தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினராக உள்ளவர் வேறு அமைப்பில் சேர்ந்து பயணிக்கலாமா?

நமது ஜமாஅத்தின் பைலா விதிப்படி இதில் உறுப்பினராக உள்ளவர்கள் வேறு எந்த அமைப்பிலும் இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. இதை விதி எண் 32(2) தெளிவாகக் கூறுகிறது.
32(2) இவ்வமைப்பின் உறுப்பினர் வேறு எந்த அமைப்பிலோ, அரசியல் கட்சியிலோ உறுப்பினராக இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது அமைப்பு விதிக்கு எதிரானதாகும்.
தவ்ஹீத் ஜமாஅத் என்றில்லை. எல்லா அமைப்பிலும் இது தான் வழிமுறையாக கடைபிடிக்கப்படுகிறது.ஒவ்வொரு அமைப்பிற்கும் தனித்த கொள்கைக் – கோட்பாடுகள் உள்ளன. ஒரு அமைப்பின் கொள்கையை இன்னொரு அமைப்பு ஏற்றுக் கொள்வதில்லை.
இப்படி கொள்கைகளும் வழிமுறை களும் மாறுபடுவதால் தான் பல்வேறு அமைப்புகள் உருவாகின்றன.
திமுகவின் கொள்கையை அதிமுக ஏற்பதில்லை. தேமுதிகவின் கொள்கைக் கோட்பாடுகளை பாமக ஏற்பதில்லை.
ஒரே சித்தாந்தத்தில் பயணிக்கும் பாஜகவும் சிவசேனாவும் ஒன்றுக் கொன்று முரண்பட்டு பயணிக்கின்றன.
இவற்றில் ஒரு கட்சியில் உறுப்பினராக பயணிப்பவர் அதே நேரத்தில் இன்னொரு கட்சியிலும் உறுப்பினராக பயணிக்க முடியாது.எல்லா கட்சியிலும் இயக்கத்திலும் கடைபிடிக்கப்படும் இந்த வழிமுறை அறிவுப்பூர்வமாக சரியானது தான்.
ஒரு அமைப்பின் கொள்கைக்- கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு அதில் உறுப்பினராக இணைந்த பிறகு அதற்கு மாற்றமான வேறு அமைப்பில் சேர்ந்து கொண்டு எவ்வாறு பயணிக்க முடியும்? அது அர்த்தமற்ற செயலாகும்.
ஒரே நேரத்தில் முரண்பட்ட இரண்டையும் சரிகாண இயலாது.
ஒரு அமைப்பில் உறுப்பினராக பயணித்துக் கொண்டே இன்னொரு அமைப்பில் அங்கம் வகிக்க இயலாது.
எனவே தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினராக இருப்பவர் ஊர் கூட்டமைப்புகளிலோ அனைத்து ஜமாஅத் கூட்டமைப்புகளிலோ உள்ளூர் சங்கங்களிலோ உறுப்பினராக அங்கம் வகிப்பார் எனில் அவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினராக ஜமாஅத்தின் விதிப்படி தொடர இயலாது.
ஜாக், சுன்னத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் உள்ளிட்ட மார்க்க? அமைப்புகளானாலும் தமுமுக, எஸ்டிபி, மஜக உள்ளிட்ட அரசியல் அமைப்புகளானாலும் இவற்றிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இடையில் கொள்கை முரண்பாடுகள் உள்ளன.
இந்த அமைப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயணித்துக் கொண்டே தவ்ஹீத் ஜமாஅத்திலும் உறுப்பினராக சேர்வது கொள்கை முரண்பாடான பிழையாகும்.
நமது ஜமாஅத் விதியும் அதற்கு இடம் தரவில்லை.