சனாதனம் பற்றி உதயநிதி பேசியதற்கு கண்டனம் வலுத்துள்ளதே?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக கடந்த செப்டம்பர் 1 அன்று சென்னை காமராஜர் அரங்கில் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் திருமாளவன், கி.வீரமணி, பொன்முடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர் பலரும் கலந்து கொண்டனர்.
சனாதன ஒழிப்பு மாநாடு என்பதே மாநாட்டின் தலைப்பு. அதில் கலந்து கொண்ட அனைவரும் அந்த கருத்திலே பேசினர்.
இதில் உதயநிதி பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சனாதன தர்மம் பற்றி அவர் கூறும் போது டெங்கு, மலேரியா, கொரோனாவையெல்லாம் எதிர்க்க முடியாது. ஒழிக்க வேண்டும். அது போல சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியானது என்று பேசியுள்ளார்.
மேலும் அவர் தனது பேச்சில்,
சனாதனம் என்பது சமத்துவத்திற்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது, பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது? கணவனை இழந்த பெண்களை உடன்கட்டையில் தள்ளியது, விதவைப் பெண்களுக்கு மொட்டையடித்து வெள்ளைப்புடவை உடுத்தச் சொன்னது, குழந்தை திருமணங்களை நடத்தி வைத்தது இவைதாம் சனாதனம் பெண்களுக்கு ச் செய்தவை என்று குறிப்பிட்டார்.
உதயநிதியை விட மிகக்கடுமையாக வீரமணியும் திருமாளவன் அவர்களும் இன்னும் பலரும் பேசினர். ஆனால் உதயநிதியின் பேச்சை மட்டும் பாஜகவில் உள்ள முக்கிய தலைவர் பலரும் சுட்டிக்காட்டிக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவின் எதிர்வினைகள்
உதயநிதி பேசிய உடனே பாஜகவின் அமித் மாள்வியா தனது ட்விட்டர் தளத்தில் கண்டனத்தைப் பதிவிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு ஒழிப்பேன் என்கிறார்.
சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கிறார் என்று பதிவு செய்துள்ளார்.
குஜராத்தில் இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள், மணிப்பூரில் இரு சமூக மக்களின் மோதலுக்கு காரணமானவர்கள், நாடு முழுக்க வெறுப்பைப் பரப்புபவர்கள் இனப்படுகொலை பற்றி பேசலாமா?
எனினும் அமித் மாள்வியாவின் பதிவுக்கு உதயநிதி ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.
உதயநிதியின் பதிலடி
சனாதனத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலை செய்யுமாறு நான் கூறவே இல்லை. பொய்ச் செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். சாதியின் பெயரால் மக்களை சனாதனம் பிளவுபடுத்தியுள்ளது. ஆகவே அதை வேரோடு பிடுங்குவதே சமத்துவத்திற்கு வழிவகுக்கும் என்று உதயநிதி பதிவிட்டுள்ளார்.
உதயநிதி என்னதான் விளக்கம் அளித்தாலும் பாஜகவினர் அவரது பேச்சை ஒட்டு மொத்த இந்து மக்களுக்கு எதிரானதாகவே கட்டமைக்கின்றனர்.
அமித்ஷாவும் நட்டாவும்
உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோதாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இறங்கியுள்ளார்.
இரண்டு நாள்களாக இந்தியா கூட்டணி சனாதன தர்மத்தை அவமதித்துப் பேசி வருகின்றனர். வெறும் ஓட்டு வங்கி அரசியலுக்காக திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி சனாதன தர்மத்தை அழிப்பது பற்றி பேசுகின்றனர் என்று ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார் அமித்ஷா.
தமிழ்நாட்டில் உதயநிதி பேசிய பேச்சு ராஜஸ்தான் வரையிலும் எதிரொலிக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதற்கு எதிர்வினையாற்றும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்று விட்டது.
பாஜக தேசிய தலைவர் நட்டாவும் இதை விடவில்லை.
உதயநிதி பேச்சு இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற மும்பை கூட்டத்தின் முடிவா? எதிர்வரும் தேர்தலில் இந்து விரோத யுக்தியைத்தான் இந்தியா கூட்டணி கையிலெடுத்துள்ளதா? என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவும் தன் பங்கிற்கு விமர்சித்துள்ளார்.
தேசிய பாஜக இப்படி என்றால் தமிழக பாஜகவை சொல்லவும் வேண்டுமா?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி தமது பேச்சில் குறிப்பிட்ட மதத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பிட்ட கலாச்சாரத்தை அழிப்பது என்பது இனப்படுகொலை தான். அவர் பேசியது நாட்டின் 142 கோடி மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய பேச்சு.
கிறிஸ்தவ மிஷனரிகளிடம் பெற்ற திட்டங்களின் படி செயல்படுகிறீர்கள். அந்த மிஷனரிகளின் எண்ணம் தங்களின் தீய சித்தாந்தை வளர்க்க வேண்டும் என்பதே.
இவ்வாறு அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
வெறுப்பைப் பரப்பிய பாஜக
உதயநிதி பேச்சு குறிப்பிட்ட மதத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்துவதாக கூறி அண்ணாமலையே அந்த வேலையை செய்துள்ளார்.
உதயநிதியின் பேச்சுக்காக கிறிஸ்தவ அமைப்புகளை குற்றம் சாட்டுகிறார். இது குறிப்பிட்ட மதத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்துவதில்லையா?
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் சனாதன் சாஸ்தா எனும் அமைப்பு நடத்திய (டிசம்பர் 2021) மாநாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறும் இலட்சணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்குமாறும் தெளிவாகவே இனப்படுகொலைக்கு அழைப்பு விடப்பட்டது. அரசியலின் மூலம் இந்தியாவை கைப்பற்றுவதே இஸ்லாத்தின் நோக்கம் என்றும் அம்மாநாட்டில் பேசப்பட்டது.
மதத்தை இழிவுபடுத்திவிட்டார்கள், வெறுப்புணர்வை விதைத்து விட்டார்கள் என்று இப்போது கொந்தளிக்கும் அமித்ஷா, அமித் மாள்வியா, ஜேபி.நட்டா என யாரும் அப்போது வாய்திறக்கவில்லை.
வாய் மூடி அமைதி காக்கவே செய்தனர்.
குக்கி – மெய்தி இன சமூக மக்களுக்கு மத்தியில் வெறுப்பை பரப்பி அது இன மோதலாக உருவெடுத்தது. உலக அரங்கில் இந்தியா தலைக்குனிவை சந்திக்கும் அளவு பெரும் கொடுமைகள் மணிப்பூரில் அரங்கேறின.
142 கோடி இந்திய மக்கள் பார்க்கும் வகையில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய போதும் இந்தச் சங்பரிவாரக் கூட்டம் வாய் திறக்கவில்லை. வேடிக்கை பார்த்தனர்.
சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசியதும் வரிந்து கட்டிக் கொண்டு வரிசையாக நிற்கின்றனர். இந்து மக்களை இழிவுபடுத்தி விட்டதாக கூக்குரலிடுகின்றனர்.
சனாதன தர்மம் என்றால் என்ன
சனாதன தர்மம் என்பதற்கு திட்டவட்டமான, அனைவரிடத்திலும் ஒரே பொருள் கொள்ளும்படியான கருத்தாக்கம் இல்லை. ஆளாளுக்கு வேறுபடுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள் கொள்கின்றனர்.
காஞ்சி காமகோடி மடத்தின் 68 ஆச்சாரியார் சனாதன தர்மம் என்பதே வர்ண தர்மம் தான் என்கிறார்.
அவரது பேச்சு அவர்களின் இணையதளத்தில் எழுத்தாக்கமாக உள்ளது.
நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ண தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்.
வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரிகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது.
https://www.kamakoti.org/tamil/part1kural32.htm

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்பது பிற மாநிலங்களில் எப்படியோ தமிழகத்தை பொறுத்தவரை அது ஒன்றும் புதிய குரலில்லை. ஆண்டாண்டு காலமாகவே சனாதனத்திற்கு எதிராக இந்த குரல் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றது.
இந்து மக்களை அழிக்க வேண்டும், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் எனும் பொருளில் இந்த குரல் தமிழகத்தில் ஒலிக்கவில்லை.
பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதை, சாதியின் பெயரால் வேற்றுமை பாராட்டுவதையே சனாதன தர்மம் என பொருள் கொண்டு அதை அழிக்க வேண்டும் என்றே இதன் மூலம் அவர்கள் கூறுகின்றனர்.
சாதிய பாகுபாடு ஒழிந்து சமத்துவம் மேலோங்க வேண்டும் என்பதே சனாதனத்தை ஒழிப்போம் என்போரின் பிரச்சாரமாக உள்ளது.
பல்லாண்டுகளாக சாதியை ஒழிப்போம் எனும் பொருளில் சனாதனத்தை ஒழிப்போம் என்று பலரும் பேசிவரும் நிலையில் தற்போது உதயநிதியின் பேச்சை மட்டும் இந்து மக்களுக்கு எதிரானது என கட்டமைக்க முயற்சிப்பது பாஜகவின் தேர்தல் நேர அரசியலேயன்றி வேறில்லை.
தேர்தல் நெருங்கும் காலமெல்லாம் பாஜகவின் மதவெறி அரசியல் தலைதூக்க ஆரம்பித்து விடும்.
உதயநிதி விவகாரத்தில் தற்போது அதுதான் நடக்கின்றது.