கோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
பிஎப்ஐ அமைப்பினரின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு, நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இவை நடைபெற்றுள்ளதால் பிஎப்ஐ அமைப்பை பாஜக குற்றம் சாட்டுகிறது.
கடந்தகால வரலாற்றைப் பார்க்கும் போது இது போன்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைப் பாஜக நிகழ்த்தியிருக்கவே அதிகம் வாய்ப்பு உள்ளது.
இந்து – முஸ்லிம்களிடையே பகைமையை உண்டாக்கி வெறுப்பரசியல் செய்வதையே பாஜக தனது கொள்கையாக வகுத்துக் கொண்டுள்ளது.
கொள்கையைச் சொல்லி தங்களது கட்சியை வளர்க்க முடியாது என்பதால் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து மக்களிடயே கலவரத்தை உண்டாக்கி கட்சியை வளர்க்க முற்படுகிறார்கள். அப்படித்தான் வடமாநிலங்களில் வளர்த்துள்ளார்கள்.
நீண்ட நெடுங்காலங்களாக பாஜகவின் கொள்கை முழக்கங்களாக இருந்தவை எவை? என்பதைப் பார்த்தாலே அவர்களின் சுயரூபம் தெரிந்து விடும்.
பாபர் மஸ்ஜித், காஷ்மீர், முத்தலாக், மாட்டிறைச்சித் தடை. இப்போது சிஏஏ.
இவை தவிர்த்து நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினார்களா? இல்லையே.
இதிலிருந்தே பாஜகவின் நோக்கம் என்ன? அவர்கள் எதன் மூலம் தங்களை வலுப்படுத்திக் கொண்டார்கள் என்பதை அறியலாம்.
வடமாநிலங்களில் ஆழமாக காலூன்றியுள்ள பாஜக தென்மாநிலங்களில் எழுந்து நிற்கவே தள்ளாடுகிறது.
பாஜகவின் இலக்காக தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் தான் இருக்கின்றன என்பதை அக்கட்சியின் தேசிய தலைவர்கள் பலமுறை கூறியுள்ளார்கள்.
பிற மாநிலங்களில் அடுத்த கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி கொள்ளைப்புற வழியாக கட்சியை வளர்த்துக் கொண்டார்கள்.
சித்தாந்த ரீதியாக ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் சிவசேனாவை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. அக்கட்சியின் எம்எல்ஏக்களையும் வளைத்துப் போட்டார்கள்.
சிவசேனாவை சக்கையாக பிழிந்து ஆட்சியதிகாரத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டார்கள். அவ்வளவு அதிகாரவெறி பிடித்தவர்கள் பாஜகவினர்.
அந்த வழிமுறையும் இதுவரை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அவர்களுக்கு கைகூடவில்லை. (இனி செய்ய வாய்ப்பு இருக்கிறது)
ஜெயலலிதா இருந்தவரை வலிமையான ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவை ஜெயலலிதாவுக்கு பிறகு அப்படியே தனக்குரியதாக சுவீகரித்துக் கொண்டது பாஜக.
நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து போடுமளவு தனது கைப்பாவையாக, கள்ளக்குழந்தையாக அதிமுகவை ஆக்கிய போதும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை பாஜகவால் ஏற்படுத்த இயலவில்லை.
அதிமுகவின் துணையுடன் வெறும் நான்கு இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தமிழகத்தில் வலுவாக காலூன்றலாம் என எண்ணிய பாஜக தலைமைக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
அவ்வப்போது தமிழகத்தில் நடைபெற்ற சம்பவங்களில் எல்லாம் உள்ளே புகுந்து தங்களது கெட்ட ஆட்டத்தை ஆடிப்பார்த்தார்கள்.
அரியலூர் மாணவி லாவண்யா மரணமடைந்த போது அதை மதக்கலவரமாக மாற்ற பாஜக செய்த முயற்சிகளை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக கூறி பரப்புரை மேற்கொண்டனர்.
பாஜக தேசிய தலைமை சார்பில் லாவண்யா மரணத்திற்கு விசாரணை குழுவை எல்லாம் அமைத்தது.
லாவண்யா வீடியோவை எடிட் செய்து வெளியிட்டு என்னன்னவோ செய்து பார்த்தும் பாஜகவின் கணக்கு சரியாக வேலை செய்யவில்லை.
அண்மையில் காஷ்மீருக்கு எதிரான தாக்குதலில் பலியான மதுரையை சார்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது.
அந்த நேரத்தில் இறந்த பிரேதத்தை வைத்துக் கொண்டு எப்படி அரசியல் செய்ய வேண்டும் என அண்ணாமலை பேசிய ஆடியோவும் லீக்கானது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமான நிலையம் சென்று திரும்பி வரும் போது அவரது வாகனம் மீது செருப்பை வீசி பரபரப்பை உண்டாக்கினார்கள்.
இது தான் பாஜகவின் உண்மை முகம்.
இப்படி ஏதாவதொரு வழியில் தமிழகத்தில் காலூன்ற துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட பாஜகவின் விஐபிக்கள் தமிழகம் படையெடுப்பது அதன் வெளிப்பாடுதான்.
ஜே.பி நட்டா தமிழகம் வந்த அதே நேரத்தில் இந்தியா முழுக்க பிஎப்ஐ அமைப்பு விசாரணை எனும் பெயரில் சுற்றி வளைக்கப்படுகிறது.
அதன் பிறகு ஆங்காங்கே குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றால் இதிலும் பாஜகவின் பங்கு இருப்பதாகவே சந்தேகப்பட வேண்டியுள்ளது.
பிஎப்ஐ ரெய்டு, கைது நடவடிக்கைகளை ஒட்டி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றால் கண்டிப்பாக அது பிஎப்ஐ அமைப்பினரோ அல்லது முஸ்லிம்களோ செய்ததாக தான் சந்தேகம் வரும்.
ஏற்கனவே கலவரத்தை உண்டாக்கி அதில் குளிர்காய வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கின்ற பாஜக அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
பாவத்தை தாம் செய்து கொண்டு பழியை இஸ்லாமியர்கள் மீது போடுவது ஆர்எஸ்எஸ் க்கோ பாஜகவினருக்கோ புதிதல்ல.
காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே தானொரு இஸ்லாமியன் எனும் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக இஸ்மாயில் என்று பச்சைக் குத்திச் சென்றான் என்பது தான் வரலாறு.
மஹாராஷ்ட்ராவில் (2006) சங்பரிவார அமைப்பை சார்ந்த ஒருவன் வீட்டில் குண்டு தயாரித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வெடித்து விட்டது. அப்போது மாநில காவல்துறை அந்த வீட்டை ஆய்வு செய்த போது சக்தி வாய்ந்த குண்டுகளுடன் தொப்பியும் ஒட்டு தாடிகளும் கைப்பற்றப்பட்டன.
முஸ்லிம்களின் மீது பழிபோடு வதற்காகவே இந்த அடையாளங்களை வைத்துள்ளனர் என்பது அம்பலமானது.
கடந்த 2007ம் ஆண்டு தென்காசியில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தது. அப்போது ராமகோபாலன், இல.கணேசன் போன்றோர் இது முஸ்லிம் ஜிஹாதிகளின் செயல் என்று முஸ்லிம்கள் மீது பழிபோட்டுத்தான் விமர்சனம் செய்தனர். ஆனால் காவல்துறையின் விசாரணையில் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்று அம்பலமானது.
திருப்பூரில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் ஒருவர் சுய விளம்பரத்திற்காக தனது கார் டிரைவர் மூலம் தனது கைகளைத் தானே வெட்டிக் கொண்ட சம்பவம் நடைபெற்றது.
சுய விளம்பரத்திற்காகவும் அதன் மூலம் கட்சியில் பதவி கிடைக்கும் என்ற வெறியிலும் இந்த நாடகத்தை அரங்கேற்றினார்.
போலீஸ் பாதுகாப்பு கிடைக்க தனது காரில் தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய, அனுமன் சேனா, இந்து மக்கள் கட்சியை சார்ந்த சங்பரிவார் நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிகழ்வு திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
இப்படி தமிழகம் முழுக்க பயங்கரவாதத்தின் கோரமுகத்தை பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்திய அளவிலும் பல்வேறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளதாக 1990 முதல் ஆர்எஸ்எஸில் அங்கம் வகித்த யஷ்வந்த் ஷிண்டே மஹாராஷ்ட்ரா நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் அளித்துள்ளார்.
வெடிகுண்டுகளை தயார் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் தங்களுக்கு வழங்கப்படுவதாகவும் 2000ம் ஆண்டு சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, 2008ம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களை ஆர்எஸ்எஸ் பின்னின்று நடத்தியது என்றும் அவரது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படி பயங்கரவாத முகத்தை கொண்டுள்ள பாஜக மற்றும் சங்பரிவார அமைப்புகள் அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தையும் சூறையாட தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.
எப்படியேனும் இந்து – முஸ்லிம் களிடையே கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் தங்களைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டுமென அகோரப்பசியுடன் காத்திருக்கின்றனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தாயிற்று. ஆங்காங்கே புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை ஊதிப் பெருதாக்க இதுநாள் வரை இல்லாத வகையில் அக்டோபர் 2 ல் ஊர்வலம் என்று கிளம்ப ஆர்எஸ்எஸ் தயாராகி கொண்டுள்ளனர்.
தமிழகத்தை கலவரக் காடாக மாற்றுவதற்கான அத்தனை அறிகுறிகளும் தெளிவாக தெரிகின்றன.
எனவே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதும் கலவரத்திற்கான தீப்பந்தத்தை தானே கையில் எடுத்து கொடுப்பதும் ஒன்றே என்பதைப் புரிந்து தமிழக அரசு செயல்படுவதே தமிழக மக்களின் நல்லிணக்கத்திற்கு உகந்தது.
தனக்கு தானே குண்டு வைத்து விட்டு முஸ்லிம்கள் மீது பழிபோடும் ஆர்எஸ்எஸ் பாஜக வகையறாக்களின் செயல்பாடுகளை தமிழக காவல்துறையும் உளவுத்துறையும் கூர்ந்து கவனிப்பதுடன் பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும் முறையாக விசாரணை செய்து பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதை அரசும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். இதுவே இப்போதைக்கு தமிழக மக்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பு.