மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தல் மிக முக்கியமானது. இதில் வென்றால் மட்டுமே மேற்கு வங்க முதல்வராக மம்தா அவர்களால் தொடர முடியும் என்ற நிலையில் தான் இத்தேர்தலை மம்தா சந்தித்தார்.
ஏற்கனவே இருமுறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இம்முறை ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.
அவர் சொன்னதை விடவும் அதிகமாக மொத்தமாக ஐம்பத்தி எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெற்றி பெற்றுள்ளார்.
பாஜகவின் பிரியங்கா டிப்ரேவால் மக்களால் தோற்கடிக்கப்பட்டு மண்ணைக் கவ்வியுள்ளார்.
மம்தாவின் இந்த வெற்றியில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஏனெனில் கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளை மம்தாவின் கட்சி கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளில் வென்றது.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜகவின் குறி மேற்கு வங்கமாகத்தான் இருந்தது. எனவே மோடி மேற்கு வங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கினார்.
மேற்குவங்கத்தில் பாஜகவிற்கு என்று தனித்த எந்த செல்வாக்கும் இல்லை. என்ற போதும் கொள்ளைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க மம்தாவின் கட்சியை சார்ந்த முகமறிந்த தலைவர்களை விலைக்கு வாங்கி தங்கள் பக்கம் இழுத்தனர்.
மம்தா கட்சியின் எம்.எல்.ஏக்கள் குறிப்பிட்ட நபர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடியே குறிப்பிட்டார்.
ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களை கூட பாஜக விட்டுவைக்கவில்லை. அவர்களையும் தங்கள் கட்சிக்குள் ஐக்கியமாக்கினர்.
தேர்தல் மூலம் என்றைக்கும் இல்லாத வகையில் வன்முறையை திட்டமிட்டு உருவாக்கினர். அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முற்பட்டனர்.
பல்வேறு கட்டங்களாக தேர்லை நடத்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் பாஜகவிற்கு சார்பாக இருந்ததாகவே மேற்குவங்க மக்கள் கருதினர்.
மேற்குவங்கத்தில் பாஜகவிற்கு என்று எந்த அடித்தளமும் இல்லாத போது இப்படி கொள்ளைப்புற வழியாகவேனும் ஆட்சியை நிலைநாட்டிட வேண்டும் என்று பாஜக பல்வேறு சதிகளை செய்தது.
அந்த சதிகளினூடாகவே 77 தொகுதிகளை கைப்பற்றியது. மக்கள் செல்வாக்கில் வென்றவை அல்ல இது.
பாஜகவின் எல்லா சதிகளையும் தாண்டியே 213 தொகுதிகளை வென்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் மம்தா.
எனினும் நந்திகிராம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய மம்தா 1622 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
அங்குள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வன்முறையை உண்டாக்கித்தான் பாஜக வென்றது என்று அப்போதே விமர்சிக்கப்பட்டது.
மம்தாவின் தோல்வியில் சதி உள்ளதாக அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. மம்தாவும் அதை வெளிப்படுத்தினார்.
எனவே இந்த இடைத்தேர்தலில் மம்தாவின் வெற்றி என்பது மேற்குவங்கத்தில் ஏற்கனவே அவருக்குள்ளான செல்வாக்கை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
குறிப்பாக பாஜகவின் கொள்ளைப்புற அநாகரீக அரசியலுக்கு விழுந்த சம்மட்டி அடி.