தேசியத் தலைநகர் திருத்த மசோதாவின் நோக்கம் என்ன?

டெல்லி தேசிய தலைநகர் திருத்த மசோதா 2021 என்று புதிய மசோதாவை பாஜக அரசு கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்துள்ளது.
பாஜக அரசை பொருத்தவரை தாங்கள் அறிமுகம் செய்யும் மசோதா ஒவ்வொன்றுக்கும் நாவினிக்கும் வகையில் நோக்கம் கற்பிப்பார்கள். ஆனால் உள்ளே பகுப்பாய்வு செய்தால் அத்தனையும் விஷமாகவே இருக்கும் என்பதை அனைவரும் நன்கறிவர்.
டெல்லி மசோதாவிலும் அது தான் நடந்துள்ளது. அரசுக்கும் நிர்வாகத்திற்கும் மசோதாவினால் உறவுகள் மேம்படும் என்று தொலைக்காட்சியில் பொய்யாக விளம்பரம் செய்வதைப் போல செய்துள்ளனர். ஆனால் உண்மை வேறு.
டெல்லியை பொருத்தவரை அது யூனியன் பிரதேசமாகும்.
அங்கு சட்டம் ஒழுங்கு காவல்துறை தொடர்பில் டெல்லி முதல்வரால் எதுவும் செய்யமுடியாது. அவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
அதுபோல டெல்லி நிலம் தொடர்பான முக்கிய முடிவுகளையும் மாநில அரசு சுயதீனமாக எடுக்க முடியாத நிலையே இன்றுவரை உள்ளது.
அதுபோல இன்னும் குறிப்பிடத்தக்க சில விஷயங்கள் டெல்லி முதல்வர் தன்னிச்சையாக செயல்படமுடியாது எனும் நிலைதான் தற்போது உள்ளது.
எனினும் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மாநில அரசுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது.
இதன்படியே டெல்லி மாநில அரசு செயல்பட்டு வருகிறது.
எனினும் தற்போது புதிய மசோதாவின் மூலம் டெல்லி மாநில அரசுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை டம்மியாக்கி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநில அரசு எடுக்கும் எந்தவொரு முடிவிலும் அதன் துணை நிலை ஆளுநர் தலையிட முடியும். அதற்கு இப்புதிய மசோதா அதிகாரம் அளிக்கின்றது.
டெல்லி சட்டப்பேரவை கூடி விவாதித்து இயற்றும் சட்டத்தை துணை நிலை ஆளுநர் ரத்து செய்ய முடியும்.
தற்போது வரை அதிகாரம் உள்ள கல்வி போக்குவரத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூட சுயமாக முடிவெடுக்க முடியாது. எதுவொன்றுக்கும் ஒரு மாணவன் தனது ஹெட் மாஸ்டரை எதிர்பார்ப்பதை போல டெல்லி மாநில முதல்வர் துணை நிலை ஆளுநரின் உத்தரவையும் அனுமதியையும் எதிர்பார்க்க வேண்டும்.
சுருங்கச் சொல்வதாக இருந்தால் இப்புதிய மசோதா அமலானால் டெல்லி அரசு முதல்வர் எல்லாமே வெறும் பெயருக்கு தான். டெல்லி மாநில அரசு என்பதே துணை நிலை ஆளுநரைத்தான் குறிக்கும் என்றாகி விடும்.
தங்களுக்கு குடைச்சல் தரும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசை ஒரேயடியாக ஓங்கி அடித்து ஓரமாக உட்கார வைத்து தாங்களே அரசை நடத்துவது தான் இதன் ஒரே நோக்கம்.
ஆகவே தான் அவா¢ இம்மசோதாவிற்கு எதிராக ட்விட்டரில் கடுமையாக கொந்தளித்துள்ளார்.
எல்லாமே துணை நிலை ஆளுநர் தான் என்றால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு எதற்கு? வெறும் கைப்பாவைகளா? என்று பொரிந்து தள்ளியுள்ளார்.
அவர் ஆதங்கம் கொள்வதில் உண்மை உள்ளது.
இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்த்துள்ளன.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து அவர்களை தங்களது கைப்பாவைகளாக மாற்றுவதை நாமும் ஏற்கவில்லை.
ஆனால் அரவிந்த்கெஜ்ரிவாலுக்கு ஒரு விஷயத்தை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.
இதே பாஜக அரசு தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களை வளர்ச்சியின் பெயரால் யூனியன் பிரதேசங்களாக பிரித்த்தை அம்மாநிலங்களுக்கு உள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றார்.
டெல்லியின் அதிகாரத்தை குறைப்பதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் அதே நிலைதானே? ஜம்மு காஷ்மீர் மாநில உரிமையை பறிப்பதை அம்மக்களால் ஏற்க முடியாது.
ஜம்மு காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போதும் அது யூனியன் பிரதேசம் என்று அறிவித்த போதும் அம்மாநில மக்கள் பட்ட வேதனையை இன்று அரவிந்த் கெஜ்ரிவால் நன்றாக புரிந்திருப்பார்.