மதன் ரவிச்சந்திரன் என்பவர் பிரபல யுடியூபர். பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் நெறியாளராகப் பணியாற்றியவர். கடந்த 2021 அன்றைய தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலளார் கே.டி ராகவனின் அந்தரங்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது தமிழக பாஜகவில் பெரும் புயலை கிளப்பியது. கே.டி ராகவன் தனது பொறுப்பை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு ஊடக வெளிச்சத்திலிருந்தே மறைந்து போனார்.
கே.டி ராகவன் தொடர்புடைய வீடியோவைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் வெளியிடச் சொன்னார் என்று கூறி அப்போதே அது தொடர்பாகச் சில ஆடியோக்களையும் வாட்ஸப் ஸ்கிரீன் ஷாட்களையும் வெளியிட்டுத் தமிழக அரசியலில் விவாதத்தைக் கிளப்பியவர் மதன்.
கேடி ராகவன் வீடியோவைப் போலவே பாஜகவின் முக்கிய ஆளுமைகள் குறித்த பலரின் வீடியோக்கள் உள்ளன என்று பகீர் கிளப்பினார். அதன் பிறகு மதன் என்னவானார் என்பதே தெரியாமல் இருந்தது.
அண்மையில் மீண்டும் சில வீடியோக்களுடன் யுடியூப் தளத்தில் வந்துள்ளார்.
இம்முறை நடுநிலை அரசியல் நெறியாளர்களாகத் தங்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
புலனாய்வு பாணியில் அந்த வீடியோக்களை அவர்களுக்கே தெரியாமல் எடுத்துள்ளார்.
மதன் வெளியிட்ட வீடியோக்கள் தெரிவிப்பது என்ன?
ஊடக அறத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் நடுநிலை முகமூடி அணிந்து கொண்டு காசுக்குக் கூவும் போலி அறிவுஜீவிகள் நிறையவே உள்ளனர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அந்த வீடியோக்கள் தெரிவிக்கின்றன.
யுடியூப் சேனல்களில் ஒளிபரப்பாகும் அரசியல் பேட்டிகள், விவாதங்கள் யாவும் இயல்பாக எடுக்கப்படுகின்றன என்ற சாமானியரின் எண்ணங்களை மதன் வெளியிட்ட வீடியோக்கள் அடியோடு தகர்த்து எறிந்துள்ளன.
ஊடகங்களில் பலத்த சப்தத்துடன் நடுநிலைவாதிகள் போலப் பலரையும் விளாசித்தள்ளும் எந்த ஊடகவியலாளர்களையும் அவ்வளவு எளிதில் நம்பி விடக் கூடாது எனும் பாடத்தைச் சாமானியர்களுக்கு கற்றுத்தந்துள்ளது.
கட்சிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பொய்யான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது, பிஜேபியின் கருத்துகளை எடுத்துச் சொல்வதற்காகவே செட்டப் விவாதங்களை நடத்துவது உள்ளிட்ட பல கேடுகெட்ட செயல்களை அரங்கேற்றுவதை அவர்களின் வாயினாலேயே ஒப்புக் கொள்வதாக அந்த வீடியோக்கள் அமைந்துள்ளன.
பிரபல தனியார் யுடியூப் சேனலில் பல்வேறு ஆகச்சிறந்த ஆளுமைகளை? அரசியல் நேர்காணல் செய்யும் மாதேஷ் என்பவர் அந்த வீடியோவில் சொல்கிறார்.
தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகக் கருத்துருவாக்கம் ஏற்படுத்த 6 லட்சம் தருவதாகக் கூறினார்கள், ஆனால் நான் 12 லட்சம் கேட்டேன். முடியாது என்றார்கள். ஏதாவது ஒரு வீடியோவில் சீமானை திட்டிவிட்டால் அவர்கள் நம்மைத் தேடி வருவார்கள் என்கிறார்.
குறிப்பிட்ட சேனலில் அரசியல் நேர்காணல்களைப் பார்க்கும் நேயர்களிடம் இந்த மாதேஷ் மிகப் பிரபலம்.
மதன் வெளியிட்ட இவரது வீடியோக்கள் மாதேஷின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது.
ஊடகத்தில் தனக்கு கொடுக்கும் வேலையைக் கனகச்சிதமாகச் செய்வதற்கு பதிலாகப் பணத்தை பெற்றுக் கொள்ளும் வீடியோவும் அதில் இடம்பெறுகிறது. வாங்கிய பணம் போதாதென்று டேப்லெட் ஒன்று தனக்கு வேண்டும் என்றும் அதில் கேட்கிறார். அவர் கேட்ட படியே டேப்லட்டும் அவருக்கு வழங்கப்படுகிறது.
இது தவிர பண்டல் பண்டலாகப் பீர் பாட்டில்களை வாங்கி கொண்டு செல்கிறார்.
சவுக்கு சங்கர் என்பவருடன் இவர் சேர்ந்து செய்யும் பல விவாதங்கள் போலியான கருத்துருவாக்கத்தை உண்டாக்குவதற்கே என்பது போல அந்த வீடியோவைப் பார்க்கும் போது தெரிகிறது.
மற்றொரு யுடியூப் சேனலின் நெறியாளரான அய்யப்பன் என்பவர் தொடர்புடைய வீடியோவும் அதில் இடம் பெற்றுள்ளது.
அவரும் பணம் பெறுகிறார். பீர் குடிக்கின்றார். மட்டுமின்றி இன்ஸ்டாக்ராமில் தன்னை பின்பற்றுவோர் அதிகம் எனவும் அதைத் தானே இயக்குவதாகவும் கூறுகிறார். நிறைய பெண்கள் மெசேஜ் செய்வார்கள் தன்னுடைய அட்மின்களிடம் கொடுத்தால் அத்தனையையும் சாப்பிட்டு விடுவார்கள் என்கிறார்.
திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா என்பவர் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டியின் பண மோசடிகளை அம்பலப்படுத்தும் காட்சியும் அதில் இடம்பெறுகிறது.
இது தவிர அதிமுக ஆதரவாளராகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ரவீந்தின் துரைசாமி, யுடியூபர் ராஜவேல் நாகராஜன் எனப் பலரின் வீடியோக்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
அந்த வீடியோவில் இடம் பெறும் அனைத்து அறிவுஜீவுகளும்? குடிப்பது போலவும் பணம் பெறுவது உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் அனைவரையும் ஒரு சந்திப்பு எனக்கூறி அழைக்கிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காக ஊடகத்தளத்தில் பணியாற்ற அமித்ஷா மகன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீங்கள் பிஜேபிக்காக வேலை செய்ய வேண்டும். 2024 மக்களைத் தேர்த்லை கவனத்தில் கொண்டு உங்கள் வேலை அமைய வேண்டும் என்பது தான் சந்திப்பின் நோக்கம்.
முதற்கட்டமாக ஒரு தொகையை வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆளாளுக்குப் பத்தாயிரம் பதினைந்தாயிரம் எனக் கொடுத்துள்ளனர். பைவ் ஸ்டார் ஹோட்டலில் சந்திப்பு என்பதால் மதுபானங்கள் வினியோகமும் உண்டு.
மதன் ரவிச்சந்திரன் தனது மனைவியின் நகையை விற்று இந்தப் புலனாய்வு செய்வதாகக் கூறுவது காதில் பூச்சுற்றும் வேலை என்பதை யாரும் எளிதாகக் கூறிவிடலாம். அவரைப் பின்னின்று யாரோ இயக்குகிறார்கள் என சந்தேகம் இருக்கிறது என்றாலும் அவர் வெளியிட்ட வீடியோக்களைப் புறந்தள்ள முடியாது.
இவையாவும் புலனாய்வு செய்வதற்காக உருவாக்கியது தான் என்றாலும் இவர்கள் நடுநிலையாளர்களாக, உள்ளதை உள்ளபடியே மக்களுக்கு எடுத்துச் சொல்வோராக இருந்தால் இந்தச் சந்திப்பில் அவர்கள் பங்கெடுக்க வேண்டிய அவசியமே இல்லையே.
யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை என்பார்கள். அது போல இவர்கள் புடமிட்ட சுத்த தங்கம் என்றால் இடத்தை உடனே காலி செய்திருக்கலாம். ஆனால் இவர்கள் இடத்தைக் காலி செய்யவில்லை.
அவர்கள் தரும் பத்தாயிரம் பதினைந்தாயிரம் பணத்தை பெற்றுள்ளனர். மதுபானத்தை அருந்தியுள்ளனர். அவர்கள் தரும் அசைமெண்டை ஓகே செய்துள்ளனர். அதாவது பிஜேபிக்காக ஊடகத்தில் மறைமுக வேலை செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர்.
இது அவர்களின் சேனல்களையும் விவாதங்களையும் காணும் மக்களை மடையர்களாக்கும் செயலன்றி வேறில்லை.
பிஜேபியின் கருத்து சித்தாந்தம் பிடித்திருந்தால் அதை அந்தக் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்து கொண்டு செய்யலாம். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் நடுநிலை ஊடகவியலாளர் என்றும் உண்மையை உரக்கப் பேசுவோர் என்றும் கூறிக் கொண்டு மறைமுக வேலை செய்யப் பணம் பெறுவது நேர்மையான செயலாகுமா?
இவர்கள் அறத்திற்காக ஊடகம் நடத்தவில்லை. பொய்யான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தவே யுடியூப் சேனல் நடத்துகிறார்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இந்த வீடியோக்கள் உறுதி செய்துள்ளன.
இவர்கள் நினைத்தால் பணத்தை பெற்றுக் கொண்டு நல்லவனை கெட்டவன் என்பார்கள். கெட்டவனை நல்லவன் என்பார்கள். வெட்கக்கேடு.
இனியும் யுடியூப்களில் நாம் பார்க்கும் அரசியல் விவாதங்களையும் நேர்காணல்களையும் அத்தனையும் உண்மை என நம்பிக் கொண்டு இருப்போம் எனில் நம்மை ஏமாற்ற படையெடுத்து வருவதை நிறுத்தவே முடியாது.