தமிழகத்தில் ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் தமிழக மக்கள் புறக்கணிக்கப்படுவதின் காரணம் என்ன?

பறிக்கப்படும் மாநில உரிமைகள். ஒன்றிய மோடி அரசின் நோக்கமே! மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைத்து அனைத்து அதிகாரங்களையும் ஒன்றியமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே பாஜகவின் நீண்ட காலத் திட்டம். அதை மெல்ல மெல்ல ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றி வருகிறது.
பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஒன்றியத்தின் பிரதிநிதியான ஆளுநரே நியமித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாநில மொழிகளுக்கான அந்தஸ்தையும் வலுவிழக்கச் செய்யும் வேலையைச் செய்ய துவங்கி இருக்கிறது.
ஒன்றியத்தின் கீழ் இயங்கும் வங்கிகளில் கிளார்க் பணிகளில் சேர்பவர்களுக்கு மாநில மொழி அவசியம் இல்லை என்று திருத்தம் செய்திருக்கிறது, ஒன்றிய அரசு. இந்த ஆண்டு தேர்வான 843 பேரில் சுமார் 400 பேர் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தான். ஏற்கனவே ரயில்வே துறையில் தமிழகத்தில் பணிக்கு அமர்த்தப் பட்டவர்களில் வட மாநிலத்தைச் சார்ந்தவர்களே அதிகம் எனக் குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், ஒன்றிய அரசின் வங்கிகளில் கிளார்க் பணிக்கு மாநில மொழி கட்டாயமில்லை என்று திருத்தி மறைமுகமாக ஹிந்தி திணிப்பைக் கொண்டு வருகிறது. நெய்வேலி என்.எல்.சி பணி நியமனங்களிலும் 300 பேர்களில் மிகக் குறைவானவர்களே தமிழகத்தைச் சார்ந்தவர்கள்.
வட மாநில மக்கள் ஒன்றிய அரசுப் பணிகளில் பணியமர்த்தப்படுவதின் மூலம் மாநில மக்களின் உரிமையும் இங்கே பறிக்கப்படுகிறது. இப்படித் தான் நீட் தேர்வும் ஒன்றிய அரசின் வழியாகவே நடத்தப்படுவதால் மாநில அரசின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு விட்டன.
தமிழக மக்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதோடு ஒன்றிய அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் வட மாநிலத்தவரை தமிழகத்தில் பணியமர்த்தும் வேலையை மோடி அரசு சப்தமில்லாமல் செய்து வருகிறது,
சில மாதங்களுக்கு முன் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் அஞ்சல் துறை, சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் நிறுவனங்களில் ஒன்றிய அரசால் பணியமர்த்தப்பட்ட 200 க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்தது அம்பலமாகி இருக்கிறது.
சொந்த மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்தில் வேலையில் சேர வருபவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து சேரும் அளவுக்கு தைரியம் படைத்தவர்களா? பின்னணியில் இவர்களுக்கு உதவி செய்தவர்கள் யார்? தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வட மாநிலத்தவர் பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதையும் தாண்டி ஒன்றிய அரசுக்கு விசுவாசமானவர்களாக இருப்பவர்களால் தான் இப்படியொரு உதவியை இவர்கள் பெற முடியும்.
பாஜகவை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது ஐந்தாண்டுகள் வரை தான். ஆனால் அரசு அதிகாரிகளின் அதிகாரம் பதவி முடிவடையும் காலம் வரை என்பதால் அதிகாரிகள் மீதே அது கண் வைக்கும்.
அரசியல் அதிகாரங்களைப் பெறாத காலங்களில் கூட ஆர்.எஸ்.எஸ்- ன் திட்டங்களை அதிகாரிகள் துணை கொண்டே செயல்படுத்தியது சங்பரிவாரக் கும்பல்.
தமிழகத்தில் பாஜக அரசியல் அதிகாரங்களைப் பெற முடியாது என்பதால் தான் கொல்லைப் புறமாக ஹிந்தி திணிப்பு, ஒன்றிய அரசுப் பணிகளில் மாநில மக்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வட மாநிலத்தவருக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
தங்களின் இந்துத்துவா கருத்துக்களை அரசுப் பணிகளிலும் திணிக்கும் திட்டமாகவே இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது. தமிழக நலனைப் பாதிக்கும் இது போன்ற செயல்களைத் தமிழக அரசு துணிவோடு தடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.