தென்காசி பள்ளிவாசல் அருகில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் மோடி பேனர் வைக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழகத்தில் மத வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் பணியைப் பாஜக செவ்வனே செய்து வருவதை அண்மையில் நடைபெற்ற நிகழ்வு உறுதிப்படுத்துகின்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் மசூதி முன்பு மோடியின் புகைப்படம் தாங்கிய பேனரை பாஜகவினர் வைத்துள்ளனர். மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பேனரை வைத்துள்ளார்கள்.
தங்கள் கட்சித்தலைவர் பிறந்த நாளைக் கொண்டாட அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆங்காங்கே வாழ்த்து பேனர்கள் வைத்துப் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள் என்றால் அது அவர்களது விருப்பம்.
ஆனால் மோடிக்கு வாழ்த்து கூறும் பேனரை முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்திற்கு முன்பாக வைக்க வேண்டிய அவசியம் என்ன?
முத்தலாக் தடை சட்டம்
காஷ்மீர் பிரிவு ரத்து
குடியுரிமை திருத்தச் சட்டம்
பாபர் மசூதி நிலம் பறிப்பு
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாபிற்குத் தடை
பல்வேறு மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை
என இந்தியாவில் தொடர்ச்சியாக முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் விதமாக ஆட்சி நடத்தும் மோடியின் புகைப்படத்தைப் பள்ளிவாசல் முன்பு வைத்தால் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே செய்வார்கள்.
நிச்சயம் இது முஸ்லிம்களை வம்புக்கிழுக்கும் செயலாகும்.
சிலைகள் தொடர்பாக நபிகள் நாயகம் கூறிய அறிவுரைகளைத் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு முன்பாக பேனர்களாக வைத்தால் ஏற்றுக் கொள்வார்களா?
இது போன்ற செயல்கள் தேவையின்றி இரு சாராருக்கும் மத்தியில் பரபரப்பையும் வெறுப்பையும் தோற்றுவிக்கும்.
சங்கரன் கோவில் அருகே ஒரு கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சிறுமிகளுக்கு மிட்டாய் தர மாட்டேன் என்று கடை வியாபாரி கூறியுள்ளார். இந்தத் தீண்டாமைக் கொடுமையின் பின்னணியில் பாஜவின் பெயர் அடிபடுவதால் சங்கரன் கோவிலில் அனைத்து சமூக மக்களிடையேயும் பாஜகவின் பெயர் நாறிப் போயுள்ளது.
அதற்குப் பிறகு தான் இந்தப் பேனர் விவகாரம் நடைபெற்றுள்ளது.
எனவே தீண்டாமைக் கொடுமையில் தங்கள் பெயர் அடிபடுவதை மடை மாற்றவே பள்ளிவாசல் முன்பு மோடியின் பேனர் வைத்து பிரச்சனையை உண்டு பண்ணியுள்ளனர்.
எனவே வேண்டுமென்றே மோதல்களை உருவாக்கும் தீய நோக்கத்தில் தான் பாஜகவின் பரிவாரங்கள் செயல்பட்டுள்ளனர்.
முஸ்லிம் இளைஞர்கள் கொதித்துப் போய் பள்ளிவாசல் முன்புள்ள அந்தப் பேனரை அகற்றவும், முன்பே திட்டமிட்டது போல பாஜகவினர் ரகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பேனரை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பத்தாயிரம் பேரைத் திரட்டிப் போராடுவோம் என்று காவல்துறையை மிரட்டியுள்ளனர்.
அப்பகுதி காவல்துறையும் பாஜகவின் உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிந்து விட்டதாகவே தெரிகிறது.
ஏற்கனவே சேலத்தில் கோவில் அருகே சில்லிக்கடை வைத்துள்ளார் என்று கூறி ஏராளமான கடைகள் இருந்தும் முஸ்லிம் வியாபாரியின் கடை மட்டுமே சங்பரிவார கும்பல்களின் எதிர்ப்பின் காரணத்தினால் நகராட்சி அதிகாரிகள் அக்கடைக்கு சீல் வைத்தார்கள்.
ஆம்பூர் என்றாலே பீப் பிரியாணி எனும் போது அங்கு அரசு நடத்தும் பிரியாணித் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுப்பு என்று செய்தி வெளியானது.
பீப் பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டால் நிகழ்ச்சி நடைபெறும் வளாக முன்பு பீப் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அதிரடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் போது ஒட்டுமொத்தமாக பிரியாணித் திருவிழாவை வேறு காரணம் கூறி நிறுத்தினார்கள்.
சென்னையில் உணவுத் திருவிழா நடைபெறும் போதும் முதலில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு பிறகு இறுதியில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் அனுமதி வழங்கப்பட்டது.
இப்படியான மொத்த நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது சங்பரிவார கும்பல்கள் தமிழகத்தில் தலைதூக்க முற்படுகின்றனர் என்பதையும் அதற்காக சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நாசகார வேலையில் திட்டமிட்டு ஈடுபடுகின்றனர் என்பதையும் புரியலாம்.
இவர்கள் பரப்பும் விஷ விதைகள் விஷச் செடிகளாக மாறும் முன் காவல்துறையினரும் அதிகாரிகளும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்பரிவார கும்பல்களின் வால்களை ஒட்ட நறுக்கி தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் காவல்துறையும் அதிகாரிகளும் செயல்பட வேண்டும்.
அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.