மாநில அளவில் ‘மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாடு’ நடத்துவது என 24.09.2017 அன்று ஈரோட்டில் கூடிய மாநிலப் பொதுக்குழுவில் முடிவானது. அம்மாநாட்டு நிரல் அறிவிக்கப்பட்ட மாத்திரத்தில் அல்லாஹு அக்பர் என்று அரங்கமே அதிர்கின்ற வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அந்த அறிவிப்பை ஆமோதித்தனர். அப்போது மாநாட்டிற்கான கால அவகாசம் சுமார் 16 மாதங்கள் இருந்தது. ஆனால் அதற்கான முதற்கட்டப் பணிகளில் கூட ஜமாஅத் இறங்க முடியாத அளவுக்கு நெருக்கடிகள் தொடர்ந்து ஏற்பட்டன.
நெருக்கடி: 1
பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைமையிலான நிர்வாகத்தின் முழுப் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னால் இந்தப் பொதுக்குழு ஏன் கூடியது? புதிய தலைவராக பீஜேவைத் தேர்வு செய்தது ஏன்? என்பதைப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நன்கு அறிவர்.
அல்தாஃபி மீதான பாலியல் குற்றச்சாட்டு, அதற்கான நடவடிக்கை, அது தொடர்பாக எழுந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், பதில்கள் என்று ஜமாஅத்தின் கால நேரம் விரயமானது.
நெருக்கடி: 2
அந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து ஜமாஅத் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு, தனது முழுக்கவனத்தையும் மாநாட்டை நோக்கித் திருப்பும் போது பீஜே மீது பாலியல் குற்றச்சாட்டு வருகின்றது.
இது ஓர் அவதூறாகப் போகட்டும்! அபத்தமாக ஆகட்டும் என்று அல்தாஃபி விஷயத்தில் நினைத்தது போலவே இவருக்கும் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் இதயத்திலும் ஏக்கத்திலும் இடி விழுந்தாற் போல் அந்தக் குற்றச்சாட்டு உண்மையானது. அவரும் அதை ஒப்புக் கொண்டார்.அதனால் அவர் பதவி விலக நேரிட்டது.
இதன் பின்னர் மாநாடு என்ன? இந்த ஜமாஅத் எழ முடியுமா? என்று கேள்வி எழுந்தது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்?
காரணம், இவரது பாலியல் வேலைகள் ஜமாஅத்தின் நம்பகத்தன்மையை முற்றிலுமாகச் சிதறடித்து விட்டன. இதன் விளைவாக, தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரமளானில் ஒரு மாநில செயற்குழு நடத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அதன் காரணமாக 20.05.2018 அன்று திருச்சி முத்தையா மஹாலில் ஒரு செயற்குழுவை நடத்தி காரண, காரியங்களை ஒளிவு மறைவின்றி மாநில நிர்வாகம் அப்படியே விளக்கியது. மொத்த செயற்குழுவும் முழு திருப்தி அடைந்தது. இதன் மூலம் மாநிலத் தலைமை, தனது நம்பகத்தன்மையைப் புதுப்பித்துக் கொண்டது. மாவட்ட நிர்வாகிகள், மாநிலம் முழுவதிலும் உள்ள தாயீக்கள் மாநில நிர்வாகத்தின் மீதான தங்களது முழு நம்பிக்கையைப் பதிவு செய்தனர். ஒருவாறாக ரமளான் கழிந்து மாநிலம் முழுதும் முழுவீச்சில் மாநாட்டை நோக்கிக் களமிறங்கக் கங்கணம் கட்டியிருந்தது.
இந்தச் சோதனையான கால கட்டத்தில் பீஜே மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து, துணைத் தலைவராக இருந்த அப்துல் கரீம் அவர்கள் மாநிலத் தலைவராகவும், அப்போதைய பொதுச் செயலாளர் செய்யது இப்ராஹீமின் விலகலைத் தொடர்ந்து, துணைப் பொதுச்செயலாளராக இருந்த தவ்ஃபீக் பொதுச் செயலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
இதற்குப் பொதுக்குழு ஒப்புதல் பெறுவது அவசியம் என்பதால் 05.08.2018 அன்று ஈரோட்டில் பொதுக்குழு கூட்டப்பட்டது. அப்போதைய சூழலில் பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்கள் மாநில நிர்வாகத்தின் மீது சுமத்தப்பட்டன.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாநில நிர்வாகம், மேலாண்மைக்குழு, தணிக்கைக் குழு ஆகியவை அடங்கிய உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகி விடுவோம் என்று பொதுக்குழுவுக்கு முந்தைய நாள் கூடிய உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி பொதுக்குழு அன்று அப்போதைய உயர்நிலைக்குழுவினர் ஒட்டு மொத்தமாகப் பதவி விலகினர். புது நிர்வாகம் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டது. இதைப் பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவார்கள்.
அந்தப் பொதுக்குழுவில் தவ்ஹீது ஜமாஅத் சந்தித்து வரும் சோதனைகளையும் குழப்பங்களையும் மனதில் கொண்டு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் புது நிர்வாகம் மாநாடு தொடர்பாகக் கருத்துக் கேட்டது.
வரும் ஜனவரி 27 அன்று விழுப்புரத்தில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாடு நடத்தலாமா? என்று கருத்துக் கேட்கப்பட்டது. அதற்கு அரங்கமே அதிரும் வகையில் மாநாடு நடத்த வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதன் பின்னர் மாநாட்டை நோக்கி மாநில நிர்வாகம் உத்வேகமாகவும் உறுதியாகவும் நகரத் துவங்கியது
அதன் அடிப்படையில் தான் செப்டம்பர் 2, 2018 அன்று திருச்சி எஸ்.எஸ். மஹாலில் மாநாட்டுப் பணிகளை முடுக்கி விடுவதற்காக செயற்குழு கூட்டப்பட்டது.
நெருக்கடி: 3
இந்தச் செயற்குழு 2ஆம் தேதி கூடுவதற்கு முன்னால் பீஜே ஏழரை மணி நேரம் பதிவு செய்யப்பட்ட நேரலையை முகநூலில் நடத்தினார். அதில் மாநில நிர்வாகிகள் 8 கோடி ரூபாயை சுருட்டி விட்டனர்; மாநில நிர்வாகம் தனக்கு எதிராகச் சதி செய்து வெளியே தள்ளி விட்டது என்று ஓர் அப்பட்டமான பொய் மூட்டையை அவிழ்த்து விட்டார்.
இதன் விளைவாக, மாநாட்டுக்காகக் கூட்டப்பட்ட செயற்குழு இவர் அவிழ்த்து விட்ட அபாண்டங்களையும் அவதூறுகளையும் விளக்குவதற்கு மட்டும் அர்ப்பணமானது. மாநில நிர்வாகம் அவருக்கு எதிராக எந்தச் சதியும் செய்யவில்லை, சரியாகத் தான் நடவடிக்கை எடுத்தது என்று அவர் தொடர்பான அனைத்து ஆடியோக்களையும் செயற்குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பணம் செய்தது. பின்னர் அவை முகநூலிலும் வெளியானது.
ஒட்டுமொத்த செயற்குழுவும் உண்மை நிலையை விளங்கி, திருச்சியில் இரண்டாவது தடவையும் தங்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணெத்தையும் பதிய வைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இத்தனைக்குப் பிறகும் செயற்குழுவைக் கூட்டிய நோக்கம் நிறைவேறும் வகையில் ஜனவரி வரையிலுமான மாநாட்டின் செயல்திட்டங்களை மாநில நிர்வாகம் அறிவித்தது.
இதன் பின்னரும் பிஜேயின் அவதூறுகள் அபாண்டங்கள் நின்றபாடில்லை. குறிப்பாகக் கணக்கு வரவு செலவுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களைக் களைவதற்காக மாவட்ட, கிளை நிர்வாகிகளை மாநில நிர்வாகம் தலைமைக்கு வரவழைத்து கணக்கு வரவு செலவுகளைப் பார்க்க ஏற்பாடு செய்தது. இது மாவட்ட நிர்வாகிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதிலும் ஒரு கணிசமான கால நேரம் விரயமானது.
இதற்கிடையே வெளிநாட்டு மண்டலங்களுக்கு மாநில நிர்வாகிககள், மேலாண்மைக் குழுத் தலைவர் ஆகியோர் சென்று கொள்கைச் சகோதரர்களுக்கு ஏற்பட்ட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்து விட்டு வந்தனர். செயற்குழுவுக்குப் பிறகு இருந்த கால அவகாசம் கிட்டத்தட்ட 4 மாதங்கள் தான். இந்த இடைவெளியில் தான் மாநாட்டுக்குரிய வேலைகள் நடந்தன.
நெருக்கடி: 4
இதற்கிடையில் ஜமாஅத் ரீதியலான பிரச்சனைகளைச் சந்தித்து, அதற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு, பெரும் பாதிப்புக்குள்ளானது. அதற்காக ஜமாஅத் சார்பில் பல லட்சங்கள் நிதி திரட்டி கேரள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் டெல்டா பகுதி மக்களின் நிலப்பகுதியின் வரைபடத்தையே மாற்றியமைத்து அந்தப் பகுதிகளை தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
கோபுரங்களை மட்டும் அந்தப் புயல் சாய்க்கவில்லை. கோபுரமாய் பொருளாதாரத்தில் உயர்நிலையில் இருந்த மக்களை ஓரிரு மணி நேரங்களில் அடித்த புயல் தலைகீழாக, குப்புறக் கவிழ்த்து விட்டது.
மாநாட்டுக்குக் களமிறங்கக் காத்திருந்த கொள்கைச் சகோதரர்கள் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணி ஆற்றுவதற்குக் களமிறங்கினர். மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் அத்தனை பேர்களும் மனித நேய மக்கள் பணியில் அல்லும் பகலுமாகப் பணியாற்றினர்.
மாநாட்டுக்கு நிதி திரட்ட வேண்டிய நமது ஜமாஅத் கஜா புயல் நிவாரண நிதி திரட்டும் பணியில் மும்முரமாக முழு வீச்சில் இறங்கினர். கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் அளவில் நிவாரண நிதியும் கோடிக்கணக்கான மதிப்பில் நிவாரணப் பொருட்களும் வசூலித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர். புயலின் இந்தச் சீற்றமும் மாநாட்டிற்கான நிதி திரட்டும் பணியில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையும் தாண்டி மாநாட்டுப் பணி தடையின்றி தொடர்ந்தது
நெருக்கடி: 5
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி நடவடிக்கை எடுக்கப்பட்ட பிஜே, தன் மீதான குற்றங்களை மறைப்பதற்காக ஜமாஅத் மீது பல்வேறு அவதூறுகளைக் கூறி, மாநாட்டிற்குப் பொருளாதாரம் கொடுக்காதீர்கள் என்ற கருத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். இதையும் தாண்டி மாநாட்டுப் பணி தொய்வின்றி தொடர்ந்தது.
நெருக்கடி: 6
பொதுவாக மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்ற நெருக்கடிகளால் வணிகர்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதனால் நிதி திரட்டுவதில் ஒரு தேக்க நிலை. இதுபோன்றே வளைகுடா நாடுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக நமது சகோதரர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நின்றதால் அவர்களது பங்களிப்பிலும் பாதிப்பு ஏற்பட்டது. இத்தனையும் தாண்டித் தான் இந்த ஜமாஅத்தின் மாநாட்டை நோக்கிய பயணம் தொடர்ந்தது.
நெருக்கடி: 7
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் பிரபலங்கள் இருந்தனர். இந்த மாநாட்டில் அப்படிப்பட்ட பிரபலங்கள், பிம்பங்கள் எதுவும் இல்லை.
நெருக்கடி: 8
திருக்குர்ஆன் மாநாடு அறிவிக்கப்பட்ட அதே தேதியில் தப்லீக் ஜமாஅத்தினர் திருச்சியில் இஜ்திமா அறிவித்தனர். இதனால் நமது மாநாட்டிற்கு வாகனங்கள் கிடைப்பதிலும் டிக்கெட் முன்பதிவிலும் பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட்டது.
இப்படி இந்த மாநாட்டிற்குச் சரிவுகள் தான் சாதக அம்சங்களாக இருந்தன. இத்தனை தடைகள், தடங்கல்களையும் தாண்டி இந்த மாநாடு நடக்குமா? என்று வினாக்குறி எழுந்தது.
இந்த வினாக்குறி நமது ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்களிடமும் இருந்தது. அதிலும் குறிப்பாக, சில கிளைகளில் ஏற்படும் சிறுசிறு சலசலப்புகள், சச்சரவுகளை எல்லாம் பெரும் பிளவுகளாகவும் பிரிவினைகளாகவும் பெரிதுபடுத்திக் காட்டும் வேலையை பீஜே செய்து வந்தார்.
ஆனால் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
பீஜே இல்லை அதனால் இந்தக் கூட்டம் காலி, இந்தக் கூடாரமும் காலி என்று கனவு கண்ட சுன்னத் வல் ஜமாஅத்திற்கும், நமது ஜமாஅத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களுக்கும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கூடிய கூட்டம் விடையளித்தது.
இத்தனை தடைகளையும் தாண்டி இந்த மக்கள் வெள்ளம் இங்கு குழுமியது எப்படி? கூடியது எப்படி? என்று எதிரிக் கூட்டம் ஆச்சரியத்தில் உறைந்து போனது.
வினாக்குறியை வியப்புக்குறியாக்கி விந்தையைப் படைத்தது அல்லாஹ்வின் அருள் தான். இதைத் தவிர்த்து வேறொன்றுமில்லை என்பதை வந்த சகோதரர்கள் புரிந்து கொண்டனர். மாநாட்டிற்கு வந்திருந்த சகோதரர்களின் விழிகளில் அருவியாய் வழிந்தோடிய கண்ணீர் இதைத் தான் எடுத்துக் கூறியது.
முந்தைய மாநாடுகளில் தொழுகைக்கு நேரம் ஒதுக்கப்பட்டாலும் ஒரே ஜமாஅத்தாகத் தொழுவதில் ஏற்படும் கால தாமதம், உளூ செய்வதில் உண்டாகும் நெருக்கடிகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, ஒட்டுமொத்த மக்களும் ஒரே ஜமாஅத்தாகத் தொழுவது கிடையாது.
ஆனால் இந்த மாநாட்டில் ஒட்டுமொத்தமாக மக்கள் மக்ரிப் இஷாவை இணைத்துத் தொழுதது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. உண்மையில் அது கூடி நின்று தொழுத மக்களுக்குக் கூட்டுத் தொழுகையாக மட்டுமல்ல! கூட்டு அழுகையாகவும் அமைந்தது. தொழுத மக்கள் தேம்பித் தேம்பி அழுததை அருகில் நின்றவர்கள் உணரமுடிந்தது.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று புகழை அல்லாஹ்வுக்கு முழு மனதுடன் சாற்றுகின்ற அதே வேளையில் இந்த மக்கள் கூட்டம் எதையும் சாதித்து விடப்போவதில்லை. நம்மை விடக் கொள்கையில் பன்மடங்கு உறுதிப்பாடு கொண்ட நபித்தோழர்களைப் பார்த்து ஹுனைன் போர்க்களத்தில் அல்லாஹ் கூறியதை நம் மனக்கண் முன் கொண்டு வருவோமாக!
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்தபோது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.
அல்குர்ஆன் 9:25
அவர்களே இப்படி என்றால் நாம் எம்மாத்திரம் என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொள்வோம்.
நமக்கு அருகில் இனாம்குளத்தூரில் ஒரு கூட்டம் கூடிக் கலைந்திருக்கின்றது. அதைவிடப் பெருங்கூட்டம் தங்கள் ஊர்களில் தங்கியிருக்கின்றது. அந்த மக்களிடமும் இந்த ஏகத்துவக் கொள்கையைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கின்றது என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தோம் என்றால் மாநாட்டுக்கு வந்த கூட்டம் வெறும் பூஜ்யம், வெறும் சூன்யம் தான், இன்னும் நாம் செல்லவேண்டிய பயணம் வெகு தூரம் என்ற உண்மை நமக்குப் புரியும்.
அழைப்புப் பணியில் உழைப்பு செய்தால் இன்னும் அதிக தூரம் செல்லலாம். அதிக மக்களை வெல்லலாம் என்ற இலக்கோடும் இலட்சிய வெறியோடும் இன்னும் வீரியமாகவும் வேகமாகவும் அழைப்புப் பணி செய்வோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்
எம்.ஏ. அப்துர்ரஹ்மான்
மனிதர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதமான வணக்க வழிபாடுகளை இறைவன் கற்றுத் தருகின்றான்.
மனிதர்களுக்கு இறைவன் வழங்கியிருக்கின்ற வணக்க வழிபாடுகளில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், அனுதினமும் இறைவனிடத்தில் கையேந்தி, பணிவுடன் கேட்கின்ற பிரார்த்தனை.
ஒரு மனிதன் பிரார்த்தனையின் மூலமாகவே தன்னுடைய அனைத்து விதமான கஷ்டங்கள், பாரங்கள், சிரமங்கள், சோதனைகள் இதுபோன்ற ஒட்டு மொத்தத்தையும் இறைவனிடத்தில் இறக்கி வைக்கின்றான். அத்தகைய மாபெரும் ஆயுதமே பிரார்த்தனை.
பணக்காரன், ஏழை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவரும் தங்களுடைய மன பாரத்தைக் கொட்டுகின்ற ஒரு நீரூற்று இந்தப் பிரார்த்தனையாகும். இதன் காரணமாகத் தான் பிரார்த்தனையை இஸ்லாமிய மார்க்கம் மிகவும் சிறப்பித்துச் சொல்கின்றது.
பிரார்த்தனையை அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏராளமான இடங்களில் மிகவும் சிறப்பித்து நமக்கு கற்றுத் தருகின்றார்கள். பிரார்த்தனையின் சிறப்புகள், பிரார்த்தனையினால் நாம் அடையும் நன்மைகள் என்று பல்வேறு விதமான வழிமுறைகளை வழிகாட்டுகின்றார்கள்.
பிரார்த்தனையைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
‘‘பிரார்த்தனை தான் வணக்கமாகும்’’ என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்கள்: அஹ்மத் 17629, 17660, 17665
பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று சொல்லாமல் வணக்கங்களிலேயே தலையாய வணக்கம் பிரார்த்தனை என்ற கருத்துப்பட நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணர்வதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் பிரார்த்தனையில் கூடுதலாகவே உள்ளது என்பதை இந்தச் செய்தி உணர்த்துகின்றது.
அதிலும் மற்றவர்கள் கேட்கின்ற பிரார்த்தனையைக் காட்டிலும் பாதிக்கப் பட்டவர்களின் பிரார்த்தனை, இறைவனிடத்தில் வித்தியாசமானது.
பாதிக்கப்பட்டவர்கள் இறைவனிடத்தில் கையேந்துகின்ற பிரார்த்தனையை இறைவன் தனித்துவம் வாய்ந்ததாகக் கருதி, அதற்கு வெகு சீக்கிரமே பதிலளிக்கின்றான்.
ஒரு மனிதன் இறைவனுக்குச் செய்யக்கூடிய பாவங்களை, இறைவனிடத்தில் அந்த மனிதர் பாவமன்னிப்புக் கேட்டு விட்டால் இறைவன் தன்னுடைய அடியார்களின் மீது கருணைப் பார்வையைப் பொழிந்து, அனைத்துப் பாவங்களையும் தான் நாடியவர்களுக்கு மன்னிக்கத் தயாராக உள்ளான்.
ஆனால் ஒரு மனிதன், தன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற சக மனிதர்களுக்குச் செய்கின்ற பாவங்களை அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்கவே மாட்டான் என்று சொல்கின்ற அளவுக்கு இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது.
மேலும், சக மனிதர்களிடத்தில் எப்படி நடப்பது என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அற்புதமான முறையில் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான்.
நூல்: புகாரி 2442
ஒரு முஸ்லிம், சக முஸ்லிமுக்கு ஒருக்காலும் அநீதி இழைக்க மாட்டான் என்று கூறுவதன் மூலம், ஒரு முஸ்லிம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் பறைசாற்றுகின்றார்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை
பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு யார் அநியாயம் செய்தார்களோ அவர்களுக்கு எதிராகத் தனது இறைவனிடத்தில் கையேந்தி, இறைவனின் சன்னிதானத்தில் வீழ்ந்து விட்டால், அந்தப் பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு அல்லாஹ் வேகமாகச் செவி சாய்க்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெள்ளத் தெளிவாக நமக்கு விளக்குகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.
நூல்: புகாரி 1496
அநீதம் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு ஒவ்வொருவரும் அஞ்சிக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பாதிக்கப்பட்டவன் இறைவனிடத்தில் கையேந்தி விட்டால் அல்லாஹ்வுக்கும், பாதிக்கப்பட்டவனுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை என்றும் நபி (ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையின் தனித்துவத்தைப் பற்றி நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
ஒரு மனிதனுக்கோ அல்லது நம்மை நம்பி சில காரியங்களையும், பொறுப்புகளையும் ஒப்படைத்த கூட்டத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தி விட்டால் அல்லது நம்ப வைத்து ஏமாற்றி விட்டால், பாதிப்படைந்தவர்கள் விரக்தியில், கடுமையான மனச் சங்கடத்தில் ‘இறைவா! இந்த நாசக்காரனை அழித்து விடு!’ என்று கையேந்திக் கதறி விட்டால் அல்லாஹ்வுக்கும், கையேந்தியவனுக்கும் இடையில் எந்தத் திரையுமின்றி அங்கீகரித்து இறைவன் பதிலளிக்கின்றான்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை’’ என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.
நூல்: புகாரி 2448
இந்தச் செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்போது சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். ஒரு நபித்தோழரை, ஒரு பகுதிக்கு ஆட்சியாளராக அனுப்பும் போது சொல்கிறார்கள். ஏனென்றால் மற்ற எவரையும் விட, பதவியில் இருப்பவர்கள் தான் மக்களுக்கு அநியாயம் செய்பவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.
மறுமையின் இருள்
சக மனிதர்களுக்கு நாம் இழைக்கின்ற அநீதி மறுமை நாளில் பூதாகரமாகக் கிளம்பி நம்மை வறுத்தெடுக்கும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதி, மறுமை நாளின் பல இருள்களாக காட்சி தரும்.
நூல்: புகாரி 2447
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.
நூல்: முஸ்லிம் 5034
மறுமையின் இருள் என்பது நாம் மீளவே முடியாத அளவுக்குப் படுபயங்கரமான பாதிப்பை ஏற்ப்படுத்துகின்ற இழிவு தரும் இருளாகும். அந்த இழிவிலிருந்தும், இருளிலிருந்தும் நாம் தப்பிக்க வேண்டுமானால் பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்து தவிர்ந்து இருக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
மேலும், நாம் பிறருக்கு இழைக்கின்ற அநீதியின் காரணமாக அதுவே நம்மை மறுமையில் அதள பாதாளத்திலே வீசி எறிந்து, நரகத்தில் விழுந்து விடுவதற்குக் காரணமாக அமைந்து விடும். எனவே, சக மனிதர்களிடம் நடந்து கொள்ளக் கூடிய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு வாழ வேண்டும்.
மறுமையின் பேரிழப்பு
அநீதி இழைத்தவர்கள் மறுமையில் அதிகப்படியான இழப்பைச் சந்திப்பார்கள் என்றும், செய்த நன்மைகள் அனைத்தும் அழிந்து நாசமாகி விடும் என்றும் பயங்கரமான எச்சரிக்கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
நூல்: புகாரி 2449
நாளை மறுமையில் அநீதி இழைத்தவர்கள் படும் அவல நிலையை இச்செய்தி நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அநீதி இழைத்தவர்கள் இந்த உலகத்திலேயே தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் கணக்குத் தீர்த்துக் கொள்ளவில்லையானால், நாளை மறுமையில் அவர்கள் செய்த நன்மையை வாங்கிக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் கணக்குத் தீர்த்து கொள்வார்கள். அநியாயக்காரனின் நன்மைகள் முடிந்து விட்டால், பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய தீமைகளை அவர்களின் தலையில் சுமத்தி கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள்.
இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக சக முஸ்லிம்களுக்கு துரோகத்தையும், நம்ப வைத்து ஏமாற்றுவதையும், பெரும் கூட்டத்திற்கு அநீதி இழைப்பதையும் பார்க்கின்றோம்.
அநீதியின் அளவுக்கு நன்மைகள் பறிக்கப்படும் நாளில் கைசேதப்பட்டு நிற்பதை அஞ்சி, பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்து தவிர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அநியாயம் செய்வது ஹராம்
ஒரு மனிதர் இறைவனுக்கோ அல்லது சக மனிதர்களுக்கோ அநியாயம் செய்வதை இறைவன் தடை செய்து விட்டதாக இறைவனே கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துரைக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
என் அடியார்களே!
அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.
என் அடியார்களே!
உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே. ஆகவே, என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள். உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன்.
நூல்: முஸ்லிம் 5033
அநீதியிழைப்பதை அல்லாஹ் தனக்கே தடை செய்திருக்கின்றான். மேலும், மனிதர்கள், சக மனிதர்களுக்கு அநீதியிழைப்பதையும் தடை செய்து விட்டேன் என்று அறுதியிட்டுச் சொல்கின்றான்.
இந்த எச்சரிக்கைக்குப் பயந்து, நம்பி ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளுக்கு நீதியாகவும், நேர்மையாகவும், இறையச்சத்துடனும், இன்னும் பிறருக்கு எந்தக் காரியத்திலும், எவ்விதத்திலும் அநீதி இழைப்பதிலிருந்து ஒதுங்கி நல்ல மனிதர்களாக வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இந்த உலகிலேயே தண்டனை கிடைக்கலாம்
பாதிக்கப்பட்டவர்கள் இறைவனிடத்தில் சாபப் பிரார்த்தனையைக் கேட்டுக் கையேந்தி விட்டால், அந்தப் பிரார்த்தனைக்கு இறைவன் இந்த உலகத்திலேயே பதிலளித்து, அதற்குண்டான இழிவையும், தண்டனையையும் வழங்கி மக்களுக்கு முன்னால் தலைக்குனிவை ஏற்படுத்தலாம். அல்லது மறுமையில் இதற்கான தண்டனை கிடைக்கலாம்.
பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை இந்த உலகத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட சம்பவம் நபித்தோழர்கள் காலத்தில் நடைபெற்றதாக செய்திகள் உள்ளன.
சயீத் (ரலி) அவர்கள் மீது, அர்வா என்ற பெண்மணி அபாண்டமாகப் பொய்ப்பழி சுமத்துகின்றாள். ஆனால் ஒன்றுமே செய்யாத, பாதிக்கப்பட்ட சயீத் (ரலி) அவர்கள், அர்வா என்ற பெண்ணுக்கு எதிராக இறைவனிடத்தில் சாபப் பிரார்த்தனையைக் கேட்கின்றார்கள். அந்தச் செய்தி இதோ:
சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அர்வா பின்த் உவைஸ் என்ற பெண், எனக்குரிய வீட்டின் ஒரு பகுதி தொடர்பாக வழக்காடினாள். அப்போது நான், “அவளையும் அந்த வீட்டையும் விட்டுவிடுங்கள். ஏனெனில், “யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்‘ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். ‘‘இறைவா! அவள் (தனது வாதத்தில்) பொய் சொல்பவளாக இருந்தால், அவளது பார்வையைப் பறித்துவிடு. அவளது சவக்குழியை அந்த வீட்டிலேயே அமைத்துவிடு’’ என்று கூறினேன்.
இந்த ஹதீஸை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஸைத் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பின்னர் நான் அந்தப் பெண்ணைப் பார்வையற்றவளாகப் பார்த்தேன். அவள் சுவர்களைத் தடவிக்கொண்டு இருந்தாள். “சயீத் பின் ஸைதின் பிரார்த்தனை எனது விஷயத்தில் பலித்துவிட்டது’’ என்று கூறுவாள். இந்நிலையில் அவள் (ஒரு நாள்) தனது வீட்டில் நடந்துகொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்த கிணறு ஒன்றை அவள் கடந்து சென்றாள். அப்போது அதில் அவள் (தவறி) விழுந்துவிட்டாள். அதுவே அவளது சவக் குழியாக அமைந்தது.
நூல்: முஸ்லிம் 3291
சயீத் (ரலி) அவர்களுக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை அநியாயமாகப் பறித்துக் கொண்ட அர்வா என்ற பெண்ணுக்கு எதிராக, தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை முன்னிறுத்தி அல்லாஹ்விடத்தில் முறையிடுகின்றார். பின்னர் இறைவன், அந்தப் பெண்ணைக் கண் தெரியாதவளாக ஆக்கி, அந்த வீட்டையே அவளுக்கு சவக்குழியாக மாற்றி விடுகின்றான்.
பாதிக்கப்பட்டவர்கள் அல்லாஹ்விடத்தில் கையேந்தி விட்டால், வல்ல இறைவன் அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு அநியாயம் செய்த அயோக்கியர்களுக்கு கடுமையான தண்டனையையும், இழிவையும் வழங்கி கேவலப்படுத்துகிறான் என்ற செய்தியை மேற்கண்ட வரலாற்றுச் சம்பவத்தில் பார்க்கிறோம்.
அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை
அநியாயம் செய்பவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து செய்த தவறை நியாயப்படுத்தாமல், திருந்தி, வருந்தி வாய்மூடி அமைதியாக இருந்து அல்லாஹ்விடம் தான் செய்த அநியாயத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் இறைவன் கடுமையாக தண்டிப்பான்.
என்றென்றும் உயிருடனிருப்பவன் முன்னே முகங்கள் கவிழ்ந்து விடும். அநியாயத்தைச் சுமந்தவன் நட்டமடைந்து விட்டான்.
அல்குர்ஆன் 20:111
அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். “குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?’’ என்று கவனிப்பீராக!
அல்குர்ஆன் 27:11
அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
அல்குர்ஆன் 3:57
இன்னும் இதுபோன்ற ஏராளமான திருமறை வசனங்கள் அநீதம் இழைப்பவர்களுக்கு எச்சரிக்கையை அள்ளி வீசுகின்றது. இதுபோன்ற கடுமையான இறைவனின் எச்சரிக்கைக்கு அஞ்சி வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இன்றைய கால கட்டத்தில் சர்வ சாதாரணமாக மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கின்ற நம்பிக்கை மோசடியை, பொறுப்பு மோசடியைப் பலர் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் சிலர், பிறருக்கு அநியாயங்களை எல்லாம் செய்து விட்டு, பின் அதை நியாயப்படுத்துகின்ற அவல நிலையையும் பார்க்கிறோம்.
தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றார்கள். பொய்யான குற்றச்சாட்டுகளை சர்வ சாதாரணமாகக் கூறி, அதைப் பரப்பியும் வருவதைப் பார்க்கிறோம்.
அத்தகையவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்குப் பயந்து திருந்தி வாழ வேண்டும். அதற்கு வல்ல இறைவன் உதவி செய்வானாக!!!
நபிகளாரின் வஸியத்
எம்.ஐ.சுலைமான்
நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்நாட்களில் அவர்களின் தோழர்களுக்கு அழகிய பல அறிவுரைகளைச் சொல்லியுள்ளார்கள். அவற்றில் சில அறிவுரைகள் மிகவும் முக்கியமானதாகவும் அமைந்துள்ளது. அவற்றை நபிகளார் மிகவும் வலியுறுத்திச் சொல்லியுள்ளார்கள்.
அது போன்று வலியுறுத்தி நபிகளாரால் சொல்லப்பட்ட செய்திகளைத் தொகுத்து இங்கு தருகிறோம்.
இரவுத் தொழுகை
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோற்பது, இரண்டு ரக்அத் ளுஹா தொழுகை தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள். நான் இறக்கும் வரை அவற்றை விடமாட்டேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (1178), முஸ்லிம் (1330)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு மூன்று முக்கியமான விஷயங்களை வலியுறுத்திச் சொல்லியுள்ளார்கள்.
மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது.
ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவது.
வித்ரு தொழுவது.
இந்த மூன்றும் நபிகளாரால் வலியுறுத்திச் சொல்லப்பட்ட, நன்மைகள் அதிகம் கிடைக்கும் நல்லறங்களாகும்.
மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதன் நன்மைகள்
மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மைகளைப் பெறலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள் இரவில் நின்று வணங்கு வதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே’’ என்று கேட்டார்கள். நான், ஆம் (உண்மைதான்!) என்றேன். அவர்கள், ‘‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும். ஆகவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்’’ அல்லது ‘‘காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின்ஆஸ் (ரலி)
நூல்கள்: புகாரி (3419), முஸ்லிம் (2136)
ளுஹா தொழுகையின் நன்மைகள்
தினமும் இரண்டு ரக்அத்கள் ளுஹா தொழுதால் பல நன்மையான காரியங்கள் செய்த கூலியைப் பெற்றுவிடமுடியும்.
உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (-சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (-அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (-லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (-அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1302)
வித்ரு தொழுதல்
நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைக்குப் பிறகு அதிகம் முக்கியத்துவம் கொடுத்த தொழுத தொழுகை இரவுத் தொழுகையாகும்.
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (2157)
இரவில் தொழும் தொழுகையில் இறுதியாகத் தொழும் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுமாறு நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்.
இரவில் தொழுபவர் இறுதியாக வித்ர் தொழட்டும். ஏனெனில், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுவந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1368)
தொழுகையை உரிய நேரத்தில் தொழுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வஸிய்யத் செய்த விஷயங்களில் ஒன்று, தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதாகும்.
என் உற்ற தோழர் (நபி – -ஸல்) அவர்கள் என்னிடம் “(உங்கள் தலைவருடைய சொல்லை) செவியேற்று அதற்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் (கை, கால்) உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே’ என்றும், தொழுகையை உரிய நேரத்தில் தொழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். “பின்னர் மக்கள் தொழுது முடித்துவிட்ட நிலையில் அவர்களை நீங்கள் அடைந்தால், (முன்பே) உங்களது தொழுகையை நீங்கள் காப்பாற்றிக் கொண்டவராவீரர்கள்; அவ்வாறின்றி (அவர்களுடன் சேர்ந்து நீங்கள் மறுபடியும் தொழுதால்) அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்’’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1142)
இந்தச் செய்தியில் முதலில் ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுதல் தொடர்பாக நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள். ஆட்சித் தலைவரின் தோற்றங்களைக் கவனிக்காமல் முஸ்லிம்களின் தலைவராக இருப்பதால் அவருக்குக் கட்டுப்படுதல் அவசியமாகும். அவ்வாறு நடக்கும் போது தான் நாட்டின் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும். முஸ்லிம்களுக்கும் வலிமை இருக்கும் என்பதால் இதை நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.
இரண்டாவதாக இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகையைப் பற்றி கட்டளையிட்டுள்ளார்கள். நாள் ஒன்றுக்கு ஐந்து நேரம் தொழுவது கடமையாகும். ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரமும் இறுதி நேரமும் உள்ளது. எனவே அந்த நேரத்திற்குள் தொழுவது அவசியமாகும்.
இதையே அல்லாஹ்வும் குறிப்பிடுகின்றான்.
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(அல்குர்ஆன் 4:103)
தொழுகையைத் தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் தொழுவது அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்திற்குரியதாகும்.
‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’’ என்று கேட்டேன். அவர்கள், ‘‘உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது’’ என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். ‘‘தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’ என்றார்கள். பிறகு எது? என்றேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரி (527), முஸ்லிம் (137)
அண்டை வீட்டாரைக் கவனித்தல்
என் உற்ற தோழர் (நபியவர்கள்,) என்னிடம், “நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்து, உம்முடைய அண்டை வீட்டார்களில் ஒரு வீட்டாரைப் பார்த்து அதிலிருந்து சிறிதளவை அவர்களுக்கும் கொடுத்து உதவுக!’’ என்று அறிவுறுத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (5121)
நாம் வசிக்கும் வீட்டின் அண்டை வீட்டார் விஷயத்தில் நன்மை நாடவேண்டும். அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
இந்த நபிமொழியில் நாம் குழம்பு வைத்தால் பக்கத்து வீட்டாருக்கும் பயன்படும் வகையில் அதில் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்தாவது பக்கத்து வீட்டாருக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்று நபிகளார், அபூதர் (ரலி) அவர்களுக்கு வஸியத்தாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களும் நபிகளாருக்கு இதை அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி (6014), முஸ்லிம் (5118)
கோபத்தை கட்டுப்படுத்துதல்
மனிதன் பெரும் தவறுகள் செய்வதற்குக் காரணமாக அமைவது கோபமாகும். கோபத்தில் நிதானத்தை இழக்கின்றான். அதனால் பல பெரிய, சிறிய தவறுகளைச் செய்துவிடுகின்றான். அதனால்தான் நபிகளார் கோபத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தினார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், கோபத்தைக் கைவிடு என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (அறிவுரை கூறுங்கள் எனப்) பல முறை கேட்ட போதும் நபி (ஸல்) அவர்கள் கோபத்தைக் கைவிடு என்றே சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6116)
அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அல்குர்ஆன் 3:134
அதிகாரம் படைத்தவர்கள் இறைச்சத்தைப் பேணுதல்
ஆட்சி, அதிகாரம் வந்துவிட்டால் மனஇச்சையின் அடிப்படையில் ஆணவத்துடன் நடப்பது சாதாரணமாக ஆட்சியாளரிடம் ஏற்படுகிறது. அதிகாரம் வரும் போது அடக்கமும் பணிவும் இறைச்சமும் ஏற்படவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால், தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: முஸ்லிம் (3566)
தொழுகைக்குப் பிறகு பிரார்த்தனை
மறுமையில் சொர்க்கம் கிடைக்க வேண்டுமானால் அல்லாஹ் கூறிய அடிப்படையில் அழகிய முறையில் வணக்க வழிபாட்டில் ஈடுபடவும் அவனுக்கு நன்றி செலுத்தவும் வேண்டும். இதற்கு அல்லாஹ்வின் உதவி நமக்குத் தேவை. இந்த உதவியை அல்லாஹ்விடம் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கேட்குமாறு நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.
‘‘அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்
(இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டு விடாதே’’ என்று உனக்கு நான் வஸியத் செய்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்கள்: அபூதாவுத் 1301, அஹ்மத் 21109
நபிகளார் வலியுறுத்திய இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நடக்க முயற்சி செய்வோம்.
எலிக்கறி சாப்பிடலாமா?
கேள்வி: எலிக்கறி தொடர்பாக மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன? அது ஹராம் என்று நேரடியான ஆதாரங்கள் வந்துள்ளதா?
அப்துல் காதர், நெல்லை
பதில்:
எலிக்கறி சாப்பிடலாமா? கூடாதா? என்பது தொடர்பாகத் தற்போது பல கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
எலிக்கு வேட்டையாடும் நகங்களோ, கோரைப் பற்களோ கிடையாது, எனவே அதனைச் சாப்பிடுவதால் குற்றமில்லை என்பதே எலிக்கறி சாப்பிடலாம் என்பவர்கள் முன்வைக்கும் ஆதாரமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (3914)
ஒன்றை உண்பது ஹலாலா? ஹராமா? என முடிவு செய்வதற்கு இந்த இரண்டு மட்டுமே அளவுகோலாகச் சொல்லப்பட்டிருந்தால் எலிக்கறி சாப்பிடலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இது அல்லாதவையும் நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது.
எலிக்கறியைப் பொறுத்தவரை அதை உண்ண அனுமதியில்லை என முடிவு செய்வதற்குப் போதுமான சான்றுகள் நபிமொழிகளில் உள்ளன.
1828- حَدَّثَنَا أَصْبَغُ قَالَ : أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ عَنْ يُونُسَ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ سَالِمٍ قَالَ : قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ حَفْصَةُ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : خَمْسٌ مِنَ الدَّوَابِّ لاَ حَرَجَ عَلَى مَنْ قَتَلَهُنَّ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْفَأْرَةُ وَالْعَقْرَبُ وَالْكَلْبُ الْعَقُورُ.
ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (1826, 1827, 1828 & 1829)
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ عَائِشَةَ – رضى الله عنها – عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِى الْحِلِّ وَالْحَرَمِ الْحَيَّةُ وَالْغُرَابُ الأَبْقَعُ وَالْفَارَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْحُدَيَّا யு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தீங்கிழைக்கக்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, வயிற்றுப் பகுதியிலும், மேற் பகுதியிலும் வெண்மை நிறம் கொண்ட காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 2254
சில அறிவிப்புகளில் ‘‘குராப்” (காகம்) என்று பொதுவாகக் கூறப்பட்டிருந்தாலும் மேலும் சில அறிவிப்புகளில் ‘‘அல்குராபுல் அப்கஃ” (வயிற்றிலும் மேற்பகுதியிலும் வெண்ணிறம் கொண்ட காகம்) என தெளிவுபடுத்தி வந்துள்ளது. எனவே இந்தக் குறிப்பிட்ட வகை காகம் மட்டுமே கொல்லப்படவேண்டியதாகும்.
மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளிலும் பாம்பு, வயிற்றுப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் வெண்மை நிறம் கொண்ட காகம், எலி, வெறிநாய், பருந்து, தேள் ஆகிய உயிரினங்கள் புனித எல்லைக்குள்ளும், வெளியிலும் கொல்லப்பட வேண்டியவை எனக் கூறப்பட்டுள்ளது.
இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ளவர்களே இவற்றைக் கொல்ல வேண்டும் எனும் போது இஹ்ராம் அணியாதவர்கள் இவற்றைக் கொல்லலாமா? கூடாதா? என்ற கேள்விக்கே இடமில்லை. இரண்டு நிலைகளிலும் உள்ளவர்கள் இந்த உயிரினங்களைக் கொல்ல வேண்டும் என்பது தெளிவாகிறது.
இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள தீங்கு தரும் உயிரினங்களை கொல்ல வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இது எம்முறையில் கொன்றால் நாம் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக ஆகுமோ அம்முறையில் கொல்வதல்ல. மாறாக உண்பதற்கு தடை செய்யப்பட்ட முறைகளில் கொல்வதாகும். பின்வரும் நபி மொழி அதைத் தெளிவுபடுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு “தீங்கிழைக்கக்கூடிய பிராணி’ (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள்
அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்; முஸ்லிம் (4507)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகின்றன. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும், மூன்றாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும் எழுதப்படும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4510)
தீங்கு தரும் பிராணியான பல்லியை அடித்துக் கொல்ல வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இவ்வாறு கொல்லுதல் உண்பதற்கு தடை செய்யப்பட்ட முறையாகும்.
உண்பதற்கு தகுதியான உயிரினங்களை உண்பதற்கு தடை செய்யப்பட்ட முறையில் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கொல்லுமாறு உத்தரவிட்டதிலிருந்தே இவை அனைத்தும் உண்பதற்கு ஹராம் ஆனவை என்பதை தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இது தொடர்பாக விரிவாகக் காண்போம்.
கொல்லப்பட வேண்டும் என மார்க்கம் கட்டளையிட்டவை உண்தற்கு தடை செய்யப்பட்டவை ஆகும்.
குர்ஆனிலும் சுன்னாவிலும் தனித்த சில உயிரினங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கொல்லப்பட வேண்டியவை என்றும், கொல்லப்படக் கூடாது என்றும் தடைசெய்யப்பட்டுள்ளதோ அவை உண்பதற்கும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
தவளையை நபி (ஸல்) அவர்கள் கொல்லக் கூடாது என்று தடை செய்துள்ளார்கள். எனவே அவற்றை உண்பதும் கூடாது. ஏனெனில் சாப்பிடுவதற்காக மார்க்கம் அனுமதித்த முறைப்படி அறுத்தாலோ அல்லது எம்முறையில் கொன்றாலும் அவை உயிர் நீக்கம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதிலிருந்தே கொல்லப்படக் கூடாது என்று தடுக்கப்பட்டால் அவை உண்பதற்கும் தடுக்கப்பட்டவை ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் கொல்லக் கூடாது என்று தடுத்திருப்பதில் நாம் அறிந்தது உட்பட அறியாத பல காரணங்களும் இருக்கலாம். எனவே இது மட்டும்தான் காரணம் என்பதை நாம் உறுதி செய்ய இயலாது.
அது போன்று கொல்லுங்கள் என்று உத்தரவிட்டவற்றையும் உண்பது கூடாது.
நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் பாம்பு, பருந்து, காகம், தேள், எலி, வெறிநாய் ஆகியவற்றைக் கொல்லுங்கள் என்று நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். கொல்லுங்கள் என்ற கட்டளையில் உண்ணக் கூடாது என்ற கட்டளையும் உள்ளடங்கியுள்ளது.
கொல்லுதல் என்பது இரண்டு வகைப்படும்.
ஒன்று: உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அல்லாஹ்வின் பெயர் கூறி கூர்மையான கருவியால் அறுத்தல், அது போன்று உண்பதற்காக வேட்டையாடப்படும் பிராணியை மார்க்கம் கற்றுத் தந்த முறைப்படி வேட்டையாடுதல். இம்முறையில் கொல்லப்படுபவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை ஆகும். இதற்கு ‘‘தப்ஹ்” எனப்படும்.
இரண்டு : அடித்தோ, வெட்டியோ, நசுக்கியோ, மிதித்தோ, எரித்தோ மொத்தத்தில் உண்பதற்காக வரையறுக்கப்பட்ட கொல்லும் முறை அல்லாமல் எம்முறையிலும் கொல்லுதல். இதற்கு ‘‘கத்ல்” எனப்படும்.
இவ்வாறு கொல்லப்படுபவை அனைத்தும் உண்பதற்கு தடைசெய்யப்பட்டவை ஆகும்.
இவ்வாறு இரண்டு முறைகள் உள்ளன என்பதை பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே, கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்.
அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3955)
மேற்கண்ட நபி மொழியில் ‘‘கொல்லுதல்” என்பதற்கு ‘‘கத்ல்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இவ்விடத்தில் இது உண்பதற்கான பிராணிகளை எவ்வாறு அறுக்க வேண்டும்,வேட்டையாட வேண்டும் என்று மார்க்கத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதோ அது அல்லாத முறைகளில் கொல்லப்பட்டவைகளைக் குறிக்கும்.
”அறுத்தல்” என்பதற்கு ‘‘தப்ஹ்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது உண்பதற்கான பிராணிகளை எவ்வாறு அறுக்க வேண்டும்,வேட்டையாட வேண்டும் என்று மார்க்கம் வரையறுத்துள்ளதோ அதற்கு உட்பட்டு கொல்லப்பட்டவைகளைக் குறிப்பதாகும்.
எவ்வாறு கொன்றால் சாப்பிடலாம் என்று மார்க்கம் வரையறுத்துத் தந்துள்ளதோ அந்த அடிப்படைகளைத் தாண்டி கொல்லப்படுபவை அனைத்துமே ஹராம் ஆகும். இதனை பின்வரும் வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.)
(அல்குர்ஆன் 5 : 3)
மேற்கண்ட வசனத்தில் வரையறுத்த முறையைத் தாண்டி கொல்லப்பட்ட உயிரிழந்த அனைத்துப் பிராணிகளும் ஹராம் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
அறுக்கப்பட்டதா? கொல்லப்பட்டதா? எனச் சந்தேகம் வந்தால் கூட அவற்றை உண்பது ஹராம் ஆகும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் ஈட்டி (மூலம் வேட்டையாடுவதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், பிராணியை ஈட்டி அதன் முனையால் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்; பக்கவாட்டாகத் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்ணாதே. ஏனெனில் அது அடித்துக் கொல்லப்பட்டதாகும் என்றார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல் ; புகாரி (2054)
வேட்டையாடும் போது அம்பையோ ஈட்டியையோ அல்லாஹ்வின் பெயர் கூறி எறியும் போது அதன் கூர்மையான பகுதி தாக்கினால்தான் அது அறுக்கப்ப்பட்டது. உண்பதற்கு ஹலாலானது. அல்லாஹ்வின் பெயர் கூறியே எறிப்பட்டாலும் அதன் கூர்மையான பகுதியால் தாக்கப்படாமல் அந்த ஈட்டி அல்லது அம்பு அதன் மீது விழுந்ததினால் அது செத்துப் போனால் அது அடித்துக் கொல்லப்பட்டது. அதை உண்பது ஹராம் ஆகும்.
”தீங்கிழைக்கும் ஐந்து உயிரினங்களைக் கொல்ல வேண்டும்” என்ற நபிமொழியில் இடம் பெறும் ‘‘கத்ல்” என்ற வார்த்தை வரையறுக்கப்பட்ட முறையைத்தாண்டி கொல்லப்படுதல் என்ற பொருளில்தான் இந்த செய்தியில் இடம் பெற்றுள்ளது.
இஹ்ராமுடைய நிலையில்…
இஹ்ராமுடைய நிலையில் உள்ளவர்கள் உணவிற்காக தரையில் வேட்டையாடுவது ஹராம் ஆகும். ஒரு பிராணியை வேட்டையாடி சாப்பிட வேண்டுமென்றால் அது மார்க்கம் குறிப்பிட்ட முறையில் வேட்டையாடப்பட்டிருக்க வேண்டும்.
”தீங்கிழைக்கக் கூடிய ஜந்து உயிரினங்களை இஹ்ராம் நிலையில் உள்ளவர்களும் கொல்லலாம்” என்றால் அது உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினம் இல்லை என்பது தெளிவாகிறது.
அது போன்று ‘‘இஹ்ராமுடைய நிலையில் உள்ளவர்களும் கொல்லுங்கள்” என்று கட்டளையிடுவதின் மூலம் அடித்தோ, வெட்டியோ, நசுக்கியோ கொல்லும் முறையைத்தான் நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள்.
பின்வரும் செய்தியிலிருந்தும் அதனை அறிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இஹ்ராம் கட்டிய ஒருவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?’’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் “வெறிநாய், எலி, தேள், பருந்து, (நீர்க்)காகம், பாம்பு ஆகியவற்றைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுவந்தார்கள்’ என்று என்னிடம் கூறினார்’’ என்றார்கள். இவற்றை ஒருவர் தொழுகையில் இருக்கும்போதும் கொல்லலாம் என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நூல் : முஸ்லிம் (2262)
தொழுகையில் இருக்கும் போதும் இந்த ஐந்து உயிரினங்களைக் கொல்லலாம் என்று செய்தி குறிப்பிடுகிறது.
ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது பாம்போ, தேளோ வரும் என்றால் எப்படிக் கொன்றால் அது சீக்கிரம் சாகுமோ அந்த முறையில்தான் அதனைக் கொல்வார். அதனைப் பிடித்து பிஸ்மி கூறி கூர்மையான கருவியால் அறுத்துக் கொண்டிருக்கமாட்டார்.
இவ்வாறு ‘‘உண்பதற்காக வரையறுக்கப்பட்ட முறையைத் தாண்டி” வேறு முறைகளில் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டால் அவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை இல்லை என்பைதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இஹ்ராம் அணிந்தவர் கொல்லலாம் என்பதில் பெறப்படும் விளக்கம்
இஹ்ராம் அணிந்த ஒருவர் தரையில் உணவிற்காக வேட்டையாடுவது ஹராம் ஆகும்.
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும்போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்!
(அல்குர்ஆன் 5:95)
இஹ்ராமுடன் இருக்கும்போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் 5:96)
மேற்கண்ட வசனங்களில் உண்பதற்கு தகுதியான பிராணிகளைத்தான் வேட்டைப் பிராணிகள் என்று கூறப்பட்டுள்ளது. இஹ்ராமுடன் உள்ளவர்கள் உணவுக்காக வேட்டைப் பிராணிகளைக் கொல்வதும், தரையில் வேட்டையாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
ஆனால் மேற்கண்ட ஹதீஸில் இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ளவர் ஹதீஸ்களில் குறிப்பிடப்படும் உயிரினங்களைக் கொல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்களாக இருந்தால் நபியவர்கள் அவற்றைக் கொல்வதற்கு அனுமதி வழங்கியிருப்பார்களா?
இதிலிருந்தும் எலி என்பது உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
பிஸ்மில்லாஹ் கூறினால்…
அது போன்று எலியை பிஸ்மில்லாஹ் சொல்லி அறுத்தால் அதைச் சாப்பிடலாமா? எனச் சிலர் கேட்கின்றனர். இது மார்க்கத்தின் அடிப்படையை விளங்காதவர்கள் கேட்கும் கேள்வியாகும்.
பெண்ணுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்று மார்க்கம் சொன்ன பிறகு வரதட்சணை வாங்கினால் குற்றமா? என்று கேட்பதைப் போன்றுதான் இந்தக் கேள்வி அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தீங்கிழைக்கும் பிராணி எனக்கூறி கொல்லுங்கள் என்ற கூறிய பிறகு அதை அறுத்துச் சாப்பிடலாம் என்பது நபியின் கட்டளைக்கு எதிரான செயல்பாடாகும்.
நபி (ஸல்) அவர்கள் கொல்லுங்கள் என்றோ, கொல்ல வேண்டாம் என்றோ தடை செய்தவை தவிர மற்ற பிராணிகளைப் பொறுத்த வரை அவை வேறு வகையில் உண்பதற்கு தடை செய்யப்பட்ட வரையறைக்குள் வரவில்லையென்றால் அவை ஹலாலானவை ஆகும்.
தீங்கு தரக் கூடியவற்றை உண்பது ஹராம் ஆகும்.
எலி, பருந்து, காகம், தேள், வெறிநாய், பாம்பு ஆகியவற்றை ‘‘ஃபவாஸிக்” தீங்கு இழைக்கக் கூடியவை என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
‘‘ஃபாஸிக்” என்றால் ‘‘வெளியேறக் கூடியவன்” என்று பொருளாகும். இதனுடைய பெண்பால் ஒருமை ‘‘ஃபாஸிகா” என்பதாகும். இதன் பொருள் ‘‘வெளியேறக் கூடியவள்” என்பதாகும். இந்த ‘‘ஃபாஸிகா” என்பதின் பன்மைச் சொல்தான் ‘‘ஃபவாஸிக்” என்பதாகும். ‘‘வெளியேறக்கூடிய பெண்கள்” என்பது இதன் பொருளாகும்.
பாவம் செய்யக் கூடியவர்கள் இறைவனின் கட்டளையை விட்டும் வெளியேறுவதால் அவர்கள் ‘‘ஃபாஸிக்” பாவி என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறார்கள்.
ஓரினச் சேர்க்கை எனும் கேடான, அசிங்கமான செயலைச் செய்த லூத் சமுதாயத்தவர்களை திருமறைக் குர்ஆன் பாவிகள் என்று குறிப்பிடுகிறது.
{ وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ تَعْمَلُ الْخَبَائِثَ إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَاسِقِينَ} [الأنبياء: 74]
லூத்துக்கு அதிகாரத்தையும், கல்வியையும் அளித்தோம். அசிங்கமான காரியங்களைச் செய்து வந்த கிராமத்திலிருந்து அவரைக் காப்பாற்றினோம். அவர்கள் கெட்ட கூட்டமாகவும், பாவிகளாகவும் இருந்தனர்.
(அல்குர்ஆன் 21 : 74)
மேற்கண்ட வசனத்தில் ‘‘அசிங்கமான காரியங்கள்” என்பதற்கு ‘‘ஹபாயிஸ்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
இறைவன் தடுத்த கேடான காரியங்களைச் செய்யும் மனிதர்களுக்கு பாவிகள் என்று கூறப்படுகிறது.
அந்த வார்த்தையை இரவலாகப் பெற்று கேடுவிளைவிக்கும் காரியங்களைச் செய்யும் உயிரினங்களுக்கு ஃபவாஸிக் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
وإنما سميت هذه الحيوانات فَوَاسِقَ على الإستعارة لخبثهن -لسان العرب (10/ 308
இந்த உயிரினங்களின் கேடுகளினால் ஃபவாஸிக் என்ற வார்த்தையை இரவலாகப் பெற்று அவற்றுக்கு (ஃபவாஸிக் என்று) பெயரிடப்பட்டுள்ளது.
(லிஸானுல் அரப் பாகம் 10 பக்கம் 308)
ஃபவாஸிக் என்றால் பாவிகள் என்று பொருள். மேற்கண்ட உயிரினங்கள் மனித குலத்திற்கு கேடு உண்டாக்குவதினால் அந்த வார்த்தை மூலம் இந்த உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த ஐந்து உயிரினங்களும் கேடு தரக் கூடியவை என்பது தெளிவாகிவிட்டது.
ஒன்றை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கேடு தரக் கூடியவை என்று குறிப்பிட்டுவிட்டால் அவை உண்பதற்கு ஹராமாகிவிடும்.
நபியவர்களைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ [الأعراف: 157]
தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக் கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.
அல்குர்ஆன் 7 : 1
மேற்கண்ட வசனத்தில் ஹபாயிஸ் (தூய்மையற்றவைகள்) ஹராம் என்று வந்துள்ளது.
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு செயலை கேடு தரக் கூடியது என்றோ அசிங்கமானது என்றோ குறிப்பிட்டால் அந்தச் செயலை செய்வது ஹராம் ஆகும்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு உயிரினத்தை கேடுதரக் கூடியது என்று குறிப்பிட்டால் அவற்றை உண்பது ஹராம் ஆகும்.
கேடு தரக் கூடியவை என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டு விட்டாலே அவை தடை செய்யப்பட்டவைதான். எந்த வகையான கேடு என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
பல்லியைச் சாப்பிடலாமா?
மேற்கண்ட உயிரினங்களை ‘‘தீங்கு இழைக்கக் கூடியது” என நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்றே பல்லியையும் தீங்கு இழைக்கக் கூடியது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு “தீங்கிழைக்கக்கூடிய பிராணி’ (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள்
அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் ; முஸ்லிம் (4507)
மனிதர்களுக்கு கேடு விளைவிப்பதால் பல்லியைக் கொல்வதற்கு மார்க்கம் அதிகம் ஆர்வமூட்டுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகின்றன. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும், மூன்றாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும் எழுதப்படும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4510)
எலியை கோரைப்பல் இல்லாத காரணத்தால் உண்ணலாம் என்பவர்கள் அதே அடிப்படையில் பல்லியையும் உண்ணலாம் என்பார்களா?
பல்லியை கோரைப் பல் இல்லாத காரணத்தினால் உண்ணலாம் என எவ்வாறு வாதிட முடியாதோ அது போன்று எலியையும் வாதிட முடியாது.
குறுக்கு விசாரணையும் விளக்கமும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ; தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : புகாரி (3316)
மேற்கண்ட செய்தியில் ‘‘தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.” என்று நபி (ஸல்) கூறியதாக வந்துள்ளது.
இதன் அடிப்படையில் எலியினால் ஏற்படும் தீங்கு என்பது தீவிபத்து மட்டும்தான். அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எலி கறியை உண்பதினால் தீங்கு ஏற்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே எலி கறி சாப்பிடலாம் என சிலர் வாதம் வைக்கின்றனர்.
ஆனால் இந்த வாதம் மிகவும் பிழையானதாகும். ஏனெனில் எலியினால் ஏற்படும் பல கேடுகளில் ஒன்றைத்தான் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்களே தவிர தீவிபத்து ஏற்படுத்துவது மட்டும்தான் எலியினால் ஏற்படும் கேடு என்று கூறவில்லை.
”தீயவர்கள் கொலை செய்வார்கள்” என்றால் தீயவர்களின் பல பண்புகளில் கொலை செய்வதும் ஒன்று என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். தீயவர்கள் கொலையை தவிர வேறு எந்த பாவத்தையும் செய்யவேமாட்டார்கள் என்ற கருத்தை இந்த வாசகம் தராது. அப்படி யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
அது போன்றுதான் ‘‘தீங்கிழைக்கக் கூடியது திரியை இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடும்” என்றால் கேடுவிளைவிக்கும் எலி இந்தக் கேட்டை செய்து விடும் என்றுதான் புரிந்து கொள்ள இயலுமே தவிர இதைத் தவிர வேறு எந்த கேட்டையும் விளைவிக்காது என்று புரிந்து கொள்ள முடியாது.
அதுமட்டுமல்ல தீவிபத்து ஏற்படுவது மட்டும்தான் எலியினால் ஏற்படும் கேடு என்றால் எதற்காக புனித எல்லைக்குள்ளும், புனித எல்லைக்கு வெளியில் அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட வேண்டும். தீவிபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் கொல்லுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிலாமே.
அனைத்து இடங்களிலும் எலியைக் கொல்லச் சொல்வதிலிருந்தே அதனால் பலவிதமான கேடுகள் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இயலும்.
எலி விளை நிலங்களில் பயிர்களின் விளைச்சலை நாசமாக்கிவிடுகிறது. உணவு தானியங்களை தின்று தீர்த்துவிடுகிறது. அது போன்று எலியினால் பல்வேறு நோய்கிருமிகள் பரவி மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இது போன்ற ஏரளாமான கேடுகள் மனிதர்களுக்கு ஏற்படத்தான் செய்கிறது. எனவே தீ விபத்தை தவிர வேறு எந்தக் கேடுகளும் எலிகளால் ஏற்படாது என்பது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.
பெயர்க்காரணம்
எலியினால் தீ விபத்து ஏற்படும் என்ற காரணத்தினால்தான் அதற்கு ‘‘தீங்கிழைக்கக் கூடியது” என பெயர் சூட்டப்பட்டதாக பின்வரும் செய்தியில் இடம் பெற்றுள்ளது.
யஸீத் இப்னு அபீ நுஐம் அவர்கள் அபூ ஸயீத் (ரலி) அவர்களிடம் ‘‘எதற்காக எலிக்கு ஃபுவைசிகா (தீங்கிழைக்கக்கூடியது) என்று பெயர்வைக்கப்பட்டது? அவர்கள் அபூ ஸயீத் (ரலி) கூறினார்கள்.
ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்கள் விழித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை வீட்டோடு எரிப்பதற்காக விளக்கின் திரியை இழுத்துச் சென்றது. நபி (ஸல்) அவர்கள் அதன் பக்கம் எழுந்து சென்று அதைக் கொன்றார்கள். இஹ்ராம் அணிந்தவர் அணியாதவர் அனைவரும் அதைக் கொல்வதற்கு அனுமதியளித்தார்கள்.
நூல் : ஷரஹ் மஆனில் ஆஸார் (பாகம் 2 பக்கம் 166)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எலி திரியை இழுத்துச் சென்று வீட்டை எரிக்க முனைந்ததால் அதைக் கொல்ல உத்தரவிட்டார்கள் என்பதுதான் அபூ ஸயீத் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நபி காலத்தில் நடந்ததாக அவர்கள் கூறும் செய்தியில் உள்ள கருத்தாகும். இதற்காகத்தான் அதற்கு ஃபுவைசிக்கா எனப் பெயரிடப்பட்டது என்பது இதிலிருந்து அபூ ஸயீத் (ரலி) அவர்கள் சுயமாக விளங்கிக் கூறியதாகும். ஏனெனில் எலியினால் தீவிபத்து ஏற்படுத்துவதினால்தான் அதற்கு நபி (ஸல்) அவர்கள் தீங்கிழைக்கக்கூடியது எனப் பெயரிட்டதாக அபூ ஸயீத் (ரலி) குறிப்பிடவில்லை.
மேலும் இந்தச் செய்தி அறிவிப்பாளர் ரீதியாக பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “யஸீத் இப்னு அபீ ஸியாத்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவரை அஹ்மத் பின் ஹன்பல், அலீ இப்னுல் மதீனி, இஜ்லி உட்பட அதிகமானோர் பலவீனமானவர் என விமர்சித்துள்ளனர். எனவே இதனை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள இயலாது.
”பிஸ்க்” என்பதினால் எலி ஹராம் ஆகுமா?
எலியை உண்பது ஹராம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சிலர் குர்ஆனில் தடைசெய்யப்பட்ட உணவுகள் “ஃபிஸ்க்” என்று கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து தோன்றிய “ஃபவாஸிக்“ என்ற வார்த்தையினால் எலி, காகம், பருந்து, பாம்பு, தேள், வெறிநாய் ஆகியவை கூறப்பட்டுள்ளது. இதனால்தான் ஹதீஸில் கூறப்பட்டவை ஹராமாகிறது என்று சிலர் வாதம் வைக்கின்றனர்.
“ஃபிஸ்க்“ என்று வரும் குர்ஆன் வசனங்களைக் காண்போம்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
(அல்குர்ஆன் 5 : 3)
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும்.
(அல்குர்ஆன் 6 : 121)
“தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை’’ என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 6 : 145)
பிஸ்க் என்றால் என்ன?
மேற்கண்ட வசனங்களில் “பிஸ்க்“ என்ற வார்த்தை “பாவம்“ என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதுதான் சரியான பொருள் ஆகும். பாவம் என்பது தடை செய்யப்பட்டவற்றை உண்ணுவதாலும், அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவதாலும் மனிதன் செய்வதாகும்.
“ஃபிஸ்க்“ என்றால் “இறைக்கட்டளையை மீறுதல், இறைவனுக்கு மாறு செய்தல்“ என்ற பொருளில் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இறைவன் தடை செய்தவற்றை உண்பதினால் மனிதன் இறைவனுக்கு மாறு செய்கின்ற பாவத்தைப் பற்றி குர்ஆன் வசனங்கள் பேசுகிறது.
அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுக்கப்பட்ட ஆட்டை உண்பதினால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படப்போவதில்லை. ஆனால் 6 : 121 வது வசனத்தில் அல்லாஹ் அதனை உண்பது “பிஸ்க்” என்கிறான்.
அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுப்பது பாவம் என்பதினால்தான் அல்லாஹ் அதை உண்பதை “ஃபிஸ்க்“ என்று கூறுகிறான். இதிலிருந்தே குர்ஆன் வசனங்கள் “பிஸ்க்” என்று கூறுவது இறைக்கட்ளையை மீறுவதைத்தான் என்பது தெளிவாகிறது.
எலி, காகம்,பாம்பு, தேள், வெறிநாய், பருந்து ஆகியவை மனிதனுக்கு தீங்கு செய்பவை என்பது பற்றி ஹதீஸ் பேசுகிறது. குர்ஆன் வசனங்கள் மனிதன் செய்யும் பாவத்தைப் பற்றி பேசுகிறது.
வசனங்களில் கூறப்பட்டிருப்பது போன்று “எலியை உண்பது ஃபிஸ்க் (பாவம்)“ என்று ஹதீஸ்களில் கூறப்பட்டிருந்தால் இவர்கள் ஃபிஸ்க் என்ற வார்த்தையின் மூலம் எலியை உண்பது ஹராம் என்று கூறுவது பொருத்தமான வாதமாகும்.
ஆனால் எலியானது “பாஸிக்“ (தீங்கு தரக்கூடியது) என்ற பொருளில்தான் ஹதீஸ்களில் வந்துள்ளது.
இவ்வாறு இருக்கையில் குர்ஆனில் “பிஸ்க்“ என்று வந்துள்ளது. எலி “ஃபாஸிக்“ என்று கூறப்பட்டுள்ளது. எனவே எலி ஹராம் என்று கூறுவது பொருந்தா விளக்கம் ஆகும்.
ஹராமாக்கப்பட்டவைகள் என்ற பட்டியலில்தான் குர்ஆனில் கூறப்பட்டவைகளும், இந்த ஹதீஸில் கூறப்பட்டவைகளும் ஒன்று சேர்கிறதே தவிர “ஃபிஸ்க்” என்ற வார்த்தையின் அடிப்படையில் அவை ஒன்று சேரவில்லை.
அன்னை ஆயிஷா (ரலி) எப்படி முடிவு செய்தார்?
குர்ஆனில் கூறப்பட்டுள்ள “ஃபிஸ்க்“ என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு “ஃபவாஸிக்“ என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள உயிரினங்களை ஹராம் என்று கூறுவது பொருந்தா விளக்கம் என்று கண்டோம்.
ஆனால் சிலர் தங்களுடைய தவறான வாதங்களை நியாயப்படுத்துவதற்காக ஸஹாபாக்களே அப்படித்தான் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறி சில செய்திகளை முன்வைக்கின்றனர். அவர்கள் எடுத்து வைக்கும் எந்தச் செய்தியிலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள “ஃபிஸ்க்“ என்ற வார்த்தையை வைத்துதான் ஸஹாபாக்கள் முடிவு செய்தார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
மேலும் அவை பலவீனமானவையாகவும் உள்ளன.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அவர்கள் எடுத்து வைக்கும் செய்தியின் தரத்தையும் அதன் கருத்தையும் காண்போம்.
سنن البيهقي الكبرى (9/ 317)
19153 – وأخبرنا أبو عبد الله الحافظ أنبا عبد الله بن جعفر بن درستويه الفارسي ثنا يعقوب بن سفيان الفارسي ثنا إسماعيل بن أبي أويس حدثني أبي عن يحيى بن سعيد عن عمرة بنت عبد الرحمن وعن هشام بن عروة عن عروة عن عائشة رضي الله عنها أنها قالت : إني لأعجب ممن يأكل الغراب وقد أذن رسول الله صلى الله عليه و سلم في قتله للمحرم وسماه فاسقا والله ما هو من الطيبات
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : காகத்தை உண்பவர்களை (எண்ணி) நான் ஆச்சரியப்படுகிறேன். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமில் உள்ளவருக்கு அதைக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கு “ஃபாஸிக்“ தீங்கிழைக்கக்கூடியது என்று பெயரிட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது ‘‘தூய்மையானவைகளில்” உள்ளது அல்ல.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகி
இது பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘‘இஸ்மாயில் பின் அபீ உவைஸ்” என்பார் தமது தந்தையிடமிருந்து அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது. இவரது தந்தையின் பெயர் ‘‘அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உவைஸ்“ என்பதாகும். இவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
تهذيب الكمال 742 (15/ 166)
3361 – م 4 : عَبد الله بن عَبد الله بن أويس بن مالك بن أَبي عامر الاصبحي ، أبو أويس المدني ، والد إسماعيل بن أَبي أويس ،وأبي بكر بن أَبي أويس ، وهو ابن عم مالك بن أنس وصهره على أختهஞ்ஞ்.
وَقَال أبو بكر بن أَبي خيثمة ، عن يحيى بن مَعِين : صالح ، ولكن حديثه ليس بذاك الجائز. وَقَال معاوية بن صالح ، عن يحيى بن مَعِين : ليس بقوي. وَقَال في موضع آخر : أبو أويس ضعيف مثل فليح. وَقَال في موضع آخر : أبو أويس وابنه ضعيفان. وَقَال عثمان بن سَعِيد الدارمي ، عن يحيى بن مَعِين : أبو أويس ضعيف ، وفليح ضعيف ، ما أقربهما.وَقَال عَباس الدُّورِيُّ ، عن يحيى : صدوق ، وليس بحجة. وَقَال في موضع آخر : أبو أويس مثل فليح ، فيه ضعف. وَقَال إبراهيم بن عَبد الله بن الجنيد ، عن يحيى : ضعيف الحديث. وَقَال علي بن المديني : كان عند أصحابنا ضعيفا. وَقَال عَمْرو بن علي : فيه ضعيف ، وهو عندهم من أهل الصدق. وَقَال يعقوب بن شَيْبَة : صدوق ، صالح الحديث ، وإلى الضعف ما هو. وقَال البُخارِيُّ : ما روى من أصل كتابه فهو أصح. وَقَال أبو داود : صالح الحديث. وَقَال النَّسَائي : مدني ، ليس بالقوي وَقَال أبو أحمد بن عدي : يكتب حديثه. وَقَال أبو زُرْعَة : صالح ، صدوق ، كأنه لين. وَقَال أبو حاتم : يكتب حديثه ، ولا يحتج به ، وليس بالقوي. وَقَال الدَّارَقُطْنِيُّ : في بعض حديثه عن الزُّهْرِيّ شئ.
“இவர் நல்லவர். என்றாலும் இவரது ஹதீஸ் செல்லுபடியாகும் அளவிற்கு இல்லை“ என்று யஹ்யா இப்னு மயீன் கூறியதாக இப்னு ஹைசமா கூறியுள்ளா. ‘‘இவர் உறுதியானவரில்லை“ என்று யஹ்யா கூறியதாக முஆவியா கூறியுள்ளார். “அபூ உவைஸ் என்பார் ஃபுலைஹ் என்பாரைப் போன்று பலவீனமானவர்“ என்று யஹ்யா கூறினார் என்றும் ‘‘அபூ உவைஸ் என்பாரும் அவரது மகனும் பலவீனமானவகள்” என்றும் யஹ்யா கூறியதாக முஆவியா கூறியுள்ளார். ‘‘அபூ உவைஸும் பலவீனமானவர், புலைஹ் என்பாரும் பலவீனமானவர். அவ்விருவரையும் நான் உறுதிப்படுத்த மாட்டேன்” என்று யஹ்யா கூறியதாக தாரமீ கூறியுள்ளார். “அவர் உண்மையாளர், ஆதாரமாகக் கொள்ளத் தக்கவரில்லை” என்று யஹ்யா விமர்சித்ததாக அப்பாஸ் அத்துவரி கூறியுள்ளார். “இவர் ஹதீஸில் பலவீனமானவர்“ என்று யஹ்யா கூறியதாக இப்ராஹீம் கூறியுள்ளார்.
“எங்கள் தோழர்களிடத்தில் இவர் பலவீனமானவர்“ என இமாம் அலீ இப்னுல் மதீனி விமர்சித்துள்ளார்.
”இவரிடம் பலவீனம் உள்ளது. இவர் அவர்களிடத்தில் உண்மையாளர்” என அம்ருப்னு அலீ கூறியுள்ளார்.
“இவர் தனது அசலான புத்தகத்தில் இருந்து அறிவித்தால் அது மிகச் சரியானதாகும்” என இமாம் புகாரி கூறியுள்ளார்.
“இவர் உறுதியானவரில்லை“ என இமாம் நஸாயீ விமர்சிததுள்ளார்.
“இவர் நல்லவர். உண்மையாளர். இவரிடம் பலவீனம் இருப்பதைப் போன்றுள்ளது“ என அபூ சுர்ஆ கூறியுள்ளார்.
“இவரது ஹதீஸ்கள் எழுதப்படும். இவர் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டார். இவர் உறுதியானவரில்லை “ என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்.
“இவர் ஷுஹ்ரி வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளில் குறைகள் உள்ளது“ என இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுல் கமால் பாகம் 15 பக்கம் 166
எனவே இதன் அடிப்படையில் இது மிகவும் பலவீனமான செய்தியாகும்.
ஒரு வாதத்திற்கு இதை ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் “ஃபிஸ்க்” என்ற வார்த்தையை வைத்து அன்னை ஆயிஷா (ரலி) தீர்மானித்ததாக இச்செய்தியில் வரவில்லை.
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு உயிரினத்தை கேடுதரக் கூடியது என்று குறிப்பிட்டால் அவற்றை உண்பது ஹராம் ஆகும். இதன் அடிப்படையில்தான் “ஃபாஸிக்“ என்ற வார்த்தையை வைத்து “தூய்மையற்றவை“ எனும் அடிப்படையில்தான் உண்ணக்கூடாது என அன்னை ஆயிஷா (ரலி) தீர்மானித்துள்ளார்கள் என்றே புரிய முடியும்.
இது தொடர்பாக நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.
ஷரீக் என்பாரின் அறிவிப்பு
அது போன்று இப்னு உமர் (ரலி) அவர்களும் இதே போன்று கூறியதாக இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ளது.
سنن ابن ماجة محقق ومشكول (4/ 394)
3248- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ النَّيْسَابُورِيُّ ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ ، حَدَّثَنَا شَرِيكٌ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : مَنْ يَأْكُلُ الْغُرَابَ ؟ وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : فَاسِقًا ، وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ.
இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஷரீக்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரது மனனத் தன்மையில் குறை உள்ளது. இவரை ஏராளமான அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.
இவர் சில நேரங்களில் இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். சில நேரங்களில் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களின் கூற்றாகவும் அறிவித்துள்ளார். சில நேரங்களில் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றாகவும் அறிவித்துள்ளார். இதிலிருந்தே இந்த “ஷரீக்“ என்பவர் மனனத் தன்மையில் பாதிப்புடையவர் என்பது தெளிவாகிறது.
இதே செய்தி இதே அறிவிப்பாளர் தொடரில் உர்வாவின் சொந்தக் கருத்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாம் தாரகுத்னீ அவர்கள் உர்வா அவர்களின் சொந்தக் கருத்தாக அறிவிக்கப்படுவதே சரி என்று தீர்ப்பளிக்கிறார்கள்.
س 537- وسُئِل عَن حَدِيثِ عُروَة بنِ الزُّبَيرِ ، عَن أَبِيهِ ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيه وسَلم : أَنَّهُ سَمَّى الغُراب فاسِقًا. فَقُل : يَروِيهِ حَنِيفَةُ بن مَرزُوقٍ ، عَن شَرِيكٍ ، عَن هِشامٍ ، عَن أَبِيهِ ، عَنِ الزُّبَيرِ. وَخالَفَهُ الهَيثَمُ بن جَمِيلٍ فَرَواهُ عَن شَرِيكٍ ، عَن هِشامٍ ، عَن أَبِيهِ ، عَن عائِشَةَ. والصَّحِيحُ هِشامٌ ، عَن أَبِيهِ مُرسَلٌ. (العلل للدارقطني (4/ 241)
ஹிஸாம் தனது தந்தை வழியாக முர்ஸலாக அறிவிப்பதே சரியானதாகும். (அல் இலல் லித் தாரகுத்னீ)
எனவே எந்த ஒரு ஸஹாபியும் ஃபாஸிக் என்ற வார்த்தையை வைத்து எலி ஹராம் என முடிவு செய்தார்கள் என்பதற்கு உறுதியான அறிவிப்புகள் இல்லை.
குர்ஆன் மற்றும் நபி வழியில் இருந்து ஒரு கருத்தை சந்தேகமில்லாமல் நிலைநாட்டிய பிறகு நபித்தோழர்களின் கருத்தை துணைச் சான்றாக காட்டுவதில் தவறில்லை. ஆனால் ஒரு கருத்தை கூறி அதை வஹியிலிருந்து நிலைநாட்ட இயலாமல் நபித்தோழர்களின் சுயக்கருத்தை ஆதாரமாக முன்வைப்பது சரியான வழிமுறை கிடையாது.
அப்துர் ரஹ்மான் இப்னு காசிம் என்பாரின் அறிவிப்பு
மேலும் ‘‘அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்“ என்பாரும் “ஃபாஸிக்“ என்ற வாரத்தையை வைத்து “காகம்“ ஹராம் என்று முடிவு செய்துள்ளதாக சில அறிவிப்புகளில் வந்துள்ளது. இவர் நபித்தோழர் கிடையாது. அதுமட்டுமில்லாமல் இந்த அறிவிப்பு ஆதாரமாகக் கொள்வதற்கு தகுதியான அறிவிப்பாக இல்லை.
3249- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ : الْحَيَّةُ فَاسِقَةٌ ، وَالْعَقْرَبُ فَاسِقَةٌ ، وَالْفَأْرَةُ فَاسِقَةٌ ، وَالْغُرَابُ فَاسِقٌ. فَقِيلَ لِلْقَاسِمِ : أَيُؤْكَلُ الْغُرَابُ قَالَ : مَنْ يَأْكُلُهُ ؟ بَعْدَ قَوْلِ رَسُولِ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ فَاسِقًا.
நூல் : இப்னுமாஜா 3249
காசிம் இப்னு முஹம்மது இப்னு அபீ பக்ர் என்பாரிடம் ‘‘காகத்தை சாப்பிடலாமா?” எனக் கேட்க்கப்பட்ட போது “நபியவர்கள் “ஃபாஸிக்“ என்று கூறிய பிறகு அதை யார் சாப்பிடுவார்?“ என்று கூறியதாக இப்னு மாஜாவில் இடம் பெறும் அறிவிப்பும் பலவீனமானதாகும்.
இந்த அறிவிப்பில் “மஸ்வூதி“ என்பார் மூளை குழம்பியவர் ஆவார். இவரிடம் இருந்து அறிவிக்கும் “முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஸன்னா அல்அன்சாரி“ என்பார் “மஸ்வூதி“ என்பாரிடமிருந்து அவர் மூளை குழம்புவதற்கு முன்னால் கேட்டாரா? பின்பு கேட்டாரா? என்பதை முடிவு செய்வதற்கான ஆதாரங்கள் நமக்கு கிடைக்கவில்லை.
காசிம் என்பாரின் சொந்தக் கருத்தாக வரும் சில அறிவிப்புகள் சரியாக உள்ளது என்று வைத்துக் கொண்டாலும் அவர் “ஃபிஸ்க்“ என்ற வார்த்தையை வைத்து ஆய்வு செய்ததாக குறிப்பிடவில்லை. “ஃபாஸிக்“ என்ற வார்த்தையை வைத்து முடிவு செய்ததாகத்தான் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குர்ஆனில் தடை செய்யப்பட்ட உணவுகள் “ஃபிஸ்க்“ என்று கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து தோன்றிய “ஃபவாஸிக்“ என்ற வார்த்தையால் எலி கூறப்பட்டுள்ளதால் அது ஹராம் என்ற அடிப்படையில் எடுத்து வைக்கப்படும் வாதம் தவறான வாதம் என்பது தெளிவாகிவிட்டுது.
அதே நேரத்தில் எலி ஹராம் என்பதற்கு என்னென்ன அடிப்படைகளை நாம் விவரித்துள்ளோமோ அதன் அடிப்படையில்தான் எலி ஹராம் ஆகிறது.
எது சுதந்திரம்
சலீம், இஸ்லாமியக் கல்லூரி
ஆகஸ்ட் 15, 1947-ல் வானத்தில் பறவைகள் சிறகடிக்க, பசுமையான மரங்கள் காற்றில் நடனமாட, இந்தியர்களின் உள்ளத்தில் பட்டாம்பூச்சி படபடக்க, மிக பெரிய ஆனந்தத்தின் உச்சியில் இந்தியா சுதந்திரம் பெற்றது.
.அன்றிலிருந்து இன்று வரை ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டால் நம் நாட்டின் சுதந்திரதிற்காக மகாத்மா காந்தி அவர்கள் எவ்வளவு பாடுப்பட்டார்கள் சுபாஷ் சந்திரபோஸ், கப்பலோட்டிய தமிழன், கொடிக்காத்த குமரன் என்ற நீண்ட நெடிய பட்டியலில் நம் நாட்டு ஆட்சியாளர்களும், பிரபல பேச்சாளர்களும் புகழ்பாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், உண்மையிலேயே இதற்காக பாடுபட்ட முஸ்லீம்களின் வரலாற்றை மறைத்து விடுவார்கள் இது பல கட்டுரைகளிலும் பல்வேறு மேடைப்பேச்சுகளிலும் பல ஆக்கங்களிலும் வரலாற்று ஆதாரத்துடன் மக்கள் மனதில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதை மீண்டும் கொண்டுவருவது நம் கட்டுரையின் நோக்கமல்ல, ,,ஆகஸ்ட் 15 வந்துவிட்டால் தேசிய கொடி ஏற்றி நெஞ்சில் கொடியை தாங்கி இனிப்புகளை உண்டு கொண்டாடப்படும் அந்த சுதந்திரத்தை சிந்திக்க வேண்டும் என்பதே நமது கட்டுரையின் நோக்கம்
சுதந்திரம் என்றால் என்ன ?
சுதந்திரம் என்றால் என்ன? என்ற கேள்விக்கான பதில் தெரியாமல் பல நபர்கள் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் ஒரு சில கேள்விகள் சுதந்திரம் என்பது என்ன என்று நமக்கு தெளிவாக உணர்த்தும். ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட சாராரால் அடக்கு முறை செய்யப்படுகிறான் அவனுடைய உரிமைகள் பரிக்கப்படுகிறது சமுதாயத்தால் கேவலமாக நடத்தப்படுகிறான் இப்போது இந்த மனிதனை சுதந்திரம் பெற்றவன் என்று நாம் கூறுவோமா? அல்லது ஒரு மனிதன் சமுதாயத்தில் எல்லா மனிதர்களை போலவும் உரிமையுடன் நடத்தபடுகிறான் அவன் தன்னுடைய முழு உரிமையையும் பெற்று கொள்கிறான் இப்போது இந்த மனிதனை சுதந்திரம் பெற்றவன் என்று நாம் கூறுவோமா?படித்து முடிப்பதற்குள்ளாகவே இரண்டாவதாக சொல்லப்பட்ட மனிதனை தான் சுதந்திரவாளி என்று நம்முடய மனமே நமக்கு சமிக்ஞை செய்து விடுகிறது. ஆம் சுதந்திரம் என்றால் ஒரு நாட்டின் குடிமகன் தன்னுடைய நாட்டில் முழு உரிமையுடன் வாழ்வது சுதந்திரமாகும். மேற்கூறப்பட்ட இதை விளங்கிக் கொண்டால் இந்தியாவினுடைய சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதை மிக எளிமையாக நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
நம் நாடு சுதந்திரம் பெற்றது 1947-ல் இப்போது நாம் சொல்ல கூடிய சம்பவம் அதிலிருந்து 10 வருடத்திற்கு முன்பு நடந்ததாகும். 1937 டிசம்பர் மாதம் மிக பெரிய அளவில் தென்மாவட்டதில் ஒரு அமைப்பின் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் தலித்துகள் சமபந்தி போஜனத்தில் சாப்பிட்டார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக நிலவுடமையாளர்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து அவர்களுக்கு மொட்டையடித்து அவர்களுடைய வாயில் சாணியை கரைத்து ஊற்றினார்கள். எப்படிப்பட்ட கொடூர சம்பவம். இது நடந்தது இந்தியா சுதந்திரம் பெருவதற்கு முன்பு
இதுதான் சுதந்திரமா???
ஆனால் இந்தியாவில் ஆங்கிலேயர்களிடம் இருந்து அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டு வெள்ளையர்கள் விரட்டியடிக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைந்து இந்திய மக்கள் தங்களுடைய நெஞ்சிலே சுதந்திரத்தை தாங்கிய பிறகு நடந்த நிகழ்வுகள் என்ன தெரியுமா ???
டிசம்பர்- 25,, 1968 தங்களுடைய உடல் உழைப்பை முழுமையாக செலுத்தி வேலைப் பார்த்த தலித்கள் தங்களுடைய வயிற்று பசிக்காக எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தாருங்கள் என்று கேட்டதற்காக உயர்ஜாதி நிலத்தவர்களால் கிட்டதட்ட 44 தலித்கள் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டனர். சுதந்திரத்திர்க்கு முன்னால் நடந்ததை போன்று தான் சுதந்திரத்திர்க்கு பின்னாலும் நடக்கிறது, என்றால் இதுதான் உண்மையில் இந்தியாவின் சுதந்திரமா?
கண்ணை கலங்க வைத்த சம்பவம்..
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் மறக்க முடியாத சம்பவம் இது…. இந்த சம்பவம் -11-2016 ஹிந்து நாளேட்டிலும் முக்கிய செய்தியாக வெளியானது இதோ!! உங்கள் கண் முன்.. பையோ பேட்மாங்கே என்பவரின் மனைவி தான் சுரேகா (45) மகள் பிரியங்கா (17)மகன்கள் ரோஷன் (23) சுதிர் (21) இவர்களுடைய குடும்பம் படிப்பறிவு பெற்ற குடும்பம். அந்த கிராமத்தில் குண்பி மராத்தா என்ற பிரிவினர்கள் இருக்கிறார்கள் அவர்களில் சிலர் மீது சுரேகா புகார் அளித்தார் இவர் புகார் அளித்ததும் படிப்பறிவு பெற்றதன்னுடைய நிலை என்ன தெரியுமா??
செப்டம்பர் 29 ஆம் தேதி சுரேகாவுடைய கணவர் வீட்டில் இல்லாத போது சிலர் குடிபோதையில் வந்து இரும்பு கம்பியால் சுரேகாவையும் அவர்களின் பிள்ளைகளையும் தாக்கினார்கள் சுரேகாவையும் அவருடைய மகளையும் நிர்வாணப்படுத்தி கற்பழித்து தெருவுக்கு இழுத்து வந்து கொன்று வீசினார்கள் அவர்களை காப்பாற்ற முடியாமல் புதரில் இருந்து பார்த்து கண்ணீர் வடித்தார் போட்மாங்கே… படிக்கின்ற நம்மைப் போன்றே!
இதுதான் சுதந்திரமா?
இதே போன்று கொடூர செயல்களை 1947ல் இருந்து 2019 இன்று வரை நம்மால் பட்டியலிட முடியும்.. இப்போது சொல்லுங்கள்!! நாம் சுதந்திரம் என்றால் என்னவென்று சொன்னோமோ அந்த விளக்கத்திலிருந்து இந்தியர்களின் சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் இப்போது இந்தியா சுதந்திரம் பெற்றது என்று கூறலாமா ?
இதுதான் சுதந்திர நாடா? இதே போன்று இந்திய சர்க்காரால் அடக்குமுறை செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏராளம். அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக நாம் பேசி பேசி நமக்கு வாய் வலித்தாலும் கூட பரவாயில்லை. அவர்களுடைய பட்டியலை சொல்லுவதற்கே நமக்கு வாய் வலிப்பது தான் வேதனையிலும் வேதனை.
ஆங்கிலேயர்களிடமிருந்து மீண்டு அயோக்கியர்களிடம் அரக்கர்களிடம் நம்முடைய சுதந்திரத்தை பரிகொடுத்து இருக்கிறோம் என்பதை உணர்த்தும் சில உதாரணங்களை உங்கள் முன் பட்டியலிடுகிறோம்.
அநியாயத்தின் உச்ச கட்டம்..
சுதந்திர இந்தியாவில் அடக்குமுறை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் சில…
2014 – ஜூன் – புனே – சாதிக்
2015 – மே – நாகலாந்த் – சார்புதீன்கான்
2015 – மே – உபி ராஜஸ்தான் – அக்பர் குரேசி
2015 – செப்டம்பர் – உபி – அஹ்லாக்
2015 – அக்டோபர் – காமீர்
2015 – ஹிமாசலம் – அக்தார்
2015 – மணிப்பூர் – ஹம்ஸாத் அலி
2016 – ஏப்ரல் – ஹரியானா – அப்பாஸ்
2016 – ஏப்ரல் – ஹரியானா – பெஹ்லுகான்
2017 – மே – ஜார்கண்ட் – அபூஹனீஃபா அன்சர் அலி
2017 – ஏப்ரல் – ஹஸ்ஸாம் – அபூஹனீஃபா
2017 – ஜூன் – ராஜஸ்தான் – ஹுசைன்
இதற்கு பிறகும் இந்தியா எப்படி சுத்ந்திரம் பெற்றது தெரியுமா? நாம் சுதந்திரத்திரத்திற்காக எவ்வாறு பாடுப்பட்டோம் தெரியுமா? என்றெல்லாம் யார் பேசுகிறார்களோ இவர்களை விட இந்த உலகத்தில் அநியாயக்காரர்கள் யார் இருக்க முடியும்?
ஆட்சியாளர்களே இதோ சுதந்திர சர்க்கார்
மக்களுக்கு சுதந்திரத்தையும் உரிமையையும் வழங்க வேண்டிய ஆட்சியாளர்களே இன்றைக்கு மக்களுடைய உரிமையை பறித்து அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் குத்தக்கூடிய விஷமத்தனமான வேலையை செய்கிறார்கள்.. . அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டினுடைய ஜனாதிபதி, மக்கள் தங்கள் உயிரை விட மேலாக மதிக்க கூடிய மாமனிதர், அனைத்திற்கும் மேலாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்கள் தன்னுடைய நாட்டு மக்களுக்கு எந்த அளவிற்கு சுதந்திரத்தையும் உரிமையையும் வழங்கினார்கள் தெரியுமா?? இதற்கு முன் நம் நாட்டில் நடந்த அடக்கு முறைகளையும் அயோக்கிய தனத்தையும் நாம் பட்டியலிட்டோம். இப்போது உண்மையான சுதந்திரம் எது என்பதை இங்கே நாம் பட்டியலிடுகிறோம்.
நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம், அவர்களுடன் மக்கள் ஹுநைன் போரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதரை பிடித்து (போரில் கிடைத்த பொருட்களிலிருந்து தங்களுக்கு கொடுக்கும் படி )கேட்கலானார்கள். இறுதியில், அவர்களை (சூழ்ந்து நெருங்கிய படி )ஒரு கருவேல மரத்தில் அருகில் தள்ளி கொண்டு சென்று அவர்களின் போர்வையை பறித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், எனக்கு என் போர்வையை கொடுத்து விடுங்கள் இந்த (கருவேல மரத்தின் )முட்கள் அளவிர்க்கு ஒட்டகங்கள் (என்னிடம்)இருந்தாலும் அவற்றை நான் உங்களிடயே பங்கிட்டு விடுவேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவோ, போயி சொல்லுபவனாகவோ,கோழையாகவோ பார்க்க மாட்டீர்கள் என்றார்கள்
அறிவிப்பாளர் :ஜுபைர் பின் முத் இம் (ரலி)
நூல் :புகாரி 3148
இப்போது பாருங்கள்.. ஒரு நாட்டின் ஆட்சியாளரை மக்கள் முள்ளில் தள்ளிவிடுகிறார்கள். அப்போது கூட என்னுடய போர்வையை எனக்கு எடுத்து தாருங்களேன், என்று தான் கூறினார்களே தவிர மன்னரையே தள்ளிவிட்டுவிட்டீர்களா?என்று அந்த மக்களை சிறைப்பிடிக்கவில்லை அடக்குமுறை செய்யவில்லை. ஏன் என்றால் !ஒரு ஆட்சியாளரிடம் மக்கள் அனைத்தையும் கேட்கும் சுதந்திரத்தை நபியவர்கள் வழங்கி இருந்தார்கள். ஒட்டுமொத்த உலக ஆட்சி வர்கத்தின் சாம்ராஜியத்தை ஒற்றை செயலின் மூலம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பறைசாட்டினார்களே, இதைக்கொண்டு நாம் எல்லா ஆட்சியாளர்களுக்கும் சவாலாக சொல்லிக்கொள்கிறோம்.. உங்களால் இதைப்போன்று சுதந்திரத்தை கொடுக்க முடியுமா?என்பதை யோசித்து பாருங்கள்.
இப்போது நம்முடைய சுதந்திரத்தை பார்ப்போம்.. .நம்முடய நாட்டிலே பல குடும்பங்களை நாசமாக்கக்கூடிய குடியைகெடுக்கும் கேடு கெட்ட மது பானத்தை தமிழகத்திலே நாங்கள் விற்போம் என்று அதிகார வர்க்கத்திலே இருக்கும் ஒருவரே மேடை போட்டு பேசுகிறார். ஆனால் அவரிடத்தில் இதை பற்றி நேருக்கு நேர் கேட்பதற்க்கு கூட நமக்கு சுதந்திரம் இல்லயே 1 என்ன செய்வது? இதுதான் நம்முடைய சுதந்திர நிலைமை ! இது பற்றி நம்மிடத்தில் கேட்டால் ‘அவரோ அதிகாரத்தில் இருக்கக்கூடியவர் ; நாமோ அடிமைகளாக வாழக்கூடியவர்கள் ‘ என்றுதான் பதில் சொல்ல முடியும்.
மேலும் நபியவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் மக்களுக்கு சுதந்திரத்தை வாரி வழங்கிய வாழ்க்கைச் சுடராக வாழ்ந்ததை பல சூழ்நிலைகளில் பார்க்கலாம். அவற்றில் சில…
நான் நபி (ஸல் )அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன் அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றை போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராம வாசி ஒருவர் அவர்களை கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராம வாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி (ஸல்)அவர்களின் தோளில் ஒரு மூலையில் (காயப்படுத்தி)அடையாளம் பதிந்திருந்ததை கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்)அவர்களிடம் ),தங்களிடம் உள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்கு கொடுக்கும் படி கட்டளை இடுங்கள் என்று கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்கள் அவரை திரும்பி பார்த்து சிரித்து விட்டு பிறகு அவருக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் :புகாரி 3149
இதை பார்க்கும் போது,இதுதான் சுதந்திரத்தின் உச்ச கட்டம் என்று நம்மால் சொல்ல முடிகிறது. ஏன் தெரியுமா?ஒரு ஆட்சியாளருடைய சால்வையை இழுத்து அவர்க்கு காயத்தையும் ஏற்படுத்திவிட்டு பிறகு தனது உரிமையை கேட்கிறார். அதற்கு அண்ணலாரோ புன்சிரிப்போடு ‘என் மக்கள் என்னிடத்தில் தானே கேட்க முடியும் என்பதை உரிமையோடுபுரிந்து கொண்டு அவர் கேட்டதைவிட அதிகமாக வாரி வழங்குகிறார்.
இப்போது சொல்லுங்கள் அண்ணலார் வழங்கிய, இது சுதந்திரமா?அல்லது நம்முடைய மாண்புமிகு மக்களாட்சி வழங்குவது சுதந்திரமா?
நாம் சுதந்திர காற்றை முழுமையாக சுவாசிக்க வேண்டும் என்று சொன்னால் உண்மையை உரக்க சொல்லும், உரிமையை மீட்டு தரும் இஸ்லாத்தின் சட்டம் இந்தியாவின் சட்டமாக அரங்கேற்றப்பட்டால் தான் சாத்தியம்!! இது சத்தியம்!!! எல்லாம் வல்ல இறைவன் இதற்கு உதவி புரிவானாக…
வலைதளங்களில் பரவும் பொய்யான ஹதீஸ்கள்
சபீர் அலி
நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நவீன யுகத்தில் மனிதர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட விஷயம்தான் சமூக வலைதளங்கள்.
ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்கள் தொலைதொடர்பு சாதனங்களின் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.
உலகின் எந்த மூலைமுடுக்கில் இருப்பவர்களையும் எளிதில் தொடர்புக் கொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் எனும் அளவிற்கு தகவல் பரிமாற்றத்தில் மிகப் பெரும் சாதனையாகவும் இவை விளங்குகிறது.
மேலும், இஸ்லாமிய சமூகம் போன்ற உலக மீடியாக்களால் புறக்கணிக்கப்படும் சமூகங்களுக்கும் அவர்களது கருத்துக்களுக்கும் ஒரு வடிகாலாகவும் இவை திகழ்கிறது.
வரலாற்று திரிப்பு என்பது ஒவ்வொரு காலத்திலும் மேல்தட்டு மக்களால் செய்யப்பட்டு வந்தது.
அவர்கள் வரலாற்றில் தங்களுக்கு சாதகமாக தங்களை உயர்த்தியும், மற்றவர்களை தாழ்த்தியும், மற்றவர்களின் தியாகங்களை மறைத்தும் திரித்துக் கூறிவந்தனர்.
ஆனால், தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக இவ்வாறு வரலாற்றை மறைப்பதற்கு எவ்வித இடமும் அளிக்காமல் ஒவ்வொரு தகவலையும் ஆதாரத்துடன் உலகிற்கு அவ்வப்போது தந்துவிடுகின்றனர்.
இவ்வாறு, பல்வேறு நன்மையான காரியங்களுக்காக இச்சமூக வலைதளங்கள் நமக்கு பயன்பட்டு வந்தாலும் பல பொய்யான தகவல்கள், வதந்திகள் பரவுவதற்கும், யாரும் யாரின் நன்மதிப்பையும் குறைத்துவிடலாம் எனும் அளவிற்கு ஆதாரமற்ற செய்திகள் பரப்பபட்டு குழப்பம் ஏற்படுத்தப்படுவதற்கும் இவை பயன்படுத்தப்படுவதுதான் வேதனையான விஷயம்.
குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று சொன்ன இஸ்லாத்தில் உள்ளவர்களே இவ்வாறான ஆதாரமற்ற செய்திகளை பரப்புகின்றனர்.
ஒரு செய்தியை பரப்புவதற்கு முன் அது ஆதாரப்பூர்வமான சரியான செய்தியா? என்பதையும், இவ்வாற ஒரு செய்தி உள்ளதா? என்பதையும் தெளிவுப்படுத்திக் கொள்வதுதான் இறை நம்பிக்கையாளரின் பண்பு.
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காமலிருக்க அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (அவ்வாறில்லை எனில்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 49: 6
எந்தவொரு செய்தி வந்தாலும் அதை சரியானதா என்று தெளிவுப்படுத்திக் கொள்வது ஒவ்வொரு மூஃமினின் பண்பாகும்.
அவ்வாறின்றி கேள்விப்பட்டதையெல்லாம் தெளிவுப்படுத்திக் கொள்ளாமல் பரப்பினால் பொய்யன் என்ற பட்டத்தை நமக்கு அது பெற்றுத் தந்துவிடும்.
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 6
இவ்வாறு மார்க்கம் எச்சரித்து தடுத்த காரியத்தைத்தான் நம்மில் பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக செய்துவருகிறோம்.
அதிலும் குறிப்பாக மார்க்கம் தொடர்பான ஆதாரமற்ற பலவீனமான செய்திகளை சரியான ஹதீஸ்கள் என்று நம்பி பரப்புவதுதான் வேதனையின் உச்சக்கட்டம்.
அவ்வாறு, சமூக வலைதளங்களில் பரப்பபடும் பலவீனமாக செய்திகளில் நம் பார்வைக்கு தெரிந்தவையும் அவை ஏன் பலவீனம் என்பது பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.
நல்ல நண்பனின் அடையாளம் நான்கு
அவனைப் பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வரும்
அவனுடன் பேசினால் ஈமான் அதிகரிக்கும்
அவனுடன் உட்கார்ந்தால் அறிவு வளரும்
அவனுடைய செயல்கள் மறுமை நாளை நினைவுப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறான செய்தி திர்மிதி 2144ல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் நட்பின் இலக்கணம் என்ற தலைப்பின் கீழ் பரப்பட்டு வருகிறது.
ஆனால் இவ்வாறு நண்பனின் அடையாளம் நான்கு என்று எந்த செய்தியும் ஜாமிவுத் திர்மிதியில் இல்லை. எந்த கிதாபிலும் இல்லை.
அதே சமயம், மூன்று தன்மைகளை உள்ளடக்கிய ஒரு செய்தி முஸ்னத் அபீ யஃலா என்ற ஹதீஸ் கிரந்தத்தில் 2437வது இலக்கத்திலும் முஸ்னத் அப்து பின் ஹுமைத் என்ற கிரந்தத்தின் 631வது இலக்கத்திலும் இன்னும் சில இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
مسند أبي يعلى محقق (4/ 326)
2437 – حدثنا عبد الله بن عمر بن أبان حدثنا علي بن هاشم بن البريد عن مبارك بن حسان عن عطاء : عن ابن عباس قال : قيل يا رسول الله أي جلسائنا خير ؟ قال : من ذ كركم الله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله
அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அருகில் அமர்பவர்களில் சிறந்தவர் யார்? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, யாரை பார்ப்பது அல்லாஹ்வை உங்களுக்கு நினைவுப்படுத்துமோ, யாரிடம் பேசுவது உங்களது கல்வியை அதிகப்படுத்துமோ, யாருடைய செயல் உங்களுக்கு மறுமையை நினைவூட்டுமோ அவரே ஆவார் என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
இந்த செய்தியும் பலவீனமான செய்தியாகும்.
இந்த செய்தியில் இடம்பெறும் முபாரக் பின் ஹஸ்ஸான் என்பவரை அறிஞர்கள் குறைக்கூறியுள்ளனர்.
تهذيب التهذيب محقق (10/ 25)
وقال أبو داود منكر الحديث وقال النسائي ليس بالقوي في حديثه شئ وذكره ابن حبان في الثقات وقال يخطئ ويخالف.
قلت: وقال الازدي متروك يرمى بالكذب وقال ابن عدي روى اشياء غير محفوضة وقال البيهقي في الشعب.
இவர் ஹதீஸில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் அபூதாவூத் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவர் பலமானவர் இல்லை என்றும் இவரது ஹதீஸில் ஆட்சேபனை உள்ளது என்றும் இமாம் நஸாயீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர் என்றும் பொய்யர் என்றும் இமாம் அஸ்தீ கூறியதாக இமாம் ஹஜர் கூறியுள்ளார்.
தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 10 பக்கம் 25
இவ்வாறான பல விமர்சனங்கள் இவர் மீது கூறப்படுவதால் இவரது அறிவுப்புகள் ஏற்கத்தகுந்தது இல்லை என ஆகிறது.
எனவே இந்த செய்தி பலவீனமானதாகும்.
மேலும், இதே செய்தி இப்னு ஷாஹீன் என்பவருக்குரிய அத்தர்கீப் என்ற நூல் வேறொரு அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு இடம்பெற்றுள்ளது.
الترغيب في فضائل الأعمال وثواب ذلك لابن شاهين (ص: 139)
482 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ أَحْمَدَ الْحَرَّانِيُّ، ثنا أَبِي، ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ الْحَرَّانِيُّ، ثنا عُمَرُ يَعْنِي ابْنَ سَالِمٍ الْأَفْطَسَ، عَنْ أَبِيهِ، عَنِ الْحَسَنِ، عَنْ عُرْوَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَقَرَّبُوا إِلَى اللَّهِ بِبُغْضِ أَهْلِ الْمَعَاصِي، وَالْقَوْهُمْ بِوُجُوهٍ مُكْفَهِرَّةٍ، وَالْتَمِسُوا رِضَا اللَّهِ بِسَخَطِهِمْ، وَتَقَرَّبُوا إِلَى اللَّهِ بِالتَّبَاعُدِ مِنْهُمْயு. قَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، فَمَنْ نُجَالِسُ؟ قَالَ: «مَنْ تُذَكِّرُكُمُ اللَّهَ رُؤْيَتُهُ، وَيَزِيدُ فِي عَمَلِكُمْ مَنْطِقُهُ، وَمَنْ يُرَغِّبُكُمْ فِي الْآخِرَةِ عَمَلُهُயு
இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் உமர் பின் ஸாலிம் அல்அஃப்தஸ் என்பவர் பலவீனமானவர் ஆவார்.
இவரை இப்னு ஹிப்பான் மாத்திரம் சரியானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்னு ஹிப்பான் மாத்திரம் ஒருவரை சரியானவர் என்று குறிப்பிட்டால் அதை ஏற்க இயலாது. ஏனெனில், இவர் யாரென்று அறியப்படாதவர்களையும் கூட சரியானவர் என்று சான்றளிக்கும் அலட்சியப்போக்குள்ளவர்.
இதுதவிர இவர் மீது எந்த நிறையும் குறையும் காணப்படாததால் இவர் நிலை அறியப்படாத மஜ்ஹூலுல் ஹால் எனும் அந்தஸ்த்தில் உள்ளவர்.
இந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களின் அறிவிப்பு ஏற்கப்படாது.
இவ்வாறு இந்த செய்தியின் எல்லா அறிவிப்புகளும் இருக்க இந்த செய்தியை பரப்புவதோடு மட்டுமல்லாமல் இந்த செய்தியில் இல்லாத மற்றுமொரு நான்காவது தன்மையையும் சேர்த்து பரப்பிக் கொண்டிருக்கிறோம்.
இது எவ்வளவு குற்றம் என்பதை கற்பனைச் செய்துப்பாருங்கள்.
நபி(ஸல்) ஃபாத்திமா(ரலி)க்கு கற்றுக் கொடுத்த ஐந்து வார்த்தைகள்
الدعاء للطبراني 360 (ص: 319)
1047- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُصَيْرٍ الأَصْبَهَانِيُّ ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ قَالَ أَصَابَتْ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ فَاقَةٌ فَقَالَ لِفَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا لَوْ أَتَيْتِ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَسَأَلْتِيهِ وَكَانَ عِنْدَ أُمِّ أَيْمَنَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَدَقَّتِ الْبَابَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُمِّ أَيْمَنَ إِنَّ هَذَا لَدَقُّ فَاطِمَةَ وَلَقَدْ أَتَتْنَا فِي سَاعَةٍ مَا عَوَّدَتْنَا أَنْ تَأْتِيَنَا فِي مِثْلِهَا فَقُومِي فَافْتَحِي لَهَا الْبَابَ قَالَتْ فَفَتَحْتُ لَهَا الْبَابَ فَقَالَ يَا فَاطِمَةُ لَقَدْ أَتَيْتِنَا فِي سَاعَةٍ مَا عَوَّدْتِنَا أَنْ تَأْتِينَا فِي مِثْلِهَا فَقَالَتْ يَا رَسُولَ اللهِ هَذِهِ الْمَلائِكَةُ طَعَامُهَا التَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَالتَّمْجِيدُ فَمَا طَعَامُنَا قَالَ وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ مَا اقْتَبَسَ فِي آلِ مُحَمَّدٍ نَارٌ مُنْذُ ثَلاثِينَ يَوْمًا وَقَدْ أَتَانَا أَعْنُزٌ فَإِنْ شِئْتِ أَمَرْتُ لَكِ بِخَمْسَةِ أَعْنُزٍ وَإِنْ شِئْتِ عَلَّمْتُكَ خَمْسَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ آنِفًا قَالَتْ بَلْ عَلِّمْنِي الْخَمْسَ كَلِمَاتٍ الَّتِي عَلَّمَكَهُنَّ جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ قَالَ قُولِي يَا أَوَّلَ الأَوَّلِينَ يَا آخِرَ الآخَرِينَ ذَا الْقُوَّةِ الْمَتِينَ وَيَا رَاحِمَ الْمَسَاكِينِ وَيَا أَرْحَمَ الرَّاحِمِينَ قَالَ فَانْصَرَفَتْ حَتَّى دَخَلَتْ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَتْ ذَهَبْتُ مِنْ عِنْدِكِ إِلَى الدُّنْيَا وَأَتَيْتُكَ بِالآخِرَةِ قَالَ خَيْرًا يَأْتِيكِ خَيْرًا يَأْتِيكِ
அலீ(ரலி) அவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. எனவே, அலீ(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், நீ அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றால் அவர்களிடம் (உதவி) கேள்! என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் உம்மு அய்மன்(ரலி) அவர்களி(ன் வீட்டி)டம் இருந்தபோது சென்று கதவை தட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உம்மு அய்மன்(ரலி) அவரகளிடம், இது ஃபாத்திமா கதவை தட்டுகின்ற சத்தமாகும். எந்த நேரத்தில் வருவது ஃபாத்திமாவின் வழமை இல்லையோ அந்த நேரத்தில் நம்மிடம் வந்துள்ளார். எனவே, எழுந்து, கதவை ஃபாத்திமாவிற்கு திறந்து விடுங்கள் என்று கூறினார்கள். நான் அவர்களுக்கு கதவை திறந்து விட்டேன் என்று உம்மு அய்மன் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ஃபாத்திமாவே! எந்த நேரத்தில் வருவது உனது வழமையில்லையோ அந்த நேரத்தில் எங்களிடம் நீ வந்துள்ளாய் என்று கூறினார்கள். உடனே, ஃபாத்திமா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் சொல்வது இன்னும் இறைவனை மகத்துவப்படுத்துவதெல்லாம் வானவர்களின் உணவு. எங்களின் உணவு எது? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், சத்தியத்துடன் என்னை அனுப்பியவன் மீது ஆணையாக! எங்களுக்கு செம்பறியாடு வந்த நிலையிலும் முஹம்மதாகிய (என்) குடும்பத்தில் முப்பது நாட்களாக நெருப்பு எரியவில்லை. நீ விரும்பினால் உனக்கு ஐந்து செம்பறியாடுகளை தருமாறு கட்டளையிடுகிறேன். நீ விரும்பினால் தற்போது எனக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் கற்று தந்த ஐந்து வார்த்தைகளை உனக்கு கற்றுத் தருகிறேன் என்று கூறினார்கள். (அப்போது) ஃபாத்திமா(ரலி) அவர்கள் ஜிப்ரீல்(அலை) உங்களுக்கு கற்று தந்த ஐந்து வார்த்தைகளையே எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், யா அவ்வலல் அவ்வலீன் யா ஆகீரல் ஆகீரீன் தல் குவ்வத்தில் மத்தீன் வ யா ராஹிமல் மஸாகீன் வயா அர்ஹமர் ராஹிமீன் என்று நீ சொல் என்று நபியவர்கள் கூறினார்கள். உடனே, ஃபாத்திமா(ரலி) திரும்பி அலி(ரலி) அவர்களிடம் வந்து, நான் உங்களிடமிருந்து உலகத்தை (எதிர்ப்பார்த்து) நோக்கி சென்றேன். (தற்போது) மறுமை பலனை கொண்டு வந்துவிட்டேன் என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி) அவர்கள் நல்லதே உன்னிடம் வரும் நல்லதே உன்னிடம் வரும் என்று கூறினார்கள்.
ஐந்து வார்த்தைகளுக்கான பொருள்: முதலாமவர்களில் முதலாமவனே! இறுதியானவர்களில் இறுதியானவேனே! உறுதியான ஆற்றலுடையவனே! ஏழைகளுக்கு இரக்கம் காட்டுபவனே! கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே!
இந்த செய்தியை ஒருவர் தனது உரையில் கூறியிருந்தார். அவர் பேசிய வீடியோவை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இந்த செய்தி தப்ரானீ இமாமுக்குரிய துஆ எனும் புத்தகத்தில் 1047வது செய்தியாகவும், தர்தீபுல் அமாலீ எனும் புத்தகத்தில் 1138வது செய்தியாகவும் இடம்பெற்றுள்ளது.
இந்த செய்திகளில், “இஸ்மாயீல் பின் அம்ர் அல்பஜலீ” எனும் அறிவிப்பாளர் இடம்பெறுகிறார்.
இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
الجرح والتعديل (2/ 190)
643 – (131 م) إسماعيل بن عمرو البجلي كوفي قدم اصبهان روى عن سفيان الثوري والحسن وعلي (3) ابني صالح وقيس بن الربيع روى عنه أحمد بن محمد بن عمر بن يونس اليمامي، سألت أبي عنه فقال هو ضعيف الحديث.
இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்று இமாம் அபூ ஹாதம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 2 பக்கம் 190
الضعفاء والمتروكين لابن الجوزي (1/ 118)
400 إسماعيل بن عمرو بن نجيح أبو إسحاق البجلي الأصبهاني الكوفي
يروي عن الحسن بن صالح والثوري
قال الدارمي والدارقطني وابن عدي ضعيف
இவரை தாரமீ, தாரகுத்னீ, இப்னு அதீ ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன் லிப்னில் ஜவ்ஸீ பாகம் 1 பக்கம் 118
تهذيب التهذيب محقق (1/ 280)
وذكره ابن حبان في الثقات فقال يغرب كثيرا وقال أبو الشيخ في طبقات الاصبهانيين غرائب حديثه تكثر وضعفه أبو حاتم والدارقطني وابن عقدة والعقيلي والازدي وقال الخطيب صاحب غرائب ومناكير عن الثوري وغيره مات سنة (227) أرخه أبو نعيم.
சுஃப்யானுஸ் ஸவ்ரீ வழியாகவும் ஏனையோர் வழியாகவும் அரிதானவைகளையும் மறுக்கத்தக்க செய்திகளையும்(முன்கர்) அறிவிக்க கூடியவர் என்று இமாம் கதீப் கூறியுள்ளார்.
தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 1 பக்கம்280
இஸ்மாயீல் இந்த செய்தியை சுஃப்யான் வழியாகத்தான் அறிவித்துள்ளார்.
ميزان الاعتدال (1/ 239)
922 – إسماعيل بن عمرو بن نجيح البجلى الكوفى ثم الاصبهاني.
عن الثوري ومسعر، وانتهى إليه علو الاسناد بإصبهان.
قال ابن عدى: حدث بأحاديث لا يتابع عليها.
துணை சான்றாக கூட எடுக்க இயலாத செய்திகளையே இவர் அறிவிப்பார் என்று இப்னு அதீ கூறியுள்ளார்.
மீஸானுல் இஃதிதால் பாகம் 1 பக்கம் 239
இவ்வாறு பலவீனமானவர் என்று இஸ்மாயீல பின் அம்ரு அல்பஜலீ என்பவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளதால் இந்த செய்தி ஏற்கத்தகுந்த செய்தியாக இல்லை.
இத்தகைய பலவீனமான செய்தியுடன், இதில் இல்லாத பல தகவல்களையும் இட்டுக்கட்டி இந்த செய்தியை பேசியிருந்தார்.
ஹுனைன் போர்க்களத்திலிருந்து நிறைய கனிமத் பொருள் நபி(ஸல்) அவர்களுக்கு வந்திருக்கிறது என அலீ(ரலி) கூறினார்கள் என்றும்,
கடுமையான பஞ்சம் என்று ஃபாத்திமா சொன்னவுடன் நபி(ஸல்) அவர்கள் கட்டியனைத்து அழுதார்கள் என்றும்,
உனக்கு ஏன் உலக ஆசை இப்படி வந்துவிட்டது என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்றும்,
மேலும் அனைத்தையும் விட மேலாக அல்லாஹ்வை அர்ஷிலிருந்து இந்த ஐந்து வார்த்தைகள் இறக்கிவிடும் என்றும் நாகூசாமல் நபி(ஸல்) அவர்களின் மீது இட்டுகட்டி கூறியிருந்தார்.
பலவீனமான செய்தியை சொல்வதே தவறு அதிலும் அதில் இல்லாதவைகளை இணைத்துக் கூறுவது பெருந்தவறு.
“என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக் கட்டி பொய் சொல்வானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்‘ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 108
நான் கூறாதவற்றை நான் கூறியதாக யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.
நூல்: புகாரி 109
இத்தகைய பாவமான காரியத்தை திக்ரு, துஆ என்று சொன்னதும் அதை பரப்பி நாம் அக்குற்றத்தை சம்பாதிக்கலாமா?
எனவே ஒரு செய்தியைப் பரப்புவதற்கு முன்னால் அல்லாஹ்வின் எச்சரிக்கைக்கு அஞ்சி அது சரியான செய்தியா என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்னும் இதுப்போன்று ஏராளமான பலவீனமான ஆதாரமற்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டும் மக்களிடத்தில் பிரபல்யமாகவும் உள்ளன.
அருட்கொடைகளை நினைவில் கொள்வோம்
எம்.முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி.,மங்கலம்
அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது.
(திருக்குர்ஆன் 14:34)
வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் உங்களுக்காக அல்லாஹ் பயன்படச் செய்ததையும், தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் வாரி வழங்கியிருப்பதையும் நீங்கள் காணவில்லையா?
(திருக்குர்ஆன் 31:20)
எளிதில் அறிந்து கொள்கிற வகையிலும் மறைவான வகையிலும் எண்ணற்ற அருட்கொடைகள் நமக்கு அள்ளித் தரப்பட்டுள்ளன. அவற்றுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறோம். முதலில், அவனது அருட்கொடைகளை நினைத்துப் பார்க்கும் பண்பு நம்மிடம் இருப்பது அவசியம். இதுபற்றி மார்க்கத்தில் அதிகம் வலியுறுத்தப்படுள்ளது.
ஆது கூட்டத்தாருக்கு அறிவுரை
ஏக இறைவனின் கட்டளைப்படி மனித சமுதாயத்தை வழிநடத்த பல இறைத்தூதர்கள் வந்திருக்கிறார்கள். நேர்வழி எது, வழிகேடு எது என்பதைத் தெளிவுபடுத்தி சரியான வாழ்க்கையை கற்றுத் தந்திருக்கிறார்கள்.
அந்த நபிமார்கள் மக்களுக்கு செய்த போதனைகளுள் முக்கியமான ஒன்று, ‘‘உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துள்ள அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்” என்பதாகும்.
“உங்களை எச்சரிப்பதற்காக உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவது உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? நூஹுடைய சமுதாயத்திற்குப் பின் உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதையும், உடலமைப்பில் உங்களுக்கு வலிமையை அதிகப்படுத்தியதையும் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்!’’ நீங்கள் வெற்றியடைவீர்கள் (என்றும் ஹூது நபி கூறினார்).
(திருக்குர்ஆன் 7:69)
ஆது கூட்டத்தாருக்கு மிகப்பெரும் வலிமை தரப்பட்டிருந்தது. அவர்கள் மலைகளையும் கூட மிகவும் எளிதாக குடைந்து விடுவார்கள்.
அந்த அருட்கொடையை மறந்து விடாமல் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் என்று அவர்களுக்கு வந்த ஹூது நபி அறிவுரை கூறினார்கள்.
ஸமூது கூட்டாத்தாருக்கு அறிவுரை
“ஆது சமுதாயத்துக்குப் பின்னர் உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதை எண்ணிப் பாருங்கள்! பூமியில் அவன் உங்களை வசிக்கச் செய்தான். அதன் மென்மையான பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள்! மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள்! எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்!’’ (என்று ஸாலிஹ் நபி கூறினார்).
திருக்குர்ஆன் 7:74
ஆது சமூகத்தைப் போன்று ஸமூது சமூகத்திற்கும் அல்லாஹ் மிகப்பெரும் ஆற்றலைக் கொடுத்திருந்தான். மலைகளைக் குடைந்து வீடுகட்டி வாழ்ந்தார்கள்.
அத்தகைய அருட்கொடையைக் கொடுத்த ஏக நாயனுக்குப் பயந்து வாழுங்கள் என்று அவர்களிடம் சாலிஹ் நபி எடுத்துக் கூறினார்கள்.
பனூ இஸ்ராயீல்களுக்குப் போதனை
பனூ இஸ்ராயீல் சமூகத்திற்கும் மிகப்பெரும் பாக்கியம் புரிந்திருந்தான். அவர்களில் இருந்து தான் அதிகமான நபிமார்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு மிகப்பெரும் ஆட்சி அதிகாரம் கொடுப்பட்டது. இதை மனதில் கொண்டு மகத்தான இறைவனுக்கு பணிந்து வாழுமாறு மூஸா நபி போதித்தார்கள்.
“என் சமுதாயமே! உங்களில் நபிமார்களை ஏற்படுத்தி, உங்களை ஆட்சியாளர்களாக்கி, உலகத்தில் எவருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்ததன் மூலம் அல்லாஹ் உங்களுக்குச் செய்திருந்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்!’’ என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 5:20
மூஸா (அலை) அவர்களின் காலத்தில் பிர் அவ்ன் எனும் அரசன் மூலம் பனூ இஸ்ராயீல் கூட்டத்தார் பெரும் துன்பத்தைச் சந்தித்தார்கள். கொடுமைகளை அனுபவித்தார்கள். ஆண்மக்களை கொன்று விட்டு பெண்மக்களை மட்டும் விட்டு வைப்பவனாக பிர்அவ்ன் இருந்தான்.
அவனுடைய கொடுமையில் இருந்து மக்களை அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி மூஸா நபி மீட்டெடுத்தார்கள். அந்த மக்கள் தவறிழைக்கும் போது அல்லாஹ் காப்பாற்றியதை நினைத்து நல்லபடி வாழுமாறு அறிவுரை கூறினார்கள்.
ஃபிர்அவ்னுடைய ஆட்களிடமிருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றி, (உங்களுக்குச் செய்த) அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்! அவர்கள் மோசமான துன்பத்தை உங்களுக்குச் சுவைக்கச் செய்தனர். உங்களின் ஆண் மக்களை அறுத்துக் கொன்றனர். உங்களின் பெண்(மக்)களை உயிருடன் விட்டனர். உங்கள் இறைவனிடமிருந்து இதில் பெரும் சோதனை இருந்தது’’ என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 14:6
நபித்தோழர்களுக்கு கூறப்பட்ட அறிவுரை
முந்தைய நபிமார்களைப் போன்று அருட்கொடைகளை எடுத்துக் கூறி அறிவுரைக் கூறுமாறு இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் உத்தரவிட்டான்.
உமது இறைவனின் அருட்கொடையை அறிவிப்பீராக!
(திருக்குர்ஆன் 93:11)
முஹம்மது நபிக்கு கட்டளை இட்டதோடு திருக்குர்ஆன் வழியாக நபித்தோழர்களுக்கு செய்த அருட்கொடைகளை அல்லாஹ் பல வசனங்களில் நினைவூட்டுகிறான்.
இனம், குலம் பெயரால் தொடர் சண்டைகள். பல தலைமுறைகள் தாண்டியும் பழிவாங்கும் குணம். மூடநம்பிக்கைகள், அனாச்சாரங்களில் அதிக ஈடுபாடு. தீமைகள், பாவங்கள் பொருட்டல்ல.
இப்படி எதிலும் நெறியில்லாமல் வாழ்ந்த அன்றைய கால மக்களுக்கு முஹம்மது நபி மூலம் அல்லாஹ் அருள்புரிந்தான். அசத்திய இருளிலிருந்து சத்திய வெளிச்சத்திற்கு வழிகாட்டினான். இவற்றை அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 3:103
ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் அவர்கள் சந்தித்தப் பிரச்சனைகள், தொல்லைகள் கொஞ்ச நஞ்மல்ல. அவர்கள் அடித்து உதைத்து காயப்படும் அளவுக்கு தாக்கப்பட்டார்கள்; ஊரில் ஒதுக்கி வைக்கப்படார்கள்.
அப்போது, மிகவும் சொற்பமான எண்ணிக்கையில் இருந்த அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான்; பலத்தை வழங்கி பாதுகாப்பு அளித்தான்.
மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சிக் கொண்டும், குறைந்த எண்ணிக்கையிலும், இப்பூமியில் பலவீனர்களாவும் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களுக்குப் புகலிடம் அளித்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.
(திருக்குர்ஆன் 8:26)
நீங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததையும், உங்களை அவன் அதிகமாக்கியதையும் எண்ணிப் பாருங்கள்! “குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது’ என்பதைக் கவனியுங்கள்!’’
(திருக்குர்ஆன் 7:86)
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
திருக்குர்ஆன் 5:11
நபித்தோழர்களை அழித்தொழிக்க அசத்தியவாதிகள் பல வழிகளில் முயற்சி செய்தார்கள். படைதிரட்டிக் கொண்டு வந்தார்கள்.. அவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. அதையொட்டி நடந்த போர்களங்களிலும் அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான்; வெற்றி அளித்தான்.
இதோ, முந்நூறு நபித்தோழர்கள் ஆயிரம் முஷ்ரிக்குகளை எதிர்கொண்ட வீரம் செறிந்த பத்ருப் போரைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.
உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண்பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.
(திருக்குர்ஆன் 8:43)
உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான்.
(திருக்குர்ஆன் 8:11)
நீங்கள் (களத்தில்) சந்தித்துக் கொண்ட போது உங்கள் கண்களுக்கு அவர்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும், அவர்களின் கண்களுக்கு உங்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் செய்வதற்காக (இவ்வாறு காட்டினான்). காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.
(திருக்குர்ஆன் 8:44)
எதிரிகளின் எண்ணிக்கை குறைவாக காட்டப்பட்டது. தூக்கம் மற்றும் மழை மூலம் புத்துணர்வைப் பெற்றார்கள். மலக்குகளும் களத்தில் இறங்கி எதிரிகளை வேரறுத்தார்கள்.
இப்படி, போர்களின் போதும் நபித்தோழர்களுக்கு அல்லாஹ் வெவ்வேறு வகையில் அருள் புரிந்தான். பத்ருப் போரைப் போன்று அகழ்ப் போரிலும் அவர்களுக்கு உதவி கிடைத்ததை பின்வரும் வசனம் தெரிவிக்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! உங்களிடம் கூட்டுப் படையினர் வந்த போது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்! அவர்களுக்கு எதிராகக் காற்றையும், நீங்கள் காணாத படையினரையும் அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 33:9
அல்லாஹ்வின் அறிவுரை
மனிதர்களுக்கப் பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும் அல்லாஹ் அநேக அருட்கொடைகள் வழங்கி இருக்கிறான். அவற்றை நினைத்துப் பார்க்க தவறிவிடக் கூடாது.
ஏனெனில், அதன் மூலம் அல்லாவ்ஹின் ஆற்றலையும் அதிகாரத்தையும் மறக்காமல் இருப்போம். அவன் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியானவன் என்பதை புரிந்து செயல்படுவோம்.
மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர உணவளிக்கும் (வேறு) படைப்பாளன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எவ்வாறு நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
(திருக்குர்ஆன் 35:3)
அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
(திருக்குர்ஆன் 2:231)
உலகம், உடல், உயிர், வாழ்க்கை இதற்கெல்லாம் அப்பால் அல்லாஹ் ஒரு முக்கிய அருட்கொடையை தந்திருக்கிறான். இறைத்தூதர்கள் அனுப்பி நமக்கு வாழ்வியலைக் கற்றுத் தந்திருக்கிறான். உயரிய அருட்கொடையான நேர்வழியை கொடுத்திருக்கிறான். அற்பமான இம்மையில் மட்டுமல்ல அழியாத மறுமையிலும் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டியுள்ளான்.
இவ்வறெல்லாம் நம்மிடம் இருக்கின்ற அருட்கொடைகளுக்கு சொந்தக்காரன் அல்லாஹ்வே என்பதை உணர்ந்து அவனிடம் சரணடைய வேண்டும். அவனிடமே ஆதரவு தேட வேண்டும். இந்தப் பாடம் நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனையிலும் இடம் பெற்றிருக்கிறது.
‘அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. ல இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்ததஅத்து, அபூ உ லக்க பி நிஅமத்திக்க, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃபக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக் ஃபிருத் துனூப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி ஸனஅத்து’ என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும். மாலை நேரத்தில் ஒருவர் இதைச் சொல்லிவிட்டு (அன்று மாலையே) அவர் இறந்தால் அவர் (சொர்க்கம் செல்வார்’ அல்லது சொர்க்கவாசியாவார்’ காலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு அன்று பகலிலேயே இறந்தால் அதே போன்றுதான் (அவரும் சொர்க்கம் செல்வார்) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
அறிவிப்பவர்: ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)
நூல்: புகாரி (6323)
நீயே எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திக்கிறார்கள். இதுபோன்று நாமும் அருட்கொடைகளை நினைவு கூர்ந்து அவற்றை அல்லாஹ் தான் அளித்திருக்கிறான் என்பதை மனதார ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவனுக்கு நன்றி தெரிவித்து அடிபணிந்து வாழும் உணர்வு நம்மிடம் மேலோங்கும்.
அருட்கொடையை மறக்காதீர்கள்
வாழ்க்கையில் இதற்கு முன்பு எப்படி எல்லாம் சிரமத்தில் இருந்து கொண்டிருந்தோம்; இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம். இதற்கு காரணம் அல்லாஹ் தான் என்ற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும். ஆனால், சிலர் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.
மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். “உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன்’’ எனக் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 39:8)
பிறரிடம் வேலைப் பார்க்கும் நிலை மாறி முதலாளி ஆனவுடன், வாரிசு இல்லையே என்ற நெடுநாள் கவலையைப் போக்கும் குழந்தை பிறந்தவுடன், வாட்டி வதைக்கும் நோயிலிருந்து விடுதலை பெற்றவுடன், வாடகை வீட்டுக்குப் பதிலாக சொந்த வீட்டில் குடியேறியவுடன்ஞ் இப்படியான இன்பமான நிலையில் எப்படி இருக்கிறோம்?
இம்மாதிரியான நேரங்களில் நமது மனநிலையும் செயல்பாடுகளும் அல்லாஹ்வை பெருமைப் படுத்தும் வகையில் இருக்க வேண்டுமெனில் அவனது அருட்கொடைகளை நினைவில் கொள்வது முக்கியம்.
ஆனால், வாழ்க்கையில் முன்னேறிய பிறகு எல்லாம் எனது திறமையாலும் முயற்சியாலும் கிடைத்தது என்று தம்பட்டம் அடிப்பவர்களைப் பார்க்கிறோம். அல்லாஹ்வின் அருட்கொடை நன்றி செலுத்தாமல் கடமைகளை மறந்து வாழ்கிறார்கள். இத்தகைய ஆட்களை அல்லாஹ் கடுமையாக கண்டிக்கிறான்.
மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் “எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது’’ எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
(திருக்குர்ஆன் 39:49)
வாழ்வில் வளமாக இருக்கும் போது மார்க்க விசயத்தில் அலட்சியமாக இருந்துவிட்டு, துன்பம் வரும் போது மட்டும் சிலருக்கு அல்லாஹ்வின் மீது அதிருப்தி வந்துவிடுகிறது. இதுபோன்ற ஆட்களையும் அல்லாஹ் கண்டிக்கிறான்.
மனிதனுக்கு நாம் அருட்கொடையை வழங்கும் போது நம்மைப் புறக்கணித்து, தொலைவில் செல்கிறான். அவனுக்குத் தீங்கு ஏற்படும் போது நம்பிக்கை இழந்தவனாகிறான்.
திருக்குர்ஆன் 17:83
அருட்கொடையை அறிவதற்குரிய வழி
ஏதேனும் பிரச்சனை, நெருக்கடி, இழப்பு போன்றவை ஏற்படும் போது அல்லாஹ் மீது அவநம்பிக்கை கொள்ளக் கூடாது. அவன் கொடுத்துள்ள மற்ற அருட்கொடைகளை யோசித்துப் பார்க்க வேண்டும். அடுத்தவர்களின் செழிப்பையும், சந்தோசத்தையும் பார்த்து விட்டு நொந்து போகக் கூடாது.
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6490)
வாழ்க்கையில் ஒன்று இருக்கும். மற்றொன்று இருக்காது. செல்வம் இருக்கும் பலருக்கு ஆரோக்கியம் இல்லை. ஆரோக்கியம் இருக்கும் பலருக்கு அரவணைக்க ஆளில்லை. அரவணைப்பு பெற்ற பலருக்கு ஆயுளில்லை. எனவே, வாழ்வில் எதற்காவது ஏங்கும் போது அந்த விசயத்தில் நம்மை விட கீழிருக்கும் மக்களை பார்த்து மனதை தேற்றிக் கொள்வதே சிறந்தது.
உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (5671)
அருட்கொடைகள் விசாரிக்கப்படும்
அல்லாஹ்வின் அருட்கொடைய அற்பமாக கருதிவிடக் கூடாது என்று மட்டுமல்ல, அது குறித்து மறுமையில் விசாரிக்கப்படும் என்றும் மார்க்கம் நம்மை எச்சரிக்கிறது.
பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 102:8
இந்த வசனத்தை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பெரிய விசயங்கள் முதல் அற்பமாகக் கருதப்படும் விசயங்கள் வரை எல்லாவற்றையும் அல்லாஹ் விசாரிப்பான். இதைப் பின்வரும் செய்தி விளக்குகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஒரு பகல்” அல்லது “ஓர் இரவு” (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது” என்று கூறிவிட்டு, “எழுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.
அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருக” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்” என்று பதிலளித்தார்.
அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்” என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்”என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4143)
நரகை விட்டு காக்கும் அருட்கொடை
ஆரோக்கியம், பொருளாதாரம், கல்வி, குடும்பம், உறவுகள் என்று அனைத்து அருட்கொடைகளும் மறுமையில் விசாரிக்கப்படும். ஒரு நேர உணவு பற்றி கூட விசாரிக்கப்படும் எனும் போது நமக்கு கொடுத்துள்ள நேர்வழி குறித்து விசாரிக்காமல் வெறுமனே விடப்படுவோமா? எனென்றால், நேர்வழி என்பது அல்லாஹ்வின் அளவற்ற அருள். இதனை குர்ஆன் கூறும் மறுமை சம்பவத்தின் மூலம் விளங்கலாம்.
“எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?’’ என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார். நீங்கள் (அவனை) எட்டிப் பார்க்கிறீர்களா என்று (இறைவன்) கேட்பான். அவர் எட்டிப் பார்க்கும்போது அவனை நரகின் மத்தியில் காண்பார்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னைக் குழியில் தள்ள முயன்றாய்’’ என்று அவர் (நரகவாசியிடம்) கூறுவார். எனது இறைவனின் அருட்கொடை இல்லாதிருந்தால் (நரகத்திற்கு) கொண்டு வரப்பட்டோரில் நானும் ஆகியிருப்பேன். நமது முதல் மரணத்தைத் தவிர, நாம் மரணிப்போர் இல்லையோ? நாம் தண்டிக்கப்படுவோரும் இல்லையோ? (என்றும் அவனிடம் கேட்பார்.) இதுவே மகத்தான வெற்றி.
(திருக்குர்ஆன் 37: 51-61)
இந்த வசனத்திலுள்ள நண்பர்களைப் போன்று இன்றும் பலர் இருக்கவே செய்கிறார்கள். உலகம் ஒரு சோதனை களம், மறுமையே நிரந்தரம், இறைவன் ஒருவனே; அவன் சொன்னபடி தான் வாழ வேண்டும் என்பதை கூட அறியாமல் பல மக்கள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் சத்தியத்தை அறியும் வாய்ப்பை அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிறான். சத்தியத்தை தழுவியதற்காக அடக்குமுறைக்கு ஆளாகும் மக்கள் இருக்கையில், அதனை நடமுறைப்படுத்தும் அழகிய வாய்ப்பு நமக்கு உள்ளது.
அத்துடன், அதை அடுத்த மக்களுக்கு எடுத்துரைத்து அதில் வெற்றியும் கிடைக்கிறது என்றால், இது மகத்தான அருட்கொடை இல்லையா? தற்போது நமது ஜமாஅத் மூலம் நடந்து முடிந்த திருக்குர்ஆன் மாநாடும் இந்தப் பட்டியலில் அடங்கும்.
ஒரு சிலர் தங்களது சுயநலனுக்காக, உலக ஆதாயத்திற்காக, பொறாமை காரணமாக இந்த ஜமாஅத்தையே அழிக்க நினைத்து கொண்டிருக்கிறார்கள். அவதூறுகளை அள்ளிவீசி வருகிறார்கள். அவை பொய்யென மக்களை உணர்ந்து மக்கள் சமுத்திரமாய் சங்கமித்தார்களே இதுவும் அல்லாஹ்வின் மிகப்பெரும் அருட்கொடை.
இதைப் புரிந்து ஒட்டுமொத்த வாழ்வையும் மார்க்கத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்வோமாக. இவ்வாறு எல்லா அருட்கொடைகளையும் நினைவில் கொள்ளும் போது, அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறும் வகையில் நமது வாழ்க்கை சீரும் சிறப்பாக இருக்கும்; ஈருலகிலும் வெற்றி கிடைக்கும். இந்தப் பாக்கியத்தை அனைவருக்கும் அல்லாஹ் அருள்வானாக!
தப்லீக் இஜ்திமா வெற்றி மாநாடல்ல வெட்டி மாநாடு
தப்லீக் பணி அதாவது அழைப்புப் பணி என்றால் அதை ஒட்டு மொத்தமாக தப்லீக் ஜமாஅத் மட்டும் தான் குத்தகைக்கு எடுத்தது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இவர்கள் முழுமையான அழைப்புப் பணி செய்தால் இந்த பெயருக்கும் பிம்பத்திற்கும் இந்த ஜமாஅத் பொருத்தமானது தான் என்று நாம் ஓர் ஆறுதல் அடையலாம். ஆனால் இவர்கள் அப்படி ஓர் அழைப்புப் பணி செய்யவில்லை என்பது உண்மையாகும். அழைப்புப் பணியின் அடிப்படையே நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதாகும்.
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 9:71
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 3:104
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!
அல்குர்ஆன் 3:110
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.
அல்குர்ஆன் 3:114
இந்த வசனங்கள் அனைத்தும் நன்மையை ஏவச் சொல்கின்ற அதே வேளையில் தீமையையும் தடுக்கச் சொல்கின்றது. இந்த வசனங்களின் அடிப்படையில் அழைப்புப் பணி என்றால் நன்மையை ஏவி தீமையை தடுப்பது தான். ஆனால் இவர்கள் நன்மையை ஏவுவதை மட்டும் செய்து விட்டு தீமையை அறவே கண்டுக் கொள்வது கிடையாது.
இதற்கு இவர்கள் ஒரு சப்பைக் கட்டு ஒன்று கட்டுவார்கள். இருள் இருக்கும் போது ஒளியை ஏற்றி விட்டால் இருள் போய் விடும் என்பது தான் அந்த சப்பைக் கட்டு. இதற்கு இவர்கள் இந்த உதாரணத்தை பொருத்துவதால் அது சரி என்பது போன்று தோன்றுகின்றது.
ஓரிடத்தில் ஓர் அசுத்தம் கிடந்தால் என்ன செய்வது? தீமை என்ற அசுத்தத்தைத் தண்ணீர் விட்டு கழுவாமல் அல்லது விளக்குமாறு வைத்து வாரி விடாமல் அந்த அசுத்தம் நகரப் போவதில்லை. தீமை என்பது ஓர் அசுத்தம் அதை தண்ணீர் கொண்டு துப்புரவு செய்யாமல் அதை களையமுடியாது. எனவே ஒளி உதாரணம் அசுத்தம் என்ற உதாரணத்தின் மூலம் அடிப்பட்டு போய்விடுகின்றது.
தொழுகையை ஏவும் இவர்கள் ஓரிடத்தில் கூட தர்ஹா வழிப்பாட்டை தடுப்பது கிடையாது. தர்ஹா வழிபாடு என்பது பக்கா இணைவைப்பாகும். அழைப்புப்பணியின் ஆணிவேராக திகழ்ந்த இறைத்தூதர்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இணைவைப்புக்கு எதிராகத்தான் அர்ப்பணமானது. அதனால் தான் அவர்கள் இரத்தம் சிந்தி உயிர் துறக்கும் யுத்தம் களம் காண நேர்ந்தது.
ஆனால் இவர்களோ இணைவைப்பு என்று அந்த பெரும்பாவத்தை கண்டுக் கொள்வதே கிடையாது. அதற்கு எதிராக எந்த ஓர் பிரச்சாரமும் செய்வதில்லை. இணை வைப்புக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இந்த அடிப்படையில் இது மார்க்க ரீதியிலான அழைப்பு பணி கிடையாது. ஏதோ இவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப செய்துக் கொள்கின்ற ஓர் உடல் உழைப்பு பணி. அவ்வளவுதான்.
அழைப்புப் பணியின் அடுத்த அம்சம் தீமையை தடுப்பது மட்டுமின்றி அந்த தீமையில் பங்கேற்காமல் தவிர்ந்துக் கொள்வது முக்கிய பணியாகும். ஆனால் தப்லீக் பணியில் ஈடுபட்டிருப்பவர்களோ வரதட்சணை கல்யாணங்களில் சர்வ சாதாரணமாக கலந்துக் கொண்டு விருந்துகளையும் வகையாக விட்டு வைக்க தவறுதில்லை. அல்லாஹ் இதை சாபத்திற்குரிய பாவமாகக் குறிப்பிடுகின்றான்.
“(ஓரிறையை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம்.
அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் 5:78,79
அழைப்புப் பணியின் அடுத்த அம்சம் சமூகப்பணிகளை மேற்கொள்வதாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் நபி(ஸல்) அவர்களின் பணிகளை பட்டியலிடும் போது நன்மையை ஏவி தீமைத் தடுப்பதுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மக்களின் பாரங்களையும் பளுக்களையும் இறக்கி வைப்பதையும் இணைத்துக் கூறுகின்றான்.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 7:157
இந்த சமூக நலப்பணிகளை தப்லீக் ஜமாஅத்தினர் மருந்துக்குக் கூட மறந்தும் செய்வது கிடையாது. உதாரணத்திற்கு இரத்த தானத்தை எடுத்துக் கொள்வோம். இரத்த தானம் விபத்து மற்றும் நோயினால் பாதிக்கப் பட்ட மக்களின் உயிர்களை பாதுகாக்கும் திரவமாக அமைந்திருக்கின்றது. உயிர்காக்கும் உன்னத தர்மத்தை செய்வதற்கு இவர்கள் முன்வருவதில்லை. அண்மையில் தமிழகத்தில் கஜா புயலால் ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பகுதிகளில் போய் இவர்கள் களப்பணி ஆற்றவோ நிவாரணம் வழங்கவோ இவர்கள் முன்வரவில்லை. புயல் அடித்தாலும் பூகம்பம் பூமியில் மக்களை புரட்டி போட்டாலும் சுனாமி வந்தாலும் சூறாவளி வீசினாலும் இவர்கள் பாட்டிற்கு கஸ்து, தஃலீம் என்று கண்ணை மூடிக் கொண்டு தங்கள் கதைகளை நடத்திக் கொண்டு மக்களை விட்டு ஒதுங்கியிருக்கும் காட்சியைத் தான் காணுகின்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மார்க்கம் என்றால் பிறர் நலன் நாடுதல் என்று குறிப்பிட்டார்கள்.
தமீமுத் தாரீ (ரலி) அவர்கல் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது“ தான் என்று கூறினார்கள்.நாங்கள்,யாருக்கு (நலம் நாடுவது)?“ என்று கேட்டோம்.நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்“ என்று பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 95
ஆனால் இவர்கள் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையையும் நாடுவதில்லை. அப்படி நாடி இருந்தால் இவர்கள் கஜா புயலால் களப்பணி ஆற்றியிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜிஹாதில் மிகச்சிறந்தது சத்தியக் கொள்கையை அநியாயக்காரஅரசனிடம் எடுத்துக் கூறுவதாகும்
நூல் : நஸயீ 4209
இந்த ஹதீஸ் அழைப்பு பணியின் முக்கிய அம்சமாகும். மத்திய இந்துத்துவா அரசாங்கம் முஸ்லிம்களின் தனியார் சட்டமான தலாக் சட்டத்தில் தலையீடு செய்கின்றது. பாபரி மஸ்ஜித் நிலத்தை நீதிமன்ற தீர்ப்புக்கு முந்தியே ஆட்டையை போட காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றது. இலட்சக்கணக்கில் திருச்சி இனாம் குளத்தூரில் இஜ்திமாஃ என்ற பெயரில் கூடிய இவர்கள் இந்த அநியாயத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்து ஒரு தீர்மானம் போட்டிருப்பார்களா? என்றால் அறவே இல்லை.
இந்த வகையில் இம்மை அடிப்படையிலும் எந்த பயனுமற்ற ஒரு வெட்டி மாநாடாகும். அழைப்பு பணி அம்சங்கள் எதுவும் இதில் இல்லாததால் மறுமை அடிப்படையிலும் இது ஒரு வெட்டி மாநாடு தான்.
யாரோ ஹஜ்ரத் ஜீ துஆவாம். அதில் கலந்து கொள்வது ஒரு பாக்கியம் என்பது போன்ற ஒரு தவறான கருத்தை இவர்கள் விதைத்து மக்களை மூளைச் சலவை செய்துக் கொண்டிருக்கின்றார்கள். முதலில் மார்க்கத்தில் கூட்டுத் துஆ என்பது இல்லை. அப்படியே இருந்தாலும் இவருடைய துஆ கபூல் என்பது போன்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி மக்களை சலனமற்ற ஜடங்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தப்லீக் என்ற பெயரில் மக்களை தவறான பாதையை விட்டு காப்பது என்ற இலக்கை நோக்கி அமைதியாக அடி எடுத்து வைப்போமாக!
மாமறையின் தொடர்பு மாநாடு வரையா? மரணம் வரையா?
உக்காஷா இஸ்லாமியக் கல்லூரி
மாநாடிற்காக மறையை பற்றிய உரை நாவில் நடனமாட. மாநாடின் அழைப்பு பணி ஆற்கடல் அலையைப் போல நாலா திசையிலும் பரவ. களத்தில் கலங்காமல் தவ்ஹீத் சொந்தங்கள். கைகளில் பிரசுங்கள், பதாகைகள் என்று ஏகத்துவ அழைப்புப் பணிகள்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் இரண்டு அணுகுண்டுகள் போடப்பட்டது. அப்போது மற்ற நாடுகளெல்லாம் ஜப்பானைப் பார்த்து, இனி ஜப்பான் அவ்வளவு தான், அதனால் எதுவும் செய்ய இயலாது என்று கூறின. ஆனால் அவர்களின் கூற்றைக் குப்பைக் கூழங்களாக மாற்றி வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.
அதைப்போல இந்த தவ்ஹீத் குடும்பதில் எத்தனை குண்டுகள் எறியப்பட்டாலும், எத்தனை தலைகள் தடம்புரண்டாலும் தவ்ஹீதை தங்குதடையின்றி மக்கள் மத்தியில் வீதிவீதியாக, தெரு தெருவாக, அவதூறுக்கெல்லாம் அஞ்சாமலும் கண்ணுறங்காமாலும் கதவைத் தட்டி கலப்படையாமல் கலப்பணியில் இடுப்பட்ட தவ்ஹீத் சொந்தங்களே…!
திருக்குர்ஆனை எல்லா நேரம்களிலும் நாம் வாழ்கை நேரியாக கொண்டுயிருக்க வேண்டிய நம் சமுதாயம் அதை விட்டும் மிக தொலைவில் இருந்தது. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பெருக்கெடுத்த இந்த பிரச்சார பணியின் விளைவு இஸ்லாமிய சொந்தங்களிடத்தில் திருமறையின் தொடர்பை அதிகமாகப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம்…
கடந்த மாதங்களில் திருமறையின் தொடர்பு எப்படி அதிகமாக காணப்பட்டதோ அதைப் போன்று எதிர்வருகின்ற காலங்களில் திருமறையின் தொடர்பு தொடர்ச்சியாக தவ்ஹீத் சொந்தங்களிடத்தில் இருக்கவேண்டும்.ஏனென்றால்
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது
‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6465
அல்லாஹ்வுடைய தூதருக்கு விருப்பமானது…..
ஒருவர் நிரந்தரமாக(த் தொடர்ந்து) செய்யும் நற்செயலே இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6462
அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் விருப்பமான ஒரு நன்மையான காரியத்தை தொடர்து செய்வதுதான் என்பது முன்னர் கூறப்பட்ட ஹதீஸ்களில் பார்த்தோம்.
நாம் கடந்த காலங்களில் எப்படி திருக்குர்ஆன் ஓத கற்றுக்கொள்ளவும், அதை கற்றுகொடுக்கவும், அதை மனனம் செய்யவும், அதை அழக்கான குரல்களில் வெளிபடுத்துகின்ற திறனை வளர்ப்பதற்காக எப்படி பல முயற்சிகளை பல நிகழ்ச்சியின் வாயிலாக நாம் முன்யெடுத்து சென்றோமோ அதைபோல எதிர் வரும் காலங்களில் அவ்வனைத்தையும் தொடர்ச்சியாக செய்யவேண்டும்…
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நபிதோழர்களிடத்தில் திருமறையின் தொடர்பு இறைதூதர் உடைய இறப்பிற்கு முன்னால் எவ்வாறு இருந்ததோ அதைப்போல தான் இறைதூதர் உடைய இறப்பிற்கு பின்னாலும் இருந்தது
நபியவர்களின் காலத்தில் குர்ஆனின் அறிவு.
நபியவர்கள் வாழ்கின்ற காலத்தில் நபிதோழர்களிடத்திலும், நபிதோழியர்களிடத்திலும் திருக்குர்ஆனின் தொடர்பும், அதன் அறிவும், அதன் மனனம் தன்மையும் எந்த அளவிற்கு மிகைத்து காணப்பட்டது என்றால்.
நபி(ஸல்) அவர்கள் ஹப்ஸா (ரலி) அவர்கள்யிடத்திள் “அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப் பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள் “ என்று கூறினார்கள். அதற்கு ஹப்ஸா (ரலி) அவர்களை கண்டித்தார்கள். அப்போது ஹப்ஸா (ரலி) அவர்கள். “உங்களில் யாரும் அந்த நரகத்தை கடக்காமல் இருக்க முடியாது” (19:71) எனும் வசனத்தை ஓதிக்காடினார்கள். நபி(ஸல்) அவர்கள் “பின்னர் அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டுவிடுவோம்” (19:72) என்றும் அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்..
அறிவிப்பவர்:உம்மு முஸ்ஷ்யர்(ரலி)
நூல்: முஸ்லிம் 4909
முன்னர் கூறப்பட்ட செய்தியில் ஹப்ஸா (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறிய செய்தியை திருக்குர்ஆனுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்கின்ற அறிவு திறனை பெற்று இருந்தார்கள். நபியவர்கள் கூறிய அந்நேரத்திலேயே அதற்கு மறுப்பாக ஒரு வசனத்தை ஆதாரமாக சமர்பிக்கிறார்கள் என்றால் அவர்களிடதில் திருகுர்ஆன்வுடைய அறிவும், மனனம் தன்மையும் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்..
நபிகளார் காலத்தில் திருமறையின் தொடர்பு சிறுவயதிலே தொடரப்பட்டது எந்த அளவிற்குயென்றால்….
நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், ‘மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?’ என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், ‘அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக… அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்… கூறுகிறார்’ என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டி) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பகுதி செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போன்று ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், ‘அவரை அவரின் குலத்தா(ரான குறைஷிய)ருடன்விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)’ என்று கூறினார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்‘ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
அறிவிப்பவர்: அம்ர் இப்னு ஸலிமா (ரலி)
நூல்:புகாரி 4302
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தொழுகைக்கு இமாமாக பணியாற்றுவது என்பது சாதாரமான விஷயம் இல்லை…
தொழுகைக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஒருவர் பெற வேண்டும் என்றால் அவர் திருமறையை அதிகமாக கற்றிருக்க வேண்டும். இன்னிலையில் இருந்த அம்ர் பின் சலிமா (ரலி) அவர்கள் 6 வயது (அல்லது) 7 வயதில் தொழுகைக்காக தலைமையெற்று இருக்கிறார்கள் என்றால் திருமறையை அதிகம் கற்றதுதான் காரணம்…
நபியவர்களுடைய மரணத்திற்கு பின்னால்…
நபிதோழர்களிடத்திலும், நபிதோழியர்களிடத் திலும் திருகுர்ஆன்வுடைய தொடர்பும், அதனுடைய அறிவும் அதிகமாவே காணப்பட்டது எந்த அளவிக்கு என்றால்
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?’ என்று கூறினார்கள். இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’ எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, ‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘ஆம் (ஒதினேன்)’ என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்கமா பின் கைஸ்
நூல்:புகாரி 4886
மேற்க்கூறப்பட்ட செய்தியில் உம்மு யாகூப் (ரலி) என்ற பெண்மணி திருக்குர்ஆனை முன் அட்டை முதல் பின் அட்டை வரை மனனம் செய்து அதனுடைய முழுமையான கருத்தை எந்த அளவிற்கு உள்ளதில் ஆணித்தரமாக பதியவைத்து இருந்தார்கள் என்பதை கண்டோம்…..
இன்னும் திருக்குர்ஆனின் அறிவு நபிதோழர்கள் மற்றும் நபிதோழிகளிடத்திலும் நபி(ஸல்) அவர்களுடைய மறைவுக்கு பின்பும் தொடர்சியாக காணப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
அதைப்போல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் மாநாடு அறிவித்த நாள்முதல் திருமறையின் போதனையை முஸ்லிம் சமுதாயதிற்கும், பிற மத சமுதாயதிற்கும் கொண்டுசெல்வதற்காக முயற்சிகளையும், பல கட்ட பணிகளையும் நாம் மேற்கொண்டோம். இன்னும் வான்மறையை நாம் வாழ்கை நெறியாக மாற்றி அதன் நன்மைகளை நாம் பெறுவதற்காக பலவழிகளை நாம் கையாண்டோம்.
ஏகத்துவ பிரச்சார பிரங்கிகளாக இருக்ககூடியவர்கள் எப்படி மாநாட்டை முன்னிட்டு மாமறையுடைய வசனத்தை மக்களுக்கு எடுத்துசொன்னோமோ அதேப்போல வரக்கூடிய காலத்தில் இன்னும் வீரியத்தோடு எந்த ஒரு தோய்வும் இல்லாமல் உன்னத குர்ஆனை உலக மக்களுக்கு மரணம் வரை எடுத்துசொல்ல வேண்டும். அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக!
வானத்தின் தகவல்களை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்கிறார்களா?
அபு அம்மார்
திருமறை வசனங்கள், மற்றும் நபிமொழிகளை மேலோட்டமாகப் பார்ப்பவர்களும், சில வழிகெட்ட கொள்கைக்குச் சொந்தக்காரர்களும் வானத்துச் செய்திகளில் சிலவற்றை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்கின்றனர் என்றும், அவ்வாறு செவியேற்றதை ஜோசியக்காரன், அல்லது சூனியக்காரனிடம் போடுகின்றனர் என்றும், இதன் மூலம்தான் ஜோசியக்காரர்கள் சில விசயங்களை முன் கூட்டியே அறிந்து கூறுகின்றனர் என்றும் வாதிடுகின்றனர்.
ஆனால் திருமறை வசனங்களைக் கவனமாக ஆய்வு செய்தால் முஹம்மது நபியவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன் சில விசயங்களை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்டு வந்தனர். முஹம்மது நபியவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட பிறகு அது அறவே தடை செய்யப்பட்டு விட்டது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
வானத்தை அல்லாஹ் படைத்த காலத்திலிருந்தே ஷைத்தான்கள் அங்குள்ள தகவல்களைச் செவியேற்க முடியாதவாறு மிகப்பெரும் பாதுகாப்பு அரணை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். ஷைத்தான்கள் வானத்தின் தகவல்களை ஒட்டுக் கேட்பதற்காகக் காத்திருக்கும் போது வானவர்கள் தீப்பந்தங்களால் எறிந்து ஷைத்தான்களை விரட்டியடிப்பார்கள். என்றாலும் சில வேளை தீப்பந்தங்கள் எறியப்படுவதற்கு முன் வானவர்கள் பேசும் சில வார்த்தைகளை ஷைத்தான்கள் செவியேற்று விடுவார்கள். இதனை அவர்கள் ஜோசியக்காரனின் காதுகளில் போடும்போது அவர்கள் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து ஜோசியம் கூறுவார்கள்.
ஷைத்தான்கள் இவ்வாறு செவியேற்பதும், அதனை ஜோசியக்காரனுடைய காதுகளில் போடுவதும் திருமறைக் குர்ஆன் அருளப்படுவதற்கு முன்பு தான். திருமறைக் குர்ஆன் இறக்கப்பட்ட பின்பு இது தடைசெய்யப்பட்டு விட்டது.
இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.
திருமறைக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னால் ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்டனர் என்பதற்கான சான்றுகள்.
{وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ} [الملك: 5]
முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
(அல்குர்ஆன் 67 : 5)
{وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ (16) وَحَفِظْنَاهَا مِنْ كُلِّ شَيْطَانٍ رَجِيمٍ (17) إِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَأَتْبَعَهُ شِهَابٌ مُبِينٌ (18)} [الحجر 15: 16 – 18]
வானத்தில் நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம். ஒட்டுக் கேட்பவனைத் தவிர, விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதைப் பாதுகாத்துள்ளோம். அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும்.
( அல்குர்ஆன் 15 : 16, 17, 18)
{إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ (6) وَحِفْظًا مِنْ كُلِّ شَيْطَانٍ مَارِدٍ (7) لَا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَى وَيُقْذَفُونَ مِنْ كُلِّ جَانِبٍ (8) دُحُورًا وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ (9) إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ (10)} [الصافات37: 6 – 10]
முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம். கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்).(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும் பிரகாசமான தீப்பந்தம்அவர்களை விரட்டும். அவர்களுக்கு நிலையான வேதனையுமுன்டு.
(அல்குர்ஆன் 37 : 6 – 10)
{ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ائْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ (11) فَقَضَاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ فِي يَوْمَيْنِ وَأَوْحَى فِي كُلِّ سَمَاءٍ أَمْرَهَا وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَحِفْظًا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ (12)} [فصلت 41 :, 1211]
கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.
(அல்குர்ஆன் 41 : 11, 12)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் வானம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பதையும், அவர்கள் தீப்பந்தங்களால் எறியப்பட்டனர் என்பதையும், ஒரு சில நேரங்களில் ஷைத்தான்கள் ஒரு சில வாரத்தைகளைச் செவியேற்று விடுவார்கள் என்பதையும் அறிவிக்கின்றன.
ஷைத்தான்கள் செவியேற்ற விசயங்களை ஜோசியக்காரன் காதில் போடுவதும், அவன் அதனுடன் நூறு பொய்களை கலந்து ஜோசியம் கூறுவதும் நபியவர்கள் அனுப்பப்படுவதற்கு முன்னர் நடந்த நிகழ்வுதான் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது.
صحيح مسلم (4/ 1750)
124 – (2229) حَدَّثَنَا حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ حَسَنٌ: حَدَّثَنَا يَعْقُوبُ، وَقَالَ عَبْدٌ: حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ، قَالَ: أَخْبَرَنِي رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَنْصَارِ، أَنَّهُمْ بَيْنَمَا هُمْ جُلُوسٌ لَيْلَةً مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رُمِيَ بِنَجْمٍ فَاسْتَنَارَ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَاذَا كُنْتُمْ تَقُولُونَ فِي الْجَاهِلِيَّةِ، إِذَا رُمِيَ بِمِثْلِ هَذَا؟யு قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، كُنَّا نَقُولُ وُلِدَ اللَّيْلَةَ رَجُلٌ عَظِيمٌ، وَمَاتَ رَجُلٌ عَظِيمٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنَّهَا لَا يُرْمَى بِهَا لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنْ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى اسْمُهُ، إِذَا قَضَى أَمْرًا سَبَّحَ حَمَلَةُ الْعَرْشِ، ثُمَّ سَبَّحَ أَهْلُ السَّمَاءِ الَّذِينَ يَلُونَهُمْ، حَتَّى يَبْلُغَ التَّسْبِيحُ أَهْلَ هَذِهِ السَّمَاءِ الدُّنْيَاயு ثُمَّ قَالَ: “ الَّذِينَ يَلُونَ حَمَلَةَ الْعَرْشِ لِحَمَلَةِ الْعَرْشِ: مَاذَا قَالَ رَبُّكُمْ؟ فَيُخْبِرُونَهُمْ مَاذَا قَالَ: قَالَ فَيَسْتَخْبِرُ بَعْضُ أَهْلِ السَّمَاوَاتِ بَعْضًا، حَتَّى يَبْلُغَ الْخَبَرُ هَذِهِ السَّمَاءَ الدُّنْيَا، فَتَخْطَفُ الْجِنُّ السَّمْعَ فَيَقْذِفُونَ إِلَى أَوْلِيَائِهِمْ، وَيُرْمَوْنَ بِهِ، فَمَا جَاءُوا بِهِ عَلَى وَجْهِهِ فَهُوَ حَقٌّ، وَلَكِنَّهُمْ يَقْرِفُونَ فِيهِ وَيَزِيدُونَ “
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அன்சாரி நபித்தோழர்களில் ஒருவர் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்:
ஒரு நாள் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (வானிலிருந்து) ஒரு நட்சத்திரம் எறியப்பட்டு ஒளிர்ந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் “இதைப் போன்று (வானிலிருந்து) நட்சத்திரம் எறியப்பட்டால், நீங்கள் அறியாமைக் காலத்தில் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள். (அறியாமைக் காலத்தில் இவ்வாறு நட்சத்திரம் எறியப்பட்டால்) இன்றிரவு ஒரு மாமனிதர் பிறந்திருக்கிறார்; ஒரு மா மனிதர் இறந்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்‘’ என்று பதிலளித்தனர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய பிறப்புக்காகவோ யாருடைய இறப்புக்காகவோ அது எறியப்படுவதில்லை. மாறாக, வளமும் புகழும் கொண்ட நம் இறைவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்து விட்டால்,அரியணையை (அர்ஷ்) சுமக்கும் வானவர்கள் இறைவனை(ப் போற்றி)த் துதிக்கின்றனர். பிறகு (அதைக் கேட்டு) அதற்கடுத்த வானிலுள்ள (வான)வர்களும் (இறைவனைப் போற்றித்) துதிக்கின்றனர். (இவ்வாறே ஒவ்வொரு வானிலுள்ள வானவர்களும் துதிக்கின்றனர்.) இறுதியில் அத்துதி பூமிக்கு அருகிலுள்ள வானவர்களை வந்தடைகிறது.
பின்னர் அரியணையைச் சுமக்கும் வானவர்களுக்கு அருகிலிருப்பவர்கள், அரியணையைச் சுமக்கும் வானவர்களிடம், “உங்கள் இறைவன் என்ன சொன்னான்?’’ என்று வினவுகின்றனர். அதற்கு அரியணையைச் சுமக்கும் வானவர்கள் இறைவன் என்ன சொன்னான் என்பதை அவர்களிடம் தெரிவிக்கின்றனர். உடனே வானிலிருப்போரில் சிலர் வேறு சிலரிடம் அது குறித்து விசாரித்துக் கொள்கின்றனர்.
முடிவில் அச்செய்தி பூமிக்கு அருகிலுள்ள வானத்தை வந்தடைகிறது. உடனே அதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு, அதைத் தம் (சோதிட) நண்பர்களிடம் போடுகின்றனர். (அப்போது) அவர்கள் மீது நட்சத்திரங்கள் எறியப்படுகின்றன. ஆயினும், அவர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) கூறுகின்றனர்.
நூல் : முஸ்லிம் (4487)
நபியவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னால் நட்சத்திரங்கள் எதற்காக எறியப்பட்டன என்பதின் சரியான காரணத்தை நபியவர்கள் நபித்தோழர்களுக்குத்தெளிவு படுத்துகிறார்கள்.
வானத்துச் செய்திகளை ஷைத்தான்கள் செவியேற்பதும், அதனை ஜோசியக்காரன் காதில் போடுவதும், அவன் அதனுடன் பல பொய்களைக் கலந்து மக்களிடம் கூறுவதும் இவை அனைத்துமே அறியாமைக் காலத்தில் உள்ள நிலைமை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது.
திருக்குர்ஆன் அருளப்பட்ட பின்பு ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்பது அறவே தடைசெய்யப்பட்டுவிட்டது
நபியவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட பிறகு வானுலகச் செய்திகளில் எந்த ஒன்றையும் செவியேற்க முடியாத அளவிற்கு மிகப்பெரும் தடை விதிக்கப்பட்டுவிட்டது என்பதைப் பின்வரும் வசனங்கள் மற்றும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
{وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا (8) وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا (9) وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌّ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا (10)} [الجن72: 8 – 10[
வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப் பட்டுள்ளதைக் கண்டோம்.
(ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்.
(அல்குர்ஆன் 72 : 8, 9, 10)
”இப்போது ஒட்டுக் கேட்பவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராகக்) காண்பார்” என்று ஷைத்தான் பேசியதிலிருந்தே முன்பு எறியப்பட்டதை விட மிகக் கடுமையாகவும் எந்த ஒன்றையும் செவியேற்க முடியாத அளவிற்கும் அவர்கள் எறியப்பட்டனர் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் அதைத் தொடர்ந்து…
“பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்““
என்று ஷைத்தான்கள் கூறுவதிலிருந்தே அவர்கள் எதையும் செவியேற்க முடியாத அளவிற்கு தடைசெய்யப்பட்டு விட்டனர் என்பதை மேற்கண்ட வசனம் அறிவிக்கிறது.
குர்ஆன் அருளப்பட்ட பிறகு ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்பதை விட்டும் அறவே தடுக்கப்பட்டு விட்டனர் என்பதை பின்வரும் வசனமும் தெளிவாக எடுத்துரைக்கிறது.
{وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ (210) وَمَا يَنْبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ (211) إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ (212)} [الشعراء 26 : 210 – 212]
(இது) அறிவுரை! நாம் அநீதி இழைத்ததில்லை. இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்
(அல்குர்ஆன் 26 : 210, 211, 212)
குர்ஆன் அருளப்பட்ட பிறகு வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்பதை விட்டும் ஷைத்தான்கள் அறவே தடுக்கப்பட்டுவிட்டனர் என்பதை பின்வரும் செய்தியும் தெளிவுபடுத்துகிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தனர். அப்போது தலைவர்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன என்று பதிலளித்தனர். புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்து விட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள் என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.
திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்த போது உக்காழ் சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நக்லா எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) வானத்துச் செய்திகளை (கேட்க முடியாமல்) உங்களைத் தடுத்தது இது தான் என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒரு போதும் யாரையும் இணையாகக் கருத மாட்டோம் என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, (நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்… என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியது வஹியின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
நூல் : புகாரி (4921)
மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து நபியவர்கள் அனுப்பப்பட்ட பிறகு ஷைத்தான்கள் எந்த ஒன்றையும் செவியேற்க முடியாது; அது இறைவனால் தடைசெய்யப்பட்டு விட்டது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.