பெருமைக்காக உதவி செய்வதையும் விளம்பர நோக்கத்தில் செய்த உதவியை சொல்லிக் காட்டுவதையும்தான் மார்க்கம் தடை செய்கிறது. விளம்பர நோக்கமின்றி மக்கள் பார்வையில் படும் படி நற்பணிகளை செய்வதில் மார்க்கத்தில் தடையேதுமில்லை.
ஜமாஅத்தாக தொழும் போது அனைவரும் பார்க்கும் வகையில் தான் ஒருவர் தொழுகையில் ஈடுபடுகிறார். மக்கள் பார்க்கும் வகையில் தான் அங்குள்ள வாளிகளில் தர்மம் செய்கிறார். இது குறையாக பார்க்கப்படுவதில்லை.
ஆனால் ஒரு ஜமாஅத், தாம் செய்த பணிகளை புகைப்படங்களாக சமூகவலைத்தளங்களிலோ பத்திரிகைகளிலோ வெளியிடும் போது மட்டும் இது சரியா என்று கேட்கப்படுகிறது.
நீங்கள் தர்மங்களை வெளிப்படையாக செய்தால் அதுவும் நல்லது தான். அதை நீங்கள் மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகவும் நல்லது. அது உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழித்து விடும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:271
உதவிகளை வெளிப்படையாக செய்தாலும் நல்லது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நாலு பேருக்கு தெரியும் வகையில் உதவிகளை செய்யும் போது அது போன்ற உதவிகளைத் தாமும் செய்ய வேண்டும் என்று பிறர் தூண்டப்படுவர். பிறரை நன்மையில் பங்கெடுக்க வைக்கும் நன்மை இதில் உள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்று நடந்துள்ளது.
ஒரு கோத்திரத்தார் உதவி என்று கேட்டு வந்த போது நபிகள் நாயகம் அம்மக்களுக்கு உதவி புரிய அழைப்பு விடுத்தார்கள். முதலில் ஒருவர் எழுந்து சென்று தம் வீட்டில் உள்ள பொருளை கொண்டு வந்து உதவியதை பார்த்து விட்டு ஒன்றன் பின் ஒன்றாக மற்றவர்களும் உதவினார்கள் என்பதை (முஸ்லிம் 1848) ஹதீஸில் பார்க்கலாம்.
எனவே தான் உதவிகளை வெளிப்படையாக செய்தால் அதுவும் நல்லதே என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
ஒரு ஜமாஅத், தாம் செய்யும் உதவிகளை மக்களுக்குதெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் மக்களிடம் நன்கொடைகளைப் பெற்றுத்தான் உதவிகளை மேற்கொள்கின்றனர். பொது மக்களிடம் நிதி திரட்டி உதவி செய்யும் போது என்னென்ன வகையில் உதவிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை பொதுவெளியில் முன்வைத்தாக வேண்டும். அது தான் புகைப்படங்களாக, வீடியோக்களாக வெளியிடப்படுகின்றது.
பொதுமக்கள் அளித்த நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை. முறையாக உரிய மக்களைப் போய் சென்றடைந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களாகவே அந்தப் புகைப்படங்கள், வீடியோக்கள், அது குறித்த செய்திகள் அமைகின்றன.
இது மக்களுக்கு செய்யும் உதவிகளை விளம்பரம் செய்ததாகாது. மாறாக மக்கள் அளித்த நன்கொடை சரியாக செலவு செய்யப்படுகிறது என்பதுதான் அங்கு நோக்கம். அதற்காகவே பொதுவெளியில் வெளியிடப்படுகிறது. இதில் தவறேதும் இல்லை.
நபி(ஸல்) அவர்கள், அஸத் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை பனூஸுலைம் எனும் கோத்திரத்தாரிடையே ஸகாத் வசூலிப்பதற்காக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்து) வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். (புகாரி 1500)
ஜகாத்தை வசூலித்து அரசிடம் வழங்குவது நல்ல பணிதான். கணக்கு சரியாக உள்ளதா என்பதை அறிய நபிகள் நாயகம் அது பற்றி விசாரிக்கும் போது அவர் அதை பட்டியலிட வேண்டியது வருகிறது. எனவே கணக்கு காட்டும் நோக்கத்தில் நற்பணிகளை பொதுவெளியில் பட்டியலிடுவது தவறல்ல.
ஒரு ஜமாஅத் இவ்வாறு தாம் செய்த பணிகளை மக்கள் முன் வெளியிடும் போது சில நன்மைகள் ஏற்படுகிறது.
நன்கொடை வழங்கியவர்களுக்கு தமது பொருளாதாரம் சரியாக செலவிடப்படுகிறது எனும் திருப்தி
மக்களின் சிரமங்களை பார்த்து உதவி செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பது, அதன் மூலம் மக்களுக்கு அதிக உதவிகள் கிடைப்பது.
பணியில் ஈடுபடுவோரை பார்த்து பிறரும் களப்பணி செய்ய முன்வருவது
இஸ்லாமிய அமைப்புகள் இதை செய்திடும் போது முஸ்லிம்கள் மீது பிற சமூக மக்களுக்கு நல்லெண்ணம் ஏற்படுவது.
முஸ்லிம்கள் இது போன்ற பொதுப்பணியில் ஈடுபட இஸ்லாம் தான் காரணம் என்பதை தெரிவிக்கும் போது இஸ்லாத்தைப் பிற சமூக மக்கள் அறிந்து கொள்வது.
இப்படி பல்வேறு நன்மைகள் இதில் உண்டு. எனவே விளம்பர நோக்கமின்றி பணிகளை வெளியிடுவது மார்க்க அடிப்படையில் குற்றமில்லை.