வேண்டாம் தற்கொலை

 

 

இறைவனின் திருப்பெயரால்.

வேண்டாம் தற்கொலை.

தூக்கிட்டு தற்கொலை, விஷம் குடித்துச் சாவு, கிணற்றில் குதித்துத் தற்கொலை, இரயில் முன் பாய்ந்து பலி இது போன்றவற்றை அன்றாடச் செய்திகளாக நாம் காண்கிறோம். இத்தகைய செய்திகள் இடம் பெறாமல் ஒரு நாளிதழ் என்றாவது வெளி வந்ததுண்டா? உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் தினந்தோறும் காத்திருக்கும் தற்கொலை செய்தோரின் உடல்கள் எத்தனை ? எத்தனை?

சிலர் வாழ்வில் சந்திக்கின்ற பல பிரச்சினைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் மரணத்தின் கதவை தட்டுகின்றனர். தற்கொலை செய்வோர் தம் வாழ்வில் ஏற்படுகின்ற பல சிக்கல்களின் போது தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

தற்கொலைகளுக்கான காரணங்கள்:

📌 விவசாயிகள் தற்கொலை செய்தல்

📌மாமியார் கொடுமை

📌வரதட்சணைக் கொடுமை

📌தேர்வில் தோல்வி அடைதல்,

📌வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இருத்தல்,

📌காதல் தோல்வி,

📌தாங்க முடியாத நோய்

📌பணி அழுத்தம்

📌மன அழுத்தம்

📌நெருக்கமான உறவினர் மரணித்து விட்டால்,

📌மனிதன் சந்திக்கும் அவமானங்கள்
இது போன்ற பல காரணங்களால் அதிக தற்கொலைகள் நடக்கின்றன.

பெருகி வரும் தற்கொலைகள்:

உலகில் ஒரு வருடத்தில் ஏறக் குறைய 8 இலட்சம் தற்கொலைகள் நடப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

ஒவ்வொரு 40 நொடிகளுக்கு உலகில் ஒருவர் தற்கொலை செய்கிறார் என்றால் அதை நம்மால் நம்ப முடிகிறதா? தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை வியப்பூட்டுவதாக இருக்கிறதென்றால் தற்கொலைக்கு முயற்சி செய்வோர் எண்ணிக்கை இதை விட 25 மடங்கு அதிகமாம். தற்கொலைக்கு முயன்று பாதியில் கைவிடுவோர் ஏராளம். ஏராளம்.

கடந்த 40 ஆண்டுகளில் 60 சதவீதம் வரை தற்கொலைகள் அதிகரித்துள்ளது.

வாழப் பிறந்த மனிதன் மாளத் துடிப்பது எதனால் ?

ஒரு மனிதன் பிறந்து வாழத் துவங்குகிறான். அவனுக்கு தன் வாழ்வு குறித்து ஆயிரமாயிரம் சிந்தனைகள், வருங்காலம் குறித்த கனவுகள், எதிர்காலத் திட்டங்கள் என பலமான சிந்தனைகளுடன் வாழும் ஒருவன் பாதியிலேயே தற்கொலை செய்து தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்ளத் துடிப்பது எதனால்?

வாழ்வதற்காக பல்லாண்டுகள் உழைத்த ஒரு மனிதன் சாகும் முடிவை ஒரு சில நிமிடங்களிலேயே ஏன் எடுக்கின்றான்.

ஒரு நபருக்கு உயிரியல் , உளவியல், மற்றும் சமூகக் காரணிகள் ஒன்றோடொன்று இணையும் போது அவரது மனம் தற்கொலையின் பக்கம் தள்ளப்படுவதாக மனவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்கொலையைத் தூண்டும் சினிமா:

சினிமாக்களிலும் , தொலைக்காட்சி தொடர்களிலும் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி சர்வ சாதாரணமாகக் காட்டப்படுகின்றன. காதலனும் காதலியும் மலை உச்சியிலிருந்து குதிப்பது போன்ற தற்கொலைக் காட்சிகள் பார்ப்பவரின் உள்ளங்களில் வேரூன்றுகின்றன. அவன் வாழ்வில் ஏதேனும் ஒரு நெருக்கடி ஏற்படும் போது இதே பாணியில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் துடிக்கின்றான்.

வாழ்வில் தான் ஒன்று சேர முடியவில்லை . சாவிலாவது ஒன்றாவோம் என தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகள் ஏராளம். ஒவ்வொரு காதலர் தினத்திலும் இத்தகைய செய்திகளைத் தானே நாம் கேள்விப்படுகிறோம்.

தற்கொலையைத் தடுக்கும் விதி நம்பிக்கை:

இறைவன் விதித்ததைத்தான் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் அடைகின்றான். நல்லதோ, கெட்டதோ எதுவாயினும் அது விதி வழி வந்ததுதான். தன் வாழ்வில் தான் காணும் கஷ்டங்கள் இறைவன் ஏற்படுத்தியுள்ளவைதான் என்ற புரிதல் மனிதனுக்கு சில பக்குவங்களை ஏற்படுத்துகின்றது.

இறைவன் விதித்ததைத் தவிர வேறெதுவும் எங்களை ஒரு போதும் அணுகாது.
அல்குர்ஆன்: 9:51

இப்பூமியில் அல்லது உங்கள் மீது எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் நாம் அதைப் படைப்பதற்கு முன்பே அது மூலப் பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது இறைவனுக்கு எளிதானதாகும். இவ்வாறு விதியை ஏற்படுத்தியிருப்பதற்குக் காரணம் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்காக நீங்கள் கவலைப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதில் நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவுமே ஆகும். அகந்தையும் , கர்வமும் கொண்ட எவரையும் இறைவன் நேசிப்பதில்லை. அல்குர்ஆன்: 57: 22, 23

இறைவா நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை.
நூல்: புஹாரி: 844

விதியைப் பற்றி இத்தகைய போதனைகளை அறிந்து கொண்ட படியால் தான் இஸ்லாமியர்களிடம் தற்கொலை மிகக் குறைவாக காணப்படுகிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வளைகுடா நாடுகளில் தற்கொலைகளின் எண்ணிக்கை மிகமிகக்குறைவு

விதி நம்பிக்கை தற்கொலையைத் தடுக்கும் கேடயமாக உள்ளது என்பதை நாம் உளமார உணரவேண்டும்.
இறைவன் நமக்கு பிரச்சினைகளை மட்டும் தருவதில்லை. அதற்கான தீர்வையும் அதைக் தேடிக் கண்டறியும் பகுத்தறிவையும் வழங்கி இருக்கிறான்.
எனவே எச்சூழ்நிலையிலும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படக்கூடாது.

மனிதனை விட அறிவில் குறைந்த விலங்குகளோ , பறவைகளோ இன்ன பிற ஜீவராசிகளோ தற்கொலை செய்ததாக நாம் கேள்விப்பட்ட துண்டா? அவற்றிற்கும் பிரச்சினைகள் உண்டு. சில உயிரினங்களுக்க உணவு கிடைப்பதில்லை. அவையும் நோயுறுகின்றன. இத்தகைய கஷ்டங்களால் அவை உயிரை மாய்த்துக் கொள்கிறதா? இல்லை . அது வாழப் போராடுகிறது.
இத்தகைய ஜீவராசிகளை விடவும் உயர்வான அறிவு வழங்கப்பட்ட மனிதன் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளத் துணிவது முறையான செயலா ? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

எல்லோர் வாழ்விலும் சிரமங்கள் உண்டு. சிரமங்களுக்கு மரணம் தான் தீர்வு என்றால் உலகில் மனிதர்கள் யாரேனும் உயிர் வாழ முடியுமா?
எனவே நாம் எந்த சூழலிலும் தற்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது. பொறுமையுடன் நிதானத்துடன் நம் வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும். நம் பிறப்பு எப்படி இயற்கையாக இருந்தததோ அது போல் நம் இறப்பும் இயற்கையாகத் தான் இருக்க வேண்டும் . தற்கொலை செய்து வாழத் தெரியாத கோழைகளாக நாம் மாறிவிடக்கூடாது.