உலகளாவிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது ஆப்கானிஸ்தான்.
இருபதாண்டு கால நீண்ட நெடிய போருக்குப் பின் அமெரிக்க படைகளை முழுவதுமாக புறமுதுகு காட்டி ஓடச் செய்து ஆப்கானிஸ்தானை முழுமையாக வென்று அரியணை ஏறியுள்ளது தாலிபான்.
வியட்நாம் போரில் தோல்வியைத் தழுவியபோது என்ன மனநிலையோ அதைவிட மோசமான மனநிலையை இந்தத் தோல்வியின் போது அமெரிக்கா அடைந்துள்ளது.
உலக அரங்கில் தன்னை வல்லரசு நாடாக நிலைநிறுத்திக் கொண்ட அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், ஊடகங்கள் முன்னிலையில் தமது தோல்வியைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார். அதை மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் காண்கின்றனர்.
அந்நியப் படையெடுப்பை விரட்டியடித்து, ஆப்கானின் பூர்வ குடி மக்கள் வெல்வது இது முதல் முறை அல்ல!
இதனாலேயே ஆப்கானிஸ்தான் GRAVEYARD OF EMPIRES அதாவது சாம்ராஜ்யங்களின் சமாதி, – பேரரசுகளின் சவக்குழி என அழைக்கப்படுகிறது.
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் ஆப்கானிஸ்தான் மீது 3 முறை போர் தொடுத்தும் தோல்வியே மிஞ்சியது. பல ஆயிரம் ராணுவ வீரர்களையும் பிரிட்டன் பலி கொடுக்க நேர்ந்தது.
இதையடுத்து சோவியத் யூனியனும் ஆப்கானிஸ்தானை வசப்படுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளின் படைகள் கொண்ட நேட்டோவும் கூட ஆப்கானிஸ்தானில் தங்களின் பல ஆயிரம் வீரர்களைப் பறிகொடுத்து இப்போது தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளன.
அமெரிக்காவின் 20 ஆண்டு கால ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் இப்போது மீண்டும் தலிபான்களின் ஆதிக்கத்தில் வந்துள்ளது.
எனவே இதைத் தாலிபான்களின் வெற்றியாகப் பார்க்கக்கூடாது. அந்நியப் படையெடுப்பை, அந்நாட்டின் பூர்வ குடிமக்கள் விரட்டியடித்தார்கள் என்ற கண்ணோட்டத்தில் தான் இதை அணுக வேண்டும்.
ஆப்கானின் பூர்வ குடிமக்கள் அமெரிக்காவின் அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் பெற்று விட்ட மனநிலையில் இருக்கும் இவ்வேளையில் பல ஊடகங்களும் முகநூல் போராளிகளும் என்னவெல்லாம் எழுதித் தீர்க்க முடியுமோ அவை அனைத்தையும் எழுதிக் கொட்டுகிறார்கள்.
இப்படி விமர்சிப்போரில் முக்கால்வாசி நபர்களுக்கு வெறுப்பு தாலிபான்கள் மீதல்ல! இஸ்லாத்தின் மீது!
இஸ்லாத்தை விமர்சிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தாலிபான்களின் ஆட்சியை தூக்கி நிறுத்த வேண்டிய அவசியமும், அவர்களை ஆதரிக்க வேண்டிய எந்த அவசியமும் முஸ்லிம்களுக்கு இல்லை.
எனினும் விமர்சனம் செய்வதில் நடுநிலைப் பார்வை ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.
தாலிபான்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அவர்கள் தவறே செய்யாத பரிசுத்த ஆத்மாக்களும் அல்ல. தற்கொலைத் தாக்குதல், அப்பாவி மக்களைக் கொலை செய்தல் உள்ளிட்ட தவறுகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். அதற்கு இறைவனிடம் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
அமெரிக்காவின் அடிமைப்படுத்தலில் இருந்து தம் சொந்த நாட்டை விடுவிக்க அமெரிக்காவையும் அவர்களின் அடிமைகளையும் எதிர்த்துப் போர் செய்து, தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் தியாகம் செய்த தாலிபான்கள் மட்டும் தீவிரவாதிகளாக தெரிபவர்களுக்கு..
அமெரிக்கா மனித நேயவாதிகளாகத் தெரிவது தான், மிக வினோதமாக உள்ளது.
அமெரிக்காவுடனான தாலிபான் களின் சண்டையில் அப்பாவிகள் தாக்கப்பட்டார்கள். மறுப்பதற்கில்லை. அச்செயலை நாம் ஆதரிக்கவுமில்லை. அதனால் தாலிபான்கள் தீவிரவாதிகள் என்றால் அதே செயலை அமெரிக்கா செய்யவில்லையா? அமெரிக்காவின் அடிமை அரசான அஷ்ரப் கனி செய்யவில்லையா?
ஈராக்கில் கொத்துக் கொத்தாகப் பச்சிளங் குழந்தைகளைக் கொன்று குவித்த அமெரிக்காவை, “தீவிரவாத அமெரிக்கா” என்று சொல்லாமல் போனது ஏனோ ?
எண்ணெய் வளத்தை குறிவைத்து அமெரிக்கா நுழைந்த நாடுளிலெல்லாம் எத்தனை அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். ஊடகங்களுக்கு அது தெரியாதா?
தீவிரவாதி என்ற சொல்லுக்கு அமெரிக்காவை விட மிகத் தகுதியான நாடொன்று உலகில் இல்லை எனலாம்.
இன்னும் சில நடுநிலை வியாதிகள் சற்று வித்தியாசமாகக் கூவுகிறார்கள்.
இன்று ஆப்கானிஸ்தானின் ஜனநாயகத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் சீனா, ரஷ்யா, வடகொரியா, இலங்கை போன்ற நாடுகளில் நடக்கும் அநியாயங்களைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டிருப்பார்களா? இந்த நாடுகளின் அதிபர்களைப் பற்றி வெளிப்படையாக ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு அங்கிருந்து உயிரோடு திரும்ப முடியுமா? இதுதான் இவர்கள் கொண்டாடும் ஜனநாயக நாடுகளின் நிலை!
போர் எனும் பெயரில் இத்தனை ஆண்டுகாலம் அமெரிக்காவினால் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி ஆப்கன் மக்களுக்காக இதுநாள் வரை ஒரு சொட்டு கண்ணீர் சிந்தாதவர்கள், தலிபான்களின் ஆட்சியில் அவர்களின் உரிமை பறிபோகும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.
ஆப்கானில் பெண்களும் குழந்தைகளும் இரத்தம் சிந்தி உயிர் துறந்த போது அமைதி காத்தவர்கள், இப்போது உரிமை பறிபோகும் என்று பொங்கி எழுவதின் அர்த்தம் புரிகிறதா?
பெண்களை பர்தா அணியச் சொன்னால் பிற்போக்குத்தனம் என்கிறார்கள்.
பர்தா என்பது அங்க அவயங்களை மறைக்கும் ஆடையே! முகத்தை மறைக்க வேண்டிய தேவை இல்லை. தாலிபான்களும் அதை வலியுறுத்தவில்லை. ஆட்சியை பிடித்ததும் ஆப்கன் நாட்டு ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த தாலிபான்கள் பெண் ஒருவரை கொண்டுதான் அந்தப் பேட்டியை அளித்துள்ளார்கள். பெண்கள் கல்வி கற்க அனுமதி உண்டு என்று கூறியுள்ளார்கள்.
இதில் என்ன பிற்போக்குத்தனத்தைக் கண்டு விட்டார்கள் என்று தெரியவில்லை?
ஆபாசப் படங்களில் நடிக்க அனுமதிப்பதும், அரைகுறை ஆடைகளுடன் சுற்றித் திரிய அனுமதிப்பதும், குடித்துக் கும்மாளமிட அனுமதிப்பதும் இவையே இவர்களின் பார்வையில் முற்போக்குத்தனம் போல.
இவ்வாறு பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரிப்பது தான் உண்மையில் பிற்போக்குத்தனமானது.
அது சரி! இருபதாண்டு காலம் அமெரிக்க அரசால் ஆப்கன் பெண்கள் கொல்லப்பட்ட போது இவர்கள் என்ன மனநல காப்பகத்திலா இருந்தார்கள்? அப்போது பெண்கள் மீது ஏன் இரக்கம் வரவில்லை?
ஆப்கன் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனாலும் மோடியின் ஆட்சியில் ஊடகங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறதா?
ஸிமீஜீஷீக்ஷீtமீக்ஷீs கீவீtலீஷீut ஙிஷீக்ஷீபீமீக்ஷீs எனும் சர்வதேச அமைப்பு இந்தியாவில் ஊடக சுதந்திரம் இல்லை என்று கூறியுள்ளது. ஊடக சுதந்திரத்தை ஒடுக்கிய 37 தலைவர்களின் புகைப்படத்தை வெளியிட்டதில் மோடியும் புகைப்படமும் அதில் உள்ளது.
கல்புர்கி, கௌரி லங்கேஷ், பன்சாரே போன்ற ஊடகவியலாளர்களின் கொலை அதை உறுதி செய்தது.
இந்தியாவில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்று கூறி தனது அமைப்பின் கிளையை கலைத்து விட்டு சென்ற சர்வதேச நிறுவனம் உண்டு.
அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் எதிர்த்து பேசினால் தேசத் துரோக வழக்கு.
சுதந்திரமாகச் செயல்பட முடிய வில்லை என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் பலர் பத்திரிக்கையாளர்கள் முன்பு குமுறினார்கள்.
இப்படி இந்தியாவில் சுதந்திர நிலை சந்திச் சிரிக்கின்ற போது இவர்கள் ஆப்கன் மக்களின் சுதந்திரத்திற்காகக் கவலை கொள்கிறார்கள்.
மூளை வெந்து போனதன் அடையாளமிது.
இந்தியாவில் கொடூரக் கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விட்டால் குற்றவாளிகளை நடுரோட்டில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டும் என்று முகநூலில் பொரிந்து தள்ளுவார்கள்.
கொடூரக் குற்றவாளிகள் யாரையேனும் போலீஸ் என்கவுண்டர் செய்தால் இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள்.
அதுவே கொலை, விபச்சாரம், கற்பழிப்பு போன்ற தண்டனைகளுக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தாலிபான்கள் சொன்னால் பிற்போக்குத் தனமான, காட்டுமிராண்டித்தனமான ஆட்சி என்று விமர்சனம் செய்கிறார்கள்.
தாலிபான்கள் நல்லாட்சி வழங்குவார்கள் என்றால் பிறகேன் மக்கள் கூட்டம் கூட்டமாக விமான முதுகிலும் இறக்கையின் ஓரத்திலும் சவாரி செய்து வெளியேற வேண்டும்?
மூன்றைரை கோடிக்கும் அதிகமான மக்கள் ஆப்கனில் இருக்கிறார்கள். அத்தனை மக்களும் வெளியேறிடவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
பல்லாண்டுகளாகப் போரும் குழப்பமும் நிலவி வரும் ஒரு நாட்டிலிருந்து இன்னொருச் நாட்டிற்கு செல்லும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் சில நூறு நபர்கள் செல்லவே செய்வார்கள்.
விஸ்வரூபம் படப் பிரச்சினையிலேயே நாட்டை விட்டு வெளியேறுவதாக கமலஹாசன் சொன்னார். அப்போது தமிழகத்தில் என்ன தாலிபான்கள் ஆட்சியா நடைபெற்றது?
ஒரு பட வெளியீட்டு பிரச்சனைக்கே நாட்டை விட்டு வெளியேறத் துணிந்தார் கமலஹாசன்.
ஆப்கனில் எவ்வளவோ பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளே வேண்டாம் என்று சில மக்கள் முடிவெடுக்கவே செய்வார்கள்.
முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சிக்காலத்திலேயே போர் விமானம் கொண்டு வரப்பட்டு மக்களை அழைத்திருந்தால் அப்போதே இவர்கள் சென்றிருப்பார்கள்.
இப்போதுதான் மக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அதனால் அவர்கள் ஏறிச் செல்கிறார்கள்.
தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்ட மக்கள், தாலிபான்கள் ஆட்சியில் தண்டிக்கப்படலாம் என்ற அச்சமும் அத்தகைய மக்கள் வெளியேற ஒரு காரணம்.
தாலிபான்கள் ஆட்சியில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். இஷ்டத்திற்கு ஆட்டம் போட முடியாது என்பதால் அவ்வித கட்டுப்பாடுகளை விரும்பாத ஒரு சிலரும் வெளியேறுவதை தான் தேர்வு செய்வார்கள்.
ஆப்கன் பூர்வ குடிமக்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாகவே அல்ஜஸீரா, சி.என்.என் போன்ற ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானில் ஆட்சியைப் பிடித்ததும் பொது மக்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்து விட்டார்கள், தாலிபான்கள்.
தங்களது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பெண்கள் கல்வி கற்க அனுமதி உண்டு. வேலைக்கு செல்லலாம். ஊடகங்கள், அரசுப் பணியார்கள் வழக்கம் போல தங்களது பணியைச் செய்யலாம் என்று கூறிவிட்டார்கள்.
வெளிநாட்டுத் தூதரகங்கள் பாதுகாப்பாகச் செயல்பட உத்தரவாதமும் அளித்துள்ளார்கள்.
முன்பை விட தங்களுக்குக் கூடுதல் அனுபவம் கிடைத்துள்ளதாகவும், அந்த அனுபவத்தின் அடிப்படையில் ஆட்சி செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதே வேளை இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
தாலிபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நாம் கூற முனையவில்லை. அப்படி உத்தரவாதம் கொடுப்பது நமது வேலையுமல்ல! அவர்களது ஆட்சிமுறை எவ்வாறு அமையப்போகிறது என்பதை இனிதான் பாரக்கவுள்ளோம்.
தங்களது கடந்த காலத் தவறுகளை திருத்திக் கொண்டு தூய இஸ்லாமிய மார்க்கத்தின் படி ஆட்சி செய்வார்களானால் அது அவர்களுக்கு நல்லது.
ஆனால், இன்று தாலிபான்களை விமர்சிப்பவர்களின் நோக்கம், இதைச் சாக்காக வைத்து இஸ்லாமிய மார்க்கத்தை மோசமாகச் சித்தரிக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் ஹிஜாப் சட்டத்தையும், குற்றவியல் சட்டங்களையும் விவாதப் பொருளாக்குகின்றனர்.
இஸ்லாமிய சட்டத்தில் பெண்ணடிமைத் தனமோ காட்டு மிராண்டித் தனமோ எதுவுமில்லை.
அனைத்து மக்களுக்குமான உரிமையும் சுதந்திரமும் இஸ்லாத்தில் உண்டு.
தாலிபான்களை விமர்சிக்கின்றோம் எனும் பெயரைப் பயன்படுத்தி இஸ்லாத்தின் சட்ட திட்டங்களைக் காட்டுமிராண்டித்தனம் என்று கூறுவோர் திராணியிருந்தால் அது தொடர்பாகப் பகிரங்க விவாதம் செய்ய முன்வரட்டும்.
அத்தகைய போலி அறிவுஜீவிகளின் முகத்திரையைக் கிழிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது.