பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டிலிருந்து, இந்தியாவில் ஒட்டுமொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு பதிவான 1,64,033 தற்கொலைகளில் 4ல் ஒருவர் தினசரி கூலித் தொழிலாளியாக இருந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
“இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்” அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் தினசரி ஊதியம் பெறுபவர்கள்தான் அதிகமானவர்களாக இருக்கிறார்கள். கடந்து ஆண்டு மட்டும் 42,004 கூலித்தொழிலாளிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இது தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களில் 25.6% ஆக உள்ளது.
2020 ஆம் ஆண்டில் நாட்டில் பதிவு செய்யப்பட்ட 1,53,052 தற்கொலைகளில் 37,666 கூலித்தொழிலாளிகள் தற்கொலை செய்துள்ளனர். இது 24.6%, ஆக உள்ளது.
2019 இல் பதிவான 1,39,123 தற்கொலைகளில், தினசரி கூலித் தொழிலாளர்கள் மொத்தத்தில் 23.4% ஆவர்.
2021 ஆம் ஆண்டில், நாட்டின் தினசரி ஊதியம் பெறுவோர் குழுவில் தற்கொலைகள் எண்ணிக்கை 2020 உடன் ஒப்பிடும்போது 11.52% அதிகரித்துள்ளது, அதே ஆண்டில் நாடு தழுவிய தற்கொலைகளின் எண்ணிக்கை 7.17% அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் கூலித்தொழிலாளிகளின் மரணம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேசமயம் அம்பானி அதானி போன்றவர்களின் வருவாய் நிமிடத்திற்கு நிமிடம் எகிறிக்கொண்டே செல்கிறது. பணக்காரனின் செல்வம் ஏறிக்கொண்டே செல்கிறது. ஏழையின் செல்வம் இறங்கிக்கொண்டே செல்கிறது.
மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் தேவைப்படும் மக்களுக்கு இலவசமாக பொருட்கள் வழங்கலாம். அதானி குழுமத்திற்கு சலுகைகள் வழங்குவதைவிட மக்களுக்கு இலவசம் வழங்குவது சிறந்தது. இது அவர்களது உயிரைக்காக்கும்.
ஏனெனில் இன்று விலைவாசிகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துகொண்டே செல்கிறது. அன்றாடம் தேவைப்படும் அரிசு போன்ற பொருட்களின் விலைகளும் ஜிஎஸ்டியால் உயர்ந்துள்ளன. இந்நிலையில் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதிக விலைவாசி, குறைந்த வேலைவாய்ப்பு இவ்விரண்டும் ஏழைகளை வாட்டி வதைக்கிறது.
இதனால் என்னசெய்வதென்று அறியாமல் தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறார்கள் கூலித்தொழிலாளிகள்.
ஏழைகளை சரியாக கவனித்தால்தான் அந்த நாடு சிறந்த நாடாக இருக்கும். வளரும் நாடாக இருக்கும். ஏழைகளை புறக்கணிக்கும் நாடுகள் ஏற்றம் பெறாது.
அந்த அடிப்படையில் விலைவாசிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு மும்முரம் காட்ட வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்குண்டான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.