காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளது.
1.விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே காரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் குறித்து தகவல் சொல்கிறார். விசாரணையை திசை திருப்புகிறார்.
2.மிக விரைவாக விசாரணை நடைபெற்று என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் வழக்கை மிக தாமதம் என்று அண்ணாமலை பொய் சொல்கிறார்.
ஒரு மாநிலத்தில் இது போன்ற நிகழ்வு நடந்தால் வழக்கு பதிவு செய்வது விசாரணை நடத்துவது உள்ளிட்ட பணிகளை உள்ளூர் காவல்துறைதான் செய்யும். (UAPA) போன்ற கடும் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டால் மாநில அரசுக்கு முறைப்படி காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை பெற்ற பிறகு மாநில அரசு ஒன்றிய அரசுக்கு முறைப்படி சம்பவம் குறித்து தகவல் தரும். அதன் பிறகே ஒன்றிய அரசு வழக்கு விசாரணையை கையிலெடுக்கும். இது தான் எல்லா மாநிலத்திலும் நடைபெறுகிறது.
மிக விரைவாக இந்த நடைமுறைகளை தமிழக அரசும் காவல்துறையும் பின்பற்றி இருக்கும் போது இதில் எங்கே தாமதம் வந்தது என்று கூறி அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கின்றது அந்த அறிக்கை.
- மத்திய உள்துறை அமைச்சம் கோவை சம்பவம் குறித்து முன்கூட்டியே தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்ததாக சொல்கிறார். இது முற்றிலும் பொய்.
அனைத்து மாநில, மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான சுற்றிக்கையே அனுப்பப்பட்டது. மற்றபடி கோவை சம்பவத்தை குறிப்பிட்டு எந்த அறிக்கையும் மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து வரவில்லை.
கோவை சம்பவம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நபர்களை முன்பே கைது செய்து வெடி மருந்துகளை கைப்பற்றி இருப்போம். அவ்வாறு எதுவும் வரவில்லை.
எனவே இது போன்ற உண்மையில்லாத, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி(யான அவர்) பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை மீது அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அரசியல் கட்சிகளை போல மறுப்பு அறிக்கை வெளியிடும் நிலைக்கு தமிழக காவல்துறை ஆளானது உண்மையிலேயே கவலையளிக்கின்றது.
கோவை சம்பவம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்தும் தமிழக காவல்துறை அதை அலட்சியம் செய்துள்ளது எனும் குற்றச்சாட்டு சாதாரணமான குற்றச்சாட்டல்ல. காவல்துறை மீது அதன் முக்கிய அதிகாரிகளின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் குற்றச்சாட்டாகும்.
அத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டை அண்ணாமலை சுமத்தியிருக்கும் போது அதற்கு வெறுமனே அறிக்கை வெளியிட்டு அறிவுரை சொல்வது ஏற்புடையதா?
தமிழக காவல்துறையின் தற்போதைய விளக்க அறிக்கைக்கும் அண்ணாமலை ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
அறிவாலயத்திற்கு காவல்துறை சேவை செய்வதாக கொச்சைப்படுத்தியுள்ளார்.
இந்தளவு காவல்துறையை அதன் உயரதிகாரிகளை கொச்சைப்படுத்தும் அண்ணாமலை மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவதேன்?
காவல்துறையை இழிவுபடுத்திய நபர்கள் இதுவே அதிகாரமற்ற சாமானியர்களாக இருந்தால் இப்படித்தான் வருடிக் கொடுப்பது போல அறிக்கை வெளியிடுமா காவல்துறை? கடந்த காலங்களில் அப்படித்தான் செயல்பட்டதா?
கடந்த ஆண்டு 2021 ஜூலை மாதம் காவல்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றை பாருங்கள்.
காவல் துறையை பொறுத்தவரை, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களை தூண்டும் வகையிலும் அமைந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சட்ட நடவடிக்கைகள் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் முழுவதும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறு பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் தனிநபர்கள் மீது அவதூறு பரப்புவது, பல்வேறு மத மக்களிடையே மோதல்களை தூண்டுவது உள்ளிட்டவை வழக்கு பதியத்தக்கது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் கடந்த 3 மாத்த்தில் மட்டும் 75 வழக்குகள் பதியப்பட்டதாக இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் தமிழக காவல்துறை மீது உயர் அதிகாரிகள் மீது அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது என்ன நடவடிக்கை?
காவல்துறையை கையாலாகாத துறையாக பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் சித்தரிக்க முற்படும் அண்ணாமலை மீது இனியும் நடவடிக்கை பாய மறுப்பதேன்?
சவுக்கு சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தார் என்று கூறி ஜி.ஆர் சுவாமிநாதன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் இறுதியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் தக்கலையில் ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர் மீது அவதூறு பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இப்படி அவதூறு வழக்கில் பலர் வழக்குகளை எதிர்கொள்வதும் சிலர் கைது செய்யப்படுவதும் நடைபெறுகிறது.
பாஜகவின் அண்ணாமலை தமிழக அரசு மீதும் காவல்துறை உயரதிகாரிகள் மீதும் தொடர்ந்து சேற்றை வாரி இறைக்கும் வகையில் பேசி எழுதி வரும் போது அண்ணாமலைக்கு மட்டும் வருடிக் கொடுக்கும் வகையில் மறுப்பு அறிக்கையுடன் நிறுத்திக் கொள்வதா?
அவதூறு பரப்பும் விஷநாவுகளுக்கு பாரபட்சமின்றி காவல்துறை மருந்திட வேண்டும். இல்லையேல் நல்லிணக்கம் நிலவும் தமிழகத்தையே விஷம் பரப்பி நாசமாக்கி விடுவார்கள்.