வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?

மத்தியில் ஆளும் பாஜக அரசு சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமல்ல, இந்தத் தேசத்திலுள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது என்பதற்கு அந்த அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டமும் ஓர் சாட்சி.
விவசாயிகளின் உரிமையைப் பறித்து தனியாருக்குத் தாரை வார்க்கும் மோசமான சட்ட வடிவமே வேளாண் திருத்தச் சட்டமாகும். இந்தச் சட்டம் ஏற்படுத்தும் விளைவுகளை பலரும் பல்வேறு தளத்தில் விளக்கி விட்டார்கள்.
உழைப்பு, உறக்கம், உணவு என அனைத்தையும் துறந்து நாள் கணக்கில் விவசாயிகளும் போராடிப் பார்த்து விட்டார்கள். ஒன்றிய அரசு செவி சாய்க்க வில்லை.
சினிமா நடிகர், நடிகைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் விருந்து உபசரிப்புடன் உடனே சந்திப்பு ஏற்பாடு செய்து அவர்களுடன் செல்பியும் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து விடுவார். இவர்கள் என்ன சினிமா நடிகர்களா? விவசாயிகள் தானே?
இந்த நிலையில் தமிழக சட்டப் பேரவையில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தீர்மானம் இயற்றியிருப்பது வரவேற்கத் தக்கது.
ஆனால் ஒருமனதாக இந்தத் தீர்மானம் இயற்றப்பட வில்லை. அதிமுக, பாஜக இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளது.
இத்தனை நாள்களாக நாங்களும் விவசாயிகள் தாம் என்று தலையில் பச்சை தலைப்பாகை கட்டிக் கொண்டு போஸ் கொடுத்ததும், எங்கள் குடும்பம் விவசாய பாரம்பரியத்தை கொண்டது என்று மார்தட்டிக் கொண்டதும் வெறும் ஓட்டு அரசியல் என்பது பட்டவர்த்தனமாக வெளிப் பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு வெளிப்படையாகவே அதிமுகவும் பாஜகவும் துரோகம் இழைத்துள்ளது.இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தீர்மானத்தை இயற்றுவதுடன் தமிழக அரசின் கடமை முடிந்து போவதில்லை.
சி.ஏ.ஏ, என்.பி.ஆர் போன்ற அரசியல் சாசனத்திற்கு எதிரான சட்டங்களுக்கு எதிராகவும் இந்தச் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தீர்மானம் இயற்ற வேண்டும். இதுவும் திமுக வாக்களித்தவற்றில் ஒன்று என்பதை திமுகவிற்கு நினைவு படுத்திக் கொள்கிறோம்.