2017 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இதுவரை எதையும் செய்யவில்லை என்று பாஜகவை சார்ந்த சுப்ரமணிய சுவாமியே விமர்ச்சனம் செய்துள்ளார். 2 கோடி வேலைவாய்ப்புகள், அனைவருக்கும் வீடு, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவது, புல்லட் ரயில் உள்ளிட்ட திட்டங்கள் 2022 வரை கிடப்பில் உள்ளன. அடுத்து என்ன பொய் வாக்குறுதிகளை தரப் போகிறார் என்று கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு உரையிலும் பிரதமர் மோடி பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். எல்லாம் பேச்சளவில் உள்ளதாக தான் உள்ளது. அவருடைய பேச்சுகள் நடைமுறைக்கு வராது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.
ஊழல் பற்றி பேசும் போது, நாட்டை ஊழல் கரையான் போன்று அரித்து கொண்டிருக்கிறது. அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும். தகுதியின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நமது அமைப்புகளின் வலிமையை உணர்வதற்காக, சொந்தக் குடும்பத்தினருக்கு நேர்மையற்ற முறையில் சலுகை அளிப்பதற்கு எதிராக விழிப்புணர்வை நாம் அதிகரிக்க வேண்டும் என மோடி கூறியுள்ளார்.
ரபேல் ஊழல் வழக்குகளின் கோப்புகள் கூட காணாமல் போய் விட்ட நிலையில் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்று பேசுகிறார். 2020 ல் பொது மக்களிடம் வசூல் செய்த பி.எம் கேர் நிதி பற்றி முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
சொந்த குடும்பத்திற்கே சலுகைகள் செய்யக்கூடாது என்று பேசிக் கொண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அதிக நன்கொடைகள் வாங்கிய கட்சிகளின் பட்டியலில் முதலிடத்தில் பாஜக தான் உள்ளது. நன்கொடை அளிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு ஊழலை ஒழிப்போம் என்று பேசுகிறார்.
இந்தக் கூட்டத்தின் போது ஐந்து உறுதி மொழிகளை எடுத்துள்ளார். 2017 ல் சொன்னதை 2022 ல் நாம் தேடுவது போல இந்த உறுதி மொழிகளை வரும் காலங்களில் தேடினாலும் இது போன்று நடக்கும் சூழல் பாஜகவில் இருக்காது.
ஐந்து உறுதிமொழிகள்:
•நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அந்த இலக்கு இந்தியாவை வளர்ந்த தேசமாக்குவது.
•எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும்.
•நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும்.
•ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றிக் கொள்வோம்.
•குடிமகனின் கடமைகளை ஆற்றுவது.
இதில் உள்ளவற்றை கடைபிடித்து நடப்பது பாஜக வை சார்ந்தவர்களுக்கு சாத்தியமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியை போன்றது.
ஏற்றதாழ்வுகளை கொண்ட சனாதன சட்டங்களை வைத்துக் கொண்டு அடிமைத்தனத்தை எப்படி ஒழிக்க முடியும்? வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சியை மையமாக வைத்து மத வெறுப்பு அரசியல் செய்து கொண்டு எப்படி ஒற்றுமையை உருவாக்க முடியும்? குடிமகனின் உரிமைகளைப் பறித்து வழக்குகள் போடுவது, பேச்சுரிமையைப் பறிப்பது என்ற சர்வாதிகார ஆட்சியில் குடிமகன்கள் கடமையை ஆற்ற முடியுமா?
குடிமகனின் கடமைகளை ஆற்றுவதில் முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் கடமை இருக்கிறது என சொல்லும் போது முதல்வர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இவருடைய செயல்பாடு இருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இவருக்கு எதிராக பல மாநில முதல்வர்கள் போர்கொடி தூக்கி வருகின்றனர்.
நாட்டின் வளர்ச்சி குறித்து முறையான எந்தத் திட்டமிடலும் பிரதமருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் இல்லை. கூட்டாட்சியின் உணர்வும் இல்லை. மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு தடை விதிக்காதீர்கள். மாநிலங்களின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியும் தேச நலனுக்கானது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலின், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் என பலர் பிரதமர் மோடியின் பொருளாதார திட்டங்களை எதிர்த்து வருகின்றனர்.
சுதந்திர தின விழாவில் இந்த வருடம் சிறப்பு அழைப்பாளர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள், பிணவறையில் பணி செய்யக்கூடிய பணியாளர்கள் உள்ளிட்ட சமுதாயத்தில் அதிகம் கவனிக்கப்படாதவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.
எழைகளின் பகுதியை மறைக்க தடுப்பு சுவர் கட்டுவது. குடிசைகளை மறைக்க துணி கட்டுவது என்று அவர்களுக்கு செய்ய வேண்டிய அடிபடை வசதிகள் கூட எதையும் செய்யாமல் இப்படி அழைத்து மனம் குளிர்விக்க முயற்சி செய்துள்ளார், பிரதமர் மோடி.
வேகமாக வளர்ச்சி அடைய ஒவ்வொரு இந்தியனும் அடியெடுத்து வைக்கும் காலம் இது என்றும் பேசி உள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக மக்கள் பாதிக்கட்டுள்ளனர். சிலிண்டர் விலை விண்ணை முட்டுகிறது. ஒவ்வொரு வியாபாரியும் ஜிஎஸ்டி யில் மூழ்கி அழிந்து வரும் நிலையில் இப்படி பேசுவதற்காக அடித்தட்டு மக்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற செய்துள்ளனர்.
இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் வரை ஓயப்போவது இல்லை என்று மோடி பேசியுள்ளார். நீங்கள் ஓய்வு பெற்றாலே இந்திய நாடு வல்லரசாகும் என்று நெட்டிசன்கள் எழுத ஆரம்பித்து விட்டனர்.