சமீபகாலமாக தாய் மதம் திரும்புங்கள் எனும் கூச்சலை ஆங்காங்கே செவிமடுக்க முடிகின்றது.
இந்துக்கள் அல்லாதோரை இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும் என்று அழைத்து தாய் மதம் திரும்பும் பிரச்சாரத்தை கர் வாப்ஸி எனும் பெயரில் ஆர்.எஸ்.எஸ் துவக்கி வைத்தது.
ஆர்.எஸ்.எஸ் அல்லாத பலரும் தங்கள் மதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றார்கள். அதையே தாய் மதம் திரும்புதல் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
அதன் வழியில் சீமானும் தற்போது சைவ மற்றும் வைணவ வழிபாட்டு முறைக்கு மாறுமாறும், அதுவே தமிழக மக்களின் தாய் மதம் என்றும் கூறி மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார்.
சீமான் என்றில்லை. இந்த பிரச்சாரத்தை கையிலெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் சில கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர்.
ஒரு மதத்தை தாய் மதம் என்று கூறுவதற்கான வரையறை என்ன?
பல தலைமுறைகளுக்கு முந்தைய நமது முன்னோர்கள் எதில் இருந்தார்களோ அதுதான் தாய் மதம் என்பதற்கான அளவுகோலா?
அல்லது ஆதிமனிதன் எந்த கொள்கையில் இருந்தானோ அதனடிப்படையில் தாய் மதம் என்று அழைப்பதா? அல்லது இவையல்லாத வேறு ஏதும் அளவுகோல்கள் உள்ளனவா?
பல தலைமுறைகளுக்கு முந்தைய நமது முன்னோர்கள் ஒன்றை வணங்கி வழிபட்டிருந்தால் அதுவே தாய் மதம் என்றாகி விடுமா?
ஆதி மனிதன் சிவனையோ கண்ணனையோ சூரியனையோ சந்திரனையோ அல்லது வேறு எதையுமோ வணங்கி வந்தார்கள் என்று கூறினால் அதற்கான அறிவியல் சான்று என்ன?
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதி மனிதன் இதைத்தான் வணங்கி வந்தான் என்று எவரும் அறிவியல் பூர்வமாக சான்றுகளுடன் நிரூபிக்க இயலாது.
இது தான் தாய் மதம் என்று அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் நிரூபிக்க இயலாத ஒன்றுக்கே இவர்கள் உரிமை கோருகிறார்கள் என்பது இதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சமாகும்.
அறிவியல் பூர்வமாக என்றில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் ஒருவர் இவ்வாறு கூறினால் அது அவரவர் மத நம்பிக்கை அடிப்படையிலானதாகும்.
உலகில் தோன்றிய முதல் மனிதர் ஆதம் அவரது மனைவி ஹவ்வா. இவ்விருவரிலிருந்து தான் மனித சமுதாயம் தோன்றியது.
இவ்விருவரும் ஓரிறைவனையே வணங்கி வந்தார்கள். அவர்களது மதம் இஸ்லாமாகவே இருந்தது. இது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும். இதனடிப்படையில் தாய் மதம் என்றால் அது இஸ்லாம் தான்.
அதிகமானோர் நம்புவதை போல இஸ்லாம் என்பது நபிகள் நாயகம் அறிமுகப்படுத்திய மார்க்கமல்ல. அவருக்கு முன்பு எண்ணற்ற இறைத்தூதர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தனர். அதன் வரிசையில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த இறைத்தூதர்களில் நபிகள் நாயகம் அவர்கள் இறுதியானவர்.
நபிகள் நாயகம் அரேபியாவில் பிறந்து இஸ்லாத்தை சொன்னார் என்ற இஸ்லாத்தின் கூற்றுப்படி இஸ்லாம் அரேபியாவில் பிறந்த மார்க்கம் என்று ஒருவர் வாதிட்டால் அதே இஸ்லாம் தான் ஆதி மனிதர் ஆதமும் இஸ்லாத்தையே கடைபிடித்தார் என்று சொல்கிறது.
மக்காவில் அமையப் பெற்றிருக்கின்ற கஅபா எனும் ஆலயத்தை முதன் முதலில் ஆதம் எனும் முதல் மனிதரே நிறுவினார் என்று இஸ்லாம் கூறுகிறது.
இதனடிப்படையில் அனைவருக்குமான தாய் மதம் இஸ்லாம் என்ற முடிவிற்கே அவர் வர இயலும். அவ்வாறு கூறுவாரா?
இஸ்லாம், நபிகள் நாயகம் பற்றி கூறுகின்ற தகவலை மட்டும் எடுத்துக் கொண்டு அரேபிய மார்க்கம் என்போர் அதே இஸ்லாம் ஆதம் எனும் முதல் மனிதரை பற்றி கூறுவதை கவனத்தில் கொள்ள மாட்டேன் என்றால் அது அறிவார்ந்த செயலாகாது.
அடுத்து தமிழர்களின் மதம், சிவனை வழிபடும் சைவமும் கண்ணனை வழிபடும் வைணவமும் தான் என்று கூறப்படும் கூற்றை எடுத்துக் கொள்வோம்.
இது வரலாற்றுப் பூர்வமாக, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட கூற்றல்ல.
ஏனெனில் கீழடி ஆய்வின் போது கூட சிலை வழிபாடு இருந்ததற்கான எந்தச் சான்றும் கிடைக்கப்பெறவில்லை.
இது தவிர இந்த அளவு கோல் முற்றிலும் பிழையானதாகும்.
குறிப்பிட்ட வழிபாட்டு முறையை வைத்து ஒரு இனத்தை அடையாளம் காணும் மிக ஆபத்தான போக்காகும்.
குறிப்பிட்ட வழிபாட்டு முறை அல்லாத மற்றவர்களை எல்லாம் மேற்படி இனத்திலிருந்து வெளியேற்றும் செயலாகும்.
இந்துக்களிலேயே பலர் சிவனையும் கண்ணனையும் வழிபடாத, கிராமப்புறத்தில் தங்களுக்கு கடவுள் என்று கற்பிக்கப்பட்டவர்களை வணங்கி வருகிறார்கள்.
இவர்கள் எல்லாம் பிறப்பால், மொழியால் தமிழர்களாக இருந்தும் சிவ வழிபாடு இல்லை என்பதால் இவர்களை தமிழர்கள் இல்லை என்று கூறும் நிலை ஏற்படுகிறது.
முஸ்லிம்கள், கிறித்தவர்கள், எவற்றையும் வணங்காத நாத்திகர்கள் என்று பலரையும் தமிழக மக்களிலிருந்து வெளியேற்றும் தவறான அளவீடாகும் இது.
சிவனை வழிபட்டால் தமிழர்கள் என்றால் வட மாநிலங்களில் இவற்றை வணங்குவோர் எல்லாம் சீமானின் பார்வையில் தமிழர்களாகி விடுவார்களா?
அவர்கள் தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் இம்மொழி, வாழ்வியல் என்று எல்லாம் மாறியிருந்தாலும் சிவனை வழிபடுவதால் மட்டும் அவர்கள் சீமான் கூறும் தாய் மதத்தில் இணைந்து விட்டோராகி விடுவார்களா?
இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகளுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளனர்.
அடுத்து தாய் மதம் திரும்புங்கள் என்று கூறுவோர் எவராக இருந்தாலும் அது முஸ்லிம்களை நோக்கி அழைப்பார்களானால் சில தகவல்களை பதிவு செய்ய விரும்புகிறோம்.
ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்ற, பிரச்சாரம் செய்ய அனுமதி இருக்கின்றது. அதனடிப்படையில் இந்த ம த த்திற்கு வா என்று அழைப்பதாக இருந்தால் அதற்கென்று தார்மீக ரீதியில் சில அம்சங்கள் இருக்க வேண்டும்.
அதன் கொள்கை கோட்பாட்டை போதித்து அதனடிப்படையில் மக்களை அதை நோக்கி அழைக்க வேண்டும்.
மக்களுக்கு நன்மை தரும் அதன் தத்துவங்களை எடுத்துக் கூறி அதன் பெயரில் அம் மதத்தை நோக்கி மக்களை அழைக்க வேண்டும்.
இம் மதத்தை கடைபிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டு என்பதை எடுத்து சொல்லிப் பிரச்சாரம் செய்யலாம். இந்த மதத்திற்கு வா என்று அழைக்கலாம்.
இப்படியில்லாமல் பொத்தாம் பொதுவாக இது தான் தாய் மதம் எனவே இங்கே வாருங்கள் என்பது எவ்வித த்திலும் ஏற்க முடியாது.
ஓர் ஊரில் முதன் முதலில் ஒரு மளிகைக் கடை திறக்கப்பட்டது. அதில் பொருட்கள் தரமில்லை. விலையோ அதிகம். கலப்படம் வேறு. இப்படி பல்வேறு குறைபாடுகள். பிறகு வெளியூரிலிருந்து வந்த ஒருவர் புதிய மளிகை கடை ஒன்றை நிறுவுகிறார்.
பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றது. தரமாகவும் இருக்கின்றது. எவ்வித கலப்படமும் இல்லை. எனவே புதிய கடைக்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்நிலையில் பழைய கடைக்காரர் இது தான் தாய் கடை. நமதூரில் நிறுவப்பட்ட முதல் கடை. எனவே என் கடையில் தான் பொருள்களை வாங்க வேண்டும் என்று அழைத்தால் அவரை அவரது அழைப்பை என்னவென்போம்?
முதல் கடை என்பதால் அங்குள்ள குறைகளை பொறுத்துக் கொள்ள வேண்டுமா?
தாய் மதம் திரும்புவோர் அங்கே சுற்றி, இங்கே சுற்றி ஒரு வகையில் இந்து மதத்திற்கு தான் அழைப்பு விடுக்கின்றார்கள்.
முஸ்லிம்களாகிய எங்களின் மூதாதையர்கள் தமிழக மக்களின் வழிபாட்டு முறைப்படி கல்லையும் மண்ணையும் வணங்கி வருவோராகவே இருந்தனர்.
இந்துக்களில் உள்ள சாதியப் படிநிலைகளில் ஏதேனும் ஒரு தட்டில் இருந்து அதன் மூலம் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளானவர்களே.
இஸ்லாம் வந்த பிறகு அதன் கொள்கை பிடித்துப் போனது.
கல்லோ மண்ணோ கடவுளாகாது. மரமோ மட்டையோ இறைவனாகாது.
வானம், பூமி அவற்றுக்கிடையில் உள்ளவை என சகலத்தையும் படைத்தவனே இறைவன் ஆவான்.
அவனுக்கு மனைவி மக்கள் இல்லை. தூக்கமோ மறதியோ எவ்வித பலவீனமோ இல்லை. அத்தகைய இறைவன் ஒருவனே. அவனுக்கு நிகராக எவரும் – எதுவும் இல்லை எனும் இஸ்லாத்தின் தூய ஓரிறைக் கொள்கை பிடித்துப் போய் தான் இஸ்லாத்தை ஏற்றார்கள்.
உயர்ந்தவன் – தாழ்ந்தவன் எனும் சாதியப் பாகுபாட்டால் பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளை நாள்தோறும் அனுபவித்து வந்த நிலையில் அனைவரும் சமம் எனும் இஸ்லாத்தின் சமத்துவ, சகோதரத்துவ கோட்பாடு பிடித்துப் போய் இஸ்லாத்தை அரவணைத்துக் கொணடார்கள்
அதன் தொடர்ச்சியாகவே தலைமுறை தலைமுறையாக இஸ்லாத்தை மனதார விரும்பி கடைபிடித்து வருகிறோம்.
எங்கள் முன்னோர்கள் இருந்த வழிபாட்டு முறையில் குறைகளை கண்டதாலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம். அத்தகைய முஸ்லிம்களாகிய எங்களை மீண்டும் பழைய நிலைக்கே வருமாறு அழைப்பு விடுப்பது எப்படி சரியாகும்?
எவற்றை நாங்கள் குறைகளாக பார்த்தோமா அவை சரி செய்யப்பட்டு விட்டதா?
அர்த்தமற்ற பல கடவுள் கொள்கை
மனிதனை விட மிக பலவீனமனாகவும் மோசமாகவும் கடவுளை சித்தரிப்பது
கல்லையும் மண்ணையும் மரத்தையும் மட்டையையும் என கண்டதையும் கடவுளாக்குவது
சாதியப் பாகுபாடு, வழிபாட்டுத் தலத்திலும் கடைபிடிக்கப்படும் தீண்டாமை, கடவுளே தான் மனிதர்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் படைத்தார் எனும் அபத்தமான நம்பிக்கை, இவை எதுவுமே பிடிக்கவில்லை என்று தானே முந்தைய வழிபாட்டு முறையிலிருந்து விடுபட்டு இஸ்லாத்தை ஏற்றோம்.
இப்போது தாய் மதம் திரும்புங்கள் என்று பொத்தாம் பொதுவாக அழைப்பு விடுத்தால் இந்தக் குறைகளின் நிலை என்ன? என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
சாதியக் கொடுமைகளை அனுபவித்து இந்து மதத்திலிருந்து மாறிய ஒருவர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்புவதாக இருந்தால் உயர்சாதி இந்துவாக அவர் சேர்த்துக் கொள்ளப்படுவாரா?
கர்வாப்ஸி எனும் பெயரால் இந்து மதத்திற்கு அழைக்கும் அனைவருக்கும் இக் கேள்விகள் பொருந்தும்.
இதற்கு எல்லாம் பதிலளிக்காமல் தாய் மதம் திரும்புங்கள் என்று மட்டுமே கூப்பாடு போடுவது மிகவும் மலிவான செயலாகும்.