வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் முஸ்லிம்கள் கவனிக்க தவறுவது என்ன?

முஸ்லிம்களில் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடியவர்களாக இருக்கின்றனர். அதற்கு காரணம் உள்நாட்டில் கிடைக்கும் வருமானத்தை விட வெளிநாட்டில் அதிகம் கிடைக்கும் என்பதால் தான்.
ஆனால் அங்கே செல்பவர்கள் அதிகமானவர்கள் கூட டிரைவர்கள், சமையல் வேலை, லேபர்களாக கூலி வேலைக்குத்தான் செல்கிறார்கள்.
தாயை, பிள்ளையை, மனைவியை பிரிந்து அனாதையை போல வாழும் வாழ்வின்கொடுமை சொல்ல முடியாத துயரங்களை கொண்டது. 
இத்தனை துயரங்களுக்கும் காரணம் இளமையில் கல்வியை தொலைத்தது தான் என்பதை வெளிநாடு செல்பவர்கள் அறிந்து கொள்தில்லை. தன்னை போல பிள்ளைகள் கஷ்டப்பட கூடாது என்பதற்காக பிள்ளை கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்.
கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் மகனின்  மகிழ்ச்சிக்காக செலவிடுபவர்கள் பிள்ளைகளின் எதிர்காலமாக இருக்கும் கல்வியை கொடுக்கத் தவறி விடுகின்றனர்.
வெளிநாட்டில் இருந்தாலும் பிள்ளையின் கல்வியின் மீது ஆர்வம் காட்டுவதில்லை இவர்கள் நலம் விசாரிக்கும் போது கூட பிள்ளையிடம் கல்வி குறித்து கேட்பதில்லை. தன் பிள்ளை என்ன படிக்கிறான் என்பது கூட தெரியாமல் ஆண்டுகளை கழிக்கும் நிலையில் தான் பலர் உள்ளனர்.
நல்ல கல்வியை கொடுத்தால் வெளிநாடு சென்றாலும் கூட தன்னை போல கூலிவேலை செய்யாமல் கண்ணியமாக அலுவலகத்தில் குடும்பத்துடன் தங்கி பணி புரிய முடியும்.
ஆனால் பிள்ளை வாலிபவயதை அடைந்த உடன் பாஸ்போட்டை எடுத்து பயணம் அனுப்பி விடுகின்றனர். தன்னை போல நீயும் தாயை, குடும்பத்தை, உறவுகளை பிரிந்து வாழும் நிலைக்கு அவர்களை தள்ளி விடுகின்றனர் பொற்றோர்கள் பலர்.
கம்பெனியில் வேலை முடிந்தாலும் கூட ஓய்வு எடுக்காமல் ஓவர்டைம் வேலை செய்து திரட்டிய செல்வத்தை, ஒரு நாள் சமைத்த உணவை பல நாள் சுடவைத்து உண்டு சிக்கனமாய் சேமித்த பணத்தை பிள்ளைகளின் திருமணங்களில் வாரி இறைத்து செலவிடுகின்றனர்.
திருமணத்தை ஆடம்பரமாய் நடத்துவதில் அவ்வளவு என்ன மகிழ்ச்சி என்று தெரியவில்லை? சேமித்த செல்வங்கள் எல்லாம் தோரணங்களில் செலவிடப்படுகின்றன. இந்தனை ஆடம்பரம் நிறைந்த திருமணங்களால் எந்தப் பயனும் இல்லை, குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணங்களில் தான் இறைவனின் அருள் நிறைந்து இருக்கிறது என்னும் போது அதற்கு நேர் மாற்றமாக செய்து முடிப்பதில் என்ன மகிழ்ச்சி இருந்து விட முடியும்.
இஸ்லாம் சொல்லும் சிக்கனமான திருமணங்களை நடத்தினால் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்த பணம் சேமிக்கப்பட்டு விடும் அது நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன் படும் என்பதை நினைவில் கொள்வதில்லை.
அது போல வெளிநாடு செல்பவர்களின் இலட்சிய திட்டமாக இருப்பது புதிய வீடு கட்டுவது தான். அதற்காகவே கடினமாக உழைக்கும் இவர்கள், பல ஆண்டுகள் திரட்டிய பொருளாதாரம் மொத்தத்தையும் புதிய வீட்டிற்காக செலவிடுகின்றனர். தாயகம் வந்தால் தொழில் செய்ய மூலதனம் வேண்டுமே என்று எதிர்கால திட்ட மில்லாமல், அதற்காக தொகையை ஒதுக்கி வைத்து விட்டு எஞ்சியதை வீட்டிற்காக பயன் படுத்த தவறி விடுகின்றனர்.
அனைத்தையும் வீட்டிற்காக பயன்படுத்தி விட்டு தாயகம் வரும் போது பணமில்லாமல் நிற்கின்றவர்களை போல இல்லாமல் சுய தொழில் செய்யும் அளவுக்கான பொருளாதாரத்தை திரட்டி வைத்துக் கொள்வது தான் வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு இப்போதைய முக்கிய அறிவுரையாக இருக்கிறது.