தா, ஹா – அரபு மொழியின் இரு எழுத்துகள்

அத்தியாயம் : 20

வசனங்களின் எண்ணிக்கை: 135

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. தா, ஹா.
2. (நபியே!) நீர் சிரமப்படுவதற்காக இந்தக் குர்ஆனை உமக்கு நாம் அருளவில்லை.
3. எனினும், (இறைவனை) அஞ்சக்கூடியவர்களுக்கு நினைவூட்டலாகும்.
4. (இது,) பூமியையும், உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து அருளப்பட்டது.
5. அளவற்ற அருளாளன் அர்ஷின்மீது அமர்ந்தான்.
6. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவ்விரண்டிற்கு இடைப்பட்டவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
7. நீர் சப்தமாகப் பேசினாலும் இரகசியத்தையும் அதைவிட மறைவானதையும் அவன் அறிகிறான்.
8. அல்லாஹ், அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவனுக்கு அழகான பெயர்கள் உள்ளன.
9. (நபியே!) மூஸாவைப் பற்றிய செய்தி உம்மிடம் வந்ததா?
10. அவர் நெருப்பைக் கண்டபோது, “காத்திருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அதிலிருந்து ஒரு தீப்பந்தத்தை உங்களிடம் நான் கொண்டு வரலாம்; அல்லது நெருப்பின் அருகில் ஒரு வழிகாட்டியைக் காணலாம்” என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.
11. அவர் அங்குச் சென்றபோது ‘மூஸாவே!’ என அழைக்கப்பட்டார்.
12. நான்தான் உம்முடைய இறைவன்! உமது இரு காலணிகளையும் கழற்றுவீராக! நீர் ‘துவா’ எனும் தூய பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
13. நான் உம்மைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். எனவே (உமக்கு) அறிவிக்கப்படுபவதைச் செவியேற்பீராக!
14. நானே அல்லாஹ்! என்னைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. எனவே என்னையே வணங்குவீராக! என்னை நினைவுகூர்வதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக!320
15. உலகம் அழியும் நேரம் வரக் கூடியதே! ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செயல்களுக்கான கூலி வழங்கப்படுவதற்காக அதை மறைத்து வைக்க விரும்புகிறேன்.
16. எனவே, அதை நம்பாமல் தன் சுய விருப்பத்தைப் பின்பற்றியவன் அதை (நம்புவதை) விட்டும் உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிந்து விடுவீர்!
17. “மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?” (என இறைவன் கேட்டான்.)
18. “இது என் கைத்தடி! இதன்மீது நான் ஊன்றி நிற்பேன். இதைக் கொண்டு எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன்; இதனால் எனக்கு வேறுசில பயன்களும் இருக்கின்றன”என்று அவர் கூறினார்.
19. (அதற்கு இறைவன்) “மூஸாவே! அதை(க் கீழே) போடுவீராக!” என்று கூறினான்.
20. அவர் அதைப் போட்டார். உடனே அது ஓடக்கூடிய பாம்பானது.
21, 22, 23, 24. “அதைப் பிடிப்பீராக! பயப்படாதீர்! அதன் முந்தைய நிலைக்கே அதைத் திரும்பக் கொண்டு வருவோம். உமது கையை அக்குள் பகுதியில் சேர்த்து வைப்பீராக! அது மாசற்ற வெண்மையாக வெளிப்படும். அது மற்றொரு சான்றாக உள்ளது. நமது மாபெரும் சான்றுகளில் சிலவற்றை உமக்குக் காட்ட வேண்டும் என்பதே இதற்குக் காரணம். ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான்” என்று (இறைவன்) கூறினான்.
25, 26, 27, 28. “என் இறைவனே! என் உள்ளத்தை எனக்கு விரிவாக்குவாயாக! என் காரியத்தை எனக்கு எளிதாக்குவாயாக! என் பேச்சை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக எனது நாவிலுள்ள முடிச்சை அவிழ்ப்பாயாக!” என்று அவர் கூறினார்.
29, 30, 31, 32. “என் குடும்பத்தைச் சேர்ந்த எனது சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஆக்குவாயாக! அவர் மூலம் என் ஆற்றலை வலுப்படுத்துவாயாக! என் காரியத்தில் அவரையும் கூட்டாக்குவாயாக!”
33, 34, 35. “நாங்கள் உன்னை அதிகளவு போற்ற வேண்டும்; உன்னை அதிகளவு நினைவுகூர வேண்டும் என்பதற்காக (உதவுவாயாக!) நீயே எங்களைப் பார்ப்பவனாக இருக்கிறாய்” (என்றும் மூஸா கூறினார்.)
36. “மூஸாவே! நீர் கேட்டவை உமக்கு வழங்கப்பட்டன” என்று (இறைவன்) கூறினான்.
37. மற்றொரு முறையும் உம்மீது நாம் அருள் புரிந்துள்ளோம்.
38. உமது தாயாருக்கு அறிவிக்கப்பட வேண்டியதை நாம் அறிவித்ததை நினைத்துப் பார்ப்பீராக!
39. “அவரை ஒரு பெட்டியில் வைத்து, அதைக் கடலில் போடுவீராக! அக்கடல் அவரைக் கரையில் கொண்டு சேர்க்கும். என்னுடைய எதிரியாகவும், அவருடைய எதிரியாகவும் இருப்பவன் அவரை எடுத்துக் கொள்வான்” (என அறிவித்தோம்.) உம்மீது எனது அன்பைப் பொழிந்தேன். என் கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு செய்தேன்.)
40. உமது சகோதரி (அங்குச்) சென்று, “இவரைப் பராமரிக்கும் ஒருவரைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டபோது, உமது தாயார் கண் குளிர்ச்சி அடைவதற்காகவும், கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடமே உம்மைத் திருப்பிக் கொடுத்தோம். நீர் ஒருவரைக் கொலை செய்தீர்! அக்கவலையிலிருந்தும் உம்மைக் காப்பாற்றினோம். மேலும் உம்மைக் கடுமையாகச் சோதித்தோம். பின்னர் மத்யன்வாசிகளிடையே பல ஆண்டுகள் தங்கியிருந்தீர். பிறகு, மூஸாவே! (நாம்) நிர்ணயித்தபடி நீர் வந்துள்ளீர்.
41. “உம்மை எனக்காக நான் தேர்ந்தெடுத்துள்ளேன்”
42, 43, 44. “நீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்! என்னை நினைவுகூர்வதில் சோர்ந்து விடாதீர்கள்! நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான். மென்மையான சொல்லையே அவனிடம் கூறுங்கள்! அதனால் அவன் படிப்பினை பெறலாம்; அல்லது பயப்படலாம்” (என இறைவன் கூறினான்).
45. “எங்கள் இறைவனே! அவன் எங்களைத் துன்புறுத்துவதையோ அல்லது எங்கள்மீது வரம்பு மீறுவதையோ (எண்ணிப்) பயப்படுகிறோம்”என இருவரும் கூறினர்.
46, 47, 48. “நீங்கள் இருவரும் பயப்படாதீர்கள்! நான் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன். இருவரும் அவனிடம் செல்லுங்கள்! “நாங்கள் உனது இறைவனின் தூதர்கள்; எங்களுடன் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை அனுப்பிவிடு! அவர்களை வேதனைப்படுத்தாதே! உன் இறைவனிடமிருந்து சான்றை உன்னிடம் கொண்டு வந்திருக்கிறோம். நேர்வழியைப் பின்பற்றுவோர்மீது அமைதி நிலவட்டும். ‘பொய்யெனக் கூறி, புறக்கணிப்போருக்கே தண்டனை உண்டு’ என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறுங்கள்” என (இறைவன்) கூறினான்.321
49. (ஃபிர்அவ்ன்,) “மூஸாவே! உங்கள் இருவருடைய இறைவன் யார்?” எனக் கேட்டான்.
50. “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய வடிவத்தைக் கொடுத்து, பின்னர் வழிகாட்டினானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று (மூஸா) கூறினார்.
51. “அப்படியானால் முன்சென்ற தலைமுறைகளின் நிலை என்ன?” என்று அவன் கேட்டான்.
52. “அதுபற்றிய அறிவு என் இறைவனிடம் உள்ள பதிவேட்டில் உள்ளது. என் இறைவன் தவறிழைக்க மாட்டான்; மறக்கவும் மாட்டான்” என்று அவர் கூறினார்.
53. அவன்தான் பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் உங்களுக்காகப் பாதைகளை ஏற்படுத்தினான். வானிலிருந்து மழையை இறக்கி, அதன் மூலம் பல்வேறு வகையான தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.
54. நீங்களும் உண்ணுங்கள்; உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்! இதில் அறிவுடையோருக்குச் சான்றுகள் உள்ளன.
55. பூமியிலிருந்து உங்களைப் படைத்தோம்; இதிலேயே உங்களை மீண்டும் கொண்டு சேர்ப்போம்; இதிலிருந்தே மற்றொரு முறையும் உங்களை வெளிப்படுத்துவோம்.
56. நமது சான்றுகள் அனைத்தையும் ஃபிர்அவ்னுக்குக் காட்டினோம். ஆனால் அவன் (அவைகளைப்) பொய்யெனக் கூறி, ஏற்க மறுத்தான்.
57, 58. “மூஸாவே! உம்முடைய சூனியத்தின் மூலம் எங்கள் நாட்டை விட்டு எங்களை வெளியேற்றவா எங்களிடம் வந்துள்ளீர்? அவ்வாறாயின், இதுபோல் சூனியத்தை நாமும் உம்மிடம் கொண்டு வருவோம். எனவே, எங்களுக்கும் உமக்குமிடையே ஒரு மையமான இடத்தில் நாங்களும் நீரும் மாறு செய்ய முடியாத ஒரு நேரத்தை முடிவு செய்வீராக! மையமான ஓர் இடத்தில் நாங்களும், நீரும் அதில் தவறி விடாமல் இருப்போம்” என்று அவன் கூறினான்.
59. “உங்களுக்கு வாக்களிப்பட்ட நேரம் பண்டிகை நாளாகும். (அந்நாளின்) முற்பகல் நேரத்தில் மக்கள் திரட்டப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
60. ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, தனது சூழ்ச்சியை ஒருங்கிணைத்து விட்டுப் பின்னர் வந்தான்.
61. “உங்களுக்குக் கேடுதான். அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறாதீர்கள்! அவ்வாறு செய்தால் அவன் உங்களைத் துன்புறுத்தி அடியோடு அழித்து விடுவான். புனைந்து கூறுபவன் நஷ்டமடைந்து விட்டான்” என அவர்களிடம் மூஸா கூறினார்.
62. எனவே, அவர்கள் தமது காரியத்தில் தமக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டனர். மேலும் இரகசிய ஆலோசனையும் செய்தனர்.
63, 64. “இந்த இருவருமே சூனியக்காரர்கள். இவர்கள் தமது சூனியத்தைக் கொண்டு உங்கள் நாட்டிலிருந்து உங்களை வெளியேற்றவும், உயர்வான உங்கள் வழிமுறையை ஒழிக்கவும் விரும்புகிறார்கள். எனவே, உங்கள் சூழ்ச்சியை ஒருங்கிணைத்து, அதன்பின் அணிவகுத்து வாருங்கள்! இன்றைய தினம் யார் மிகைக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர்” என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.
65. “மூஸாவே! (சூனியத்தை) நீர் போடுகிறீரா? அல்லது போடுவோரில் முதலாவதாக நாங்கள் இருக்கட்டுமா?” என்று கேட்டனர்.
66. “இல்லை! நீங்களே (முதலில்) போடுங்கள்!”என்று (மூஸா) கூறினார். உடனே, அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களின் சூனியத்தின் காரணமாக அவை ஓடுவதுபோல் அவருக்குத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.
67. மூஸா, தம் மனதில் பயத்தை உணர்ந்தார்.
68, 69. “பயப்படாதீர்! நீரே மிகைக்கக் கூடியவர். உம் வலது கையில் இருப்பதைப் போடுவீராக! அது அவர்கள் செய்தவற்றை விழுங்கி விடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரனின் சூழ்ச்சியே! சூனியக்காரன் எங்கு வந்தாலும் வெற்றி பெற மாட்டான்” என்று கூறினோம்.
70. சூனியக்காரர்கள், “ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை நாங்கள் நம்பினோம்” என்று கூறியவாறு (அல்லாஹ்வுக்கு) ஸஜ்தா செய்தோராக விழுந்தனர்.
71. “நான் உங்களுக்கு அனுமதியளிக்கும் முன்னரே இவரை நம்பி விட்டீர்களா? இவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களில் பெரியவர். உங்களது மாறு கை, மாறு கால்களைத் துண்டித்து, பின்னர் பேரீச்சந் தண்டுகளில் உங்களைச் சிலுவையில் அறைவேன். வேதனை செய்வதில் மிகக் கடுமையானவரும், நிலையானவரும் நம்மில் யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.
72. “எங்களிடம் வந்துள்ள தெளிவான சான்றுகளைவிடவும், எங்களைப் படைத்தவனைவிடவும் உன்னை நாங்கள் தேர்ந்தெடுக்க மாட்டோம். எனவே, நீ தீர்ப்பளிக்க வேண்டியதைத் தீர்ப்பளித்துக் கொள். நீ தீர்ப்பளிப்பதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில்தான்!” என அவர்கள் கூறினர்.
73. “எங்கள் தவறுகளையும், நீ எங்களை நிர்ப்பந்தித்து செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் எங்களை மன்னிப்பதற்காக அவனை நாங்கள் நம்பினோம். அல்லாஹ் மிக்க மேலானவன்; நிலைத்திருப்பவன்” (என்றும் கூறினர்.)
74. யார் குற்றவாளியாகத் தனது இறைவனிடம் வருகிறானோ அவனுக்கு நரகம்தான். அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.322
75. யார் நற்செயல்களைச் செய்து, இறைநம்பிக்கையாளராக அவனிடம் வருகிறார்களோ அவர்களுக்கு உயர்ந்த பதவிகள் உண்டு.
76. (அவை) நிலையான சொர்க்கங்கள்! அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே தூய்மையாக நடப்போருக்குரிய கூலியாகும்.
77. “என்னுடைய அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! கடலில் உலர்ந்த ஒரு பாதையை அவர்களுக்கு ஏற்படுத்துவீராக! (ஃபிர்அவ்னிடம்) மாட்டிக் கொள்வதைப் பற்றி அஞ்சாதீர்! (மூழ்கி விடுவோம் என) நீர் பயப்படவும் வேண்டாம்” என நாம் மூஸாவுக்கு அறிவித்தோம்.
78. ஃபிர்அவ்ன், தனது படைகளுடன் அவர்களைத் பின்தொடர்ந்து சென்றான். அப்போது அவர்களைக் கடலில் மூடிக் கொள்ளக் கூடிய (அலையான)து மூடிக் கொண்டது.
79. ஃபிர்அவ்ன், தனது கூட்டத்தாரை வழி கெடுத்தான்; (அவர்களுக்கு) நேர்வழியைக் காட்டவில்லை.
80. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! உங்கள் எதிரியிடமிருந்து உங்களைக் காப்பாற்றினோம். உங்களுக்குத் (தவ்ராத்தை வழங்குவதற்காகத்) தூர் மலையின் வலதுபுறத்தை வாக்களித்தோம். மன்னு, ஸல்வாவை (உணவாக) உங்களுக்கு இறக்கினோம்.
81. நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை உண்ணுங்கள்! அதில் வரம்பு மீறாதீர்கள்! அவ்வாறு செய்தால் உங்கள்மீது என் கோபம் இறங்கிவிடும். என் கோபம் யார்மீது இறங்குகிறதோ அவன் வீழ்ந்து விட்டான்.
82. பாவ மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்து, பின்னர் நேர்வழி நடப்பவரை நான் மிகவும் மன்னிப்பவன்.
83. “மூஸாவே! உமது சமுதாயத்தினரை விட்டு உம்மை விரைந்து வரச் செய்தது எது?” (என இறைவன் கேட்டான்.)
84. “அவர்கள் என்னைப் பின்தொடர்கின்றனர். என் இறைவனே! நீ பொருந்திக் கொள்வதற்காக உன்னிடம் விரைந்து வந்துவிட்டேன்” என்று அவர் கூறினார்.
85. “உம(து வருகை)க்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரீ வழிகெடுத்து விட்டான்”என்று (இறைவன்) கூறினான்.
86. மூஸா கோபம் கொண்டு, கவலைப்பட்டவராகத் தமது சமுதாயத்திடம் திரும்பினார். “என் சமுதாயத்தினரே! உங்களுக்கு அழகான வாக்குறுதியை உங்கள் இறைவன் அளிக்கவில்லையா? (அவன் வாக்குறுதியளித்து) உங்களுக்கு நீண்ட காலம் ஆகிவிட்டதா? அல்லது உங்கள் இறைவனின் கோபம் உங்கள்மீது இறங்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்னிடம் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்து விட்டீர்களே!” என்று கேட்டார்.
87. “உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு, நாங்களாக விரும்பி மாறு செய்யவில்லை. மாறாக, அந்தச் சமுதாயத்தின் ஆபரணச் சுமைகள் எங்களிடம் சுமத்தப்பட்டிருந்தன. அவற்றை நாங்கள் எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் போட்டான்” என அவர்கள் கூறினர்.
88. பிறகு அவன், அவர்களுக்கு (வெறும்) உடலைக் கொண்ட காளைக் கன்றை வெளிப்படுத்தினான். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. அப்போது அவர்கள், “இதுவே உங்களுக்கும் கடவுள்; மூஸாவுக்கும் கடவுள்! ஆனால் அவர் மறந்து விட்டார்” எனக் கூறினர்.
89. அக்கன்று, அவர்களிடம் எந்தப் பேச்சுக்கும் மறுமொழி கூறாது என்பதையும், அது, அவர்களுக்குத் தீமையோ, நன்மையோ செய்ய வலிமையற்றது என்பதையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா?
90. “என் சமுதாயத்தினரே! இதைக் கொண்டே நீங்கள் சோதிக்கப் பட்டுள்ளீர்கள். உங்கள் இறைவன் அளவிலா அருளாளன்தான். எனவே, என்னைப் பின்பற்றுங்கள்! என்னுடைய ஆணைக்கும் கட்டுப்படுங்கள்!” என முன்னரே அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.
91. அவர்கள், “மூஸா எங்களிடம் திரும்பி வரும்வரை நாங்கள் இதன்மீதே நிலைத்திருப்போம்” எனக் கூறினர்.
92, 93. “ஹாரூனே! இவர்கள் வழி கெட்டதை நீர் கண்டபோது, என் (வழியி)னைப் பின்பற்றுவதை விட்டும் உம்மைத் தடுத்தது எது? என் ஆணையை மீறி விட்டீரா?” என்று (மூஸா) கேட்டார்.
94. “என் தாயின் மகனே! என்னுடைய தாடியையும், தலையையும் பிடிக்காதீர்! ‘என் வார்த்தையை எதிர்பார்க்காமல் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டீரே!’ என்று நீர் கூறுவதை (எண்ணி)ப் பயந்தேன்”என அவர் கூறினார்.
95. “ஸாமிரியே! உன்னுடைய விஷயம் என்ன?” என்று (மூஸா) கேட்டார்.
96. “அவர்கள் பார்க்காததை நான் பார்த்தேன். இத்தூதருடைய காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணை) எடுத்து அதை எறிந்தேன். எனக்கு, என் உள்ளம் இவ்வாறு அலங்கரித்துக் காட்டியது”என்று அவன் கூறினான்.
97. “போய்விடு! இந்த வாழ்க்கையில் உனக்குரிய (தண்டனையான)து ‘தீண்டாதே!’ எனக் கூறுவதுதான். உன்னால் மாற்றப்பட முடியாத உனக்கென நிர்ணயிக்கப்பட்ட ஒருநேரம் உண்டு. நீ வணங்கிக் கொண்டிருந்த உன் கடவுளைப் பார்! நாம் அதை நெருப்பில் எரித்து, பிறகு அதை ஒரேயடியாகக் கடலில் தூவி விடுவோம்” என்று (மூஸா) கூறினார்.
98. உங்கள் கடவுள் அல்லாஹ்தான். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. ஒவ்வொரு பொருளையும் ஞானத்தால் அவன் சூழ்ந்திருக்கிறான்.
99. (நபியே!) இவ்வாறே முன்சென்ற (சமுதாயங்களின்) செய்திகளை உமக்கு எடுத்துரைக்கிறோம். நம்மிடமிருந்து உமக்கு நற்போதனையையும் அளித்துள்ளோம்.
100. யார் இதைப் புறக்கணிக்கிறாரோ அவர் மறுமை நாளில் பாவத்தைச் சுமப்பார்.
101. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது அவர்களுக்கு மறுமை நாளில் மிகக் கெட்ட சுமையாகும்.
102. (அது) ஸூர் ஊதப்படும் நாள்! அந்நாளில் குற்றவாளிகளை நீலம் பூத்த கண்களுடையவர்களாக ஒன்று திரட்டுவோம்.
103. “(உலகில்) பத்து (நாட்கள்) தவிர நீங்கள் தங்கியிருக்கவில்லை” என்று தமக்கிடையே இரகசியமாகப் பேசிக் கொள்வார்கள்.
104. அவர்களில் அறிவில் சிறந்தவர்கள், “ஒருநாள் மட்டுமே தங்கியிருந்தீர்கள்” என்று கூறும் வேளையில், அவர்கள் பேசிக் கொள்வதை நாம் நன்கறிவோம்.
105, 106. (நபியே!) உம்மிடம் மலைகளைப் பற்றிக் கேட்கின்றனர். “என் இறைவன் அவற்றைத் தூள் தூளாக்கி, அதைச் சமதளமான பொட்டலாக்கி விட்டுவிடுவான்” என்று கூறுவீராக!
107. அதில் பள்ளத்தையோ, மேட்டையோ காண மாட்டீர்.
108. அந்நாளில் அழைப்பாளரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அதில் எவ்விதக் கோணலும் இருக்காது. அளவிலா அருளாளனுக்கு முன்னால் அனைத்துச் சப்தங்களும் அடங்கிவிடும். காலடிச் சப்தத்தைத் தவிர எதையும் செவியுற மாட்டீர்.
109. அளவிலா அருளாளன் அந்நாளில் யாருக்கு அனுமதியளித்து, யாருடைய பேச்சைப் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர (மற்றவரின்) பரிந்துரை பயனளிக்காது.
110. அவன் அவர்களுக்கு முன்னுள்ளவற்றையும், அவர்களுக்குப் பின்னுள்ளவற்றையும் அறிகிறான். ஆனால் அவர்களால் (தமது) அறிவைக் கொண்டு அவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.
111. நிரந்தரமாக உயிருடனிருப்பவனுக்கு முன்னால் முகங்கள் பணிந்து விடும். அநியாயத்தைச் சுமந்தவன் இழப்புக்குள்ளாகி விட்டான்.
112. இறைநம்பிக்கையாராக இருந்து நற்செயல்கள் செய்பவர், (தமக்கு) அநியாயம் செய்யப்படும் என்றோ, (கூலி) குறைக்கப்படும் என்றோ பயப்பட மாட்டார்.
113. இவ்வாறே இதை அரபு மொழியில் அமைந்த குர்ஆனாக அருளியுள்ளோம். இதில், அவர்கள் இறையச்சமுடையோர் ஆவதற்கும், அவர்களுக்குப் படிப்பினையை ஏற்படுத்துவதற்கும் எச்சரிக்கையை விவரித்துள்ளோம்.
114. உண்மை அரசனான அல்லாஹ் உயர்ந்தவன். (நபியே!) அவனது வேத அறிவிப்பு உமக்கு முழுமையாக்கப்படும் முன்பே (குர்ஆனை) ஓதுவதற்கு அவசரப்படாதீர்! “என் இறைவனே! எனக்குக் கல்வியை அதிகப்படுத்துவாயாக!” என்று கூறுவீராக!323
115. இதற்கு முன் ஆதமிடம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். ஆனால் அவர் மறந்து விட்டார். அவரிடம் நாம் உறுதிப்பாட்டைக் காணவில்லை.
116. நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று கூறியபோது, இப்லீஸைத் தவிர மற்றவர்கள் பணிந்தனர்; அவன் மறுத்து விட்டான்.
117, 118, 119. “ஆதமே! இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரி! எனவே, சொர்க்கத்திலிருந்து உங்கள் இருவரையும் அவன் வெளியேற்றிவிட வேண்டாம். அவ்வாறாயின் நீர் பாக்கியமிழந்தவராகி விடுவீர். நீர் இங்குப் பசித்தோ, நிர்வாணமாகவோ இருக்க மாட்டீர். மேலும், நீர் இங்குத் தாகத்துடனோ, வெயில்படவோ இருக்க மாட்டீர்” என்று கூறினோம்.324
120. அவரிடம் ஷைத்தான் கெட்ட எண்ணத்தை ஏற்படுத்தி, “ஆதமே! உமக்கு நான் நிரந்தரமாக இருக்கச் செய்யும் மரத்தையும், அழியாத ஆட்சியையும் அறிவிக்கவா?” என்று கேட்டான்.
121. அ(ம்மரத்)திலிருந்து அவ்விருவரும் சாப்பிட்டனர். அப்போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்தன. சொர்க்கத்தின் இலைகளால் தம்மை மூடிக் கொள்ளலானார்கள். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே வழி தவறினார்.
122. (அதன்) பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை மன்னித்து, நேர்வழி காட்டினான்.
123. “நீங்கள் இருவரும் மொத்தமாக இங்கிருந்து இறங்கிவிடுங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரியாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழிதவற மாட்டார்; பாக்கியமிழந்தவராகவும் மாட்டார்” என்று (இறைவன்) கூறினான்.
124. எனது அறிவுரையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது. மறுமை நாளில் அவனைக் குருடனாக எழுப்புவோம்.325
125. “என் இறைவனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுள்ளவனாக இருந்தேனே!” என்று அவன் கேட்பான்.
126. “அவ்வாறுதான்! நமது வசனங்கள் உன்னிடம் வந்தன. அப்போது அவற்றை நீ மறந்தாய்! அதேபோன்று இன்றைய தினம் நீ மறக்கப்பட்டு விட்டாய்” என்று (இறைவன்) கூறுவான்.
127. வரம்பு மீறியும், தன் இறைவனின் வசனங்களை நம்பாமலும் இருப்பவனுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம். மறுமையின் தண்டனை மிகக் கடினமானதும் நிலையானதுமாகும்.
128. எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துள்ளோம் என்பது இவர்களை நேர்வழியில் செலுத்தவில்லையா? அவர்கள் வசித்த இடங்களில்தான் இவர்கள் நடமாடுகின்றனர். இதில் அறிவுடையோருக்குச் சான்றுகள் உள்ளன.
129. உமது இறைவனிடமிருந்து முந்திவிட்ட வாக்கும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவும் இல்லாதிருந்தால் (அவர்களின் அழிவு) உறுதியாகி இருக்கும்.
130. (நபியே!) அவர்கள் கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக! சூரியன் உதிக்கும் முன்னரும், அது மறையும் முன்னரும் உமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றுவீராக! இரவு நேரங்களிலும், பகலின் விளிம்புகளிலும் (அவனைப்) போற்றுவீராக! இதனால் நீர் மனநிறைவடையலாம்.326
131. அவர்களில் பற்பல பிரிவினருக்கும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாக நாம் வழங்கியுள்ள வசதிகளின் பக்கம் உமது கண்களை நீட்டாதீர்! இதன் மூலம் அவர்களை நாம் சோதிக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். உமது இறைவனிடமுள்ள வாழ்வாதாரமே சிறந்தது; நிலையானது.
132. (நபியே!) உமது குடும்பத்தினருக்குத் தொழுகையை ஏவுவீராக! அ(தைக் கடைப்பிடிப்ப)தில் பொறுமையை மேற்கொள்வீராக!327 நாம் உம்மிடம் வாழ்வாதாரத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளிக்கிறோம். இறையச்சத்திற்கே நல்ல முடிவு உண்டு.
133. “தமது இறைவனிடமிருந்து ஒரு சான்றை இவர் நம்மிடம் கொண்டு வர வேண்டாமா?” என்று கேட்கின்றனர். அவர்களிடம் முந்தைய வேதங்களிலுள்ள தெளிவான சான்று வரவில்லையா?
134. அவர்களை இதற்கு முன்பே நாம் வேதனையைக் கொண்டு அழித்திருந்தால் “எங்கள் இறைவனே! எங்களுக்கு ஒரு தூதரை நீ அனுப்பியிருக்க வேண்டாமா? நாங்கள் இழிவடைந்தும், கேவலப்படுவதற்கும் முன்பு உனது வசனங்களைப் பின்பற்றியிருப்போமே!” என்று கூறுவார்கள்.
135. “ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பவர்தான். எனவே நீங்களும் எதிர்பாருங்கள்! நேரான பாதையுடையவர் யார் என்பதையும், நேர்வழி பெற்றவர் யார் என்பதையும் அறிந்து கொள்வீர்கள்!” என்று கூறுவீராக!