வனப் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மக்களுக்கு நன்மையா? தீமையா?

ஒன்றிய பாஜக அரசை பொறுத்தவரை மக்கள் நலன் என்பது பெயரளவில் இருக்குமே தவிர அது முன்வைக்கும் சட்டங்களிலோ சட்டத் திருத்தங்களிலோ துளியும் இருக்காது. இது தான் மறுக்க முடியாத உண்மை.
எளிய மக்களின் குடியுரிமை பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேச நலன் என்று கூறித்தான் அறிமுகப்படுத்தியது. இச்சட்டத்தினால் அஸ்ஸாமில் குடியுரிமை இழந்த இந்தியர்கள் ஏராளம்.
காஷ்மீர் மக்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக பிரிவு 370ஐ நீக்கியதற்கும் தேசப் பாதுகாப்பு எனும் இதே காரணத்தைத்தான் பாஜக கூறியது.
விவாசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் திருத்தச் சட்டத்திலும் இது தான் நிலை.
திருத்தங்கள் எதுவும் வேண்டாம் என்று கூறி இன்று வரையிலும் விவசாயிகள் போராடுகிறார்கள். அரசு செவிட்டுத்தனமாக கடந்து செல்கிறது.
முஸ்லிம் பெண்களுக்கு நன்மை என்று கூறித்தான் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதில் முஸ்லிம் பெண்களுக்கு கெடுதியே அதிகம்.
இப்படி பாஜகவை பொறுத்தவரை சொல்வது ஒன்றாகவும் நடப்பது இன்னொன்றாகவும் இருப்பது தான் யதார்த்த நிலை.
கடந்த அக்டோபர் 2 ஒன்றிய அரசு முன்வைத்த வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தமும் இந்த அடிப்படையிலானதாகவே தெரிகிறது.
வனப்பாதுகாப்பு என்பது காடுகளையும் அங்கு வசிக்கும் பல்லுயிர்களையும் பாதுகாப்பது, பழங்குடியினருக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவது ஆகியவை உள்ளடங்கியதாகும்.
ஏற்கனவே உள்ள வனப்பாதுகாப்பு சட்டங்களே காடுகளையும் பழங்குடியினரையும் முழுமையாக பாதுகாப்பதாக இல்லை என்று சொல்லப்படும் வேளையில் அதில் திருத்தம் என்று அரசு கொண்டு வந்த விஷயங்கள் மேலும் அந்த முறைகளை பலவீனப்படுத்துகின்றன.
எனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இச்சட்டத் திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
காட்டின் நிலங்களை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தால் அனுமதி பெற வேண்டும் என்பதை இச்சட்ட திருத்தம் தேவையற்றதாக்குகிறது.
ராணுவம் மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்குரிய பணிகளை காடுகளுக்குள் மேற்கொள்ள அனுமதி வழங்குகிறது இத்திருத்தம்.
எல்லையில் ராணுவ வீரர்கள் சிரமப்படுகிறார்கள் என்று கூறி பெட்ரோல், டீசல், கேஸ் விலையேற்றத்தையே நியாயப்படுத்த முனைந்த பாஜக, இப்போது காடுகளை தனியாருக்கு தாரைவார்த்து விட்டு தேச நலன் என்று கூறாது எனும் உத்தரவாதமுண்டா?
காடுகளுக்குள் இருக்கும் கனிம வளங்களை எடுக்க புதிய தொழில்நுட்பத்திற்கு அனுமதி வழங்குகின்றது இச்சட்டத் திருத்தம். இது காடுகளை அழிக்கவே வழிவகுக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சப்படுகிறார்கள்.
இவை தவிர காடுகளில் தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் கட்டிடங்களை எழுப்பிக் கொள்ள அனுமதி.
1996க்கு பிறகு புதிய காடுகள் வளர்க்கப்பட்டிருப்பின் அவை வனப்பாதுகாப்பு சட்டத்திற்குள் அடங்காது எனும் திருத்தம் உள்ளிட்ட ஏராளமான அச்சங்களை இச்சட்ட திருத்தம் உள்ளடக்கியுள்ளது.
குறிப்பாக இப்படியொரு சட்டத்திருத்தத்தை முன்வைத்து கருத்து கேட்பில் ஈடுபடும் ஒன்றிய அரசு இவ்வளவு காலம் காடுகளை நம்பியே தங்கள் வாழ்வை கழித்து கொண்டிருக்கும் பழங்குடியினர்களை கவனத்தில் கொள்ளவே இல்லை.
இணையத்தில் கருத்து கேட்டதோடு சரி. அதுவும் ஆங்கிலத்தில்.
பழங்குடியினர்கள் இணையத்தையா பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? ஆங்கிலம் தெரியுமா அவர்களுக்கு?
பிரிட்டிஷ் அரசு முதன் முதலில் வனப்பாதுகாப்பு சட்டத்தை முன்மொழியும் போது காடுகளில் வசித்த பழங்குடியினரை குற்றவாளிகளாக சித்தரித்தது.
காடுகளில் உலாவும் உரிமையை அவர்களிடமிருந்து பறித்து அவர்களில் பலரை அங்கிருந்து அவர்களின் குடியிருப்பிலிருந்து வெளியேற்றியது.
அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் ஒன்றிய பாஜக அரசு தற்போது பழங்குடியினரின் உரிமைகளின் மீது கை வைக்கின்றது.
2006 சட்டத்திருத்தத்தின் படி பழங்குடிகளுக்கு நிலம், பட்டா வழங்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் உள்ளன. அத்தகைய விதிகள் பழங்குடியினரின் குடியிருப்பை உறுதி செய்தது.
இப்போது ஒன்றிய பாஜக அரசு வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் எனும் பெயரில் பல்வேறு பாதகமான அம்சங்களை சேர்த்துள்ளதால் தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் எளிதில் பழங்குடியினரை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களின் குடியிருப்பை விட்டு அகற்றிவிடுவார்கள்.
வெளியேற மறுப்பவர்களின் மீது அஸ்ஸாமை போல துப்பாக்கிச் சூட்டை பிரயோகிப்பார்கள்.
வளர்ச்சி, திட்டம் எனும் பெயரில் தங்களுக்கு விசுவாசமான தனியாருக்கு காடுகளை தாரை வார்ப்பார்கள்.
இவையெல்லாம் மக்களுக்கு நன்மையல்ல.