வேண்டும் என்றால் எந்த மத வழிபாடு?
இஸ்லாமா? பௌத்தமா? இந்து மதமா? கிறித்தவ மதமா? எனும் கேள்வி எழுகிறது.
அல்லது ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கும் வகையில் குறிப்பிட்ட மதத்தை சார்ந்த வழிபாட்டை கற்றுக் கொடுக்கப்போகிறதா கல்வித்துறை?
மதச்சார்பற்ற நாட்டில் மதக்கல்வியை புகட்டுவதாக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடு அமைந்து விடக்கூடாது.
அது போல பல பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா பயிற்சி அளிப்பதாகவும் புகார் உள்ளது. அதற்கும் கடிவாளமிடும் வகையில் பள்ளிக்கல்வித்துறை தனது கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
பல அரசுப்பள்ளிகளின் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய கட்டத்தில் உள்ளன. மாணவர்கள் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர்.