அமெரிக்காவில் ராகுல் காந்தி இந்திய முஸ்லிம்கள் குறித்து சொன்னதென்ன?

அமெரிக்கா விற்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ள ராகுல் காந்தி பத்திரிக்கையாளர்களிடையே பல்வேறு விஷயங்களைப் பேசி வருவது உலக அரங்கில் பெரிதும் கவனம் பெறுகிறது.
இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இந்திய மக்கள் வெறுப்பு பரப்புரைகளை விரும்புவதில்லை. ஆனால் ஒரு சிறிய கூட்டம் வெறுப்புணர்வை விதைக்கின்றார்கள். முஸ்லிம்கள், கிறித்தவர்கள் தாக்கப்படுகின்றார்கள். இந்தியாவில் சிறுபான்மை சமூகம் மிகப்பெரும் அச்சுறுத்தலில் இருக்கின்றார்கள் என்று பேசியுள்ளார்.
ராகுல்காந்தியின் இப்பேச்சு சாதாரணமானதல்ல. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆய்வு மாணவர்களிடையே இக்கருத்தைக் கூறியுள்ளார்.
இந்தியாவில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை உலக அரங்கின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
இந்தியாவை 60 ஆண்டுக்காலத்திற்கும் மேலாக ஆண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் உலக அரங்கில் கவனம் பெறும் வகையில் கூறுவது பெருமளவு கவனிக்கப்படும்.
தனது இப்பேச்சின் மூலம் இந்தியாவில் முஸ்லிம்களின் ஆபத்தான நிலைக்கு ஊடக வெளிச்சம் பாய்ச்சியுள்ளார் ராகுல்.
இது மட்டுமல்ல ராகுலின் கருத்துகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் வேறொரு முகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தான் உட்படப் பல தலைவர்கள் ஒன்றிய அரசால் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று ராகுல் கூறுவது உதாசீனப்படுத்தக் கூடியது அல்ல. சுதந்திரம் பற்றி வாய் கிழியப் பேசும் ஒரு நாட்டில் தனிநபர் சுதந்திரம் எவ்வாறுள்ளது என்பதை அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இவற்றை எல்லாம் பொருத்துக் கொள்ள முடியாமலே ராகுலின் அமெரிக்கக் கருத்துகளை அடிப்படையின்றி விமர்சித்து வருகின்றனர் பாஜகவினர்.
முஸ்லிம் லீக் கட்சியுடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதற்கு முஸ்லிம் லீக் கட்சி மதச்சார்பற்றதாகும் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். உடனே பாஜகவினர்
முஸ்லிம்களின் ஓட்டை பெற வேண்டும் என்பதற்காக மதச்சார்புள்ள முஸ்லிம் லீக் கட்சியை மதச்சார்பற்ற கட்சியாக ராகுல் சித்தரிக்க முற்படுகிறார் என்று விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.
இந்தியப் பிரிவினைக்குக் காரணமான முஸ்லிம் லீக்கை மதச்சார்பற்ற கட்சி எனலாமா? எனப் பொங்கியெழுகின்றனர்.
பாஜகவின் கூறுகெட்ட இவ்வாதங்களுக்குச் சமூக வலைத்தளத்திலே பலரும் பதிலளித்து வருகின்றனர்.
ஜின்னாவின் முஸ்லிம் லீக்கிற்கும் கேரளாவில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு அறியாமையில் இருப்பதாக மக்களே சுட்டிக்காட்டுகின்றனர்.
பாஜகவிற்கு உண்மையில் எந்த வளர்ச்சியும் இல்லை. எந்த எழுச்சியும் இல்லை. அதன் வளர்ச்சி என்பதே பாஜகவின் பொய்களையும், பேதைமைகளையும் தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் எழுச்சியுடன் எடுத்துரைக்க ஆளில்லை என்பது தான் பாஜகவிற்கு உள்ள ப்ளஸ்.
அரசியல் களத்தில் பாஜகவை அடித்து ஆடும் ஆட்டக்காரர்கள் வாய்த்து விட்டால் அவ்வளவு தான். அத்தோடு பாஜகவின் ஆட்டமும் ஓட்டமும் ஓய்ந்து விடும்.
காங்கிரஸிடமும் ராகுல் காந்தியிடமும் மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கின்றனர்.