பெரியார் சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளையின் சார்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பெரியார் உலகம் எனும் பிரம்மாண்ட அரங்கம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
சுமார் 27 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ள இதில் பெரியார் சிலையும் ஓர் அங்கம்.இதற்கான செலவு சுமார் 100 கோடி.
இதனை தமிழக அரசு செய்யவில்லை. பெரியார் சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளையே செய்யவுள்ளது.சிலைக்கலாச்சாரம் என்பது மக்களை பீடித்துள்ள சாபக்கேடு.
மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்று எந்த மக்களும் கோரவில்லை.
ஒருவரின் உயர்வு என்பது அவரது அறிவுசார் கருத்துக்களிலும் பேச்சுக்களிலும் தான் அடங்கியுள்ளதே தவிர அவருக்காக நிறுவப்படும் சிலைகளில் அல்ல.
பல கோடிகளை செலவு செய்து அமைக்கப்படும் சிலைகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் இவற்றை எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை.
சிலைகளை அமைப்பதில் தான் தங்கள் தலைவர்களின் பெருமை அடங்கியுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.
அதனால் சிலை நிறுவும் கலாச்சாரம் பெருகி வீதியெங்கும் தலைவர்களின் சிலைகள் காட்சியளிக்கின்றன.
குஜராத் மாநிலம் நாமதா நதிக்கரையில் 597 அடி உயரத்தில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைக்கப்பட்டது. அதன் செலவு 3000 கோடி ரூபாய்.
சென்னை அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அண்ணாசாலையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகள் உள்ளன.
இப்படி தலைவர்களின் சிலை நிறுவுவதற்காகவே பல கோடிகள் விரயமாக்கப்படுகிறது. இதில் மக்களின் வரிப்பணமும் உள்ளது என்பது வேதனைக்குரியது.
நடந்து முடிந்த சட்டப்பேரைவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு தகவலை கூறினார்.
தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லாப் புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படம் உள்ளது. அதை மாற்ற வேண்டும் எனில் 13 கோடி ரூபாய் செலவாகும் என்று முதல்வரிடம் தாம் கூறியதாகவும் அதற்கு முதல்வர் அந்தத் தொகையை பள்ளி மாணவர்களுக்குப் பயனுள்ள வேறு செலவுக்குப் பயன்படுத்தலாம். எனவே புகைப்படத்தை மாற்றத் தேவையில்லை என்று பதிலளித்ததாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
வெறும் புகைப்பட மாற்றத்திற்கு 13 கோடி ரூபாய் செலவிட்டு விரயமாக்கவில்லை என்று முதல்வர் கருதியதாக இச்சம்பவம் தெரிவிக்கின்றது. அப்படி எனில் பல நூறு கோடிகளை வெற்றுச் சிலைகளை அமைக்க செலவிடலாமா?
அது மக்களின் வரிப்பணமாக இல்லாவிட்டாலும் கூட குறிப்பிட்ட அறக்கட்டளையின் பணமாக இருப்பினும் அத்தொகையை அந்தந்த தலைவர்களுடைய தொண்டர்களின் வாழ்நிலையை மேம்படுத்த பயன்படுத்தலாமே?
சிலைகள் வழிபாட்டுக்குரியதல்ல என்று பெரியார் பேசினாரே தவிர சிலை திறப்புக்கு பெரியார் ஆதரவளிப்பவராகவே திகழ்ந்தார்.
கருணாநிதி அவர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் என்று பெரியார் பேசியுள்ளார். அவரது ஆசையை நிறைவேற்றவே மணியம்மை சார்பில் சென்னை அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது. அதன் பிறகு சட்டச்சிக்கலால் இடிக்கப்பட்டது.
1972 ல் கடலூரில் கருணாநிதி அவர்கள் பெரியார் சிலையை திறந்து வைத்தார். பெரியாரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலைகளை வழிபாட்டுக்குரியதல்ல என்று கருதிய அவர் சிலை திறப்பு நிகழ்வுகளை ஆதரித்ததன் மூலம் ஏதோ ஒரு வகையில் சிலைகள் மதிக்கத்தக்க ஒன்றாக தம் தொண்டர்களின் உள்ளங்களில் பதிய வைத்து விட்டார்.
அதன் விளைவாக இன்று பெரியாரை போற்றுகிறேன் எனும் பெயரில் பெரியார் கட்அவுட்களுக்கு பாலூற்றும் நிகழ்வுகளும் நடக்கத்துவங்கி விட்டன.இது அவரது பிரச்சாரத்திற்கே முரணான ஒன்றாகும்.