மழையின்றி வறட்சி ஏற்படும் போது தொழுகை மூலமாக அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்கு நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். இதை மழைத் தொழுகை என்று நாம் அழைக்கிறோம். பின்வரும் ஹதீஸ்கள் மூலம் மழைத் தொழுகை முறைகளை அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களிடம் மழையின்மையைப் பற்றி மக்கள் முறையிட்டார்கள். ஒரு மிம்பரை (மேடையை) அமைக்கக் கட்டளையிட்டார்கள். அது அவர்களுக்காகத் திடலில் வைக்கப்பட்டது. ஒரு நாளை மக்களுக்கு வாக்களித்தார்கள். மக்கள் அந்நாளில் (திடலை நோக்கி) புறப்பட்டார்கள். சூரியனுடைய கீற்று வெளிப்பட்ட நேரத்தில் நபியவர்கள் புறப்பட்டார்கள். மிம்பரில் உட்கார்ந்தார்கள். அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று கூறி அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தினார்கள். கண்ணியமிக்கவனும் கீர்த்தி மிக்கவனுமாகிய அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு, ‘‘மக்களே! உங்கள் வீடுகளின் பஞ்சத்தைப் பற்றியும் உங்களுக்கு மழைபொழியும் காலம் தாமதமாகி விட்டதைப் பற்றியும் நீங்கள் முறையிட்டீர்கள். நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கின்றான். உங்கள் பிரார்த்தனைக்கு அவன் பதிலளிப்பதாகவும் வாக்களித்திருக்கின்றான்’’ என்று கூறினார்கள். பின்னர் (நபியவர்கள்) பின்வருமாறு கூறினார்கள்.
اَلْحَمْدُ ِللهِ رَبِّ الْعَالَمِيْنَ الرَّحْمٰنِ الرَّحِيْمِ مٰلِكِ يَوْمِ الدِّيْنِ لاَ إِلٰهَ إِلاَّ اللهُ يَفْعَلُ مَا يُرِيْدُ اَللّٰهُمَّ أَنْتَ اللهُ لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْـفُقَرَاءُ أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَـنَا قُوَّةً وَبَلاَغًا إِلٰى حِيْنٍ
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.
(பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்) அகிலத்தைப் பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்; நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)
பிறகு தமது இரு (புறங்) கைகளையும் உயர்த்தினார்கள். தம்முடைய இரு அக்குள் பகுதியின் வெண்மை தெரியுமளவிற்கு உயர்த்தி (பிரார்த்தித்துக்) கொண்டேயிருந்தார்கள். பின்னர் மக்களை நோக்கி, தமது முதுகுப் பகுதியைத் திருப்பினார்கள். தமது இரு கைகளையும் உயர்த்தியவாறே மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பிறகு மக்களை நோக்கித் திரும்பினார்கள். (மிம்பரிலிருந்து) இறங்கி (பெருநாள் தொழுகையைப் போன்று) இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.
அல்லாஹ் மேகங்களை ஒன்று கூடச் செய்தான். இடி இடித்தது. மின்னல் வெட்டியது. அல்லாஹ்வின் நாட்டப்படி மழைபொழிந்தது. அவர்கள் பள்ளிக்கு வருவதற்குள் நீரோட்டமாக ஓடத்தொடங்கியது. மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் இடத்தை நோக்கி மக்கள் விரைந்து செல்வதைப் பார்த்தபோது தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்கு நபியவர்கள் சிரித்தார்கள். பிறகு, ‘அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் பெற்றவன் என்றும், நான் அல்லாஹ்வின் அடிமையும் அவன் தூதருமாவேன் என்றும் சாட்சி கூறுகிறேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவுத் (992)
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (1632)
நபி (ஸல்) அவர்கள் (மழை வேண்டிப்) பிரார்த்திக்கும் போது தம்முடைய முன்கைகளின் வெளிப்பகுதியை தம்முடைய முகத்தை நோக்கியும் உள்ளங்கைகளை பூமியை நோக்கியும் ஆக்குவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத் (12576)
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காக மழை வேண்டிய போது அவர்களை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் துஆவை நீட்டினார்கள். வேண்டுதலை அதிகப்படுத்தினார்கள். பிறகு கிப்லாவை நோக்கி திரும்பி தம்முடைய மேலாடையை மாற்றிப் போட்டார்கள். அதன் வெளிப்பகுதியை உள்பகுதியாகப் புரட்டினார்கள். நபியவர்களுடன் சேர்ந்து மக்களும் (தங்களுடைய மேலாடையை) மாற்றினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்: அஹ்மத் (16512)
நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: திர்மிதீ (512), அபூதாவுத் (984), நஸாயீ (1491), இப்னுமாஜா (1256), அஹ்மத் (3160)
மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து மழைத் தொழுகை பற்றி கூறப்பட்டுள்ள சட்டங்கள்:
- சூரியன் உதயமான பிறகு அதிகாலையில் தொழ வேண்டும்.
- திடலில் தொழ வேண்டும்.
- தொழுகைக்கு முன்பு இமாம் மிம்பர் மீது நின்று தக்பீர் சொல்லி அல்லாஹ்வைப் பெருமைப்படுத்த வேண்டும். துஆ செய்ய வேண்டும்.
- புறங்கைகளை வானத்தை நோக்கி உயர்த்திப் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும்.
- இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகளையும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- இமாம் மக்களை நோக்கி இருந்தவாறு சிறிது நேரம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- பிறகு கிப்லாவை நோக்கித் திரும்பி மேலாடையை மாற்றிப் போட்டு துஆ செய்ய வேண்டும்.
- இமாமுடன் சேர்ந்து மக்களும் மேலாடையைப் மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும்.
- மழைத் தொழுகையில் பெண்களும் கலந்து கொள்ளலாம். அதே நேரத்தில் பெண்கள் இவ்வாறு மேலாடையை மாற்றிப் போடக் கூடாது
- இமாம் மிம்பரிலிருந்து இறங்கி பெருநாள் தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்கள் தொழ வைக்க வேண்டும்.
- அதில் இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.
- பெருநாள் தொழுகையை போன்று மழைத்தொழுகை என்று சொல்லப்பட்டு இருப்பதால், முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் கூறித் தொழ வைக்க வேண்டும்.
- பெருநாள் தொழுகையில் ஓதும் அத்தியாயங்களை இதில் ஓத வேண்டும்.
மழையைக் கேட்பதற்கான பிரார்த்தனைகள்
اَللّٰهُمَّ أَغِثْنَا اَللّٰهُمَّ أَغِثْنَا اَللّٰهُمَّ أَغِثْنَا
அல்லாஹும்ம அகிஸ்னா, அல்லாஹும்ம அகிஸ்னா, அல்லாஹும்ம அகிஸ்னா
(பொருள்: இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1014)
اَللّٰهُمَّ اسْقِنَا اَللّٰهُمَّ اسْقِنَا اَللّٰهُمَّ اسْقِنَا
அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா
(பொருள்: இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு வழங்குவாயாக!)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி
நூல்: புகாரி (1013)
اَللّٰهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيْثًا مَرِيْئًا مَرِيْعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ
அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.
(இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: அபூதாவுத் (988)
ஜும் ஆவில் மழை வேண்டிப் பிரார்த்தித்தல்
நபியவர்கள் ஜும்ஆ உரையின் போது மிம்பரில் நின்றவாறு மழை வேண்டிப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பார்த்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது.
(மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி ‘இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!’ என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) ‘கனாத்’ எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (933)மழையினால் அதிக சேதம் ஏற்பட்டால் ஜும்ஆ உரையின் போது மழை நிறுத்தும்படி அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்கும் மேற்கண்ட செய்தியிலே ஆதாரம் உள்ளது.
அதிகமாக மழை பெய்யும் போது…
اَللّٰهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا اَللّٰهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَبُطُوْنِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா, அல்லாஹும்ம அலல் ஆ(க்)காமி வல் ளிராபி வபு(த்)தூனில் அவ்திய(த்)தி வமனாபி(த்)திஷ் ஷஜரி
பொருள்: ‘இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)’
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1014)
اَللّٰهُمَّ عَلٰى ظُهُوْرِ الْجِبَالِ وَاْلآكَامِ وَبُطُوْنِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம அலா ளுஹூரில் ஜிபாலி வல் ஆ(க்)காமி வபு(த்)தூனில் அவ்திய(த்)தி வமனாபி(த்)திஷ் ஷஜரி
(பொருள்: இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளை நிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1019)
மழை பொழியவும், அதனால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், மழை நிறுத்தக் கோரியும் கேட்பதற்குரிய பிரார்த்தனைகள் மேலே தரப்பட்டுள்ளன. அதுவல்லாமல், நமது சொந்த மொழியிலும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.