இரு பாலர் இனைந்துப் படிக்கும் கல்வி முறை குறித்து உங்கள் பார்வை என்ன? இந்த கல்வி முறை சமூக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சிலர் சொல்கிறார்களே! அது சரியா விளக்கம் தாருங்கள்.

ஆண் – பெண் இனக்கவர்ச்சி என்பது இயற்கையானது. ஒருவரை ஒருவர் ஈர்ப்பு கொள்ளும் விதமாகவே இறைவன் மனிதர்களைப் படைத்துள்ளான்.
குறிப்பிட்ட பருவத்தை அடைந்ததும் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாகும் போது கூடுதல் கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.
நீண்ட நெடுங்காலத்திற்கு கட்டுப்பாடற்ற ஆண் பெண் கலப்பு எனும் சூழல் குறிப்பிட்ட அளவில் பாதிப்புகளை உண்டாக்கி விடுகிறது.
பள்ளி, கல்லூரி என்றில்லாமல் ஆண்கள் – பெண்கள் கலந்து பணிபுரியும் அத்தனை இடங்களிலும் இது தான் யதார்த்த நிலை.
அதைப் புரிந்து கொண்டதாலேயே தமிழகமெங்கும் மகளிர் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. பெற்றோர்களும் தங்கள் பெண் பிள்ளைகளை அதில் சேர்க்கின்றனர்.
பேருந்தில் கூட மகளிர் பேருந்துகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. புற நகர் இரயிலில் மகளிருக்கென்று தனிப்பெட்டிகள் உள்ளன.
தங்கும் விடுதியிலும் ஆண்கள் – பெண்கள் என பாகுபாடு பார்க்கப்படுகின்றன.
ஜென்ட்ஸ் ஹாஸ்டல் தனியாகவும் லேடீஸ் ஹாஸ்டல் தனியாகவும் தான் உள்ளன. இருவரும் கலந்து தங்கும் விடுதிகள் இல்லை.
கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பெண்கள் தனித்தனி அணியாகவே உள்ளன.
ஆண்கள் சக ஆண்களுடனும் பெண்கள் சக பெண்களுடனும் தான் விளையாடுகின்றனர். இவ்விருவரும் கலந்து விளையாடுவதில்லை.
ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் கலந்து ஒரு அணி ஏற்படுத்தப்படவுமில்லை.
நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் கூட ஆண்களை தனியாகவும் பெண்களை தனியாகமே ஓட விட்டனர். இரு தரப்பையும் கலந்து விளையாட அனுமதிக்கவில்லை.
ஆண் – பெண் கலப்பில் கவனிக்கத்தக்க அம்சம் உள்ளது என்பதையே இவை வெளிப் படுத்துகின்றன. அதனால் தான் இத்தகைய பாகுபாடுகள் அனைவராலும் கடைபிடிக்கப்படுகின்றன.
அது போலத்தான் பள்ளி கல்லூரிகளில் கலந்து பயிலும் போது இளம் வயது மற்றும் வாய்ப்புகளின் காரணத்தால் பாதிப்புகள் அதிகமாக உள்ளன.
முதலில் பழக்கம், பிறகு செல்போன் உரையாடல், அதன் பின் தனிமைச் சந்திப்புகள் என்று ஒழுக்க மீறலின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. அதன் வாசல்களை இந்தக் கல்வி முறை பலருக்கு திறந்து விடுகின்றது.
பெற்றோரின் கண்காணிப்பு இல்லாத போது பிள்ளைகள் கெட்டுப் போய் விடுகிறார்கள்.
அந்த முறையில் பயிலும் அனைவரும் கெட்டுப் போகிறார்கள் என்று நாம் சொல்லவில்லை. நல்லவர்கள் பலரும் கெட்டுப் போவதற்கு அச்சூழல் காரணமாக உள்ளது என்கிறோம்.
எனவே தான் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் பள்ளி கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டால் பெருமளவு ஒழுக்கக் கேடான நிகழ்வுகளைத் தவிர்க்கலாம் என்கிறோம்.
இவ்வாறு நாம் கூறினால் நாகரீகம், பெண் சுதந்திரம், பெண்ணியம் என்றெல்லாம் பேசுபவர்கள் இதைப் பழமைவாதம் என்கிறார்கள். ஒழுக்கத்துடன் நடக்க விரும்புவது பழமைவாதமா?
அப்படி என்றால் லேடீஸ் ஹாஸ்டல் எனும் முறை பழமைவாதம் என்று கூறி ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒரே விடுதியில் தங்கிக் கொள்ளலாம் என்பார்களா?
யாரும் யாருடனும் எப்படி வேண்டுமானாலும் பழகிக் கொள்ளலாம் அதுதான் பெண்ணியம், சுதந்திரம் என்று கருதுவார்களேயானால் தங்கள் தாய்க்கும், மனைவியர்களுக்கும் சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் அத்தகைய சுதந்திரத்தை வழங்க முன்வருவார்களா?
மேலைநாடுகளில் கல்லூரியில் பயிலும் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்களே திருமணத்திற்கு முன்பான உறவுக்கு அனுமதி கொடுத்து விடுவதாக கூறப்படுவதுண்டு. சுதந்திரம் பேசுவோர் இதையும் செய்வார்களா?
ஒழுக்கத்தை விரும்பும் எவரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
இஸ்லாம் பெண் கல்விக்கு எதிரானது அல்ல. பெண்கள் கல்வி கற்கவும் கற்ற கல்வியைப் பிறருக்கு எடுத்துக் கூறவும் அனுமதிக்கின்றது.
அதே வேளை அந்நிய ஆண்களுடன் தவறானப் பேச்சு, தனிமைச் சந்திப்பு போன்ற ஒழுக்கக் கேடான செயல்களையே தடை செய்கின்றன.
ஒழுக்கத்தை விரும்பும் அனைவரும் இஸ்லாம் கூறுவதை சரிகாணவே செய்வார்கள்.