தமுமுக பிரச்சனையில் தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்தது?

பொதுவாக ஒரு பிரச்சனை ஏற்படுகின்ற போது அதன் தன்மையை பொறுத்தும் அது யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதை கவனித்தும் தான் கருத்து கூற இயலும்.
எல்லா பிரச்சனைகளிலும் மூக்கை நுழைத்து கருத்து கூறிக் கொண்டிருக்க முடியாது.
இஸ்லாமிய அமைப்புகளுக்கு பிறரால் ஏற்படும் பிரச்சினைகள், இஸ்லாமிய அமைப்புகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் என இரு வகைகள் உள்ளன.
அரசின் புறத்திலிருந்தோ சங்பரிவார கும்பல்களிடமிருந்தோ ஜனநாயக அடிப்படையில் செயல்படும் அமைப்புகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டால் நாம் அமைதி காத்து கொண்டு இருக்க மட்டோம்.
நீதிக்கு சாட்சியாக இருங்கள் எனும் வசனத்தின் அடிப்படையில் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம். பாதிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக நிற்போம்.
இதில் நமக்கு எந்த தயக்கமும் இல்லை.
ஒன்றிய அரசால் ஜாகீர் நாயக் குறிவைக்கப்பட்டு, தகுந்த ஆதாரமின்றி அவரை பயங்கரவாதிபோல சித்தரிக்க முயன்ற போது அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டோம்.
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நமது கொள்கைக்கு எதிரான சக முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் ஆக்கிரமிப்பு எனும் பெயரில் அரசால் தவறாக இடிக்கப்பட்ட போது அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
பாதிக்கப்பட்டோர் எதிர்க் கொள் கையை சார்ந்தோர் என்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் இட உரிமைக்காக குரல் கொடுத்தோம்.
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் இதுவரை குரல் கொடுத்து வருவதும் அந்த அடிப்படையிலானதே.
இது போன்ற ஏராளமான விவகாரங்களில் கருத்து தெரிவித்தும் போராடியும் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக துணை நிற்பதை நமது ஜமாஅத் கடைபிடித்து வருகின்றது.
குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் உண்மைத்தன்மை எதுவென்று தெரியாவிட்டால் உண்மை எதுவென தெளிவாகும் வரை அமைதி காத்து விடுவோம்.
நீங்கள் குறிப்பிடும் தமுமுக பிரச்சனை என்பது சமீபத்தில் சென்னையில் தமுமுக பெயர் தாங்கிய அலுவலகம் சில நபர்களால் தாக்கப்பட்டதை குறிக்கின்றது.
அது இஸ்லாமிய விரோதிகளாலோ அல்லது சங்பரிவார கும்பல்களினாலோ நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. மாறாக உள்கட்சி பிரச்சனையின் காரணத்தினாலேயே தமுமுக பெயர் தாங்கிய அலுவலகம் தாக்கப்பட்டது.
ஒரு அமைப்பின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக பொதுவில் கருத்து தெரிவிப்பது சரியாக அமையாது. அவர்களுக்குள் ஏற்படும் கருத்து மோதல்களை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள். உள்கட்சி விவகாரத்தில் வேறு அமைப்புகள் தலையிடுவதை எவரும் விரும்ப மாட்டார்கள்.
எனவே தான் இவ்விவகாரத்தில் நாம் கருத்து எதுவும் கூறவில்லை.
ஜனநாயக அமைப்பில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு.
அதே வேளை வெகு ஜன மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் வகையில் அது இருந்து விடக்கூடாது என்பது மட்டும் கவனத்திற்குரியது.