மண்டபங்களில் நடக்கும் திருமணங்களை தவ்ஹீத் ஜமாஅத் ஊக்கப் படுத்து வதில்லை என்பதால் பயான் செய்யும் தாயிக்களை அனுப்பாமல் திருமண பதிவேட்டை மட்டுமே வழங்கும் நடை முறையை கடைபிடித்து வருகிறோம்.
அதேவேளை ஜமாஅத்தின் நிகழ்ச்சி களுக்கு மண்டபங்களை பயன்படுத்தி வருகிறோம்.
இது உங்களுக்கு முரண்பாடு போல தோன்றுவதால் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள்.
ஆனால் இதில் எந்த முரண்பாடும் இல்லை.
திருமணத்தை எளிமையான முறையிலும் குறைந்த செலவிலும் நடத்த வேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது.
அவ்வாறு குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணத்தையே பரக்கத் எனும் அபிவிருத்தி நிறைந்த திருமணம் என்று நபிகளார் கூறுகிறார்கள்.
ஆனால் முஸ்லிம்களில் அதிக மானோர் ஆடம்பரமாகவும் அதிக பகட்டுடனும் திருமணத்தை நடத்து கிறார்கள்.
பத்திரிக்கை அடித்து விநியோகிப்பது, தெரு முழுக்க பந்தல் போடுவது, தோரணம் கட்டுவது என்று எண்ணற்ற வீண் விரயமான செயல்களிலும் மார்க்க விரோத காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.
80–90களில் இந்த முறையில் திருமணங்கள் நடைபெறுவது அதிகளவில் இருந்தன.
90களின் பிற்பகுதில் திருமணத்தை ஒட்டி நடத்தப்படும் அனாச்சாரங்கள், வரதட்சணை ஆகியவற்றுக்கு எதிரான பிரச்சாரம் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டு செல்லப்பட்டன.
இதற்காகவே ஒவ்வொரு ஊரிலுள்ள தவ்ஹீத்வாதிகள் பல இன்னல்களையும் இடர்பாடுகளையும் சந்தித்தார்கள். சொந்த பந்தங்களின் எதிர்ப்புக்கு ஆளானார்கள். உள்ளூர் ஜமாஅத்களின் சமூக பகிஷ்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்கள்.
இத்தனையையும் தாண்டி திருமண அனாச்சாரங்கள் மற்றும் ஆடம்பரத்திற்கு எதிராக மனவுறுதியுடன் தவ்ஹீத் சகோதரர்கள் களத்தில் நின்றதால் அல்லாஹ்வின் அருளால் ஓரளவு அவை குறைந்தன.
இருப்பினும் இன்றும் அவைகளின் தாக்கம் இருக்கவே செய்கின்றன.
எனவே தான் நபிவழி அடிப்படையில் எளிமையாக திருமணம் நடைபெற வேண்டும் என்பதை தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்வதுடன் ஆடம்பர திருமணங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது.
ஆடம்பர திருமணத்தின் ஓர் அங்கமாகவே மண்டபங்களில் திருமணம் நடைபெறுகின்றன. விதிவிலக்காக சில இருக்கலாம். பெரும்பாலும் மண்டப திருமணங்களின் நிலை இது தான். எனவே தான் அது போன்ற திருமணங்களை ஊக்கப்படுத்தக் கூடாது எனும் அடிப்படையில் திருமண உரை நிகழ்த்த பிரச்சாரகரை அனுப்புவதில்லை. திருமண பதிவேட்டை மட்டும் வழங்குகின்றோம்.
ஆனால் திருமணம் அல்லாத இதர நிகழ்ச்சிகளை மண்டபங்களில் நடத்துவதில் இந்த நிலை ஏற்படுவதில்லை.
ஆகவே தான் ஜமாஅத்தின் நிகழ்வுகள், தர்பியாக்கள், மார்க்க நிகழ்ச்சிகள் போன்றவை மண்டபங்களில் நடத்தப்படுகின்றது.
திருமணத்தில் கூட்டம் சேர்க்கும் அவசியம் இல்லை. ஆனால் மார்க்க செய்திகளை அதிகளவில் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது. ஒரு மார்க்க நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அப்படி கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதை ஆடம்பரம் என்று கூறமாட்டோம்.
ஆனால் திருமணத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடி அவர்களுக்கு உணவளித்தால் அதை ஆடம்பரம் என்போம்.
திருமணத்தை எளிமையாக நடத்த வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்திய காரணத்தினாலாகும்.
எனவே மண்டபம் எனும் இடம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது எனும் அடிப்படையில் நாம் மண்டப திருமணத்தை புறக்கணிப்பதில்லை. திருமணத்தில் எளிமையை மார்க்கம் வலியுறுத்துவதாலேயே இந்நிலைப் பாட்டை கடைபிடிக்கின்றோம்.
திருமணம் அல்லாத இதர நிகழ்ச்சிகளை மண்டபங்களில் நடத்துவதில் மார்க்கம் தடை செய்த எந்த அம்சமும் வருவதில்லை.