உத்தரப் பிரதேச மாநிலம் காசியில், காசி தமிழ் சங்கமம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மத்திய அரசு சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சி நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு துவங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் பண்பாட்டு கலாச்சாரத் தொடர்பை மேம்படுத்த இந்நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல. தமிழ்ச் சங்கமம் எனும் பெயரில் இந்துத்துவ கொள்கையை பரப்புவது தான் இதன் மைய நோக்கமாக உள்ளது என்பதை யாரும் எளிதில் கணித்து விட முடியும்.
இந்தியக் கல்வி அமைச்சகம் நடத்தும் இந்நிகழ்வில் தமிழக அரசுக்கு முறைப்படி அழைப்பு கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தமிழக அரசு சார்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
தமிழ்ச் சங்கமம் என்று பெயர் வைத்துக் கொண்டு அதைத் தமிழ்நாட்டில் வைக்காமல் காசியில் வைக்க காரணமே உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோவில்களை முன்னிறுத்தவும் இந்துத்துவ சிந்தனை கொண்டோர் அரசுச் செலவில் கோவில்களைச் சுற்றிப்பார்ப்பதும் தான். இதைத் தவிர வேறு நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.
தமிழைப் போற்றுவதாக கூறிக் கொண்டு தமிழ்ச் சங்கமம் எனும் பெயரில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை சார்ந்த பிரபல்யமான தமிழ் அறிஞர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. அதிலும் இந்துத்துவ சிந்தனை கொண்ட நபர்களே அதிகம் அழைக்கட்டிருக்கிறார்கள்.
இளைய ராஜா அழைக்கப் பட்டிருக்கிறார். அவர் பாஜகவைச் சார்ந்தவர். இவர் மோடியின் துதிபாடி என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். இவர் போன்ற நபர்கள் அதில் பங்கேற்கிறார்கள்.
மோடி அவர்கள் பங்கேற்றுப் பேசிய உரையில் தமிழ்நாட்டிலும் கோவில்கள் அதிகமாக உள்ளன. காசியிலும் அதிகமான கோவில்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.
இதிலிருந்தே காசியையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் புள்ளியாக இவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைப் புரியலாம்.
சமீபகாலமாக தமிழை மிகவும் தூக்கிப் பிடிக்கும் போக்கை மோடி, யோகி ஆகியோர் குறிப்பிடுவது எல்லாமே அரசியலுக்காகத்தான். காசியில் நடந்த நிகழ்ச்சியின் போதுக் கூட தமிழை உயர்த்திப் பேச பிரதமர் மோடி தவறவில்லை. அவர் பேசிய வார்த்தைகளை பாருங்கள்…
“தமிழின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு. நாம் தமிழைப் புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும் கேடு விளைவித்தவர்கள் ஆவோம். தமிழைக் கட்டுப்பாடுகளுக்குள் அடைத்து வைப்பது, அதற்குப் பெரும் தீமை விளைவிப்பதாகும். மொழி வேறுபாடுகளை நீக்கி, உணர்வுபூர்வமான ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்”.
ஒருபுறம் தமிழ் மொழியை இவ்வாறு புகழ்வார்கள். மறுபுறம் மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் தமிழில் எழுத இவர்கள் அனுமதிப்பதில்லை.
2019 ல் அஞ்சல் துறையில் ஆள் எடுப்பதற்கு தேர்வு நடத்தும் போது அத்தேர்வு ஆங்கிலம் – இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே இருந்தன.
அப்போது அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் தேர்வில் மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அப்போது அடுத்த ஆண்டு தமிழ் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற அஞ்சலக தேர்வின் போது தமிழில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் வங்கிப் பணி தேர்வுகளில் கூட தமிழில் எழுத அனுமதி இல்லை. ரயில்வே துறையில் தமிழக மக்கள் பறக்கணிக்கப்படுகிறார்கள். திட்டமிட்டு வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள் உள்ளே நுழைக்கப்படுகிறார்கள்.
மாணவர்களுக்கு உதவி வழங்கும் வகையிலான ஆன்லைன் திறனறிவு போட்டியைக் கூட தமிழக மாணவர்களுக்கு தமிழில் நடத்துவதில்லை.
உயர்க் கல்வி தேர்வுகளில் கூட இந்தியை கட்டாயமாக்கி பிராந்திய மொழி பேசுவோரை உயர்க்கல்வி கற்க விடாமல் தடுக்கும் சதி முயற்சி நடைபெறுகிறது.
இப்படி தமிழக மக்கள் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழ் மொழியில் தான் தேர்வு எழுத இயலும் என்ற நிலையில் கூட அவ்விடங்களில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்காமல் காசியில் தமிழ் சங்கம் நடத்தி என்ன பயன்?
தமிழகத்தில் காலூன்றுவதற்கும் வேரூன்றுவதற்கும் அரசியல் ரீதியான உத்தியாக பாஜக தமிழ் மொழியை தூக்கிப் பிடிக்கின்றது. பாஜகவும் மோடியும் எப்போதெல்லாம் தமிழை ஆஹா.. ஓஹோ.. என்று புகழ்கிறார்களோ அப்போதெல்லாம் தமிழக மக்களுக்கு பெரும் ஆபத்து இருப்பதற்கான சமிக்ஞையாக அது இருந்துள்ளது.
காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் எனும் நிகழ்ச்சியும் அதில் ஒன்றுதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.