வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கிராமத்தில் 16 வயது விஷ்ணுபிரியா தற்கொலை செய்துள்ளார்.
அவர் தற்கொலைக்கு முன் கடிதம் எழுதியுள்ளார். அதில் எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. என் ஆசை எனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்திட வேண்டும். எனது குடும்பம் எப்போது மகிழ்ச்சியாக உள்ளதோ அப்போது தான் எனது ஆத்மா சாந்தியடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தந்தையின் மதுப்பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தமிழகத்தில் அவ்வப்போது ஏற்படுகிறது.
இதே போன்ற சம்பவம் கடந்த 2018 லும் நடந்தது.
நெல்லையைச் சேர்ந்த மாணவர் தினேஷ், அப்பா நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. இதன் பிறகாவது குடிக்காமலிருந்தால் எனது ஆத்மா சாந்தியடையும். இனியாவது பிரதமர், முதல்வர் மதுபானக்கடைகளை அடைப்பார்களா? என்று கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்டார்.
எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல. ஏதோ ஒரு காரணத்தைக் கூறி தற்கொலை எனும் முடிவெடுப்பது முற்றிலும் தவறான, மனச்சிதைவை வெளிப்படுத்தும் செயலாகும்.
எனினும் பெரியோர் சிறியோர் எனப் பாரபட்சமின்றித் தற்கொலை செய்யும் நிகழ்வு நடக்கவே செய்கிறது. அதுவும் மதுவைக் காரணம் கூறி தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கின்றது.
மதுவால் சீரழியும் குடும்பம், விஷச்சாராயம் அருந்திப் பலி போன்ற சம்பவங்கள் ஒருபுறம் என்றால் விஷ்ணுபிரியா போன்ற வளரும் பிள்ளைகளின் மரணம் வேறு நம்மை உலுக்குகின்றது. இந்தச் சமூகத்திடம் பல்வேறு வினாக்களைச் சமரசமின்றி தொடுக்கின்றது.
நீட் தேர்வு அவலத்தால் மாணவ – மாணவியர்கள் தற்கொலை செய்யும் நிகழ்வு அதிகரித்த போது தமிழகத்தைச் சார்ந்த அனைவரும் ஒருமித்த குரலில் மாணவர்களைச் சிதைக்கும் நீட் தேர்வு வேண்டாம் என்று குரல் எழுப்பினார்கள். அரசியல்வாதிகளும் இதைச் சொன்னார்கள்.
இப்போது அதே போலத் தந்தையின் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தற்கொலை வரை செல்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று எளிதில் கூறியதை போல மாணவர்களின் உயிரைப் பறிக்கும் மது இனி வேண்டாம் என்று ஏன் கூறுவதில்லை.
இளம் பிள்ளைகளின் மரணத்தை மட்டுமல்ல மதுவினால் உண்டாகும் எண்ணற்ற மரணங்களையும் குடும்பங்களின் சீரழிவையும் ஒரு சேர தடுக்கப் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும்.
ஓரிரு அரசியல் கட்சிகளைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும் பூரண மதுவிலக்கைக் கோருவதில்லை. மதுபானக்கடைகளை படிப்படியாகக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். கல்வி பயிலும் பள்ளிகளையும் விட்டு வைப்பதில்லை. சந்து பொந்துகளையும் விட்டு வைப்பதில்லை. எல்லாம் குடிமயம் தான்.
நாட்டு மக்களைச் சதா குடிமயக்கத்திலே வைத்திருந்தால் அவனிடம் எப்படிச் சிந்தனை தெளிவு இருக்கும்? ஏமாற்றத்திற்கும் சுரண்டலுக்கும் எதிராக எவ்வாறு குரல் கொடுப்பான்?
அதையெல்லாம் விட அவன் மற்றும் அவனது குடும்ப மகிழ்ச்சி முக்கியமல்லவா?
மது அதற்கே வேட்டு வைக்கின்றதே? அதன் விளைவாகத்தானே இது போன்ற மரணங்கள்.
பொதுவாகத் தாம் பெற்ற பிள்ளைகளுக்காகப் பெற்றோர் எதையும் செய்வார்கள். தான் உழைத்து ஓடாய்த் தேய்ந்தேனும் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று தான் பல பெற்றோரும் சிரமம் கொள்கிறார்கள்.
ஆனால் மதுப்பழக்கம் குடும்ப நலன், பிள்ளைகளின் நலன், சொந்த நலன் என அனைத்தையும் துவம்சம் செய்கிறது. எதைப்பற்றியும் சிந்திக்க விடாது அவனைக் கொடூரனாக மாற்றுகிறது.
இத்தனை அவலங்களையும் மக்களின் சீரழிவுகளையும் மதுவினால் ஏற்படும் மரணங்களையும் பார்த்த பிறகும் பூரண மதுவிலக்கிற்காகக் கொஞ்சமும் மனம் இரங்காத அரசை என்னவென்பது?
பான்பராக், குட்கா, லாட்டரீ, ஆன்லைன் ரம்மி போன்றவற்றுக்குத் தடை கொண்டு வந்ததிற்கு எவ்வளவு நியாயங்கள் உள்ளதோ அதே அளவு அல்லது அதை விட அதிகளவு நியாயம் மதுவைத் தடை செய்வதற்கு உள்ளது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பது போல எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பூரண மதுவிலக்கிற்கான அடிப்படைச்சுவடுகள் கூடத் தெரிவதில்லை.
இது போன்ற சம்பவங்கள் ஏற்படும் போது கண்கள் குளமாகின, உள்ளம் ரணமாகின என்று அறிக்கை கொடுப்பதையும் நஷ்டஈடு தொகை அறிவிப்பு செய்வதையும் விட்டு விட்டு பூரண மதுவிலக்கைக் கொண்டு வர அரசு முன்வர வேண்டும்.
தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவரும் கேட்பது அது தான் என்பதை அரசு என்று சிந்திக்குமோ?